ஓடும் ஐந்து - சுய சொறிதல்?
***************************
இந்த ஆட்டங்கள் எனக்குப் பிடிபடவில்லை. நண்பர் கோவி.கண்ணன் அழைப்புக்கிணகி ஏதோ 5 தருகிறேன்.
1.கொடிது - இளமையில் வறுமை:
இதுதான் பள்ளிப்பருவம்.
2.இறகு முளைத்தது -
பறவை பறந்தது - பறனை(விமான)ப் படைக்கு.
3.வாலிபப் பருவம்-
5 ஆண்டுகள் கழித்து வந்து வங்கிப் பணி. திருமணம். ஆன்மிகத் தேடல்; தேடலில் ஏமாற்றம் ...........
4.என்னை நானே நொந்துகொள்ளும் வேளை-
வலைப்பதிவில் ஒரு சமயத்தினரை மற்றவர் இகழ்ந்து எழுதி மற்றவர் மனம் நோகும்போது. என் கோட்பாட்டில் இருந்து நான் வெளியே வரமாட்டேன்; இது தான் உயர்ந்தது; மற்றவை இழிமதம்; எனத் தூற்றும் போது.
5.வேண்டுகோள்-
தன்னுடைய சமயத்தில் என்னென்ன நல்லவைகள் இருக்கின்றன என்று மட்டும் தெளிவாக எடுத்துரைத்தால் போதுமென நினைக்கிறேன். சாதிச் சண்டைகள் முற்றிலும் தவிர்க்கவேண்டிய ஒன்று.
இறுதி வேண்டுகோள்:
//"வாழும் சித்தர் ஞான வெட்டியான் ஐயா"//
நான் ஒரு பித்தன்; கேவலன்மான மனிதப் பிறப்பு. அவ்வளவே!
அடுத்த அழைப்பு:
யாரெல்லாம் விட்டுப்போயிருக்கிறார்களோ, அவர்களெல்லாம்....
Sunday, March 25, 2007
ஓடும் ஐந்து - சுய சொறிதல்?
Posted by ஞானவெட்டியான் at 11:27 AM 6 comments
Sunday, March 04, 2007
ஐம்பதா? ஐம்பத்தொன்றா?
"முத்திதரு மூலத்தி லட்சரமே நாலு
முதலான சுவாதிட்டான மெழுத்தா றாகும்
பத்திதரும் பூரகத்தி லெழுத்தோ பத்து
பாங்கான அநாகதத்தி லெழுத்தீ ராறாஞ்
சித்திரமாம் விசுத்திதனி லெழுத்தீ ரெட்டாம்
சிறந்தவாக் கினையிலெழுத் திரண்டு மாகும்
சத்தியெனு மம்பரத்தி லெழுத்தொன் றாச்சு
சார்வாமைம் பத்தோரட் சரங்கா ணாண்டே."(ஞானம் எட்டி)
"வட்டமிட்ட சட்கோணபாரின் மேலும்வளர்ந்த
............விதழீராறாமங்குலத்தில்
திட்டமிட்டவனாகதத்தில் வீற்றிருந்த சிறந்தருளும்
...........ருத்திரனுத்திரியைப்போற்றி
வெட்டவெளிவேதமறை நான்குமோதும் வேதமெலாந்
..........திருநீறாயானவாறும்
அட்டதிசையறிந்துணர்ந்த பெரியோர்பாத மைம்பத்
...........தோரட்சரமுங் காப்புத்தானே."
வட்டமிட்டுள்ள அறுகோணத்தின்மேல் வளர்ந்திருக்கின்ற பன்னிரு இதழ்களையுடைய அநாகதத் தானத்தில் வீற்றிருக்கும் உருத்திரன், உருத்திரியைப் போற்றி, நான்கு வேதங்களால் வெட்டவெளியாய் விளக்கப்படும் திருநீறாய் ஆனவாறும் (வழியான தெளிவான விபூதிதன்னை) எட்டு திசைகளையும் அறிந்துணர்ந்த பெரியோர்களுடைய திருவடிகளும், ஐம்பத்தொரு அட்சரங்களும் காப்பாகும்.
"ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைந்தும்
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தின் நிலையிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள்ளீரே."
ஓதும் எழுத்தோடு(ஓம்) மூவைந்தும் - ஆக 16 உயிர்
ஆதிமெய் - 35. இரண்டும் சேர்த்து 51 அக்கரம்.
பண்டைக் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் 51. பின் உயிர்ப்புச் செட்டு நோக்கி முப்பதாக அமைத்தனர்.
ஏனைய ஒலிகளை ஒலிப்பிக்கும் வாய்ப்பாக ஆய்தம் எனுமெழுத்து
உருவாக்கப்பட்டது. செந்தமிழ் காலத்திற்கு முந்தி இருந்தவை.
தற்பொழுது ஒழிந்துபட்டவை போக எஞ்சி வழக்கில் உள்ளவை 13
உயிர்(ஃ சேர்த்து)
இதுதான் 51 அக்கரம்(அட்சரம்).
ஐம்பத்தியொன்று ஐந்தானது:
'ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும்
ஐம்ப தெழுத்தேயு மாவ தறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே'
இங்கு மறையை வேதமெனவும், முறையை ஆகமமெனவும் கூறுவர்.
மறையும் ஆகமமும் 5 எழுத்தில் அடங்கும். அவை ந, ம, சி, வ, ய.
"அஞ்செழுத் தாலைந்து பூதம் படைத்தனன்"
எனத் திருமூலர் கூறுவதிலிருந்து ஐந்தெழுத்தில் ஐம்பூதங்களாலாகிய இவ்வுடல் அடக்கம். இதற்கு எழுதலாம் இன்னும் 50 பக்கம்.
திருவைந்தெழுத்து தமிழ் மொழியின் உயிர்க்குறிலாகிய அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தெழுத்தாம். இவைகளைக்கொண்டே சித்தர்கள் பூடகமாகப் மருமங்களைப் பாடிவைத்துள்ளனர்.
கால்கள் - நகரம் - நடப்பு - நிலம் - உ - சிவப்பு
வயிறு - மகரம் - மறைப்பு - நீர் - எ - பச்சை
தோள் - சிகரம் - சிறப்பு - அங்கி - அ - பொன்னிறம்
வாய் - வகரம் - வனப்பு - விண் - ஒ - கறுப்பு
கண்கள் - யகரம் - யாப்பு - வாயு - இ - வெள்ளிநிறம்
"ஆகின்ற பாதமு மந்நவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்
ஆகின்ற சீயிரு தோள்வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே."(விளக்கம் மேலே)
இதுவே பிண்ட இரகசியம்.
வழிபாடு:
"மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியி னுள்ளே உதயம்பண் ணாநீற்குஞ்
சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலார்
நந்தி தொழுதுபோ யார்த்தகன் றார்களே."(திருமந்திரம்)
"நமசிவய"வே வழிபாட்டு முதன்மை மந்திரம். அதனை நெஞ்சில் நிறுத்தி உயிர்ப்புடன் கணிக்க - மலர் வழிபாடு எனும் அருட்சுனையாம்(அருச்சனை)
உந்தியினுள்ளே உயிர்ப்புடன் கணிக்க ஓம வேள்வியாம்.
நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல்(சாந்தி), அப்பாலாக்கல் ஆகிய ஐந்து திருவருள் ஆற்றல்களால் செலுத்தப்படுபவன அகர முதலிய எழுத்துக்கள்.
இவைகளை ஐந்து கலைகளென்பர்: அவையாவன:
நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதம்.
இன்னும் விவரிக்கவியலாது.
அழிந்துபட்ட எழுத்துருக்கள் எனக்குத் தெரியாது. திருமந்திரத்திலேயே இல்லை.
ஐம்பதென்ன? ஐம்பத்தொன்று என்ன? என அறியாது, மொழிச்சண்டைக்கு திருமூலனையும் இழுத்து, சித்தர்களின் புனிதத்தை கெடுப்பது மனவருத்தம் தருகிறது.
ஒரு பாடலை மேற்கோள் காட்டும்போது, அதன் பொருளையும் சேர்த்துத்தருவது நல்லது. அது இல்லாது, ஒரு இணையதளத்தின் முகவரியை மட்டும் தந்தால் புரிந்துகொள்ளும் அளவுக்கு நம் வலைப்பதிவர்களின் நிலை இல்லை.
நம் தமிழில் தொலைத்தது எவ்வளவோ தெரியாது! அவ்வாழியில் மூழ்கி முத்தெடுக்கும் பணிசெய்வோர் அருகியுள்ளனர். அப்பணி செய்வோருக்கு ஊக்கம் தரவேண்டாம். அங்கதம் பேசாமல் ஒதுங்கியிருந்தால் அதுவே போதும்.
Posted by ஞானவெட்டியான் at 11:48 AM 4 comments
பூந்தியா? இலட்டா?
பூந்தியும் (இ)லட்டும்
**********************
நண்பர் ஒருவரின் இல்லத்திற்கு மாலை வேளையில் அவரைக்காணச் சென்றபோது, அங்கே இருவகை இனிப்புக்கள்,காரப் பணியாரம், தேனீர் கொடுத்தார்கள். அந்தப் பண்டங்களை உண்டுவிட்டு உரையாடத் தொடங்கியபோது, அவ்வில்லத்தரசி,"என்ன? எல்லாம் சுவையாக இருந்தனவா?" எனக் கேட்டார்கள். "ஆம், அம்மணி; ஆயினும் இனிப்பில் சுவை வேறுபாடு ஒன்றுமே தெரியவில்லையே" என்றேன். அதற்கு அவர்கள்,"எங்கள் இல்லத்திற்கு வருபவர்களுக்கு ஒரு இனிப்பு வைப்பது பழக்கமல்ல; இருந்ததோ பூந்தி ஒன்றுதான்; அதையே உருண்டையாகப் பிடித்து வைத்தேன்" என்றார்கள்.
இந்நிலைதான் இப்பொழுது.
சங்கதமா? தமிழா?
பூந்தியா? இலட்டா?
இதற்கு எத்தனை போராட்டம்? வழக்காடல்?
"வித்திலிருந்து மரமா? இல்லை மரத்திலிருந்து வித்தா?
கோழியிலிருந்து முட்டையா? முட்டையிலிருந்து கோழியா?
பூந்தியிலிருந்து இலட்டா? அல்லது இலட்டிலிருந்து பூந்தியா?"
சற்றே சிந்தியுங்கள் நண்பர்களே!
சரி. வழக்கின் மூல காரணங்களுக்கு வருவோம்.
சங்கதத்திலிருந்து தமிழ் வந்தது; இல்லையில்லை, சங்கதம் தமிழிலிருந்து வந்தது."
எதிலிருந்து எது வந்தால் என்ன?
"பூந்தியும் இனிப்பே;உருட்டிவைத்த இலட்டும் இனிப்பே!"
உங்களுக்குப் பூந்திதான் பிடிக்குமெனின் அதையே வைத்துக்கொள்ளுங்கள். மற்றதை ஒதுக்கிவிடவேண்டியதுதானே!
இல்லை; இலட்டுதான் பிடிக்குமெனின் அதையே வைத்துக்கொள்ளுங்கள். பூந்தியை ஒதுக்கிவிடுங்கள்!
மற்றுமொன்று, கட்டாயப்படுத்தல்.
யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
"தமிழ் என் வீடு; எனக்குப்பிடித்த மாற்றங்களை என்வீட்டில் செய்கிறேன். இதனால் அடுத்தவீட்டில் இருக்கும் சங்கதத்திற்கு என்ன நட்டம்?"
மாற்றங்கள் கண்டு, "நன்றாக உள்ளதே!" என வியந்து மற்றொருவர் அவர் வீட்டில் மாற்றம் செய்யும்பொழுது, இதேபோல் செய்துகொள்கிறார். அவ்வளவுதானே!
மாற்றம் என்பது தமிழ்ச்சொற்களை மீட்டெடுத்து சொற்குவையை இற்றைப்படுத்தலாம். வழக்கிழந்தவற்றை அகழ்ந்தெடுத்தலாம்.
மாற்றம் நன்றாக இருப்பின், விருப்பம் உள்ள மற்றவர்களும் புழங்குகின்றனர்.
விரும்பவில்லையெனில், உங்களுக்கு விரும்பியபடி எழுதிவிட்டுப்போகலாமே!
அவரவர் இல்லத்தினை அவரவர் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டியதுதானே!
ஒருவரை மற்றவர் கட்டாயப்படுத்துவதும், அங்கதம் பேசுவதுமேன்?
இதுவும் தங்களின் சிந்தனைக்கு.
"சிந்தித்தால் சிரிப்பு வரும்; மனம் நொந்தால் அழுகை வரும்"
Posted by ஞானவெட்டியான் at 9:19 AM 16 comments
Labels: தமிழ், மொழிச்சண்டை






