Wednesday, December 23, 2009

திருப்பாவை - 1

முதல் நாள் பாடல் ஒன்று


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமியர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறைதருவான்

பாரோர் புகழப் படிந்தேலோரெம்பாவாய்.

முதல் பாடலில் பாவை நோன்பிருக்கும் மங்கையரை நோன்புக்காகக் குளிக்கக் குளத்துக்கு வருமாறு ஆண்டாள் அழைக்கிறார். நந்தகோபர் கண்ணனை ஆய்ப்பாடியில் வளர்த்தவர். சிறையில் பிறந்தவர் கண்ணன். தனது தமக்கை தேவகியின் மகனால் தமக்குக் கேடு வரும் என்ற நம்பிக்கையில் இருந்த கம்சன் தேவகியையும் அவருடைய கணவரான வசுதேவரையும் சிறைப்படுத்தி வைத்திருந்தான். சிறையில் அவர்களுக்கு எட்டாவதாகப் பிறந்தவர் கண்ணன். முன் பிறந்த ஏழு பெண்மக்களையும் உயர வீசி எறிந்து நட்டுப் பிடித்த வாளின் மேல் விழச் செய்து கம்சன் கொன்றுவிட்டான். எட்டாவதாகப் பிறந்த ஆண்மகனான கண்ணனைக் கம்சன் கொன்றுவிடக் கூடாது என்பதற்காக ஆய்ப்பாடியில் நந்தகோபன் வீட்டில் விட்டுவிட்டு அப்போது நந்தகோபன் மனைவியான யசோதை பெற்றெடுத்த பெண் மகவைச் சிறைக்குக் கொண்டு வந்துவிட்டார். வழக்கம் போலக் கம்சன் அந்தக் குழந்தையை உயர விட்டெறிந்து வாள் மேல் விழச் செய்ய முயன்ற போது அந்தக் குழந்தை வானில் பறந்து மறைந்துவிட்டதாம். எனவே கண்ணனை நந்தகோபன் குமரனாகவும் யசோதையின் இளஞ்சிங்கமாகவும் ஆண்டாள் காண்கிறார்.

ஆய்ப்பாடிப் பெண்களை நேரிழையீர் என்று பெயரிட்டு அழைப்பதாலும் செல்வச் சிறுமியர்காள் என்று குறிப்பிடுவதாலும் அவர்கள் அழகும் பக்தியும் ஒரு சேரக் கொண்டவர்கள் என்பதைக் குறிப்பிடுகிறார்.

தமிழ் மாதங்களிலேயே சிறந்ததாக மார்கழி கொண்டாடப் படுகிறது. கீதையில் கூடக் கண்ணன் தன்னை மாதங்களில் மார்கழி என்றுதான் சொல்லி கொள்கிறார்.

"மதி நிறைந்த (மார்கழி) நன்னாள் என்று சொல்லும் போது மார்கழி மாதப் பிறப்பு அமாவாசையில் அல்லவா வருகிறது; பெளர்ணமி இல்லையே; ஆகவே ஈண்டு மதியென்பதைப் புத்தி எனக்கொள்ளல் நலம். இவ்வுடல் நிரந்தரம் என்றே எண்ணும் புத்தியை விட்டுவிட்டுக் கண்ணனே நிரந்தரமெனக் கருதி அவனையடையத் தெளிவான புத்தியைச் செலுத்தி வழி காண்" என்பதாம்.

நந்தகோபர் ஆயர்களின் தலைவர் என்ற வகையில் அவரது வீரத்தைச் சிறப்பிக்கும் வகையில் கூர்வேல் கொடுந்தொழிலன் என்று அழைக்கிறார். பெண்மையின் அழகே கண்களில் என்ற வகையில் யசோதையின் அழகைச் சிறப்பிக்கும் வகையில் எரார்ந்த கண்ணி என்கிறார். அதிகாலையில் எழுந்து குளித்து பாவை நோன்பு நோற்பதென்பது இறைக்கருணையைத் தப்பாது தரும் என்பதாலேயே நாராயணனே நமக்கே பறைதருவான் என்கிறார். இப்படியாக ஆண்டாள் திருப்பாவையில் ஆரம்பத்திலேயே இறைக் கருணை தப்பாது கிடைக்கக் கூடியது என்ற நிச்சயத்தைத் தெளிவாக்கும் வகையில் முதல் பாட்டை அமைத்துள்ளார்.

நாராயணனின் நாமத்தை உச்சரிப்பதே அவன் அருளுக்கு ஓர் உத்திரவாதம் என்பது வைணவக் கொள்கை. அதனால்தான் நம்மாழ்வாரும்

“கண்ணன் கழலினை எண்ணும் மனமுடையீர்

எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே”

என்று சொல்வார்.










0 Comments: