Thursday, December 27, 2007

மனம் - 2

மனம் - 2
**************************
மனம் - கற்பனைகளின் தாய்
********************************
உன் அறிவால் அறிந்த உண்மைகளை ஏன் அநுபவத்திற்குக் கொண்டுவரத்
தயங்குகிறாய்? அநுபவம் வராதவரை நீ படித்த முட்டாள் என அநுபூதியுள்ள
சித்தர்கள் ஒதுங்குவார்கள். உன் அறிவுக்கும் அறிவான மெய்ப்பொருளை நீ
அறிந்து அநுபவத்திற்குக் கொண்டு வருவதே அநுபூதி. தன்னிலும் வேறாக ஒன்றுமில்லை.உலகத் தோற்றமே ஒரு கற்பனைதான்.

கற்பனையை ஏமாற்றக் எதிர்மறைக் கற்பனையே சிறந்த வழி என்பது ஒரு சாராரின் கருத்து. எடுத்துக்காட்டு:

MATRIX படம் பார்த்தீர்களா? அதில் ஒரு சிறுவன் ஒரு கரண்டியைத் தன்
பார்வையால் வளைத்துக் கொண்டிருப்பான். கதாநாயகன் நியோ அதைப் பார்க்க அச்சிறுவன், "என் கையில் கரண்டி இல்லை. அது அப்படியே இருந்தாலும் வளைவது இல்லை. நீதான் வளைகிறாய். இது ஒரு கற்பனை" என்பான்.

இன்னுமொரு வழி:
மனமே கற்பனைகளை உற்பத்தி செய்யும் தாய். நீ எதையும் கற்பனை செய்யாதே. அப்படிச் செய்தால் கற்பனை கடந்த சோதி உனக்குள் மறைந்துவிடும். உன்னை மறைப்பது கற்பனையே. மனதில் எதுவும் இருக்காத நிலையே அறிவை உணரும் நிலை. கற்பனைகளைத் தியாகம் செய்துவிடு. பரிபூரண நிலைக்குச் செல்ல அதுவே சிறந்த வழி.
*****************************************************
>மனமே கற்பனைகளை உற்பத்தி செய்யும் தாய். நீ எதையும் கற்பனை >செய்யாதே.
>மனதில் எதுவும் இருக்காத நிலையே அறிவை உணரும் நிலை.
>கற்பனைகளைத் தியாகம் செய்துவிடு. பரிபூரண நிலைக்குச் செல்ல அதுவே >சிறந்த வழி.

ஐயா! எனக்கு என்னவோ மனம் பற்றிய இந்த தொடரில் சில வரிகள் என மனதிற்கு உடன்பட மறுக்கின்றன. அது என் வயதின் தடையா அல்லது வேறு எதுவுமா? என்பது தெரியவில்லை. தொடரின் இடையில் குறுக்கீடு செய்தமைக்கு முதலில் மன்னிக்கவும்.

"நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகிறாய்" என்பது கீதை.
நினைப்பது என்றால் என்ன? எது நம்மை நினைக்கச் செய்யும்? எதன்மீது அதிக பர்று கொள்கிறோமோ அதுவே கனவிலும் வரும். பற்று மட்டும் அன்று பயம் கொண்டாலும் வரும்.

என்னுடைய பயிற்சி அரங்கில் நான் Alpha Mind Power Meditation சொல்லிக் கொடுப்பது உண்டு. அதில் கற்பனைப் பற்றிய பயிற்சியே அதிகம் இருக்கும். அதன் பலன் Scientific ஆக அதிகம். நான் உணர்ந்ததும் கூட ஆகும் பொருள் தேடும் இவ்வுலகில் அருளை நாம் தேடாவிட்டால் அவ்வுலகமில்லை என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை.

>பரிபூரண நிலைக்குச் செல்ல அதுவே சிறந்த வழி.

அப்படியானால் பரிபூரண நிலைக்கு (இல்லறத்தான்) என் போன்றோர்க்கு வழியே இல்லையா? துறவுதான் கொள்ள வேண்டுமா? தாங்கள் சொல்வது போல் கற்பனையே அன்றி இருந்துவிட்டால் வாழ்வில் வெற்றி என்பது எப்படி ஐயா? விளக்கவும்..தவறுகளை மன்னிக்கவும்.

இல்லறமே நல்லறம் என்று நீங்கள் ஏற்கனவே சொல்லி உள்ளீர்கள். அப்படியிருக்க இல்லறத்தான் கற்பனை அன்றி இருத்தல் எப்படி ஐயா?

பாசிடிவ் இராமா
**********************************
இராமா,,
இதே கேள்வி தான் எனக்கும் ,,,
அன்னையோடு இருந்த போது சத்தியமாக எனக்கென்று நான் எதுவும் சேர்த்து வைக்க வேண்டும் என்ற சுயநலமே இல்லை ஆனால் திருமண பந்தமமென்று ஆனவுடன்..என் குடும்பம் என்று யோசிக்க வேண்டி இருக்கிறதே..எனக்கே பயமாக இருக்கிறது.. என்னை அறியாமல் எப்படி என்னுள் இப்படி ஒன்று?
'சுவாமி விவேகானந்தரும் அடிக்கடி சொல்வார்" நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்"... என்பதை .. ஞான ஐயா,,விளக்குங்கள்?

மனம் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்க தியானம் செய்வதுண்டு..ஆனால் அதையும் மீறி அது சுழன்றால்?>>
என்றென்றும் நட்புடன்
உங்கள்
சுதனின்விஜி.
****************************
அன்புள்ள ராமா,

ஒரு ஆளுமைப் பண்புப் பயிற்றுனர் கேட்கவேண்டிய கேள்வியைச்
சரியாகக் கேட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

ஞானவெட்டியான் ஐயா சொல்லியிருக்கும் எல்லாமே ஞானத்திற்கான
வழிகள். ஞானம் பெறுவதான கல்வியை மட்டுமே 'வித்யை' என்றனர்
பெரியோர். அல்லாத மற்றவை எல்லாம் 'அவித்யை'.

மனம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதை நமக்குச் சாதகமாகப்
பயன்படுத்திக்கொள்கிறோம், உண்மைதான்.

முதலில் இந்தியச் சிந்தனை மரபில் மனம் என்றால் என்ன என்று
பார்க்கலாம். நம் முன்னோர் மனதை உள்ளுறுப்பு (அந்தக்கரணம்)
என்று கூறினார்கள். எப்படி மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய
ஐம்பொறிகளும் வெளியுறுப்புகளோ, இவற்றிலிருந்து வரும் அனுபவ
ங்களைப் பெறும் மனமும் ஓர் உறுப்பே. அது ஆறாவது உறுப்பு.

ஆனால் மனத்தை 'ஸ்விட்ச் ஆ·ப்' செய்துவிட்டால், மற்ற உறுப்புக
ளின் அனுபவங்களை நாம் பெறுவதில்லை. உதாரணமாக, நாம் தீவி
ரமாக யோசிக்கும்போது, நமக்கு இசை கேட்பதில்லை, பூவின் மணம்
தெரிவதில்லை என்பது போல. எனவே இந்த ஆறாவது உறுப்பு
இல்லாவிட்டால் மற்ற ஐந்து உறுப்புகளின் செயல்கள் பலனளிக்கா.

மனம்தான் இவற்றின் ஓட்டுநர்.

இதன் பொருள் என்னவென்றால், எவ்வாறு ஐம்புலன்களும் உடலின்
உறுப்புகளோ, அவ்வாறே மனமும் ஆறாவது 'உள்' உறுப்பு. அவ்வளவுதான்.
'இந்த உடல்தான் நான்' என்ற எண்ணம் இருக்கும்வரை
ஞானம் வாய்க்காது. மனமும் உடல்தான் என்றபின், மனமும் நானல்ல.

ஆனால் ஐந்து பொறிகளின் வழியே மனம் வெளிநோக்கிப் பாய்ந்து
கொண்டே இருக்கிறது. வெளிநோக்கிப் பாயும் மனம் இறைவனை
அடையாது. அதாவது ஞானத்தை அடையாது. மனத்தை உள்நோக்
கித் திருப்ப வேண்டும்.

மேற்கத்திய விஞ்ஞானத்தில் மனம் அறிவு இரண்டும் ஒன்றுதான். எல்லாமே
மூளையில் இருப்பவைதாம். அதாவது, புலன்களின் உணர்
வுகளுக்கான சமிக்ஞைகளைப் பெறுவது மூளைதான். ஒவ்வொரு வகை உணர்
வுக்கும் மூளையில் ஒவ்வொரு மையம் இருக்கிறது என்பார்கள்.

இந்தியச் சிந்தனையில் மனத்தை மூன்றாகப் பிரித்தார்கள்:

1. சித்தம்: (Mind) உணர்வுகளின் தொகுதியான பகுதி.
2. புத்தி: (Intellect) அறிவு.
3. அகங்காரம்: (Ego) ஆணவம். 'நான்', 'என்னுடையது' என்று எ
ண்ணவைப்பது.

மனம் என்பது எண்ணங்களின் தொகுதி. எண்ணங்கள் இல்லையேல்
மனம் இல்லை. இந்த மனம்தான் நாம் எது இல்லையோ அதை
யெல்லாம் நான் என்று நினைக்க வைக்கிறது. பாரதியின் ஞான ரதம்
படித்தீர்களானால் 'சத்தியலோகத்துக்குள் நுழையவேண்டுமென்றால்
மனத்தோடு நுழையமுடியாது' என்று அவருடன் வரும் கந்தர்வன்
சொல்லுவான்.

'உங்களுக்கெல்லாம் சிந்திக்காமல் இருப்பது எவ்வளவு கடினமோ,
எனக்குச் சிந்திப்பது அவ்வளவு கடினம்' என்று ஒருமுறை ரமண பக
வான் கூறினார். ஞானிகளுக்குத் தமக்கென்று ஒரு மனம் கிடையாது.
எனவேதான் அவர்களுக்கு உயர்வு-தாழ்வு, விருப்பு-வெறுப்பு, சுகம்-துக்கம்
என்பது போன்ற இருமைகள் கிடையாது.

அதாவது, மனத்தை உலகியல் வெற்றிக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம். அதைத்தான் நீங்கள் ஆளுமைப் பயிற்சிகளில் செய்கிறீர்கள். அதற்காக மனத்தை நெறிப்படுத்துகிறீர்கள், மனத்தைக் குவிக்கிறீர்கள்,
மனத்தை நீங்கள் வேண்டியபடிக் கற்பனை செய்ய வைக்கிறீர்கள். அதனால் செல்வம், பதவி, வெற்றி இவையெல்லாம் வரும்.

ஆனால் வெற்றியும் தோல்வியும், இன்பமும் துன்பமும் நாணயத்தின்
இருபக்கங்களைப் போன்றவை. ஒன்றில்லாமல் ஒன்றில்லை. நல்லது
வரும்போது மகிழும் நாம், கெட்டது வரும்போது சோர்ந்துவிடுகிறோ
¡ம். இறைவனைப் பழிக்கிறோம். ஆனால் யார் எதையும் நாடி
ஓடுவதில்லையோ அவனுக்குத் துன்பமில்லை. 'நாடி ஓடுவதில்லை'
என்றால் செயலற்று இருப்பதில்லை.

இல்லறத்தில் இருக்கும் போதும், தொழில் செய்யும்போதும், நம்முடைய
கடமைகளைச் செய்துவிட்டு, 'இறைவா இனிமேல் நீ விட்ட வழி.
நீ எதைத் தருகிறாயோ அதை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்'
என்பவன் துவளுவதில்லை. அவனுக்கு 'இருள்சேர் இருவினையும் சேரா'.
அதைத்தான் பற்றற்ற கடமை ('நிஷ்காம்ய கர்மம்') என்று கீதை விவரிக்கிறது.

நல்லமுறையில் பெறும் வெற்றியும், பதவியும், செல்வமும் மனிதனைத்
தூய்மையாக்கும். மனத்தூய்மை சத்தியத்துக்குப் போகும் வழியில்
உதவியாக இருக்கும்.

மனத்தை அழிப்பதன் மூலமே, அதாவது அஹங்காரத்தை, எண்ணங்களை
அழிப்பதன் மூலமே, மனிதன் ஞானம் பெறுகிறான்.

அது தனிக்கதை...

அன்புடன்
மதுரபாரதி
**************************************
அன்பு நண்பர் திரு.மதுரபாரதி,

அருமையான, கோர்வையான விளக்கம்.

மனம் தெளிந்திருக்கும்.

