Thursday, December 27, 2007

மனம் - 3

மனம் - 3
*************************
மனம் நம் உடலின் உள்ளே இருந்துகொண்டு உடலை ஆட்டிப்படைக்கும் ஒரு சூக்குமப் பொருள். மனம் அசைந்தால் உடல் முழுதும் அசைகிறது. மனம் ஒடுங்கினால், நம் உடலையும் மறந்து, நாம் இன்ன இடத்தில் இருக்கிறோம், இன்னதுதான் செய்கிறோம் என்னும் நினைவின்றி சுழுத்தி அவத்தையில் அழுந்தி விடுகிறோம். மனம் அடங்க, அதனால் மனோவாயுவும் அடங்க பிரேதா அவத்தைக்குப் போய்விடுவோம். இவைகளால் மனமே சலனத்துக்குக் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி.

மனம் ஒருவனுக்கு வயப்பட்டால், அவன் யோகம், ஞானம் எதும் செய்யத் தேவையில்லை. பெரியோர்களெல்லாம் தம் மனத்தை வயப்படுத்தவே தவம் முதலிய முயற்சிகளைக் கையாண்டனர். எத்தகைய யோக ஞானங்களும் ஒருநிலைப்பட்ட சித்தமில்லையேல் பலன் தராது. நமது ஞான வினை என்னும் முக்கலை ஒன்றித்தலும் முற்றுப் பெறும் வரை மனிதனுக்கு பரிசுத்தம் இன்றியமையாத ஒன்று. ஆதலால், மனத்தை வயப்படுத்த முயலவேண்டுமே அல்லாது மனத்தை முற்றிலும் அடக்க முயலக் கூடாது. ஏனெனில், மனம் அடங்கிவிட்டால் ஒரு காரியமும் நடைபெறாது.

மனம் சுத்த மனம், அசுத்த மனம் என இரு வகை. காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியம் என்பவைகளில் விருப்பமுள்ள மனம் அசுத்த மனம். மேற்கூறியவைகளில் வெறுப்படைந்து ஒளிவீசுவது சுத்த மனம். இதைத்தான் "அறிவு" என்கிறோம். மனம்தான் இவ்வுலகில் காணப்படும் நிலையில்லாப் பொருட்களை அடையும்படி செய்து மனிதனைத் தாழ்த்துகிறது. இதே மனம்தான், இவைகள் நிலையற்றவை என்று அறிவால் உணர்த்தி வெறுப்பூட்டி, ஆன்ம ஞானத்தைப் பெறவைத்து உயர்த்துகிறது.

மனத்தினால் செய்யப்பட்ட தொழிலே தொழிலாகும்; மனத்தினால் விடுபட்டதே விடுபட்டதாகும். மனம் நசித்தால் சனன மரணமென்னும் பெரிய காடு நாசமாகும். மன மயக்கம் என்னும் வித்தால் மாயா மலம் என்னும் கொடிய நச்சு மரம் பற்பல துன்பம் என்னும் கிளைகளுடன் செழித்து வளரும்.

ஆசைப்பட்ட பொருட்கள் அனைத்தையும் விரும்பாமல் நீங்கியவர்களே மனமென்னும் வாசியை வென்றவர்கள். ஏனெனில், தீனியாசை, யோனியாசை ஆகிய இரண்டினில் யோனியாசையைச் சிலகாலம் வரை ஒத்திப் போட்டாலும், தீனியாசையை நீங்கி இருத்தல் கடினம். மருந்து உண்ணும்போது பத்தியம் இருக்கும்போதுதான் தெரியும் அதன் இன்னல். வைராக்கிய ஞானம் இல்லாதவர்கள், மானிடத் தோல் பொத்திய விலங்கிற்குச் சமம். நான் என்னும் அகங்காரத்தைத் தொலைக்காதவரை உண்மையான ஞானோதயம் கிட்டாது. ஞானோதயமாகாவிட்டால் பிரபஞ்சம் தோன்றும். அப்போது பிரும்மம்(பெருமம்) தோன்றாது. காற்றாடி போல் சுழலும் மனம் வயப்பட்டால்தான் அகந்தை நீங்கும். அகந்தையுள்ளவர் முத்தியை விரும்புதல் இருளைத் துணையாகக்கொண்டு சூரியனைப் பார்க்க முயன்றதுபோலாம்.

திருக்குறள்
***************
யானென தென்னுஞ் செறுக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த வுலகம் புகும்.

இவ்வுலகத்தோரால் இனிமை எனக் கருதும் யாவும் எப்பொழுது எட்டிக்காய்போல் கசக்கிறதோ அப்பொழுதுதான் மனம் வயப்பட்டுள்ளது. திரண்ட மேகக்கூட்டம் பேய்க்காற்றால் எப்படிச் சிதறி ஓடிச் சூனியமாகி விடுதல்போல் கற்பனையால் மனம் நசிக்கும். நிறைவு - குறைவு, பெரிது - சிறிது நீங்கிய சமபக்குவத்தால் ஆனந்தத்தைத் தரும் பிரமபதம் சதாநித்தியமாகும். வெப்பமானது அக்கினியியிலிருந்து நீங்காமல் இருப்பதுபோல், தாழ்வைத்தரும் சஞ்சலம் மனதை விட்டு நீங்குவது மிகவும் கடினம். சலிக்கும் மனமே உலகமாம்.

மனம் எப்பொருளைப்பற்றி சதா சிந்திக்குமோ அப்பொருள் சித்திக்கும். எப்பொருளையும் மேன்மையாகப் பாவிக்க மேன்மையும், கேவலமாக நினைக்க கேவலத்தைத் தருவதாகவும் அமையும். ஆகவே, சகலத்துக்கும் மனமே காரணம்.

ஆகையால்தான் இவ்வளவு எழுதவேண்டி உள்ளது.

"கைஸா நிய்யத் அய்ஸா பரக்கத்"
எண்ணம் அப்படியோ அப்படியே வாழ்வு. அதாவது "எண்ணம்போல் வாழ்வு".

0 Comments: