Saturday, December 26, 2009

திருப்பாவை - 11

நாள் பதினொன்று - பாடல் பதினொன்று

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.


பதினொன்றாம் பாடலும் பாவை நோன்பிருக்கச் செல்லும் பாவையர் தம்மோடு இன்னமும் வநது சேராதவளைச் வர அழைக்கும் விதத்தில் அமைந்துளது எனினும் இப்பாடலின் தொனியில் நிச்சயமாக ஒரு வித்தியாசம் தெரிகின்றது,
இதுவரையில் அவளைக் குறை சொல்லியும் சீண்டியும் தம்மோடு சேர அழைத்த பெண்கள் இந்தப் பாடலில் அவள்
தம்மோடு சேர வேண்டும் என்று அவளைத் தூண்டுவது போலப் பேசுகிறார்கள்.

ஆயர்களின் கால்நடைச் செல்வம் கணக்கில்லாதது. அவர்தம் வீரமோ அளப்பரியது. அவர்களோடு போரிட்டவர்களின் செருக்கை அழிக்குமளவுக்குத் தேடிப் போய்ப் போர் புரிகிறவர்கள். குறைகள் ஏதுமற்ற அவர்களின் குலத்தில் பிறந்த பொற்கொடி போன்றவள் இன்னும் பாவை நோன்பில் சேராதிருப்பவள். வனப்புடைய இடையை உடையவள். இதை ஆண்டாள்," புற்றில் வசிக்கும் பாம்பு படம் விரித்து எழுந்து நிற்கும் போது படத்தின் அகலமும் அது குவிந்து உடலில் நெளிவதும் போல இடையிலிருந்து அல்குலுக்குக் குவிந்த வடிவுடைய அழகு பெற்றவள்" என்று வருணிக்கிறாள்.
மேலும் புனத்தில் இருக்கும் மயிலைப் போன்ற சாயை உடையவள். துயில் நீங்கித் தனக்கெனக் காத்திருக்கும்
பிற கன்னியரோடு சேர வேண்டும் என்று அவளைக் கனிந்து அழைக்கிறார்கள். "எங்களைத் தவிர்த்துச் செய்ய
வேண்டிய காரியமும் உள்ளதோ? நாங்கள் யாவரும் உன் சுற்றத்தினரும் தோழியரும் அல்லவோ? உன் வீட்டு
முற்றத்தில் கூடி நின்ற நாங்கள் மேக வண்ணக் கடவுளின் புகழல்லவோ பாடுகிறோம்? எங்களோடு வந்து சேர
மாட்டாயா?" என இறைஞ்சுகின்றனர். தம்மோடு வந்து சேராத பெண்ணின் உயர்வைச் சிறப்பித்துப் பேசினாலும் இன்னமும் துயில் நீங்கி வெளியே வரவில்லையே என்ற எரிச்சலும் பொறுமையின்மையும் முந்தைய பாடல்களில் வெளிப்பட்டன. பதினொன்றாவது பாடல் தொடங்கி பதினான்காவது பாடல் வரையிலும் அப்பெண்களின் பேச்சில் அவ்வளவான கடுமை இல்லை. தம்மோடு சேர்ந்து கொள்ள அவளை வருந்தி அழைக்கிறார்கள்.


நம்மாழ்வார் ஒரு பாடலில் கூறுகிறார்.
வணங்கும் துறைகள் பலப்பல ஆக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பலப்பல ஆக்கி அவை அவைதோறும்
அணங்கும் பலப்பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின்கண் வேட்கை எழுவிப்பனே

பல்வேறு சமயங்கள்தோறும் பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு வகைகளிலும் பலரும் வணங்குவது ஓர் இறைவனையே. இந்தக் கூற்றுக்கு இணையவே கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து என்பதைப் பல்வேறு சமயங்களைச் சார்ந்த பல்வேறு வகையான பக்தர்களாக உருவகப்படுத்துவது.

செற்றார் என்பார் எதிர்த்துப் போரிடுவார். விரோதிகள். இறைவனுக்கு எதிரானவர்களும் பக்தர்களுக்குத்
தீங்கிழைப்பாரும் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிச் சென்று போரிட்டு ஆணவத்தை அழிப்பது ஆயர்களின் வீரம்
என்று இந்தப் பாடல் குறிப்பிடுகிறது. “தீய புத்திக் கஞ்சன் உன்மேல் சினமுடையான்” என்று கம்சனைப்
பெரியாழ்வார் விவரிப்பது இவ்வகையானதுதான். “சாது சனத்தை நலியும் கஞ்சன்” என்று நம்மாழ்வாரும் கம்சனை
விவரிப்பார். எனவே ஆயர்களின் வீரத்தைப் பற்றிப் பேச வரும்போது செற்றார் திறலழியச் சென்று செறுச்
செய்வோராக அவர்களைக் காண்கிறார் ஆண்டாள்.

கோவலர் தம் பொற்கொடியே என்பதை இரு வகையாகக் காணலாம். ஆயர் குலத்தில் தோன்றிய பொன்னாலாகிய கொடியானவள் என்பது ஒன்று.
இரண்டாவதாக என்னதான் வளப்பத்தோடு இருந்தாலும்
கொடியானது கொழுகொம்பைச் சார்ந்தே வளர முடியும் என்பதால் பாவை நோன்பின் மூலம் தன் கொழு
கொம்பான இறைவனின் கருணையைத் தேடியாக வேண்டிய அவசியம் இருப்பவள் என்று குறிப்பது.

”கண்ணனது அணிமேக நிறத்தைச் சொன்னவுடன் படுக்கையினின்றும் துள்ளிக் குதித்து எழுந்து வரவேண்டாமோ?
முகில் வண்ணன் புகழை நாம் பாடிய பின்னும் அசைவில்லாது, மொழியில்லாது படுத்துக் கிடப்பது உனக்கே அழகோ?” என்று கேட்பதாக அமைகிறது இந்தப் பாடல். இதற்கு வலிவு சேர்ப்பதாகவே அவளைப் புனமயிலாகக் காண்பதும் அமைந்திருக்கிறது. மழை மேகத்தைக் கண்டவுடன் தோகை விரித்து ஆடுமல்லவா மயில்? இவளும் முகில் வண்ணன் பேர் சொல்லக் கேட்டவுடன் பூரித்து எழுந்து வரவேண்டாமோ?

இந்தப் பாடல் முதலாழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரைக் குறிப்பதாகச்
சம்பிரதாய விளக்கங்கள் காண்கின்றன. முதலாழ்வார்கள் மூவரும் ஓரிடத்தில் நிலையாகத் தங்காதவர்களாக
எங்கும் திரிந்து யோகியராக இருந்தவர்கள். தமது பாடல்கள் வழியாக அறியாமையையும் இறைத் தொடர்பு உணர்வு இல்லாமையையும் நீக்க எங்கும் திரிந்தவர்கள் இந்த
ஆழ்வார்கள். அதனாலேயே எங்கும் தேடிப் போய் ஆணவத்தை அடக்கியதாகக் கூறுவது இவர்களுக்கு மிகவும்
பொருத்தமாக அமைகிறது. இம்மூவரும் பெண்வழியாகப் பிறந்தவர்களாக அன்றிப் பொய்கையிலிருந்தும்
பூவிலிருந்தும் கிணற்றிலிருந்தும் தோன்றி வந்தவர்கள் என்பதால் எவ்விதக் குற்றமும் இல்லாதவர்கள். தவிரவும்
எந்த வித உலகப் பந்தத்தோடும் தம்மைப் பிணைத்துக் கொள்ளாதவர்கள். துறப்பதென்பது கூட இவர்களைப்
பொறுத்த அளவில் எந்தப் பொருளுமில்லாதது. ஏனென்றால் ஏதாவது இருந்தால்தானே அதைத் துறக்க முடியும்?
எனவே குற்றமொன்றில்லாதவர்கள் என்ற விளக்கம் முதலாழ்வார்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.










0 Comments: