119.அருமையும் பெருமைதானு மறிந்துடன்படுவர் தம்பால்
இருமையு மொருமையாகு மின்புறற் கேதுவுண்டாம்
பரிவிலாச் சகுனிபோலப் பண்புகெட்டவர் நட்பால்
ஒருமையி னிரயமெய்து மேதுவே யுயருமன்னோ.
(இப்படியும் சில நூல்களில் உண்டு)
அருமையாம் பெருமை கொண்ட வறிவினருறவு தன்னால்
இருமையு மொருமை யாகு மின்புறற்கேது வுண்டாம்
பரிவிலாச் சகுனி போலப் பண்புகெட் டவர்க டம்மால்
உரிமையாய் நிரய மெய்து மேதுவே யுயரு மன்னோ.
அருமையாம் = கிடைத்தற்கு அரிதாகிய
பெருமை = உயர்வு
உறவு = நட்பு
இன்பு = இன்பம்
உறற்கு = அடைவதற்கு
ஏது = காரணம்
பரிவு = அன்பு
அறிவுடையாரோடு நட்புக் கொண்டால், அவர்தம் உறவால் தம்மோடு நட்புக்கொண்டோரை நல்வழிப்படுத்தி அவர்க்கு இம்மை, மறுமை ஆகிய ஒருமையில் ஒரே விதமான இன்பத்தை அடைய வழி காட்டுவார்கள்.
அன்பிலாச் சகுனிபோல் கெட்டவர்களின் நட்புறவு கொண்டால், அவர்கள் தம்நண்பர்களை கெட்ட வழியில் புகுத்துவர். அது அவர்கட்கு நரகத்தை அடைய வழி உண்டாக்கும்.
Sunday, July 27, 2008
119.அருமையும் பெருமைதானு
Posted by ஞானவெட்டியான் at 11:31 AM
Labels: விவேக சிந்தாமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment