நாள் ஆறு – பாடல் ஆறு
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்
வெள்ளை விளிச் சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்தில் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்.
முதல் பாட்டில் நாராயணனைப் பெயரிட்டு இறைவன் அனைத்தையும் கடந்தவன் என்பதைக் காட்டினார்.
இரண்டாவது பாட்டில் இறைவனின் எளிவரலைக் குறிக்கப் பாற்கடலில் பையத் துயின்றதைக் குறித்தார்.
மூன்றாவது பாடலில் வாமனனாகத் தோன்றிச் செய்த செயலைக் குறித்தார்.
நான்காவது பாட்டில் இறைக்கருணை மழையாகப் பொழிய வேண்டும் என்று இறைஞ்சினார்.
ஐந்தாவது பாடலில் இறை உணர்வை அனுபவிக்கும் வழியில் தடைகளாகத் தோன்றுபவை எவை என்பதைக்
குறித்தார்.
ஆறாம் பாடல் தொடங்கி பதினான்காம் பாடல் வரையிலும் பாவை நோன்புக்கென நேர்ந்து கொண்ட
பெண்களில் இன்னும் சிலர் துயிலெழுந்து பிறரோடு நோன்பிருக்கச் சேராதிருக்க அவர்களை எழுப்பும் வகையில்
அமைந்துள்ளன.
ஆறாம் பாடலில் முழுக்க ஒலிக் குறிப்புகள் குறிக்கப்படுகின்றன. விடியற்காலத்துப் பறவைகளின் ஒலி, சங்கின்
முழக்கம், முனிவர்களும் யோகிகளும் அரி என்று சொல்லி இறைவனை அழைக்கும் ஒலி ஆகிய
ஒலிக்குறிப்புகளுக்கு இடையே பூதனையையும் சகடாசுரனையும் அழித்த சிறப்பு பேசப்பட்டுள்ளது.
யசோதையின் இல்லத்துக்கு ஓர் அழகிய பெண்ணாக வந்த அரக்கியே பூதனை. பால் தருவதைப் போல விஷத்தைப்
புகட்டிக் கண்ணனைக் கொல்வது அவள் நோக்கம். கண்ணன் அவளது இயல்பைப் புரிந்து கொண்டவனாக முலைப்பால்
அருந்துவதே போல அவளுடைய உயிரையே உறிஞ்சி எடுத்துக் கொன்ற கதைதான் பூதனையின் கதையாகும்.
அவ்வாறே கம்சனால் அனுப்பப்பட்ட சகடாசுரன் ஒரு வண்டியின் கீழ்க் கண்ணன் உறங்கிக் கொண்டிருந்த நேரம்
வண்டியை ஆகர்ஷித்துக் கீழே கிடந்த கண்ணனைக் கொல்ல வந்தான். வண்டியின் சக்கரத்தைச் செல்லமாக உதைப்பது
போல உதைத்து சகடாசுரனைக் கீழே தள்ளிக் கொன்ற கதை சகடாசுரன் கதை.
நாராயணனை அனைத்துக்கும் வித்தாகக் கருதுவது வைணவ மரபு. அனைத்துக்கும் தானே முதலும் ஆண்டானுமாக இருந்தும்
ஒன்றுமறியாதவன் போலப் பாற்கடலில் ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்டு யோக நித்திரையில்
ஆழ்ந்திருப்பதன் பெருமையை இந்தப் பாடல் புலப்படுத்துகிறது.
பறவைகளின் ஒலியைக் குறித்தவுடனே கோயிலில் இருந்து அழைக்கும் சங்கின் முழக்கத்தை இந்தப் பாடல்
குறிப்பிடுகிறது. பறவைகளுக்கு அதிதேவதையான கருடன் நாராயணரின் வாகனம். எனவேதான் கோயிலைப்
புள்ளரையன் கோயில் என்கிறார்.
சில தொடர் சூழல்களை நாடக வடிவில் தரும் பாடல்களின் வரிசையில் இந்தப் பாடல் முதல் பாடலாக
அமைந்திருக்கிறது. நோன்பிருக்கச் சங்கல்பித்துக் கொண்ட பெண்ணொருத்தி இன்னும் துயிலெழாமல் இருக்கிறாள்.
பிற பெண்கள் எழுந்து வந்திருக்கும் தம்மோடு சேர அவளை அழைப்பதைப் போல இந்தப் பாடல்
அமைந்திருக்கிறது. விடியலுக்கான அடையாளங்களைக் கூறி அவளைத் துயிலெழுப்புவதாக இந்தப்
பாடல் இருக்கிறது.
முனி என்ற வார்த்தைக்குச் சிறப்புப் பொருள் இருக்கிறது. இறை உணர்வே தம் உணர்வாக வாழ்பவரே முனிவர்கள்.
அப்படியேதான் யோகி என்ற வார்த்தையும். தமது பக்தி பூர்வச் செயல்கள் மூலம் தமது இறைத் தொடர்பை
வெளிப்படுத்துவோரே யோகிகளாம்.
முனிவர்களும் யோகிகளும் துயிலெழுந்து வருவதைக் குறிப்பிடும்போது ஒரு மென்மை இழையோடி வருவதைக் காண
முடிகிறது. இறைவனைத் தமது இதயங்களில் ஏற்றி வைத்திருப்பவர்கள் அங்கிருக்கும் இறைவன் திடுமென எழுவதன்
அதிர்வை உணரக் கூடாதென்பதற்குத்தானோ அவர்கள் மெல்ல எழுகிறார்கள்! இந்தப் பாடலில் தொடர்ந்து வரும்
ஒலிக்குறிப்புகளுக்கு விளக்கம் காண்பது நலம்.
பறவைகளின் ஒலியானது உடல் உணர்வுக்கு வருவதைக் குறிப்பிடுகிறதெனலாம்.
சங்கின் முழக்கம் ஓர் அழைப்பு என்க.
அரி என்ற அழைப்பில் ஆன்மா எழுப்பப்படுகிறதென்க.
இவ்வாறாக மெய், மனம், ஆன்மா என்ற மூன்றையும் எழுப்பும் விதத்தில் இந்தப் பாட்டு அமைந்திருக்கிறது என்று
கொள்ளலாம்.
SHIRDI SAIBABA | HOMOEOPATHY | PSYCHIC SCIENCES
HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB
சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள் | சிவசிவ
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
0 Comments:
Post a Comment