Friday, December 25, 2009

திருப்பாவை - 10

நாள் பத்து - பாடல் பத்து

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனோய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ
ஆற்ற அனந்தலுடையாய் அருள் கலமே
தோற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.


இந்தப் பாடல், தூங்குபவளின் அன்னையின் வழிகாட்டலின்படி இறைவனின் பல பெயர்களைச் சொல்லிப் பாடியும் அவள் எழுந்து வந்து கதவைத் திறக்கும் வழி காணாத ஆயர்குலப் பெண்கள் என்ன ஆகிவிட்டது இவளுக்கு என்று ஆச்சரியப்படும் வகையில் அமைந்துளது.

இப்பாடலின் முதலடி இலக்கிய நோக்கிலும் சமய நோக்கிலும் சுவாரசியமானதாக அமைந்துள்ளது. பாவை நோன்பின் நோக்கம் உலகுக்கு மழை கிடைப்பதும் கன்னிப் பெண்களுக்குச் சிறந்த கணவன்மார் கிடைப்பதும் ஆகும். மழையை ஏற்கெனவே இறைக்கருணையாக ஆக்கிவிட்டது நான்காம் பாடல்.

பத்தாவது பாடல், இறைவனோடு இருக்க வேண்டும்; இடையீடற்ற இறைத் தொடர்பு வேண்டும் என்பதே. சுவர்க்கம் என்ற வார்த்தை குறிப்பதும் ஒருவகைப் போகமே, இன்ப அனுபவமே என்ற வகையில் அதையும் வேண்டேன் என்பவன் உயர்ந்த வைணவன். கைவல்ய நவநீதம் எனும் சொர்க்க போகத்தைத் தாண்டி இறைவனோடு என்றும் இருக்க வேண்டும் என்பதே பக்தியின் நோக்கம்.

விசிட்டாத்வைதக் கொள்கையின்படியான ஆன்ம இறைத் தொடர்பானது இறைவனோடு ஐக்கியமாகிவிட வேண்டும் என்பதைக் குறிக்காமல் இறைவனோடு இடையீடற்ற தொடர்பு வேண்டும் என்று குறித்தலால், நோன்பின் பயனான
சுவர்க்கமாக இங்கே குறிப்பிடப்படுவது அத்தகைய இறை உணர்வே என்பதாம்.

முதல் வரிக்கு முவ்வகையான விளக்கங்கள் தரப்படுகின்றன.

முதல் விளக்கத்தின்படி "நாமனைவரும்தானே நோன்பிருக்கச் முடிவெடுத்து வேண்டிக் கொண்டோம்? நாங்கள் தயாராக
வந்திருந்தும் இவ்வளவு நேரம் உன்னை அழைத்தும் இன்னும் எங்களோடு சேராதிருக்கிறாயே. கதவைத் திறக்கவில்லை என்றாலும் பாதகமில்லை. உள்ளிருந்தபடியே ஒரு வார்த்தை மறுமொழி கூடச் சொல்லக் கூடாதோ?" என்று ஆயர் குலத்துக் கன்னியர் கூறுவதாக விளக்கம் தரலாம். அதன்படி "உன்னுடைய சொல்லுக்கும் செயலுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தைப் பார்க்கும் போது உனக்கு இறைத் தொடர்பு கிடைக்கும் என்றா நினைக்கிறாய்?" என்று கேட்பதைப் போல இந்தப் பாடல் அமைகிறது.

இரண்டாவதாக "ஏற்கெனவே உனக்கு இறைத் தொடர்பு கிட்டிவிட்டதோ? உன் மாளிகைக்கும் இறைவனது
மாளிகைக்கும் இடையே எந்தச் சுவரும் இல்லையோ? என்ன நோன்பை நோற்றாய் அத் தொடர்பு உனக்கு மட்டுமே சித்திக்க?" என்று பிற பெண்கள் கேட்பதாகக் கொள்ள வேண்டும். இறைத் தொடர்பை ஏற்கெனவே அனுபவமாக்கிக் கொண்டவள் பேசாது கிடத்தலும் தகும் என்ற கருத்து வெளிப்படுவதாக இந்த விளக்கம் அமைகிறது.

மூன்றாவதாக "நாம் அனைவரும் ஒன்றாகத்தானே நோன்பிருக்கச் சங்கல்பித்துக் கொண்டோம். நீ மட்டும்
தனியாக நோன்பிருந்து எங்களைப் பின் நிறுத்தி இறைத் தொடர்பைப் பெற்று அனுபவிப்பது உனக்குத் தகுதியோ?" என்று பிற பெண்கள் கேட்பதாகவும் இப்பாடலின் முதல் அடி விளக்கம் பெறுகிறது.

இந்த மூன்று வகை விளக்கங்களில் எதை எடுத்துக் கொண்டாலும் சுவர்க்கம் என்பதை இன்ப அனுபவம் தரும்
வாழ்க்கையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தெளிவு. இறைவனோடு இடையீடற்ற தொடர்புடைய நிலை பெறுதலே நோன்பின் பயன் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

நம்மாழ்வாரும் ஒரு பாடலில் இறை உணர்வு என்பது ஒரு பாவனை எனக் குறித்து அது உணர்வுகளின் அதீத அனுபவம்
என்று முடிப்பார்.

"யாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும்
தோய்விலன் புலன் ஐந்துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி
ஆவி சேர் உயிரின் உள்ளான் ஆதுமோர் பற்றில்லாத
பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே."

இன்னமும் படுக்கையை விட்டு நீங்காத பெண்ணை அம்மனாய் என்று அழைப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். தாய்
அல்லது தாயானவள் என்ற பொருளில் இச்சொல்லை எடுத்துக் கொண்டால் சீதையைப் போல இறைவனை ஏற்கெனவே
பெற்றுக் கொண்டவள் என்று குறிப்பதாகக் கொள்ளலாம். இராவணனால் அசோக வனத்தில் இருத்தி வைக்கப்பட்ட
போது அந்தச் சூழலின் கொடுமையைத் தாங்கிக் கொள்ள சீதைக்குத் துணையாயிருந்தது எப்போதும் எந்தச்
சூழலிலும் எந்த இடத்திலும் ராமனோடு இருப்பதான உணர்வே என்பார்கள். உள்ளே இருப்பவளும் ஏற்கெனவே இறைத்
தொடர்பை அனுபவித்துக் கொண்டு மெய்ம்மறந்து இவர்கள் அழைப்பது தெரியாமல் கிடக்கிறாளோ என்ற பொருள்
தோன்றவே அம்மனாய் என்ற சொல்லை ஆண்டாள் பயன்படுத்தியிருக்கிறார் எனவும் கொள்ளலாம்.

உறங்குவதுபோலுள்ள பெண் நாராயணன் தன்னோடு உள்ளே இல்லை என்று சொல்கிறாள்.
உடனே மற்ற பெண்கள் "நாங்கள் நம்ப மாட்டோம். இதோ காற்றில் நாராயணனின் துளசி மாலை மணம் வீசுகிறதே. அவன் உன்னோடு உள்ளேதான் இருக்கிறான்." என்று சொல்கிறார்கள்.
உள்ளே இருப்பவள் "நேற்று மாலை நோன்பிருக்க முடிவு செய்து பிரிந்தபின் நேரம் அதிகம் கழியவில்லை. உடனே
நீங்கள் வாசலில் நின்றிருக்கவும் உங்களைத் தாண்டி உங்களை அறியாமல் அவன் வருவது எங்ஙனம்?" என்று கேட்கிறாள்,
அதற்கு அவர்கள் "எங்களுக்கு அவனைப் பற்றித் தெரியாதா என்ன? எங்கும் உள்ளவன் கண்ணன், எங்கு வேண்டுமானாலும்
அவன் தோன்றுவான்" என்று மறுமொழி கூறினார்கள்.
அதற்கு விடையளிக்கத் தெரியாமல் உள்ளே இருந்தவள் மெளனம் காக்கவும்,"கும்பகருணன் தன் தூக்கத்தை உனக்கு அளித்து விட்டானோ?" என்று மற்றவர்கள் எள்ளுகின்றனர்.

இராவணனின் தம்பி கும்பகருணன். ஆறுமாதம் விழிப்பும் ஆறுமாதம் தூக்கமுமாகக் கழிக்கச் சபிக்கப்பட்டவன்.
எனவே அளவுக்கு அதிகமாகத் தூங்கும் எவரையும் தூக்கத்தில் கும்பகருணன் என்று பகடி செய்வதுண்டு.
தூங்குவதில் கும்பகருணனுக்கும் இவளுக்கும் போட்டி நடக்க அந்தப் போட்டியில் தோற்றுத் தன் தூக்கத்தை இவளுக்குத்
தந்துவிட்டானோ கும்பகருணன் என்று எள்ளி நகயாடுகின்றனர்.
கும்பகருணனுக்குத் தூக்கம் இயல்பாகிப் போனது போல
உள்ளிருக்கும் பெண் இறை உணர்வே இயல்பாகிப் போனவள் போல் பதில் கூறாதுள்ளாள்.

என்னதான் பாவை நோன்பிருக்க மற்றவரோடு இன்னமும் வந்து சேரவில்லை என்றாலும் உள்ளிருப்பவளைக் குறைத்து மதிப்பிட்டு விடலாகாது. அருட்கலமே என்று அவளை அழைப்பதன் மூலம் நாயகப் பெண்பிள்ளாய் என்றும் தேசமுடையாய் என்றும் ஏழாம் பாட்டிலும் கோதுகலமுடைய பாவாய் என்று எட்டாம் பாட்டிலும் அழைத்துச் சிறப்பித்தது சாலச் சரியே.

பத்தாம் பாடல் வைணவ தத்துவார்த்த விளக்கமாக அமைந்துள்ளது.










0 Comments: