Wednesday, December 23, 2009

திருப்பாவை - 3

நாள் மூன்று – பாடல் மூன்று


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்று நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.


முதல்பாட்டில் நாராயணனைப் பெயரிட்டு, இறைவன் அனைத்தையும் கடந்தவன் என்பதைக் காட்டினார்.
இரண்டாவது பாட்டில் இறைவனின் எளிவரலைக் குறிக்கப் பாற்கடலில் பையத் துயின்றதைக் குறித்தார்.
மூன்றாவது பாடலில் வாமனனாகத் தோன்றிச் செய்த செயலைக் குறிக்கிறார்.


இப்பாடலில் பக்தன் எப்படி இருத்தல் வேண்டும் என்னும் வரையறை விதிக்கப்படுகிறது. கழனியில் தலைசாய்ந்து நிற்கும் கதிர்போலப் பக்தன் அடக்கத்துடன் தலைக்கனமின்றி இருக்கவேண்டும். அக்கழனியின் தண்ணீரில் வாழும் கயல்மீன்களைப்போல் (அறியாமை, தீவிரம் நீங்கிய) விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். கருநெய்தல் மலர்போல இல்லறத்திலிருப்பினும் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கவேண்டும்

மகாபலி அசுரர்களின் அரசன். தேவர்களின் உலகம் உட்பட எல்லாவற்றையும் வென்று கடவுளரைத் தன் அதிகாரத்துக்கு உட்படுத்தி வைத்திருந்தான். கடவுளர் நாராயணரிடம் முறையிட்டார்கள். நாராயணர் வாமனராகத் தோன்றினார். மகாபலியிடம் தானமாக மூன்றடி நிலத்தை யாசித்துப் பெற்றார். தாரை வார்த்துத் தானம் செய்தவுடன் வாமனராகத் தோன்றிய நாராயணர் பிரம்மாண்ட வடிவம் எடுத்து ஓரடியில் இவ்வுலகையும் மற்றோர் அடியில் அவ்வுலகையும் அளந்துவிட்டார். மூன்றாவது அடி வைக்க மேலும்
நிலமில்லாத நிலையில் தூக்கிய காலோடு நிற்க மகாபலி வாமனராகத் தோன்றியது நாராயணரே என்பதைத் தெரிந்து கொண்டு அந்த மூன்றாவது அடியைத் தன் தலை மீது வைக்கக் கேட்டுக் கொண்டான். அவ்வாறே தமது
மூன்றாவது அடியை அவன் தலை மீது வைத்து அவனை ஆட்கொண்டார். இப்படியாக தேவர்களைக் காப்பாற்ற எடுத்த வாமன அவதாரத்தைக் கொண்டாடும் வகையில் மூன்றாவது பாடல் அமைந்திருக்கிறது.

முதலடியில் கடவுளை உத்தமன் என்று பெயரிட்டு அழைக்கிறார். அதமாத்மன் என்பவன் மற்றவருடையதையும் தன்னதாக்கிக் கொண்டு வாழ்பவன். அதமன் என்பவன் தானும் வாழ்ந்து பிறரையும் வாழ விடுபவன். மத்யாத்மன்
என்பவன் தனக்காக மட்டுமேயன்றிப் பிறருக்காகவும் வாழ்பவன். உத்தமன் என்பவன் தான் தீங்கு ஏற்றுக் கொண்டாவது பிறர் வாழத் தான் வாழ்பவன். வாமனனாகத் தோற்றம் கொள்ளும் எளிமையைக் கூடத் தேவர்களுக்காக ஏற்றுக் கொண்டார் என்ற வகையில் கடவுளை இந்தப் பாடலில் உத்தமன் என்கிறார்.

முந்தைய பாடலில் கூறியபடியே பாவை நோன்புக்கான தமது கடப்பாட்டை மீண்டும் தெரிவிக்கும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது, பாவை நோன்பிருப்பதால் இந்த உலகத்துக்கு ஏற்படும் நன்மைகள் அதன்
பின் குறிக்கப்படுகின்றன. மாதம் மும்மாரி என்பதால் வெள்ளத்துத் தீமையோ வறட்சியின் கொடுமையோ இல்லாமல் இந்த உலகம் இருக்கும் என்பதைக் குறிக்கிறார் என்று கொள்ள வேண்டும். இப்பாடல் மாதம் மும்மாரி பெய்வதன் விளைவான வளம் எப்படியிருக்குமென சித்தரிக்கப்பட்டுள்ளது.


வளப்பமாக வளர்ந்த நெற்பயிர் இருக்கும் வயல்களில் மீன்கள் நீந்துமாம். மலர்ந்த மலர்களில் தேன் குடித்த மயக்கத்தில் வரி வண்டுகள் உறங்குமாம். அவ்வகையான இடத்தில் நன்கு பராமரிக்கப்பட்ட பசுக்கள் குடங்கள்
நிறைய நிறையப் பால் தருவதில் வியப்பில்லைதான். குடங்கள் நிறைந்த பாலைத் தரும் பசுக்கள் நிறைந்த நாட்டில் செல்வத்துக்குக் கேட்கவா வேண்டும்? அதனால்தான் நீங்காத செல்வம் நிறந்தேலோர் என்கிறார்.

இறைவனைப் பாடி இறை உணர்வை அனுபவிக்கும் தோறும் இவ்வுலகு சார்ந்த அடையாளம் தீர்த்துவிடப் படுகிறது. கடவுளோடு இரண்டறக் கலந்திருத்தல், தனக்கென ஓர் அடையாளத்தைக் கற்பித்துக் கொள்ளாது இறைவனைச் சரணடைதல், இறைவனைத் தனக்குள்ளேயே அனுபவிப்பது என்ற இந்த மூன்றுவகை நிலைகளும் இந்தப் பாடலில் குறிக்கப்படுகின்றன. அப்படியான அனுபவத்தை நிதரிசனமாக அனுபவிக்கும் உயிர்கள் இந்த உலகில் ஆனந்தமாக இருக்கின்றன. அந்த உயிர்களெனும் மலர்களுக்குள் இறைவன் குடியேறுகிறான் என்பது இந்தப் பாடல்.

செல்வம் நீங்காத செல்வம் என்பதால் சரியான ஆற்றுப்படுத்துதல் மூலமாகப் பெற்ற இறையுணர்வையே குறிக்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

யாவையும் எவரும் தானாய் அவரவர் சமயந்தோறும்
தோய்விலன் புலனைந்துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி
ஆவி சேர் உயிரின் உள்ளான் ஆதுமோர் பற்றில்லாத
பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே

என்று நம்மாழ்வார் குறித்த அந்தப் பாவனையே இந்தப் பாடலின் செல்வம் என்று கொள்ள வேண்டும்.

அதற்கேதுவாகவே இறைவனைப் பாடிப் புகழ்வதான பாவை நோன்பு அமைகிறது என்று கொள்ள வேண்டும். எனவே இந்த வாழ்வை வாழ்ந்து கழித்துக் கொண்டிருக்கும் போதே இறை உணர்வு என்ற பாவனை
மூலம் இங்கு இப்போதே ஈடேற்றம் நடந்தேறுகிறது என்ற குறிப்பு இப்பாடலில் தொக்கி நிற்கிறது அல்லவா?










0 Comments: