Sunday, March 04, 2007

ஐம்பதா? ஐம்பத்தொன்றா?

"முத்திதரு மூலத்தி லட்சரமே நாலு
முதலான சுவாதிட்டான மெழுத்தா றாகும்
பத்திதரும் பூரகத்தி லெழுத்தோ பத்து
பாங்கான அநாகதத்தி லெழுத்தீ ராறாஞ்
சித்திரமாம் விசுத்திதனி லெழுத்தீ ரெட்டாம்
சிறந்தவாக் கினையிலெழுத் திரண்டு மாகும்
சத்தியெனு மம்பரத்தி லெழுத்தொன் றாச்சு
சார்வாமைம் பத்தோரட் சரங்கா ணாண்டே."(ஞானம் எட்டி)

"வட்டமிட்ட சட்கோணபாரின் மேலும்வளர்ந்த
............விதழீராறாமங்குலத்தில்
திட்டமிட்டவனாகதத்தில் வீற்றிருந்த சிறந்தருளும்
...........ருத்திரனுத்திரியைப்போற்றி
வெட்டவெளிவேதமறை நான்குமோதும் வேதமெலாந்
..........திருநீறாயானவாறும்
அட்டதிசையறிந்துணர்ந்த பெரியோர்பாத மைம்பத்
...........தோரட்சரமுங் காப்புத்தானே."

வட்டமிட்டுள்ள அறுகோணத்தின்மேல் வளர்ந்திருக்கின்ற பன்னிரு இதழ்களையுடைய அநாகதத் தானத்தில் வீற்றிருக்கும் உருத்திரன், உருத்திரியைப் போற்றி, நான்கு வேதங்களால் வெட்டவெளியாய் விளக்கப்படும் திருநீறாய் ஆனவாறும் (வழியான தெளிவான விபூதிதன்னை) எட்டு திசைகளையும் அறிந்துணர்ந்த பெரியோர்களுடைய திருவடிகளும், ஐம்பத்தொரு அட்சரங்களும் காப்பாகும்.


"ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைந்தும்
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தின் நிலையிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள்ளீரே."

ஓதும் எழுத்தோடு(ஓம்) மூவைந்தும் - ஆக 16 உயிர்
ஆதிமெய் - 35. இரண்டும் சேர்த்து 51 அக்கரம்.
பண்டைக் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் 51. பின் உயிர்ப்புச் செட்டு நோக்கி முப்பதாக அமைத்தனர்.

ஏனைய ஒலிகளை ஒலிப்பிக்கும் வாய்ப்பாக ஆய்தம் எனுமெழுத்து
உருவாக்கப்பட்டது. செந்தமிழ் காலத்திற்கு முந்தி இருந்தவை.
தற்பொழுது ஒழிந்துபட்டவை போக எஞ்சி வழக்கில் உள்ளவை 13
உயிர்(ஃ சேர்த்து)

இதுதான் 51 அக்கரம்(அட்சரம்).

ஐம்பத்தியொன்று ஐந்தானது:

'ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும்
ஐம்ப தெழுத்தேயு மாவ தறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே'

இங்கு மறையை வேதமெனவும், முறையை ஆகமமெனவும் கூறுவர்.
மறையும் ஆகமமும் 5 எழுத்தில் அடங்கும். அவை ந, ம, சி, வ, ய.

"அஞ்செழுத் தாலைந்து பூதம் படைத்தனன்"
எனத் திருமூலர் கூறுவதிலிருந்து ஐந்தெழுத்தில் ஐம்பூதங்களாலாகிய இவ்வுடல் அடக்கம். இதற்கு எழுதலாம் இன்னும் 50 பக்கம்.

திருவைந்தெழுத்து தமிழ் மொழியின் உயிர்க்குறிலாகிய அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தெழுத்தாம். இவைகளைக்கொண்டே சித்தர்கள் பூடகமாகப் மருமங்களைப் பாடிவைத்துள்ளனர்.