கற்பனைக்கும் இலக்குக்கும் வேறுபாடுகள் உண்டு. கறபனை மனதைக் கண்டபடி அலையவிடுவது. நான் கோடீசுவரனாக வேண்டும். பதவி
உயர்வு அடிக்கடி வரவேண்டும். எனக்கு ஆள், படை, பட்டாளம் வேண்டும்.
இதுதான் கனவு.

இலக்கு குறிக்கோள். இல்லறவாசிக்குத் தன் கடமைகளைச் சரிவரச் செய்யப்
பொருள் தேவை. அது நியாயமானது. அதற்காக, ஒரு வீடு வேண்டும். என்
குழந்தைகளை நன்கு படிக்க வைக்கவேண்டும். இதைப்போன்ற நியாயமான ஆசைகள், நினைவுகள் கட்டாயம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். அது தேவை.
துறவைப் பற்றித் தனியாக எழுதுகிறேன்.

ஆனால், இந்த உலகாயத ஆசைகளை மனம் முழுவதும் ஆக்கிரமிக்க விட்டால்தான் தவறு. 6 மணி நேரம் குடும்பத்திற்கு என முன்னமேயே கூறியுள்ளேன். அதில் நியாயமானவற்றை நினையுங்கள். மீதி நேரத்தில் மனத்தை இறைவனுக்குத் தியாகம் செய்துவிடுங்கள். அப்போதுதான் கீதையின் வாசகம் வருகிறது.

இறைவனை நினைக்க நீயும் இறையுடன் கலந்துவிடுகிறாய்.


அன்புடன்,
ஞானவெட்டியான்
******************************
>'இறைவா இனிமேல் நீ விட்ட வழி.
>நீ எதைத் தருகிறாயோ அதை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்'
>என்பவன் துவளுவதில்லை. அவனுக்கு 'இருள்சேர் இருவினையும் சேரா'.
மனதை பற்றி அருமையான விளக்கத்தினை தந்த ஐயா மதுரபாரதி அவர்களுக்கும். ஐயா ஞானவெட்டியான் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

ஒரு சின்ன கதையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நாராயணா நாராயணா என்று நொடிக்கொரு தடவை நாராயணன்மேல் பக்தி செலுத்தும் நாரதர்..ஒருமுறை திருமாலிடம் சென்று " உம்மேல் என்னை விட பக்தி கொண்டவன் இந்த உலகில் உண்டா?" என்று கர்வத்துடன் கேட்டார். அதற்கு திருமால் பூலோகத்தில் ஒரு சாதாரண விவசாயியை காண்பித்து "இவனை கவனி" என்றார் திருமால். அந்த விவ்சாயி காலையில் எழும்போது " நாராயணா என்றபடி எழுந்தான்..பின்னர் தன் கடைமைகளில் கலந்து விட்டான். ஏர் பூட்டுவது, நெல் விதைப்பது என்று அவன் தன் பணிகளையெல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்பி கண் அயரும் போது நாராயணா என்ற படி உறங்கியும் விட்டான். " இவன் தான் எனது தலைசிறந்த பக்தன் என்று திருமால் சொல்ல , நாரதருக்கு வந்ததே கோபம். "அது எப்படி, நான் நொடிக்கொருதடவை உன்னை நினைத்து பக்தி செய்கிறேன்..ஆனால் உன் நாமத்தை 24 மணி நேரத்தில் 2 முறை மட்டுமே உச்சரித்தவனை பெரிய பக்தன் என்கிறாயே, இது எப்படி சரி" என்று நாரதர் கேட்டார்.
அதற்கு திருமால் ஒரு கிண்ணத்தில் நிரம்ப நிரம்ப எண்ணெய் எடுத்து அதை நாரதரிடம் கொடுத்து " நாரதா! நீ உண்மையிலேயே சிறந்த பக்தன் என்றால் இந்த உலகை இந்த கிண்ணத்தோடு சிந்தாமல் சுற்றி வா பார்ப்போம்" என்றார்.
"இவ்வளவுதானா" என்றபடி நாரதர் எண்ணெய் கொட்டிவிடாமல் மிகக் கவனமாக உலகை வெற்றிகரமாக சுற்றி திருமால் முன் வந்து.."ஐயனே இப்பவாவது நான்தான் சிறந்த பக்தன் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?" என்றார்.
"நாரதா ஒரு சிறு கேள்வி! உலகை சுற்றி வரும்போது எத்தனை முறை எனது நாமத்தை உச்சரித்தாய்?" என்று கேட்டார் திருமால். " அய்யனே! என் கவனம் முழுதும் எண்ணெய் கொட்டிவிடக்கூடாது என்பதில் இருந்ததால் மற்ந்து விட்டேன், மன்னிக்கவும்" என்றார் நாரதர்.
அதற்கு திருமால்," ஒரு சின்ன வேலை கொடுத்தவுடன் என்னையே மற்ந்து விட்டாய், ஆனால் அந்த விவயாயி தனது கடுமையான பணிக்கிடையேயும் என் நாமத்தை மற்க்காமல் இரு முறயேனும் உச்சரித்தான் பார்த்தாயா? அதனால் அவன்தான் உன்னை விட சிறந்தவன் என்றேன்" என்றார்.
நாரதர் கர்வம் அடங்கி தன் தவறை ஒத்துக்கொண்டார்.

