நாள் பதினைந்து - பாடல் பதினைந்து
எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்றழையேன் மீன் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதராய் உனக்கென்ன வேறுடையை
எல்லோரும் போந்தாரோ போந்தார் போல் எண்ணிக் கொள்
வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயானைப் பாடேலேரெம்பாவாய்.
எழுப்புபவர்கள்: இளம் கிளியைப் போன்றவளே! இன்னுமா உறங்குகின்றாய்?
உறங்குவதுபோல் இருப்பவள்: சில்லன்று கத்தாதீர்கள் பெண்களே. இதோ வருகின்றேன்.
எழுப்புபவர்கள்: வாய்ப்பேச்சில் வல்லவளே! உன் பேச்சை நாங்கள் அறிவோம்.
உறங்குவதுபோல் இருப்பவள்: நீங்கள் தான் வல்லவர்கள். நானென்றால் அப்படியே இருந்துவிட்டு போகின்றேன். எல்லோரும் வந்துவிட்டார்களா?
எழுப்புபவர்கள்: வந்துவிட்டனர். வேண்டுமானால் நீயே வந்து எண்ணிப்பார்த்துக்கொள். வலிய யானையை கொன்றவனை, பகைவரை அழிக்கும் வல்லமைக் கொண்டவனை, அந்த மாயனை பாடலாம் வா.
திருப்பாவையின் பதினைந்தாம் பாடல் தோழியர்க்கும் பாவைக்கும் இடையே நடந்த உரையாடலைக் கூத்துத் தமிழில் தருகிறது. பாடலின் கடைசியில் பாவையும் தோழியரோடு வந்து சேர்ந்து கொள்ளப் பாவை நோன்பு
தொடர்கிறது.
முந்தைய பாடலின் தொனி இந்தப் பாடலிலும் முதல் வரியில் தொனிக்கிறது. எல்லே இளங்கிளியே என்றழைத்து அவளைத் தம்மோடு சேர அழைக்கிறார்கள். “இன்னமும் தூங்குகிறாயோ?” என்ற கேள்வி “இன்னமும் தூங்குகிறாளோ?” என்ற ஐயத்தின் வெளிப்பாடாக அமைகிறது. ஆமாம் அவள் இன்னமும் உண்மையிலேயே தூங்கிக் கொண்டுதான் இருக்கிறாள் என்று தமக்குள் சொல்லிக் கொள்வதாக அமைகிறது.
முதல் முறையாக உள்ளே இருந்து மறுமொழி கேட்கிறது. தோழியர் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுப்பினால் யாருக்கும் எரிச்சல் வரத்தான் செய்யும். எனவேதான் சில்லென்றழைக்காதீர்கள் என்கிறாள்.
தோழியர் அவளைச் சீண்ட ஆரம்பிக்கிறார்கள். “உன் வார்த்தைகளை நீ எப்படிக் காப்பாற்றுகிறாய் என்பது எங்களுக்குத் தெரியும்” என்கிறார்கள். பதிலும் உடனடியாக வருகிறது. “உங்களையும்தான் எனக்குத் தெரியும். உங்கள் வாய்ச் சாலமும் தெரியும்,” என்கிறாள்.
தான் தூங்கிவிட்டோம் என்பது அவளுக்குத் தெரிகிறது. அதனால்தான் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்களேன் என்பதைப் போல வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக என்கிறாள். தோழியர் சீண்டலைத் தொடர்கிறார்கள். “அது என்ன உன்னை மட்டும் சிறப்பாகக் கொள்வது? மற்றவரைப் போலவே நீயும் உடன் வந்து எங்களோடு சேர வேண்டும்,” என்கிறார்கள். தோழியர் எல்லோரும் வந்து சேர்ந்துவிட்டாரோ என்ற கேள்விக்கு நாங்கள் என்ன பதிலளிப்பது? நீயே வந்து பார்த்துக் கொள் என்கிறார்கள்.இதற்குள் உள்ளே இருந்தவள் எழுந்து வந்து பிறரோடு சேர்ந்து கொள்ளப் பாவை நோன்பு தொடங்க ஆரம்பிக்கிறது, குவளயா பீடம் என்ற யானையை வதம் செய்த கிருஷ்ணன் புகழைப் பாடி நடக்கிறார்கள்.
பாவைநோன்பின் முக்கியமானதொரு திருப்பத்தைத் திருப்பாவையின் பதினைந்தாம் பாடல்.
முதல் பாடலில் பாவை நோன்பிருக்கப் பொதுவானதோர் அழைப்பு.
இரண்டாம் பாடலில் பாவை நோன்பிருப்போரின் குணங்களின் விவரிப்பு.
மூன்றாம் பாடலில் பாவை நோன்பின் பயன்கள்.
நான்காம் பாடலில் மழை எனும் பெயரில் இறைவன் கருணை கோரிப் பிரார்த்தனை.
ஐந்தாம் பாடலில் ஈடேற்றத்துக்கான உறுதி.
ஆறாம் பாடலுக்கு வரும்போது ஒருத்தியைத் தவிரப் பிறர் அனைவரும் பாவை நோன்பிருக்கக் கூடியாயிற்று.
ஆறாம் பாடல் முதல் பதினைந்தாம் பாடல் வரையில் உறங்குபவளை எழுப்பல்.
கடைசிப் பாவையும் வந்து சேர்ந்த பின் அனைவருமாகச் சேர்ந்து பாடுகிற பாடல்கள் பதினைந்தாம் பாடல் தொடங்கி வரும் பாடல்கள்.
SHIRDI SAIBABA | HOMOEOPATHY | PSYCHIC SCIENCES
HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB
சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள் | சிவசிவ | சித்தன்
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
0 Comments:
Post a Comment