நாள் ஐந்து - பாடல் ஐந்து
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
முதல் பாட்டில் நாராயணனைப் பெயரிட்டு இறைவன் அனைத்தையும் கடந்தவன் என்பதைக் காட்டினார்.
இரண்டாவது பாட்டில் இறைவனின் எளிவரலைக் குறிக்கப் பாற்கடலில் பையத் துயின்றதைக் குறித்தார்.
மூன்றாவது பாடலில் வாமனனாகத் தோன்றிச் செய்த செயலைக் குறித்தார்.
நான்காவது பாடலில் இறைக்கருணை மழையாகப் பொழிய
வேண்டும் என்று இறைஞ்சினார்.
ஐந்தாவது பாடலில் இறை உணர்வை அனுபவிக்கும் வழியில் தடைகளாகத் தோன்றுபவை எவை என்பதைக் குறிக்கிறார்.
வைணவ மெய்ப்பொருள் இயலில் இறைவனோடான இடையீடற்ற தொடர்புக்குக் குந்தகமான ஐந்து விதமான தடைகள் பேசப்படுகின்றன.
அவை: ஸ்வரூப விரோதி, பரத்வ விரோதி, உபய விரோதி, புருஷார்த்த விரோதி மற்றும் பிராப்த விரோதி என அவை பெயர் பெறுகின்றன.
இந்த உடலே ஆத்மா என்ற நினைவும் தனக்குக் கடவுளோடான தொடர்பு எதுவுமில்லை என நினைப்பதும் ஸ்வரூப விரோதி எனப்படும்.
பிற கடவுளரையும் தேவர்களையும் நாராயணனுக்குச் சமமாகக் கருதுவது பரத்வ விரோதி எனப்படும்.
நாராயணனைத் தவிர்த்த எதையும் ஈடேற்றத்துக்கான முகாந்திரமாகக் கொள்வதும் தனது புண்ணியங்களும் சரணாகதியும் மட்டுமே ஈடேற்றத்தை நிகழ்விக்கும் என நினைப்பதும் உபய விரோதி எனப்படும்.
இவ்வுலகச் சிறப்புகளையே வாழ்வின் குறிக்கோள்களாகக் கருதுவது புருஷார்த்த விரோதி எனப்படும்.
இறைவன் அல்லது இறைத் தொண்டர் தொடர்பான
கடமைகளில் தவறிழைப்பது பிராப்த விரோதி எனப்படும்.
(நன்றி: நண்பர் இரமணி நாயுடு)
இவற்றில் கடைசியாகக் கூறப்பட்டதே இக்காலத்தே
பாவம் என்று எடுத்துக் கொள்ளப்படுவது.
இறைவனால் படைக்கப்பட்டிருப்பதன் நோக்கத்தையே வக்கிரப்படுத்துவதே பாவம் என்று கொள்ள வேண்டும்.
ஐந்தாம் பாடலில் அவ்வாறான பாவங்கள் தம் பாதகங்களை இழந்துவிடுகின்றன என்ற நம்பிக்கையைப் பறைசாற்றுகின்றது. பாவங்களின் விளைவுகள் அனைத்தினின்றும் விடுபட ஒரே வழி இறைவனின் பெயர்களைச் சொல்லிப் புகழ்ந்து பாடுவதே. அவ்வாறு இறைவனின் புகழ்பாடி ஏத்த ஏதேனும் தகுதிகள் தேவையோ? இந்தக் கேள்விக்கான விடையாக இந்தப் பாடல் அமைந்திருக்கிறது, இப்பாடலில் சிறப்பித்துக் கூறப்படுவது தூய்மை. தூய்மையைக் குறிக்க வெவ்வேறு சொற்றொடர்கள் இப்பாடலில் பழக வருகின்றன. தூயப் பெருநீர் யமுனை, தூயோம், தூமலர் ஆகிய தொடர்களைப் பார்க்கவும். இவ்வாறு சிறப்பாகப் பேசப்பட்டிருக்கும் தூய்மையானது கடவுளுக்கு மலர்களைப் படைத்து அர்ச்சிப்பதிலும் இறைவனைப் பணிவதிலும் இறைவனின் புகழ் பாடுதலிலும் இறைவனின் பல பெயர்களை நினைத்துத் தியானிப்பதிலும் அமைந்திருக்கிறது.
அதனால்தான் இந்தப் பாடலில் எட்டு அடிகளில் ஐந்து பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. மாயன், வடமதுரை மைந்தன்,ஆயர்குலத்து அணிவிளக்கு, தாமோதிரன் ஆகிய பெயர்கள் இறைவனின் பெயர் சொல்லிப் புகழ்ந்தேத்தவும் தியானிக்கவுமே சொல்லப்படுகின்றன என்றால் மிகையாகாது.
மாயன் என்ற சொல் மாயத்தன்மை உடையவன் என்ற பொருளிலன்றிப் புரிந்து கொள்ள முடியாதவன் என்ற
பொருளிலேயே உணரப்பட வேண்டும். இறைவனுடைய செயல்களின் நோக்கங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாது
என்ற பொருளிலேயே மாயன் என்ற பெயர் சொல்லப்பட்டு இருக்கிறது.