ஆக, "செய்யும் தொழிலே தெய்வம்" என்பவர்களும் கடவுளை சில துளி நேரம் நினைப்பதன் மூலம் சித்தி அடையமுடியும் என்பது எனது நம்பிக்கை!
நன்றி!
*************************
அன்பு இராமா,

அதெல்லாம் சரி.

நாரதர் வெறும் வாயினால் மட்டும் "நாராயணா!நாராயணா!" என அழைத்துவிட்டு மற்றவற்றில் சிந்தனைகளைச் செலுத்திவிட்டு நான்தான் நாராயணனை எப்பொழுதும் நினைக்கிறேன் என அகந்தை கொண்டான். அவனுக்கு ஏன் நாரதன் எனப் பெயர் வந்தது தெரியுமா? "நாராயணா!நாராயணா!" என இரதத்தின் வேகத்தைவிட வேகமாகச் சொல்லக் கூடியவன் என்பதாலேயே. அந்த அகந்தையை அடக்க, நீ வெளியில் "நாராயணா"வெனும் நாமத்தை உச்சரிப்பதனால் மட்டும் என்னை நினைப்பது ஆகாது. மனமொடுங்கி
இருமுறை என்னை நினைக்கும் விவசாயி உன்னைவிட மேல் என்றுதான் நாராயணன்
கூறுகிறார்.

> ஆக, "செய்யும் தொழிலே தெய்வம்" என்பவர்களும் கடவுளை சில துளி
> நேரம் நினைப்பதன் மூலம் சித்தி அடையமுடியும் என்பது எனது நம்பிக்கை!

மனுவின் வேலை: 8 மணி நேரம் வயிற்றுக்காக உழைத்தல். 5 மணித் துளி வீட்டை, நாட்டைக் கவனிக்க. 5 மணித் துளி உறங்க. மீதி 6 மணித்துளி அவனை வணங்க.

"செய்யும் தொழிலே தெய்வம்" என 8 மணித்துளி உழைக்கவேண்டும். அப்பொழுது செய்யும் தொழிலில் அக்கரையுடன் செயல்படவேண்டும். மீதியுள்ள 16 மணித்துளியிலும் இறைச் சிந்தனையுடன் இருத்தல் நல்லது. அதிலும்
இறைவனுக்காக ஒதுக்கப்பட்ட 6மணித்துளியில் வாசியோகம் பயிற்சி
செய்தல்வேண்டும்.

"கடவுளை சில துளி நேரம் நினைப்பதன் மூலம் சித்தி அடையமுடியும்" என்னும்
தங்களின் கருத்துடன் ஒவ்வவியலாத நிலையில் உள்ளேன்.

சித்தியடைய வேண்டும் என்னும் எண்ணமே பேராசை. ஆசையை எப்படிக் களைவது? படித்தவன்தான் தேர்வில் தேறமுடியும். உழைத்தால்தான் பலன்.

"நம் கடன் பணிசெய்து கிடப்பதே!" - என்ன பணி?

6மணித்துளி வாசியோகம் பயிற்சி செய்தல்வேண்டும். இது இறைப்பணி. TIME
MANAGEMENT ஒழுங்காகச் செய்தல் வேண்டும். இதுதான் "கர்மாவைச் செய். பலனை
எதிர்பார்க்காதே!".

இதைத்தான் நண்பர் திரு மதுரபாரதி:
'இறைவா இனிமேல் நீ விட்ட வழி.
நீ எதைத் தருகிறாயோ அதை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்'என்பவன்
துவளுவதில்லை. அவனுக்கு 'இருள்சேர் இருவினையும் சேரா'. - என்றார்.

இதிலிருந்து கிட்டும் கருத்து:
"உன் கவனத்தை எப்பொழுதெல்லாம் இறைவன்பால் செலுத்தவியலுமோ அப்பொழுதெல்லாம்
மனமொன்றிச் செலுத்து." அதுவே உனக்கிட்ட விதி. வினையைச் செய். பலன் தானாக
வரும்.

அன்புடன்,
ஞானவெட்டியான்,
திண்டுக்கல்.
******************************

"லௌகீக வாழ்க்கையில் துவழுகிறோமே.. என்ன செய்ய?" என்று அங்கலாய்த்ததினால் வந்ததே எனது வினா!

இந்த காலக்கட்டத்தில் எங்கே 8 மணி நேரம் உழைக்க விடுகிறார்கள். பிழிந்து எடுத்து விடுகிறார்கள்? அதுவும் சொந்த தொழில் என்றால் சொல்லவே வேண்டாம். பல் தேய்ப்பதுமுதல் படுப்பது வரை அதிலேயேதான்.
பைக்கில் செல்லும் போது முச்சந்தி விநாயகருக்கு சப்பலைக்கூட கழற்றாமல் சல்யூட் அடித்துவிட்டு வேகமாக செல்லும் இந்த கலி உலகில் இருக்கிறேன் பாருங்கள்! இத்தணைக்கும் இடையில் "நீங்கள் சொன்ன ஞானத்தை பெற வேண்டுமே என்ற ஏக்கம் வேறு?"
ம்..ம்.. என் செய்வேன். உங்கள் கருத்துக்களை யெல்லாம் பொதித்துக்கொள்கிறேன்..காலம் கை கொடுக்கும் அவற்றையெல்லாம் உணார்ந்திட என்று நம்புகின்றேன். நன்றி ஐயா!

நன்றி ஐயா!
அன்பு இராமா,

> "லௌகீக வாழ்க்கையில் துவழுகிறோமே.. என்ன செய்ய?" என்று அங்கலாய்த்ததினால்
> வந்ததே எனது வினா!

வினா சரியே! நானும் உலகாயத வாழ்க்கையில்தான் உள்ளேன். ஞானத்தின்பால் என் மனம் ஈர்க்கப்பட்டபின்தான் எனக்குத் திருமணமே ஆயிற்று. வங்கியில் வேலை செய்ய ஆரம்பிக்கும்பொழுது ஒருமுறை அவனை விவசாயி போல் நினைப்பேன். அவ்வளவுதான்.பணிபுரியும்போது ஒரு 0ஐ விட்டால் துகை கையைவிட்டுப் போய்விடும். அப்பொழுதெங்கே இறைவனை நினைக்க நேரம். இரவில் இல்லறக் கடமைகள்.

படுக்கப்போகுமுன் ஒரு அரை மணித்துளியில் ஆரம்பித்தேன். பிரும்ம
முஹூர்த்தமாம் 4 மணியிலிருந்து 6 மணி வரை பயிற்சி. பிறகு உடலுக்குப்
பயிற்சி. ஒன்றரை மணியிலிருந்து ஆரம்பித்து நேரம் கிட்டும்போதெல்லாம்
இறைவனுடன் ஒன்றினேன்.

முடிந்த வரையில் இளம்பிள்ளைகளாகிய நீங்கள் எல்லோரும் செய்து பார்க்கலாமே!
அட வேண்டாமையா! காலையில் அரை மணி. இரவில் அரைமணியில் ஆரம்பியுங்கள். போதுமே. அந்த சுகம் கண்டால்தான் தெரியும் மன நிம்மதி என்னவென்று.

நான் எழுதுவதெல்லாம் சுத்த ஞானம். (அதையெல்லாம் சேமித்து வைத்துக்
கொள்ளுங்கள். பின்னால் பயன்படும்.)அதிலிருக்கும் நல்ல கருத்துக்கள்,
அறிவுரைகளை எடுத்துகொள்ளுங்கள். முடிந்தவரை அநுபவத்தில் கடைப்
பிடியுங்கள். நான் இல்லறவாசி. என்னாலாகாது என ஒதுங்குதல் கூடாது. இல்லறவாசிகளுக்கு எப்பொழுதும் விதிவிலக்கு உண்டு.

ஆனால், உலகாயதம்தான் நமக்கு என முடிவு கட்டிவிடாதீர்கள்.

ஒரு காரியத்தை முடிக்க அதை ஆரம்பியுங்கள்(இறைவனை நினைந்து). அது விளையும்.


> பைக்கில் செல்லும் போது முச்சந்தி விநாயகருக்கு சப்பலைக்கூட கழற்றாமல் சல்யூட்
> அடித்துவிட்டு வேகமாக செல்லும் இந்த கலி உலகில் இருக்கிறேன் பாருங்கள்!

காலணி கழட்டாமல் on the way wish பண்ணி ட்டுப் போறான் ராமன். அவனைப் பாத்துக்கிறேன் என முச்சந்திப் பிள்ளையார் கோபித்துக் கொள்ளமாட்டார். இவ்வளவு நேரமின்மையிலும் நம்மை நம் பிள்ளை கண்டுகொண்டுதான் போகிறான் என்று நினைப்பர். நம் முகமே பிள்ளையார் என்று படம் போட்டுக் காட்டினேனே!
*****************************
உண்மைதான். மனம் இறைச்சிந்தனையில் தோய்ந்திருக்கிறதா
என்பதே மிக முக்கியம்.

ஒருமுறை நான் ஒருமணி நேரத்துக்கு மேல் பயணம் செய்ய வேண்டியிருந்தது.
கையில் அபிராமி அந்தாதியை வைத்துப் படித்துக்கொண்டே போனேன்.
(பொதுவாக காயத்ரி மந்திரத்தைச் செபித்துக் கொண்டே போவது
வழக்கம்.)

சுமார் ஒருமணி நேரம் கழித்து அருகிலிருந்தவர் கொஞ்சம் 'holier
than thou attitude'-உடன் 'நீங்கள் பக்தி நூல் தானே
படிக்கிறீர்கள்?' என்று கேட்டார். 'ஆமாம்' என்றேன்.

'காலில் செருப்புப் போட்டுக்கொண்டே படிக்கிறீர்களே, இது
சரியா?' என்று குற்றம் சாட்டும் குரலில் கூறினார்.

நான் பொறுமையாக, 'எனக்கு இரண்டு வழிகள் உள்ளன. இதைப்
படிக்காமல் தெருவோரம் வேடிக்கை பார்ப்பது. இரண்டாவது,
வேறு ஏதேனும் புத்தகம் படிப்பது. என் கருத்தில் வேறு எதிலும் மனதைச்
செலுத்துவதை விட அபிராமி அந்தாதியை ஓதுவது உயர்ந்ததாகப்
படுகிறது' என்றேன்.

'அதுக்கில்லே, செருப்புப் போட்டுக்கொண்டு..' என்றார்.

'என் செருப்பு தோல் செருப்பல்ல. அதுவுமில்லாமல் என் கருத்துப்படி
புறத்தூய்மையை விட அகத்தூய்மை முக்கியம். அபிராமி அந்தாதி
அதற்கு உதவுகிறது' என்றேன்.

எனவே நண்பர்களே, ஒரு நொடியைக் கூட வீணில் கழிக்காதீர்கள்.
ஒவ்வொரு நொடியும் எதிர்காலத்துக்கான முதலீடு. அதை நல்ல
வழியில் செலவழியுங்கள்.
மதுரபாரதி
*************************

அன்புடையீர்,
ஒரு நொடியைக் கூட வீணில் கழிக்காதீர்கள். ஒவ்வொரு
நொடியும் எதிர்காலத்துக்கான முதலீடு. அதை நல்ல வழியில் செலவழியுங்கள்.

இதைத்தான் நான் ஆரம்பத்திலிருந்து உங்களிடம் வேண்டிக்கொண்டது. காலமே எமன். மறவாதீர்கள்.
ஞானவெட்டியான்

0 Comments: