Tuesday, January 01, 2008

1. ஆனவஞ் செழுத்துளே

1. ஆனவஞ் செழுத்துளே யண்டமும் மகண்டமும்
ஆனவஞ் செழுத்துளே யாதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே யகாரமும் மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே யடங்கலாவ லுற்றே.

அஞ்செழுத்தாம் "நமசிவய"வுக்குள் அண்டமாகிய(பிண்டம் அண்டத்துள் அடக்கம்) பரந்த உலகங்களும், பல அண்டங்களைக் கொண்ட அகண்டமும், ஆதியாகிய சிவன், திருமால், பெருமன் எனும் பிரம்மனும், அகாரம் மகாரம் ஆகிய யாவையும் அடக்கமாம்.

திருமந்திரம்:

"அகார முதலா யனைத்துமாய் நிற்கும்
உகார முதலா யுயிர்ப்பெய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டு மறியில்
அகார வுகாரம் இலிங்கம தாமே."

(உரை: உலகு, உடல், உயிர் ஆகியவைகளுக்குத் தாங்கும் நிலைக்களன் சிவன். அவன் அகாரத்தால் குறிக்கப் பெறுகிறான். இயக்கும் திருவாற்றல் சிவை. இதுவே உயிர்ப்பு. சிவையே உகாரம். தாங்கும் நிலைக்களன் ஆவுடை. திருவாற்றல் மேற்பகுதி. அகாரமும் உகாரமும் சேர்ந்தால் இலிங்கம்.

"இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்
இலிங்கநற் கண்ட நிறையு மகாரம்
இலிங்கத்துள் வட்ட நிறையும் உகாரம்
இலிங்க மகார நிறைவிந்து நாதமே."

சிவலிங்கத்தின் அடிப்பகுதியாகிய பீடம் ஓங்கார வடிவம். அந்தப் பீடத்துள் மறைந்துள்ள நடுப்பகுதி கண்டமாகும். இதை அதோமுகம் என்பர். இதுவே மகாரமாகும். இலிங்கத்துடன் பொருந்தியுள்ள வட்டமான பகுதி உகாரமாகும். இலிங்கத்தின் மேல் பகுதி அகாரம், விந்து, நாதம் எனும் மூன்றால் ஆகியதாம். இவையே, அகாரம், மகாரம், உகாரமாம்.


"அஞ்செழுத் தாலைந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தாற்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தாலிவ் வகலிடந் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே."

அஞ்செழுத்து எனக் கூறப்பட்டது "நமசிவய". இதைத் திருவைந்தெழுத்து என்பர். மகார அடையாளத்தால் உலகு உருவாக்கப்பட்டது. யகாரத்தால் உடலும் உயிரும் இணைக்கப் பட்டது. நகாரத்தால் பரந்து விரிந்த உலகை இயக்கும் நடுநிலை விளங்கும். சிகார வகார அடையாளத்தால் எல்லாம் தாமேயாய் அமைந்தவை விளங்கும்.

0 Comments: