நாள் இரண்டு - பாடல் இரண்டு
பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போ(து) இப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குத்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.
எழுப்புபவள்: சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே! அல்லும் பகலும் நாம் பேசும் போது "யாவும் கடந்து நிற்கின்ற ஒளி வடிவினனான இறைவனுக்கே என் அன்பு" என்று சொல்லுவாயே! அந்த அன்பை இப்போது இந்த மலர்ப் படுக்கையினுள் வைத்துப் புதைத்துவிட்டனையோ?
உறங்குபவள்: சிறந்த அணிகலன்களை நான் மட்டும் அணியவில்லை, நீங்களும் தான் அணிந்துள்ளீர்கள்! சீ! சீ! சிறிது நேரம் தூங்கியதற்கு நீங்கள் பேசியவை கொஞ்சமா? நஞ்சமா? ஏசிக்கொள்ளவும், விளையாடுவதற்கும் ஏற்ற இடம் இதுவா?
எழுப்புபவள்: தேவர்களும் வணங்குவதற்கு அரியதாகி அவர்கள் தங்கள் நிலைக்கு இரங்கி கூச்சப்படும் படி உள்ளவை அந்த பெருமானுடைய திருவடிகள். ஒளிமயமான அந்த திருவடிகள் மண்ணில் படும்படி வந்தருளி நாம் காணுமாறு தந்தருளுவான் அந்த சிவலோகன். நாம் அனைவரும் உய்ய தில்லை சிற்றம்பலத்தில் ஆனந்த நடனம் பயிலும் ஆனந்தக் கூத்தன். நாம் அனைவரும் அவனது அடிமைகளே! அவனது புகழைப் பாட விரைந்து எழுந்து வா பெண்ணே!
இப்படி இரு பக்கத்தவர் பேசுவது போல அமைந்த கலிப்பாவை உறழ் கலிப்பா என்று தொல்காப்பியம் குறிக்கிறது.
கூற்றும் மாற்றமும் இடையிடை மிடைந்து
போக்கின் றாகல் உறழ்கலிக்கு இயல்பே.
இரண்டாவது பாடலில் சர்வ பூதமணி என்னும் சக்தி பலப்பிரதமணி என்ற சக்தியைப் பரிகசித்து எழுப்ப முயல, பலப்பிரதமணி தானும் பரிகசித்து விட்டு எழுந்து வருவதாகக் கொள்ளப்படுகிறது.
தோழியர் கேள்வியோடு பாடல் ஆரம்பமாகிறது. "உன்னை முழுவதுமாக இறைவன் பால் வைத்த பக்திக்கே அர்ப்பணித்து விட்டாய் என்று சொல்லுவாயே. நெறி மறந்துவிட்டாயோ? மலர்ப் படுக்கையில் சுகத்தில்
மயங்கிவிட்டாயோ? மேனிச் சுகத்திலே ஆசை பிறந்து விட்டதோ? எப்போதிருந்தம்மா இந்த மயக்கம்?" என்று கேட்கிறார்கள்.
உள்ளே இருப்பவளும் அப்படிப் உலகாயத இன்பத்தில் மயங்கி இறைநெறியை மறந்தவள் அல்ல. அதை அவள் வாயிலிருந்தே வெளிப்படுத்த இக் கேள்வி பதில் உதவுகிறது.
உலகியல் பொறிபுலன் நாட்ட வெறியும் ஆன்மிக நாட்ட நெறியும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட இயல்புடையவை. வெறியும் நெறியும் ஒருவரிடத்திலேயே இருப்பவை அல்ல. இருக்க முடியாது.
ஏளனத்துக்காகக் கேட்ட கேள்வி உள்ளே இருக்கும் கன்னியை உறுத்துகிறது. ஆயினும் நெறி கைக்கொள்ள எளிது இல்லை என்பதை உணர்த்தப் பதில் சொல்கிறாள். சிவனின் மலர்ப்பாதங்களைப் புகழ்ந்து பாடத் தமக்குத் தகுதியுள்ளதோ என்று விண்ணோர்களே நாணுவார்கள். அப்படிப்பட்ட தில்லைச் சிற்றலம்பலவாணன் மீது அசைவுறாத பக்தி வைப்பது எளிதோ என்கிறாள். உலகியல் பொறிபுலன் வெறியில் சிக்காதிருப்பதே பெரு நிலை. அத்தகைய பெரு நிலை எனக்கு இருக்கிறதோ என்கிறாள். எனவேதான் ஏசிப் பேசி விளையாடும் அளவுக்குச் சாதாரணமான பொருளைப் பற்றிப் பேசுவதைப் போல இந்நிலை பற்றிப் பேசி விளையாட இது தருணம் அல்ல என்கிறாள்.
விண்ணோருக்கும் அறிந்து ஏத்த அரிய தன் மலர்ப் பாதங்களை அடியார்க்குக் காட்டி அன்பு செய்விக்க, நெறிப்படுத்தும் இறைவன் கருணையை இப்படிக் கூறுகிறார் மாணிக்க வாசகர்.
SHIRDI SAIBABA | HOMOEOPATHY | PSYCHIC SCIENCES
HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB
சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள் | சிவசிவ | சித்தன்
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
0 Comments:
Post a Comment