நாள் பதினான்கு - பாடல் பதினான்கு
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.
உன் வீட்டு தோட்டத்துக் கிணற்றில் செங்கழுனீர் மலர் மலர்ந்து, ஆம்பல் (அல்லி) மலர் கூம்பிவிட்டது பார். காவியுடை அணிந்த வெள்ளைப் பற்களையுடைய முனிவர்கள், சங்துதனை முழக்க கோயிலுக்கு செல்கின்றனர். நான் வந்து உங்களை எழுப்புவேன் என்று கூறிய நீ இன்னமும் உறங்குகிறாய். வெட்கமில்லாத நாக்கை உடையவளே ! எழுந்திரு. சங்கையும் சக்கரத்தையும் ஏந்தும் கைகளையுடைய தாமரைக்கண்ணனை பாடுவோம்.
பாவை நோன்புக்கென நீராடக் குளத்துக்குச் செல்லும் பாவையர் குழாம் உறங்கும் பெண்னையும் தம்மோடு வந்து சேர்ந்து கொள்ள அழைக்கும் பாடல் வரிசையில் கடைசிப் பாடல் திருப்பாவையின் பதினான்காவது பாடல்.
பதினான்காம் பாடலின் ஆரம்பத்தில் விடியலுக்கான அடையாளங்கள் இன்னும் சில பட்டியலிடப்படுகின்றன. சிவந்த செங்கழுநீர் மலர்கள் கதிரவன் எழும்போது மலர்கின்றன. அல்லி என்னும் ஆம்பல் மலர்கள்
கூம்புகின்றன.
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து என்னும் சொற்றொடரால், உணர்வின் மிகுதியால்
உதடுகள் துடிப்பது குறிப்பாக உணர்த்தப்படுகிறது. கூடலை எதிர்பார்த்து உதடுகள் மெல்லப் பிளப்பதைக் காட்சியாக்குகிறது. கடவுளோடு இணைந்துவிடுவதில் உள்ள இன்பம் சிறப்பாக வெளிப்படுத்தப்படுகிறது.
இறைவனிடம் கூடல் கைகூடாத போது உள்ளம் சாம்பிப் போய் முகம் கூம்பிவிடுமே. அதையே, "ஆம்பல் வாய் கூம்பினகாண்" என்றாள் ஆண்டாள். இப்பாடலின் முதலிரண்டு அடிகள் இறைவனுடன் கூடும் இன்பத்தையும் இன்னும் போய் அவனிடம் போய்ச் சேர்ந்தாகவில்லையே என்ற ஏக்கத்தையும் சேர்த்துக் குறிக்கிறது.
பின்னர் வரும் வரிகளில், கோயிற் பணியாளர்கள் அன்றாடக் பூசைக்காகக் கோயிலைத் திறக்கப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இது, இறைவனை அடைய வேண்டும் என்ற அவா பக்தர்கள் மனதில் தோன்றியவுடனே கடவுளின் உள்ளம் அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயாராகத் திறந்து கொள்கிறது என்று பொருள் தருகிறதல்லவா?
முரண்தொடை அழகு நிறைந்தது இப்பாடல்.
சங்கோடு சக்கரமும் ஏந்திய தடக்கையன் எனும் போது பகைவர் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்தும் வலிமையைக் கூறுகின்றனர்
என்றாலும் உடனே பங்கயக் கண்ணன் என்று சொல்லி தாமரையைப் போல மென்மையும் அருமையும் உடையவன் என்றும் சொல்லிப் பாடுகிறார்கள். சங்கும் சக்கரமும் நாராயணனுக்கு ஏற்புடையதாகக் கூறப்படுபவை.
கிருஷ்ணாவதாரத்தோடு தொடர்புபடுத்தி சங்கையும் சக்கரத்தையும் குறிப்பது ஆயர்கள் நாராயணனைக் கிருஷ்ணனாகத் தம்மோடு ஒருவராகப் பெற்ற பெரும் பேறுடையவர்கள் என்று குறிக்கிறது.
மலரும் மற்றும் கூம்பும் மலர்கள், மங்கிய காவி நிறை உடையும் ஒளிரும் வெண்பல்லும், நாணாதாய் என்ற குற்றச்சாட்டும் நாவுடையாய் என்ற பாராட்டும், வலிதான படைகளும் கருணை பொங்கும் விழிகளும் என்று முரண்பட்டவற்றைச் சுட்டிக் காட்டி இப்பாடல் சிறப்புறுகிறது.
பாடல் முழுக்க வரும் நிறங்களை நோக்குங்கள்.
சிவப்பும் வெள்ளையும் அடுத்தடுத்து வருவதைப் பாருங்கள். சிவப்பு மலர்கள், வெள்ளை மலர்கள் - காவி உடை, வெண்பற்கள் - வெள்ளைச் சங்கு, தீயெனச் சிவந்து ஒளிரும் சக்கரம் என்று இப்படி வெள்ளையும் சிவப்பும் ஒன்றுக்கொன்று இட்டுநிரப்பிப் பாடல் முழுவதும் வரக் கடைசியில் இரண்டும் இணைவதைப் பாருங்கள். வெண்தாமரையில் செவ்வரிகள் போலக் கண்கள்.
கூர்ந்து நோக்க, வெண்மை தன் பரிசுத்தத்தால் இறைவனைக் குறித்தால் சிவப்பு தாயாரின் நிறத்தைக் குறிக்கிறது. வழக்கமாக கார்மேக வண்ணன் என்று இறைவனைப் பாடும் வைணவ இலக்கியத்தில் இப்பாடல் கண்ணனை வெள்ளை நிறத்தில் குறிக்கிறது.
SHIRDI SAIBABA | HOMOEOPATHY | PSYCHIC SCIENCES
HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB
சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள் | சிவசிவ
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
0 Comments:
Post a Comment