Tuesday, December 29, 2009

திருவெம்பாவை - 1

நாள் ஒன்று பாடல் ஒன்று

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.

இப்பதிகம் திருவண்ணாமலையில் மாணிக்கவாசக சுவாமிகளால் பாடப்பெற்றது. சிறுமிகள் பாவை நோன்பு நோற்பதைக் கண்டு, மாணிக்கவாசக சுவாமிகள் தன்னையும் பாவையாக பாவித்து பாடியது. ஒரு சீவாத்மா, இந்த உலக மாயையில் சிக்குண்டு, இறைவனை மறந்து தூங்கும் மற்றொரு சீவாத்மாவை எழுப்பி இறைவனின் புகழ் பாட அழைக்கும் படி அமைந்த பாடல்கள்.

திருவெம்பாவைப் பாடல்களுக்கு, முதல் ஐந்து பாடல்களில் ஒவ்வொருவராக ஐந்து தோழியரைத் துயிலெழுப்புவதாக விளக்கம் தரப்படும்.

நவதேவதைகள் அசுத்த மாயையை உசுப்பி மண் ஈறான பிரபஞ்சத்தை உருவாக்குகின்றன என்ற அடிப்படை சைவக்கருத்து சிவபூசையின் தொடக்கத்தில் நவசக்திகளை எழுப்பும் விதத்தில் அமைகிறது.

திருவெம்பாவை என்ற சிவ கைங்கரியத்திலும் அப்படியே நவசக்திகளை எழுப்புவதாக ஐந்து பாடல்கள் அமைகின்றன. முதல் பாடலில் ஒன்பது சக்திகளில் மனோன்மணி என்னும் சக்தி சர்வபூதமணி என்ற சக்தியை எழுப்புவதாகக் கருதப்படுகிறது.

வீட்டுக்குள் தன் நிலை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள் ஒரு கன்னி. அவளுடைய தோழியர் வெளியே இருந்து அவளைப் பார்த்துப் பாடுவதாக அமைந்தது திருவெம்பாவையின் முதல் பாடல்.

திருவெம்பாவையின் முதல் பாடல் துயில்வதுபோல் காட்டிலில் கிடக்கும் பாவையை அவளுடை பாங்கிப் பாவையர் நயந்து பேசுவதாக அமைந்துளது.

புராணக் கதை: பிரம்மனுக்கும், திருமாலுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர்? என்று விவாதம் எழுந்தது. நெடுநேரம் விவாதித்தும் தீர்வு கிடைக்கவில்லை.

இந்த சர்ச்சை பெரிய யுத்தமாக மாறியது. இருவருக்கும் இடையே ஒளி பொருந்திய பெரிய நெருப்புத் தூணாக சிவபெருமான் நின்றார்.பிரம்மனும் திருமாலும் தங்களது சண்டையை விட்டு விட்டு கோடி சூரிய பிரகாசத்துடன் திகழ்ந்த அந்த நெருப்புத் தூணை ஆச்சரியத்துடன் பார்த்தனர். அப்போது ஒளி உருவில் உயர்ந்து நிற்கிறேன். உங்களில் ஒருவர் என் திருவடியையும் மற்றொருவர் என திருமுடியையும் காண்பதற்கு முயற்சியுங்கள். அதன் பிறகு, உங்களது விவாதத்துக்கு முடிவு சொல்கிறேன்! என்றார் சிவபெருமான்.

இதையடுத்து வலிமையான கொம்புகள் கொண்ட வராகமாக உருவெடுத்தார் திருமால். பூமியை அகழ்ந்து பாதாளத்துக்கும் கீழே சென்று, ஈசனின் பாதமலரைக் காண முற்பட்டார். பிரம்மனோ, ஈசனின் திருமுடியைக் காண அன்னப் பறவையாகி சிறகுகளை விரித்துப் பறக்கத் துவங்கினார்.


ஆண்டுகள் பல கடந்தன. இருவரும் களைப்படைந்தனர். திருவடியைக் காண முடியாமல் திரும்பினார் திருமால். ஆனால், தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தார் பிரம்மன். அந்த வேளையில், தாழம்பூ ஒன்ற வேகமாக கீழ் நோக்கி வருவதைக் கண்டார். அதனிடம் எங்கிருந்து வருகிறாய்? எனக் கேட்டார்.

ஆனால் சிவபர தத்துவத்தை உறுதியாக நம்புபவர்கள். தாழம்பூ கதையை ஏற்கமாட்டார்கள். உச்சியிலிருந்து தாழம்பூ விழுந்ததாகக் கொண்டால்... அந்தப் பேரொளி ஒரு வரைமுறைக்கு உட்பட்ட வடிவமாகிவிடும். இது தவறு அல்லவா? எனினும் புராணங்கள் சிலவற்றில் தாழம்பூ கதை உள்ளது. ருக்வேதசம்ஹிதை,. சரபோப நிஷத், லிங்க புராணம், கூர்ம புராணம், வாயுபுராணம், சிவ மகாபராணம், உபமன்யு பக்த விலாசம், மகா ஸ்காந்தம், நாரதம் மற்றும் தமிழில் கந்தபுராணம், அருணகிரி புராணம், சிவராத்ரி புராணம், அருணாசல புராணம் ஆகிய நூல்களிலும், ஆகமங்கள் பலவற்றிலும் அடிமுடி தேடிய கதை விவரிக்கப்பட்டுள்ளது.

