Sunday, December 27, 2009

திருப்பாவை - 12

நாள் பன்னிரெண்டு - பாடல் பன்னிரெண்டு

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

தலைவியின் இல்லத்துச் செல்வம் ஏராளமான பால்வளத்தைக் குறிப்பதாக அமைகிறது. அவளது சகோதரன் வீட்டில் இருக்கும் எருமைகள் கணக்கிலடங்காது இருப்பதால் அனைத்திலிருந்தும் பால் கறப்பதென்பது சிரமமான காரியம். அவ்வாறு பால் கறக்காது விட்ட எருமைகள் தத்தமது கன்றுகளை நினைத்த அளவில் தானாகவே பால் சொரியும். அவ்வாறு சொரிந்து கொட்டிய பால் தரையில் சிந்திச் சேறாக்கும் அளவுக்குச்
செல்வக் குடும்பம் அவளுடையது. இலங்கையில் ராவணனை அழித்த இறைவனின் புகழைப் பாடியும் அவ்வளவு செல்வம் படைத்த வீட்டுப் பெண்ணான அவள் தூங்கிக் கிடப்பது தகுமோ என்கிறார்கள். என்னதான் தூக்கமோ அது என்று ஆச்சரியப்படுகிறார்கள். சுற்றியிருக்கும் அனைவரும்தான் இவள் அப்படிச் சோம்பிக் கிடப்பதைத் தெரிந்து கொண்டார்களாம். எனவே அவளுடைய செல்வக் குடும்பத்தின் கெளரவத்துக்காகவாவது அவள் எழுந்து வரவேண்டுமாம்.

பதினொன்றாம் பாடலில் தொடங்கிய வருந்திய அழைப்பு பன்னிரெண்டாம் பாடலிலும் தொடர்கிறது.


நற்செல்வன் என்ற வார்த்தை ராமனின் தம்பியான லட்சுமணனைக் குறிப்பது.
ராம சேவை என்ற சிந்தனை தவிர வேறு எந்தச் சிந்தனையும் இல்லாதிருந்தவன் லட்சுமணன். அவ்வாறே அவளுடைய சகோதரனும் பால் கறப்பது என்ற கடமையைத் தவிர்க்குமளவுக்கு இறைச் சிந்தனை உடையவன்.

வேறொரு வகையில் விளக்கம் தருவதும் உண்டு.
தானாகப் பெருகிப் பாயும் பால் இறைவனின் கருணை என்பார்கள். அருச்சுனன் கேட்காத போதும் கீதையில் கண்ணன் தானாக முன்வந்து உபதேசம் அளித்ததை நினைவில் கொள்ளவேண்டும்.

இந்தப் பாடலில் கன்றை நினைத்தவுடன் பால் சொரியும் அன்பையும் தென்னிலங்கைக் கோமானைச் போரில் அழித்த சினத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக அமைத்துக் கூறுவதைப் பற்றிய ஒரு விளக்கம் இருக்கத்தான் வேண்டும். என்னதான் ராவணன் மீது சினம் கொண்டவனாக இருந்தாலும் போர்க்களத்தில் நிராயுதபாணியாக நின்ற அவனை அப்போதே அழிக்காது, "இன்று போய் நாளை வா" என்று அனுப்பினானே? அப்படியாகச் சினமன்றியும் கருணை கொண்டிருந்த இறைவனின் பண்பை விளக்குமிப்பாடல்.

பேருறக்கத்தையும் இரண்டு வகையாகப் புரிந்து கொள்ளலாம்.

மானுட வாழ்வின் நோக்கமே ஆன்ம வளர்ச்சி. ஆனால் சம்சார பந்தத்தில் பற்றுக் கொண்டு முக்கியமான கடமையை மறந்து போய் உலகாயதத்தில் உழன்று கொண்டிருத்தல் ஒரு வகை உறக்கம்.

அடுத்து உறக்கம் என்பது இறைவனின் யோக நித்திரையைக் குறிக்கும் சொல்லான வைதிகம் என்பதோடும் தொடர்புடையது. தன் நினைவு முழுவதையும் இந்த உலகத்தைக் காப்பதில் வைத்து உறங்குவான் போலக் கண்களை மூடிக் கிடப்பவன் இறைவன். வீட்டுக்குள்ளே படுத்திருப்பவள் உலக இச்சைகளில் மூழ்கி ஆன்மிகக் கடமையை மறந்தவள் அல்ல. அதே சமயம் அவளுடைய உறக்கம் இறைவனின் உறக்கத்தைப் போன்றதும் அல்ல. என்றால் இது என்ன வகையான உறக்கம் என்ற ஆச்சரியக் கேள்வி வருவதில் தவறேது?

அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோர் என்பதற்கும் இரண்டு வகையான விளக்கங்களைக் காணலாம்.
எல்லோரும் வந்துவிட்டார்களோ என்ற கேள்விக்கு விடையாக அனைத்து இல்லங்களில் இருந்தும் நமது தோழியர் உறக்கம் கலைந்து எழுந்து வந்து விட்டார்கள் எனறு சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டாவதாக எல்லோருக்கும் நீ இன்னும் இப்படி உறங்கிக் கிடக்கிறாய் என்பது தெரிந்து போய்விட்டால் உன் சகோதரனின் கெளரவத்துக்கல்லவா இழுக்கு என்ற கேள்வியாகக்கூட இந்தக் கூற்றை எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறாக பன்னிரெண்டாம் பாடலில் பக்தி வழியின் சிறப்பு வெளிப்படுகிறது. அதன்றி இறைவனின் கருணையைக் கொண்டாடி அவனை மனதுக்கினியானாக்குவதும் இந்தப் பாடல் என்று சொல்ல வேண்டும்.










0 Comments: