Wednesday, December 23, 2009

திருப்பாவை - 7

நாள் ஏழு - பாடல் ஏழு

கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்.

ஆறாவது பாடலின் தொடர்ச்சியாக ஏழாவது பாடல் உறங்கும் பெண்ணை எழுந்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்தும்
வகையில் அமைந்துள்ளது. ஆனைச் சாத்தன் என்ற பறவை கரிக்குருவி என்றும் செம்போத்து என்றும் பலவாகக் கூறுவார்கள். கரிக்குருவி கதிரவன் எழும் காலையிலும் கதிரவன் மறையும் மாலையிலும் ஜிவ்வென்று மேலெழும்பிச் செங்குத்தாகக் கீழே பாய்ந்து வானத்தின் குறுக்கே பறந்து மீண்டும் மெலெழும்பிப்
பறக்கும் இயல்புடையது. மேலேறும்போது சீச்சென்ற குரல் உயர்ந்தொலித்துக் கீழே விழும்போது மெல்ல மறைந்து பறக்கும் போது இல்லாமல் போய் மீண்டும் ஒலித்துக் குறைந்து தேயும். எனவே இந்தப் பாடல் குறிப்பது கரிக்குருவியைத்தான் என்பது தெளிவு. எனினும் கரிக்குருவி காலையில் பறப்பதில்லை. மாலையில் மட்டுமே பறக்கும் என்றும் சொல்வார்கள். அதுவன்றியும் கரிக்குருவிக்குத் தமிழில் கஞ்சனம் என்றே பெயர் என்பதையும் சுட்டிக் காட்டுவார்கள். செம்போத்து என்று சொல்வாரும் உண்டு. ஆனால் செம்போத்து கீசு கீசென்று ஒலி
எழுப்புவதில்லை. பொதுவாகக் காலை நேரத்துப் பறவைகளின் ஒருமித்த ஒலிகளின் சங்கமம் என்று கொள்வது
பொருத்தமாக இருக்கும். ஆயினும் ஆனைச் சாத்தன் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதால் அப்படிக் கொள்வதும்
சரியெனத் தெரியவில்லை.

விடியற்காலையில் மோர் கடைவதென்பது ஆயர்களின் வாழ்வில் பிரிக்க முடியாது இணைந்து போனதோர் ஓசை. ஆண்டாள் இந்தக் காட்சியை வார்த்தைகளில் வடித்திருக்கும் விதமே அலாதி. மத்தைச் சுற்றிய கயிற்றை முன்னும் பின்னும் இழுக்கும் ஆய்ச்சியர் பக்கவாட்டில் உடலின் மேற்புறம் மட்டுமே கைகளின் அசைவுக்கேற்ப அசைவதை மிகச் சிறப்பாக உணர்த்தியிருக்கிறார். ஆய்ச்சியர் அணியும் தாலியில் கொம்புத் தாலி நடுவில் இருக்க காசுகள் இருபக்கமும் இருக்கும். பக்கவாட்டில் ஆய்ச்சியர் உகையும் போது முன் வீசிப் பின் விழும் தாலியின் கொம்பும் காசும் ஒன்றோடொன்று உரசி எழுப்பும் ஒலியைக் குறிப்பிடும்
காசும் பிறப்பும் கலகலப்ப என்ற தொடர் அழகிய தோற்றத்தை நம் கண்முன் கொண்டுவருகிறது.

அடுத்தது வாச நறுங்குழல் ஆய்ச்சியர் என்ற தொடரைக் காண்போம். தயிரைக் கடையும் போது காற்றைத் தயிர்,
வெண்ணெய், மோர் என்ற மூன்றின் கலவையான ஒரு விதமான வாசம் நிறைத்திருக்கும், அந்த வாசத்தை
மறைக்கும் அளவுக்கு மணமுடைய கூந்தலாம் ஆய்ச்சியர் கூந்தல்.

பாவை நோன்பிருக்க எழுந்து வந்த பிற பெண்களோடு இன்னும் சேராது படுத்துறங்கும் பெண் பத்தோடு பதினொன்று
அத்தோடு இது ஒன்று என்றிருப்பவள் அல்ல. தம்மிடையே சிறந்தவளான அவளே இன்னும் பாவை நோன்பிருக்க எழுந்து வராது கிடந்திருப்பதென்பது கேசவனைப் பாடியும் எழுந்து வராதிருப்பது. எனவே பிற பெண்களுக்கு வியப்பாகத்தான் இருக்கும். எனவேதான் சேவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ என்று வியப்புறுகின்றனர்.

கேசவன் என்ற பெயருக்கு முவ்வகைக் குறிப்புகள் உண்டு. ஆதியம்பகவனான நாராயணனுக்குக் கேவசன் என்பது ஒரு
பெயர். இரண்டாவதாக நாராயணனின் அழகிய கோலத்தைக் குறித்து எழுந்த பெயர் எனக் கொள்ளலாம். மூன்றாவதாக கேசி என்ற அரக்கனைக் கொன்றவன் என்றும் கொள்ளலாம்.

கம்சன் கண்ணனைக் கொல்லக் குதிரை வடிவத்தில் அனுப்பிய அசுரன் கேசி. அவன் ஆய்ப்பாடியில் புகுந்து ஆநிரைகளைத் துன்புறுத்தி ஆயர்களை அச்சுறுத்தவும் அவர்கள் கண்ணனிடம் முறையிட்டார்கள். பிரம்மாண்டமாக வளர்ந்த கண்ணன் கேசி என்ற குதிரையின் வாய்க்குள் கையை வைத்து அவனை முழுக்கப் பிளந்து கொன்றான்.

இன்னமும் உறங்கிக் கொண்டிருப்பவள் இடைப் பெண்டிருக்குத் தலைவி மட்டுமல்ல. இறை அனுபவத்தை உணர்ந்து
அனுபவித்தவள். ஆதலால் அதன் அடிப்படையான ஆனந்தத்தைப் பெற்றவள். அதனாலேயே அவளை நாயகப் பெண்பிள்ளாய் என்று அழைக்கிறார்கள். அப்படிப்பட்டவள் இன்னும் உறங்கலாமா என்பதுதான் ஆய்ச்சியரின் கேள்வி.

ஏழாம் பாடல் ஆய்ப்பாடியின் காலை நேரத்தைக் கண்முன் நிறுத்துகிறது.










0 Comments: