Wednesday, December 23, 2009

திருப்பாவை - 4

நாள் நான்கு – பாடல் நான்கு

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியம் தோளுடை பத்மனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சாரங்கம் உதைத்த சரமழை போல
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராடி மகிழ்ந்தேலோரெம்பாவாய்.

திருப்பாவையின் நான்காவது பாடலில் மேகத்தை நோக்கி ஆண்டாள் கூறுவதாக அமைந்திருக்கிறது. "மேகமே! கடலின் மீது இறங்கி நீரை மொண்டு எடுத்துக் கொண்டு விண்ணுக்குச் சென்று, எங்கெல்லாம் மழை வேண்டுமோ அங்கெல்லாம் மழை பொழிவாயாக!" என மேகத்தைக் கேட்டுக் கொள்வதாக அமைந்திருக்கிறது. கண்ணதாசனுக்கு ஆண்டாளின் பாடல்களில் மிகவும் பிடித்தது இந்த நான்காவது பாடலாகும்.
இறைவனை மழை மேகத்து நிறத்தவனாகக் காண்கிறார். இறைவனே அனைத்துக்கும் முதல் என்பதை இந்தப் பாடல்
தெளிவுபடுத்துகிறது. மின்னலின் வெளிச்சம் சக்கரத்தின் பிரகாசத்தைக் குறிக்கிறது. முழங்கும் சங்கு இடியாகிறது. இராமனின் வில்லில் இருந்து பொழியும் அம்புகளாக மழையைக் காண்கிறார். ஆனாலும் ஒரு வித்தியாசமான நோக்கு - அம்பு பொழிவது அழிவுக்காக அல்ல. இவ்வுலகைக் காக்கத்தான்.
பாவை நோன்பின் பலனே மழை பெய்ய வேண்டும் என்பதுதான்; இது மேலெழுந்தவாரியான கோரிக்கை.

இயக்கம், நிறம்,ஒளி, வடிவம், ஒலி மற்றும் மேகத்தின் பொழிவு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக மிக விரைந்து
வரைந்திருப்பதில் ஓர் இயக்கத்தின் பொலிவு அமைந்துள்ளது அல்லவா. கடலுக்காகக் கீழிறங்கி வானில் ஏறுவதும், மழை மேகத்தின் கருநிறமும் மின்னலின் ஒளிர்வும் இடியின் முழக்கமும் கூரிய மழைக் கதிர்களும் மழையின் விளைவான வளமையும் மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

பாவை நோன்பின் ஒரு பயன் இந்த உலகம் மழை பெற வேண்டும் என்பதாகும். மழையே இறைக் கருணையாவது
பாடலின் சிறப்பு. மேகம் கடல் நீரை உண்டு எடுத்துக் கொள்வதைப் போல இறைவன் பக்தியை எடுத்துக்
கொள்கிறான். எங்கும் பரந்து செயல்படும் சக்தியாகிறான். மின்னலின் ஒளிர்வும் இடியின் முழக்கமும் போலத்
தப்பாது தெரிய வரும் வடிவம் கொள்கிறான். தனது கருணையைப் பக்தனுக்கு மட்டுமன்றி உலகுக்கே
பொழிகிறான். இப்படியாக இறைக் கருணையின் அளப்பற்ற பெருமையை பக்தன் தவறாது உணர்கிறான்.

நான்காது பாடலின் மொழி இனிமையின் சிறப்பே சிறப்பு. முகர்ந்து கொண்டு ஆர்த்து ஏறி என்ற வரியில்
பூரிப்பு தெறிக்கிறது. ஆழி போல் மின்னி என்கிற போதும் வலம்புரி போல் நின்றதிர்ந்து என்கிற போதும் மின்னலும் இடியும் கண்ணுக்குத் தப்பாது தெரிந்தே போவது போல இறைவனும் பக்தனுக்குத் தப்பாது தெரிபவன் என்ற கருத்து வெளிப்படுகிறது. சாரங்கம் என்ற வார்த்தை குறிக்கும் அம்பு அழிவைக் குறித்துவிடக் கூடாது என்பது போல் வாழ உலகினில் பெய்திடாய் என்று உடன் குறிக்கிறார். மழையே வாழ்வுக்கு வித்து. இறைக் கருணையே வாழ்வுக்கு ஆதாரம்.










0 Comments: