Monday, December 31, 2007

பிரபுலிங்க லீலை - கைலாசகதி

பிரபுலிங்க லீலை
*******************
2. கைலாசகதி
***************

(இக்கதிக்கண் கைலைமலையின் பலவகைச் சிறப்புக்களும், சிவபெருமான் அரசாட்சி மண்டபப் பெருமையும், திருவோலக்கச் சிறப்பும், இறைவனுடைய பெருமையும், அக்கடவுளிடத்திலே உமையம்மை யெழுந்தருளியுள்ள மேன்மையும், அவ்வம்மையின் சிறப்பும், அவை கூடும் நிகழ்ச்சியும், இறைவனுக்கும் தேவிக்கும் உரையாடல் நிகழந்து அது சொற்போராய் முடிவு பெறுதலும், சிவபெருமான் அல்லம தேவருடைய சிறப்பினைக் கூறி அவரைக் காண்டல் அரி தென்றலும், இறைவியானவள் அல்லமதேவரைக் கண்டுபிடித்தல் தனக்கு எளிதேயாமென்று கூறி மாயையை நிலவுலகிற்கு அனுப்புதலும், அம்மாயை சூள்மொழி புகன்று நிலவுலகை யெய்துதலுமாகிய செய்திகள் கூறப்பெறுகின்றன.)

2.1 வெள்ளிமால் வரையின் உச்சி வீற்றிருந் தருளு முக்கண்
வள்ளலா ரொடுசூ ளுற்று மதரரி நெடுங்கட் செவ்வாய்ப்
பிள்ளைவாள் மதிநு தற்றம் பிராட்டியல் லமனைக் காண்பான்
கள்ளமா யையைஞா லத்து விடுத்தவக் கதியு ரைப்பாம்.

மால் - பெரிய,
வரை - மலை,
மதர் அரி நெடுங்கண் - களிப்புப் பொருந்திய அரிகளையுடைய நீண்ட கண்,
பிள்ளைவாள் மதிநுதல் - பிறைத்திங்களைப் போன்ற நெற்றி,
தம்பிராட்டி - தலைவி,
கள்ள மாயை - வஞ்சகம் பொருந்திய மாயை,
ஞாலம் - உலகம்.

பெரிய வெள்ளிமலையின் உச்சியில் வீற்று இருந்து அருளும் முக்கண்ணையுடைய வள்ளல்தன்மை பொருந்திய சிவனிடம் சூளுரைத்து, சிவந்த வாயையும், பிறைத்திங்களைப் போன்ற நெற்றியையும் உடைய உமையன்னை, அல்லம தேவரைக் காண வஞ்சகம் பொருந்திய மாயையை இவ்வுலகுக்கு அனுப்பிய கதைக் கூறுவேன்.

வரையென்பது கணு. இது கணுவினையுடைய மூங்கிலுக்காகிப் பின்னர் மூங்கில் பொருந்திய மலையைச் சுட்டியது. இது மடியாகு பெயர். தம்பிராட்டி யென்பது தம்பிரான் என்னுஞ் சொல்லின் பெண்பாற் பெயர்.

0 Comments: