நாள் எட்டு - பாடல் எட்டு
கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவன் போகின்றாரைக் போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டடிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
எட்டாம் பாடலும் முன்னிரு பாடல்களின் தொடர்ச்சியே. உறங்கும் பெண்ணை எழுப்பும் பாடல்தான். பாவை நோன்புக்கென நீராடி நோன்பிருக்க அவளைப் பிற பெண்கள் அழைக்கிறார்கள்.
ஏழாம் பாடலில் குறிப்பிட்டபடியே இன்னும் உறங்குபவள் அவர்களில் தலைசிறந்தவள் என்ற குறிப்பு இந்தப்
பாடலிலும் காணக் கிடக்கிறது. பிறரை விடவும் இறை அனுபவத்தைச் சிறப்பாகப் பெற்ற அவளே இன்னும்
உறங்கியிருக்கலாமா என்றே ஆய்ச்சியர் இப்பாடலைப் பாடுகிறார்கள்.
காலை நேரத்துக் காட்சியைக் கண்முன் நிறுத்தி இந்தப் பாடல் ஆரம்பமாகிறது. மார்கழி மாதத்துப் பனிப் படலத்தின் ஊடே சிறு மேய்ச்சல் மேய்வதற்காக அவிழ்த்துவிடப்பட்ட எருமைகளை முதலிரு வரிகள் காட்டுகின்றன. மெல்லிய ஒளியில் கருத்த எருமைகள் நகரும் காட்சி நம் கண்முன் தோன்றுகிறது.
சிறு வீடு மேய்தல் என்பதன் விளக்கம்:
மேய்ச்சலுக்கு எருமைகளை அழைத்துச் செல்ல இன்னும் நேரம் இருக்கிறது என்ற போதும் விடியற்காலையில் சிறிது நேரம் ஆய்ப்பாடியைச் சுற்றிவரக் கால்நடைகளை அவிழ்த்து விடுவார்கள். இதைத்தான் சிறு வீடு மேய்வது என்பார்கள்.
கொட்டிலைச் சுத்தம் செய்தபின் மீண்டும் கால்நடைகளைக் கட்டி வைத்துத் தம் காலைக் கடன்களை முடித்துவிட்டு அன்றைய மேய்ச்சலுக்குக் கால்நடைகளை அழைத்துச் செல்வார்கள். இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்ப்போர் மார்கழிப்
பனியில் நனைந்து கிடக்கும் புல் நுனியை சோம்பேறித்தனமாக எருமைகள் கடிப்பதைக் காணலாம். மேயும் பரபரப்பு இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறு வீடு மேய்வான் என்ற தொடரைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.
போவான் போகின்றாரை என்று சொல்லி நோன்புக்குப் போய்க் கொண்டிருக்கும் அனைவரையும் அவள் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருப்பதையும், இறை உணர்வைப் பெற்றவள் மட்டுமல்ல - பிறர் பெறவும் காரணமாக இருப்பவள் என்றதாலும், அவள் வந்தாலேயே நோன்பு நோன்பாக இருக்கும் என்பதையும் உணர்த்துகிறாரோ?
மாவாய் பிளந்தானை என்ற தொடர் ஏழாம் பாட்டுக் குறித்த கேசி வதையை மீண்டும் குறிப்பிடுகிறது. மல்லரை மாட்டிய என்ற தொடர் மல்லர்களை எதிர்த்து மல்யுத்தம் புரிந்து அவர்களைத் தோற்கடித்த நிகழ்ச்சியைக் குறிக்கிறது. அவதாரங்களில் இறைவன் செய்த காரியங்களை வியந்து போற்றுவதென்பது அடிக்கடி குறிப்பிடும் பொருளாகிறது. அதிலும் கண்ணனாக இறைவனின் செயல்களை எல்லா ஆழ்வார்களும் பரக்க வியந்து
பேசுகிறார்கள். ஆழ்வார்களின் இலக்கியத்தில் மிக அதிகமாகப் பேசப்படுவது கண்ணன் அவதாரம்தான் என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். முதல் மூன்று ஆழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் பாடல்களிலேயே
பேசப்படும் அவதாரங்களின் எண்ணிக்கை பின் வருமாறு அமைந்துள்ளது.
கண்ணன் = 60, வாமனன் = 51, நரசிம்மன் = 19, ராமன் = 15, வராகம் = 12, கூர்மம் = 1.
பாடலின் கடைசி இரண்டு வரிகள் மிகவும் சிறப்பாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும். பல தெய்வ வணக்கம் வழக்கமாக இருக்கும் இந்து மதத்தில் நாராயணருக்கென்று ஒரு சிறப்பு உண்டு. அதைத்தான் எளிவரல் என்று தமிழிலும் செளலப்யம் என்று வடமொழியிலும் குறிப்பர்.
ஆவாவென்றாராய்ந்து அருளேலோர் எம்பாவாய் என்றபோது பக்தியை உடனடியாக ஏற்று அருள் புரிபவன் நாராயணன் என்பது விளங்குகிறதல்லவா?
SHIRDI SAIBABA | HOMOEOPATHY | PSYCHIC SCIENCES
HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB
சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள் | சிவசிவ
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
0 Comments:
Post a Comment