மதுரையோடு இறைவன் தனது வெவ்வேறு அவதாரங்களில் கொண்ட தொடர்பை வெளிப்படுத்தவே வடமதுரை மைந்தன்
என்ற பெயர் குறிக்கப்படுகிறது. வாமனனாகத் தோன்றியது மதுரையில். கண்ணனுக்கும் மதுரைக்கும் உள்ள தொடர்பு நன்கு தெரிந்ததே. மைந்தன் என்றால் மகன். ஆனால் மைந்தன் என்ற சொல் அதைத் தாண்டிய பொருளில் இங்கு கையாளப்பட்டுள்ளது.
பிறந்த உடனே தாய் தந்தையரைச் சிறையில் இருந்து விடுவித்தவன் கண்ணன். அதன் பின் அவனது காரியங்கள் அநேகம். காளிங்க வதை, கம்சனைக் கொன்றது,பூதனையைக் கொன்றது என்றிவ்வாறு பட்டியல் நீளும். எனவே வடமதுரை மைந்தன் எனும் போது குணச்சிறப்புகள் பெற்ற மகன் என்ற பொருளைக் கொள்ள வேண்டும்.
இறைவனை ஆயர்குலத்து அணிவிளக்காகக் காண்கிறார் ஆண்டாள். பெண்ணாகப் பிறப்பதன் முழுமையே தாய்மையில் இருக்கிறது. அவ்வாறு பெற்ற மகன் மிகச் சிறந்த மகனாகப் பரிமளிக்கும்போது தாய்மை தன் சிகரத்தைத் தொட்டுவிடுகிறது. அவ்விதத்தில் தன்னைப் பெற்ற மகனாகக் கண்ணன் இருந்தான் என்பதைக் குறிக்கத் தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் என்றார்.
தாமோதரன் என்ற பெயர் கண்ணனுடைய பெயர்களில் ஒன்று. சிறு பையனாக இருந்த போது வெண்ணெய் திருடுதல் போன்ற செயல்களால் கட்டுப்படுத்த முடியாதிருந்த கண்ணனை உரலில் கட்டி வைத்து விடுவாளாம் யசோதை. அவ்வாறு கட்டுவதற்காக இடுப்பைச் சுற்றிக் கட்டிய கயிறு ஏற்படுத்திய தழும்பைக் குறிக்கவே தாமோதரன் என்ற பெயர் வந்தது.
தூயோமாய் இருந்து இறைவனுக்கு மலர்களைப் படைத்துப் புகழ் பாடி அவன் பெயர்களைத் தியானித்தால் முந்தைய பாவங்களும் இனி வரும் பாவங்களும் தொலைந்து போகும் என்பது மிகப் பெரியதொரு உறுதியாகும். இவ்வாறாகப் பாவங்களைத் தொலைத்துவிட்டவர்களுக்கு ஈடேற்றம் நிச்சயம் என்பதை இந்தப் பாடல் தெளிவுபடுத்துகிறது. பிராப்த விரோதியைத் தொலைப்பது என்பதே இதன் விளக்கம்.
பிராப்தத்தை மேலும் விளக்குதல் பொருத்தமாக இருக்கும். முந்தைய பிறவிகளில் செய்த நல்லனவும் அல்லனவும் இந்தப் பிறவியில் நமது பிறப்பையும் இயல்பையும் தீர்மானிக்கின்றன. அப்படித் தீர்மானிக்கப்பட்ட இந்தப் பிறவியிலும் நல்லனவும் அல்லனவும் செய்து அடுத்த பிறவிக்கும் வழி கோலுகிறோம். இவ்விதமான வினைப் பீடிப்பினின்றும் ஆன்மாவை விடுவித்தலே வாழ்வின் நோக்கம். அதற்குப் பெருந்துணையாகவும் அடிப்படையாகவும் அமைவது இறைக் கருணையே. அந்த இறைக்கருணையைப் பெறுவதற்கு வழி இன்னதென்று சொல்லும் விதத்தில் அமைந்தது இந்த ஐந்தாம் பாடல்.
இந்தப் பாடல் இறை இயல்புகளில் எளிவரல் என்ற இயல்பைச் சிறப்பிக்கிறது. இதனை வடமொழியில் செளலப்யம் என்பார்கள். மலர்களைத் தூவி வழிபடுவது, இறைப் புகழைப் பாடுவது, இறைவனின் பெயர்களைத் தியானிப்பது போன்ற எளிய செயல்களுக்கே வசப்பட்டுத் தொண்டனுக்கு அருள்வான் இறைவன் என்பது செய்தி.
மேலும் நாராயணனாக இருந்தபோதும் யசோதை கட்டிய கயிற்றுக்குக் கட்டுப்பட்டு உரலிடைக் கட்டுண்டு வயிற்றில்
தழும்பை ஏற்றுக் கொண்ட இறைவனின் எளிமை இந்தப் பாடலில் மிகவும் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளது.
SHIRDI SAIBABA | HOMOEOPATHY | PSYCHIC SCIENCES
HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB
சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள் | சிவசிவ
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
0 Comments:
Post a Comment