சிவபெருமானின் திருமுடியில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். அவரின் திருமுடியைக் காண்பது, உங்களால் இயலாத காரியம்! என்றது தாழம்பூ உடனே பிரம்மன், எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். ஒளிப்பிழம்பின் திருமுடியைக் கண்டதாகவும், அங்கிருந்து உன்னை எடுத்து வந்ததாகவும் சொல்வேன். நீ அதை ஆமோதித்தால் போதும்! என்றார். தாழம்பூவும் சம்மதித்தது.

தாழம்பூவுடன் பூமிக்குத் திரும்பிய பிரம்மன், தான் திருமுடியைக் கண்டதாகவும் அதற்கு சாட்சியாக திருமுடியிலிருந்து தாழம்பூவை எடுத்து வந்ததாகவும் சிவபெருமானிடம் தெரிவித்தார். பிரம்மன் கூறுவது பொய் என்பதை அறிந்த சிவனார் கோபம் கொண்டார். பிரம்மனே... பொய்யுரைத்த உனக்கு, கோயில்களும் பூஜைகளும் இல்லாமல் போகட்டும். தாழம்பூ இனி எந்த பூஜைக்கும் பயன்படாது! என்று சபித்தார்.

தவறு உணர்ந்த பிரம்மனும் தாழம்பூவும் தங்களை மன்னிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினர். இதன் பலனால்.. சிவ பூஜை தவிர, மற்ற பூஜைகளுக்கு தாழம்பூ பயன்படும் என்று அருளினார் சிவனார். இப்படி பிரம்மன், திருமால் இருவரது அகந்தையையும் போக்கி.. சிவபெருமான், உலகுக்குத் தனது பேரொளியைக் காட்டிய திருவடிவே லிங்கோத்பவ மூர்த்தி!

இந்தப் புராணக் கதையில் உள்ள நுண்ணிய கருத்து சிந்தனைக்குரியது. பிரம்மன் அறிவு வடிவானவர். திருமால் செல்வத்தின் நாயகர், அறிவும் செல்வம் அகந்தையை அதிகப்படுத்தும். ஆனால் அறிவு, செல்வம் ஆகியவற்றால் இறைவனைக் காண முடியாது! செல்வச்செருக்கு, இறுதியில் தனது தோல்வியை ஏற்றாலும் கல்விச் செருக்கு தனது தோல்வியை ஏற்கவில்லை. மாறாக தோல்வியை மறைப்பதற்கான சூழ்ச்சியைத் தேடியது. ஆம், அறிவு கூடியதால் அகந்தை கொள்பவர்கள் பொய் சொல்லவும் அஞ்சமாட்டார்கள் என்பதையே இந்தக் கதை விளக்குகிறது.

“ஈசன் பேரொளிப் பிழம்பாயிருப்பவன். அவனுக்கு ஆரம்பம் இது முடிவு இது என்று சொல்லும்படிக்கு இல்லாமல் ஞானப் பிழம்பாயிருப்பவன். அந்தச் சோதிப் பரம் பொருளை நாங்கள் இனிய தமிழ்ப் பாடலில் பாடுகிறோம். எங்கள் பாட்டைக் கேட்டபின்னும் இப்படிக் கண்மூடிக் கிடக்கலாமா? உன் காதும் இறைவன் பெருமைக்குச் செவிடாய்ப் போய்விடும் அளவுக்கு வன்செவியாகிவிட்டதோ? எங்கள் இசை வீதியெல்லாம் நிரம்பக் கேட்கிறது. நீ அதைக் கேட்டவுடனே உணர்வு மிகுந்து உன்னை மறந்தவளாய் எழுந்து வரவேண்டியவள் தூக்கத்துக்கு உன்னை ஒப்படைத்துவிட்டுக் கட்டிலில் கிடக்கிறாயே. இது வியப்பாகவே உள்ளது. எழுந்து வந்துவிடு.”

ஆன்மா விழிப்படைய வேண்டும், ஆன்ம விழிப்பானது சோதி தரிசனம் காண்பது. சோதி தரிசனம் காண்பதாவது முதலும் முடிவும் காணப்படாத இறைவனின் கருணை நோக்கி எழுவது. அப்படியான ஆன்ம விழிப்பு ஊட்டுவதே இந்தப் பாடலின் நோக்கம்.

தாயுமானவருக்கு மிக உகந்த பாடல்களில் இது முதன்மையானது என்பர். பாடலைக் கேட்டவுடன் தாம் அப்பாடல் மயமாகவே ஆகிவிட வேண்டும் என்று விரும்பினார். அதனால்தான்

"ஆதியந்தமில்லாத அரியபெருஞ் சோதி என்ற
நீதி மொழி கண்டு அதுவாய் நிற்கும் நாள் எந்நாளோ"

இறை உணர்வில் தன்னை மறத்தலை மாணிக்கவாசகர் சொல்லிப் போயிருக்க, தாயுமானவர் இறை உணர்வில் தன்னை இழந்துவிடுதலைக் குறிக்கிறார் என்பர்.






0 Comments: