Sunday, December 27, 2009

திருப்பாவை - 13

நாள் பதின்மூன்று - பாடல் பதின்மூன்று

புள்ளின் வாய்க் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானை கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளியெழந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிர்ந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

திருப்பாவையின் பதின்மூன்றாவது பாடல் விடியலைக் குறிக்கிறது.

கன்னியர் பாவை நோன்பிருக்கக் ஒன்றுகூடி வந்து சேர்ந்து விட்டார்கள். கொக்கைப் போலத் தோன்றிய பகாசுரனைக் அழித்த கிருஷ்ணன் புகழ் பாடுகிறார்கள். கம்சனால் கண்ணனைக் கொல்ல அனுப்பி வைத்தவன்.
கிருஷ்ணன் கொக்கின் அலகைப் பற்றிப் பிளந்து கொக்கைக் கொன்றுவிட்டான். இந்த நிகழ்ச்சியைத்தான் புள்ளின் வாய்க் கீண்டான் என்ற தொடர் குறிக்கிறது.

கிள்ளிக் களைந்தான் = யுத்தத்தில் ராவணனை மட்டும் ராமன் வதம் செய்யவில்லை. அசுரர் குலம் முழுக்க மறைந்துவிட்டது. அதனால்தான் அசுரர் குலத்தை வேரோடு அழித்தவன் என்பது பொருள்.

இறை உணர்வுக்கான நித்திய தாகத்தோடு இருப்பவர்கள் பாவையர். எனவே விடியும் முன்பிருந்தே இறைவன் புகழைப் பாடிக் கொண்டிருந்திருக்க வேண்டும். எனவே அவர்கள் ஒன்று சேர்ந்து இருப்பதை வைத்து மட்டுமே
விடிந்துவிட்டது என எடுத்துக் கொள்ள முடியாது. விடியலுக்கான வேறு அடையாளங்களைச் சொல்லியே இன்னும் உறங்கிக் கிடப்பவளுக்கு விடிந்துவிட்டதை உணர்த்த வேண்டும் என்பது போல பாடல் தொடர்கிறது.

"வெள்ளி முளைத்துவிட்டது. வியாழம் உறங்கிவிட்டது; விடியல்
வந்து விட்டது" என்கிறார்கள். அப்படியும் இவர்கள் தமது உற்சாகத்தின் மேலீட்டால் கோள்களைத் தவறாகப் பார்த்துப் புரிந்திருக்கலாம் எண்ணி வாளாவிருந்துவிடுவாளோ என்றெண்ணி மேலும் விடியலுக்கான அடையாளங்களைப் பட்டியலிடுகிறார்கள். பறவைகள் எழுந்து எங்கும் குரல் கொடுக்கின்றன. இத்தனை சொல்லியும் எழுந்து வரவில்லையே! இன்னும் என்ன செய்வது?

அவளைப் பாராட்டிப் பேசினாலாவது வந்து சேர மாட்டாளா? அதனாலேயே அவளைப் போதரிக் கண்ணினாய் என்கிறார்கள். செவ்வரி ஓடிய அழகிய கண்கள். உணர்வின் முகிழ்வாய்த் தெரியும் கண்கள்.

அரி என்றால் மான். துள்ளித் திரியும் மானின் கண்களைப் போன்ற கண்களைப் பெற்றவள் என்றும் பொருள் காணலாம்.

போது என்றால் மலர்; அரி என்றால் மான்.
பாவையின் கண்கள் குவளை மலர்களைப் போலும் மானின் விழிகளைப் போலும் அழகாக இருக்கின்றன என்றும் பொருள் கொள்ளலாம்.

போது என்றால் மலர்: அரி என்றால் வண்டு என்றும் பொருள்.
மலரில் கிடக்கும் வண்டைப் போலக் கண்மணி சுழல்கிறதாம்.

போது என்றால் மலர்; அரி என்றால் போட்டி என்றும் பொருள்.
அழகில் மலருக்குப் போட்டியாகும் கண்கள் என்றும் சொல்லாம்.

இத்தனை வகையில் எப்பொருளை எடுப்பது? எதை விடுவது?

பாவை நோன்புக்காக நீராடலைச் சாதாரண நீராடல் இல்லை. பக்தி எனும் நீரில் முங்கி விடுதல் என்ற பொருளில் குள்ளக் குளிர்ந்து நீராடல். மார்கழி மாதத்துக் குளிரில் கிணற்றிலோ குளத்திலோ நீராடியவருக்குத்தான் தெரியும் இதன் அருமை.

நதியில் நீராடுவது வேறு. நதி நீர் ஒரே மாதிரிக் குளிர்ந்து இருப்பதால் குளிர்காலத்தில் நதியில் நீராடுவது என்பது அவ்வளவாகச் சுகமான அனுபவம் அல்ல. ஆனால் குளத்து நீர் அல்லது கிணற்று நீரின் சுகமே வேறு. குளத்தில்
மேற்பரப்பு நீர் குளிர்ந்திருக்க கீழே வெது வெதுப்பாக இருக்கும். கிணற்றிலோ நீர் முழுக்க வெது வெதுப்பாக இருக்கும். எனவே குளிர்ந்த உடல் வெது வெதுப்பான நீரில் முழுகிக் குளிக்கும் சுகத்தை அனுபவித்தால் மட்டுமே அதன் சுகம் தெரியும். கிணற்று நீர்க் குளியல் கிளுகிளுப்பை ஊட்டும் என்றால் குளத்து நீர்க் குளியல் புத்துணர்வைத் தருவதாக இருக்கும்.

கள்ளம் = இறை அனுபவத்தைத் தான் மட்டுமே அனுபவித்துக் கொண்டு பிறரைத் தவிர்த்துவிடுகிறாள் என்று பொருள்.
அப்படிப் பார்த்தால் துணையாக இருந்து நடத்திச் செல்ல வேண்டிய குருவாக அவளும் ஆன்ம வளர்ச்சியில் வெவ்வேறு நிலைகளில் இவர்களுமாக இருப்பதாகக் கொண்டு பார்க்கலாம். எனவேதான் இவர்கள் “உன் கள்ளத்தைத் தவிர்த்து எங்களையும் உன்னோடு இறை அனுபவத்துக்கு இட்டுச்
செல்ல மாட்டாயோ?” என்று விண்ணப்பம் செய்கிறார்கள்.
கள்ளம் என்பது உறங்குவது போலச் செய்யும் பாசாங்காகிறது.

இப்படியாக விடியலுக்கான அடையாளங்களுக்குப் பட்டியலிடுவது பதின்மூன்றாவது பாடல்.










0 Comments: