Wednesday, December 23, 2009

திருப்பாவை - 2

நாள் இரண்டு பாடல் இரண்டு

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளிரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேரேலாரெம்பாவாய்.

திருப்பாவையின் இரண்டாம் பாடல் பாவை நோன்பின் பேரால் ஆயர்பாடிப் பெண்கள் தமது கடப்பாட்டைப் பறைசாற்றுவதாக அமைந்திருக்கிது. அதே சமயம் எத்தகைய செயல்களைச் செய்யாது விடுப்போம் என்ற
வைராக்கியத்தை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது. இவ்வாறாகப் பாவை நோன்பில் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாட்டையும் கடப்பாட்டையும் தெளிவாக உணர்த்தும் வகையில் இந்தப் பாடல்
அமைந்திருக்கிறது.

இறைவனை ஏற்றிப் பாடுவது நோன்பின் ஒரு கடப்பாடு. அதுவும் மாந்தருக்கென இரங்கி வந்து பாற்கடலில் பாம்பணையின் மீது யோக நித்திரை செய்து அமைந்திருப்பதென்பது அக்கடப்பாட்டுக்கு வலிவு சேர்க்கும்
வகையில் அமைந்திருக்கிறது. அதனால்தான் பாற்கடலில் பையத் துயின்ற வைபவத்தை இந்தப் பாடல் சிறப்பித்துப் பேசுகிறது.

நெய்யும் பாலும் உடலுணர்வை அதிகப்படுத்துவன என்பதால் பாவை நோன்பின் போது விலக்கி வைக்கப்பட்டவை கின்றன. அந்திப் போது குளிர்ந்த நீரில் குளிப்பதென்பது உடலுணர்வை மறக்கச் செய்யும் என்ற வகையில் கைக்கொள்ளப்படும் வழக்கமாகக் குறிக்கப்படுகிறது. கண்ணுக்கு மையிடுவதும் தலையில் மலர்களைச் சூடிக்கொள்வதும் உடலுறவு இச்சைகளைத் தூண்டும் என்பதால் மறுக்கப்படுகின்றன. அவ்வாறே செய்யக் கூடாதன இவையென அடையாளம் காணப்பட்டவற்றைச் செய்யாமல் விடுவதும் பிறரைப் பற்றிய வம்பு தும்புகள் பேசாதிருப்பதும் பாவை நோன்பு இருப்பவரின் கடமைகளாகப்
பேசப்படுகின்றன.

ஐயம் என்பது இடும் பிச்சை. இடும் பிச்சையானது பொருளாக இருக்க வேண்டும் என்பதில்லை. இறை உணர்வை ஊட்டுவது கூட ஒரு வகைப் பிச்சைதான். அதே சமயம் பக்தர்களிலேயே மிகச் சிறந்த பக்தன் கூடத் தன்னளவில் சிறந்தவனாவதில்லை. எனவே இறைக் கருணை என்ற பிச்சையை ஏற்றுக் கொள்ள எக்கணமும் தயாராக இருப்பவனே
மிகச் சிறந்த பக்தன் என்ற வகையில் ஏற்றுக் கொள்ளும் பிச்சை குறிக்கப்படுகிறது.

ஈடேற்றம் நடந்தேயாக வேண்டும் என்பதில்லை. ஈடேற்றத்தைப் பற்றி நினைப்பதே ஆனந்தத்துக்கு இட்டுச் செல்லும் என்ற வகையில் உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் என்கிறார்.

இந்தப் பாடல் பாவை நோன்பின் பேரால் ஆயர்பாடிப் பெண்கள் எவ்வகையான நெறியைக் கைக்கொள்ள உறுதி கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இன்னின்ன செய்வது என்பது மட்டுமின்றி எவ்வெவற்றை விலக்க வேண்டும் என்பது குறித்தும் தெளிவான சிந்தனை இந்தப் பாடலில் வெளிப்படுகிறது. மனம் வாக்கு காயம் என்ற மூன்று நிலைகளிலும் தூய்மையைக் கடைப்பிடிப்பது என்ற வைராக்கியமே இந்தப் பாடலில் வெளிப்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.










0 Comments: