குரு வாக்கு
****************
ஏ! சீடர்களே!
உலகிலுள்ள அனைவரையும் உயிர் என்னும் கயிற்றால் கட்டி பொம்மலாட்டம் நடத்துவது அன்னை பராசக்தியே. உன் தலைவியின் கட்டளையை நன்குணர்ந்து நிறைவேற்றுவதில் முழுக் கவனத்தையும் செலுத்து. உன் கதாபாத்திரத்தை நன்கு செய். குழந்தைகள் விளையாடும்போது தாயை மறப்பது இயல்பு. விளையாட்டு முடிந்தவுடன், குழந்தை ஓடிப்போய் அன்னையின் மடியில் தஞ்சமடைவதைப்போல் நாடகம் முடிந்ததும் அன்னையிடம் தஞ்சமாகிவிடு. நாடகத்தில் அரசன் வேடமிடும்போது மகிழாதே. அப்படி மகிழ்ந்தால் பிச்சைக் காரனாக வேடமிடும்போது துக்கம் தானே வரும். உன்னையுணர்ந்து, நான் இவன்; இக்கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்; நாடகம் முடிந்ததும் நான் பழைய நிலைக்கு வந்துவிடுவேன்; எனும் எண்ணமிருப்பின் மகிழ்வும், துக்கமும் வராது. நீ அன்னையின் கைபொம்மை என நம்பி உனக்குக் கொடுத்த பணிகளைப் பற்றற்றுச் செய்துவா.
சீவனில் சிவன் கலந்துதான் இருக்கிறான். சீவன் உடலில் ஓடுகிறது. அதில் கலந்துள்ள சிவனை எளிதில் கண்டுணர்வதில் ஏன் தாமதம். மாயை மறைக்கிறது. அதை ஒதுக்கிவிட்டால் சிவம் வெளிப்படும்.
பொய்ப்பொருட்களாகிய மண், பொன் மற்றுமுள்ள நிலையற்ற பொருட்களில் உன் மனதைச் செலுத்தியும், அற்ப விடயங்களைப் பற்றியே நினைத்தும், அவைகளே நிலையானவைகளென நம்பியும் உன் உடையிலும், உணவிலும், உடலிலும் உள்ளத்தைச் செலுத்தி வாழ்கிறாயே. இவ்வாறு கோடானகோடி முட்டாள்கள் செய்து அலுத்துச் செத்ததை அறியாயோ? பொய்யான உலகில் மடையர்கள் மெச்சும் காரியங்களைச் செய்துவிட்டுப் பெருமையடித்துக் கொள்கிறாயே? நிலையற்றவைகளிடம் இருக்கும் ஆசைகளைத் துறந்து விட்டால் உன்னுள் இருக்கும் ஆன்மாவை அறிந்துணரலாம்.
உலகில் கடவுள் இருக்கிறாரா? ஒரு கடவுளா? பல கடவுள்களா? என வீண் விவாதம் செய்து உன்னை நீயே கெடுத்துக்கொள்ளாதே. வீண்விவாதம் செய்யும் நேரத்தில் உயிர் பிரிந்துவிட்டால் உடல் கட்டைமட்டும் கிடக்கும். வீண் விவாதங்களை விட்டுவிடு. சத்தியத்தை நம்பு. இறைவன் சத்தியமானவர். அன்பும், சத்தியமும் மட்டுமே கடவுளின் உருவங்கள். இருக்கா? இல்லையா? எனும் சந்தேகம் வந்தால் நரகம்தான் நீ போகுமிடம். இறைவனை சத்தியமாக நம்பினால் நீயும் இறைவனைச் சார்வாய்.
Thursday, December 27, 2007
குரு வாக்கு
Posted by ஞானவெட்டியான் at 5:44 PM
Labels: ஞானமுத்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
நல்ல கர்மாவினால் நல்லெண்ணங்களும்
நல்லெண்ணங்களால் நல்லொழுக்கங்களும்
நல்லொழுக்கங்களால் நற்குருவும்
நற்குருவினால் நற்கதியும் நமக்கு சித்திக்கின்றன.
"செய்யும் தொழிலே தெய்வம்" இதனை சிந்தையில் இருத்துவதே சிறப்பு.
Post a Comment