கால்கள் - நகரம் - நடப்பு - நிலம் - உ - சிவப்பு
வயிறு - மகரம் - மறைப்பு - நீர் - எ - பச்சை
தோள் - சிகரம் - சிறப்பு - அங்கி - அ - பொன்னிறம்
வாய் - வகரம் - வனப்பு - விண் - ஒ - கறுப்பு
கண்கள் - யகரம் - யாப்பு - வாயு - இ - வெள்ளிநிறம்

"ஆகின்ற பாதமு மந்நவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்
ஆகின்ற சீயிரு தோள்வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே."(விளக்கம் மேலே)

இதுவே பிண்ட இரகசியம்.


வழிபாடு:

"மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியி னுள்ளே உதயம்பண் ணாநீற்குஞ்
சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலார்
நந்தி தொழுதுபோ யார்த்தகன் றார்களே."(திருமந்திரம்)

"நமசிவய"வே வழிபாட்டு முதன்மை மந்திரம். அதனை நெஞ்சில் நிறுத்தி உயிர்ப்புடன் கணிக்க - மலர் வழிபாடு எனும் அருட்சுனையாம்(அருச்சனை)

உந்தியினுள்ளே உயிர்ப்புடன் கணிக்க ஓம வேள்வியாம்.

நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல்(சாந்தி), அப்பாலாக்கல் ஆகிய ஐந்து திருவருள் ஆற்றல்களால் செலுத்தப்படுபவன அகர முதலிய எழுத்துக்கள்.

இவைகளை ஐந்து கலைகளென்பர்: அவையாவன:
நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதம்.

இன்னும் விவரிக்கவியலாது.
அழிந்துபட்ட எழுத்துருக்கள் எனக்குத் தெரியாது. திருமந்திரத்திலேயே இல்லை.

ஐம்பதென்ன? ஐம்பத்தொன்று என்ன? என அறியாது, மொழிச்சண்டைக்கு திருமூலனையும் இழுத்து, சித்தர்களின் புனிதத்தை கெடுப்பது மனவருத்தம் தருகிறது.

ஒரு பாடலை மேற்கோள் காட்டும்போது, அதன் பொருளையும் சேர்த்துத்தருவது நல்லது. அது இல்லாது, ஒரு இணையதளத்தின் முகவரியை மட்டும் தந்தால் புரிந்துகொள்ளும் அளவுக்கு நம் வலைப்பதிவர்களின் நிலை இல்லை.

நம் தமிழில் தொலைத்தது எவ்வளவோ தெரியாது! அவ்வாழியில் மூழ்கி முத்தெடுக்கும் பணிசெய்வோர் அருகியுள்ளனர். அப்பணி செய்வோருக்கு ஊக்கம் தரவேண்டாம். அங்கதம் பேசாமல் ஒதுங்கியிருந்தால் அதுவே போதும்.

4 Comments:

சின்னக் காளை said...

அப்பிடி போடய்யா சாமி.
அவியளுக்கு என்னத்தை சொன்னாலும் விளங்காது; என்னத்துக்கு நீங்க இப்பிடி எல்லாம் ஒங்க பொழுத செலவு பண்ணி
வீணாக்குறீங்க.
ஒங்க தொழில கவனிங்க

ஞானவெட்டியான் said...

அன்பு சின்னக்காளை,
செட்டிநாட்டைச் சேர்ந்தவரோ?
மிக்க நன்றி, ஐயா.
எம் தொழில் தொடரும்.

ENNAR said...

சின்னக்காளை என்ன அப்புடி சொல்லிபுட்டியள் எங்கள் ஞானத்தைப்பத்தி சொல்லுவதை அவர் சொல்லட்டும் விளங்குபவர்களுக்கு விளங்கும் விளங்காதவர்கள் ஒருமுறைக்கு இருண்டு முறை படித்து தெரிந்து கொள்ளட்டுமே அன்று சித்தர்கள் சொன்னதைத்தானே அவரும் சொல்கிறார்.

ஞானவெட்டியான் said...

அன்பு என்னார்,
மிக்க நன்றி.