பூர்வ ஜென்மம், புனர் ஜென்மம்.
*********************************
முன் சென்மங்களில் செய்துள்ள புண்ணிய, பாவ வினைகளின் காரணமாய் இந்த சென்மத்தில் சுகம், துக்கம் முதலியவைகள் ஏற்படுகின்றன என்பதைச் சற்றிறங்கள் கூறுகின்றன. அவ்விதம் ஊழ்வினை காரணமாய் இப்பிறவியில் எந்த சமயத்தில் எதன்மூலம் மேற்கூறிய சுக துக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதைக் கணிப்பதே சோதிட சற்றிறம்.
இளங்கோவடிகள், "ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்" என்கிறார்.
மந்திரேஸ்வர முனிவர் எழுதிய"பாலதீபிகை" எனும் நூலில் "ரூபம் சீர்ஷஞ்ச வர்த்தமாந ஜந்ம" எனக் கூறியுள்ளார்.
இப்பிறவியை இலக்கினத்தாலும், அடுத்த சென்மத்தை 5ம் இடத்தாலும், 9ம் இடத்தினால் முன் சென்மத்தையும் அறி எனக் கூறியுள்ளார்.
ஆக, சோதிட சற்றிறத்தின்படி முன்பிறவி, அடுத்த பிறவி உண்டென அறிகிறோம்.
ஏழு பிறவிகள் உண்டெனவும் அவை யாவும் இப்பிறவியிலேயே நடக்கும் என்பார் சிலர்.
எழுபிறவி:
1.ஐம்பூதங்கள்
2.அவைகளின் கூட்டுறவால் உண்டான சக்திகள்
3.அச்சத்திகளை பிரிதிவிசத்தி உள்வாங்கி பழம், மருந்துப் பொருள்கள்
முதலியன காய்க்கும் மரங்களை(ஓஷதிகளை) வெளிப்படுத்தல்
4.ஓஷதிகளிலிருந்து வித்தாகிய சீவவுணவுகளை உண்டாக்கல்
5.உணவையுண்டு நாதபிந்துக்களை உண்டாக்கல்
6.நாதபிந்துக்களால் இனப்பெருக்கம் செய்தல்
7.மறுபடி மனித உருவாய் வெளிப்பட்டு நிற்றல்
பூர்வ சென்ம வாசம் என்பது கர்ப்ப கோள வாசம் என்பார் வள்ளலார்.
வள்ளலார்:
*********
இவ்வுடலுக்கு பிறப்பு ஏழு. அதுபோல் எழுவகைப் பிறப்பிலும் ஒவ்வொரு பிறப்பிற்கும் எவ்வேழு பிறப்புண்டு.அந்த எவ்வேழு பிறப்பும் ஒவ்வொன்றில் அனந்தமாய் விரிந்த யோனி பேதங்களின் விரிவெல்லாம் தோன்றி மேலேறி மறுபிறவி உண்டாம். ஒவ்வொரு பிறவியும் எந்தக் கல்பத்தில் நட்டமடைகிறதோ அந்தக் கல்பகாலம் வரையில் தோற்றமில்லாமல் மண்ணில் மறைந்திருந்தும் மறு கல்பத்தில் தோன்றி, இவ்விதமாகவே மற்ற யோனிகளிடத்தும் பிறந்து, முடிவில் இத்தேகம் கிடைத்தது.
ஏழு பிறவி:
*********
1.கர்ப்பத்தில் 5மாதம் வரையில் குழவியாயிருப்பது.
2.அவயவங்களின் உற்பத்திக் காலம்.
3.பிண்டம் வெளிப்பட்ட காலம்.
4.குழந்தைப் பருவம்.
5.பாலப் பருவம்.
6.குமாரப் பருவம்.
7.விருத்தப் பருவம்.
மேலும் துலப் பிறப்பு 7, சூக்குமப் பிறப்பு 7, காரணப் பிறப்பு 7.
தூல, சூக்குமப் பிறப்புகள்:
1.சாக்கிரம்
2.சொப்பனம்
3.சுழுத்தி
4.சாக்கிரத்தில் சொப்பனம்
5.சாக்கிரத்தில் சுழுத்தி
6.சொப்பனத்தில் சொப்பனம்
7.சொப்பனத்தில் சுழுத்தி
காரணப் பிறப்பு:
மனோ சங்கல்பமெல்லாம்(எண்ணங்கள்) பிறவி. இதற்குக் காரணம் நினைப்பு,மறப்பு. இவை ஒழியப் பிறவியில்லை.
ஞானிகளிக்குக் காரணப் பிறப்பு வேண்டும். அது கிட்டிவிட்டால்
எண்ணங்கள்தான் பிறவிகள். அவற்றிற்குக் காரணம் ஆசைகள் அதையொழிக்கப் பிறவியில்லை.
Thursday, December 27, 2007
பூர்வ ஜென்மம், புனர் ஜென்மம்
Posted by ஞானவெட்டியான் at 4:41 PM
Labels: ஞானமுத்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
முற்பிறப்பு, மறுபிறப்பு பற்றி நான் அறிந்தவரை...
'வினையும் அதன் மறுவினையும் சமமாகவும் எதிரானதாகவும் இருக்கும்' என்று கூறியது நியூட்டனின் சித்தாந்தம். இதை இயற்பியல் உலகில் அப்படியே நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதன் ஆன்மிகப் பயன்பாடுதான் 'கர்மா தியரி' என்று சொல்லப்படும் வினைப்பயன் கொள்கை.
'வினை விதைத்தவன் வினை அறுப்பான்', 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்', 'தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்' என்றும் முன்னோர்கள் வேண்டிய அளவு நம்மை எச்சரித்தனர். ஆனால் நாம் 'மூத்தோர் சொல் வார்த்தை விடம்' என்று பெரும்பாலும் நினைக்கிற காலத்தில் இருக்கிறோம். தவறு செய்தவன் நம் கண் முன்னாலேயே தண்டனை பெறவேண்டும், இல்லையென்றால்
தெய்வம் என்ற ஒன்றே கிடையாது எனப் பேசுகிறோம்.
தமிழில் 'தெய்வம்' என்ற சொல்லுக்கு 'விதி' என்ற பொருளும் உண்டு. 'விதி'யை யார் விதித்தார்கள், யாருமல்ல. நாமேதான். அதனால்தான் சங்கப் புலவன் 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்று மிக உறுதியாகக் கூறினான். இந்துமதம் கடவுளை சாட்சி பூதம் என்று ஒருநிலையில் சொல்கிறது. நீங்கள் வானத்தை
நோக்கி எச்சில் துப்பினீர்கள், அது உங்கள் மேல் மீண்டு வந்து விழுந்தது.
உடனே வானம் என்மீது எச்சில் துப்பியது என்று அலறி என்ன பயன்? வானம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. வானம் மிக மேலே இருக்கிறது. உங்களைப் பழிவாங்க அதற்கு நேரம் இல்லை. நீங்கள் துப்பியதை இயற்கை மீண்டும் உங்கள்
மேலேயே விழுமாறு செய்தது.
எச்சில் துப்பினால் எச்சில் விழும், வானத்தை நோக்கி அமிலத்தை
ஊற்றினால்... ஊற்றியவன் அமில மழையில் நனைவான், உருக்குலைந்து போவான். அப்போது, 'ஐயோ, இறைவா! உனக்கு என்மீது கருணை இல்லையா?' என்று கதறுகிறான்.
அவநம்பிக்கைப் படுகிறான். மற்றவர்கள் எல்லாம் நன்றாக இருக்க எனக்கு மட்டும் ஏன் இப்படித் துன்பம் வருகிறது என்று புலம்புகிறான். பல
சினிமாக்களில் வருவது போல் சாமி படத்தைக் கழட்டி எறிகிறான். சில சமயம் கடவுள் நம்பிக்கையையே இழக்கிறான்.
கீரை விதை போட்டால் ஆறுமாதத்தில் பலன். வாழை நட்டால் ஒரு வருடத்தில் பலன். தென்னை நட்டால் நான்கு வருடத்தில் பலன். தேக்கு மரம் அறுபது வருடங்கள் எடுக்கிறது.
அதேபோல, நமது நல்ல, தீய செயல்களும் பலன் தர அவற்றின் தன்மைக்கு ஏற்பக் குறைவாகவோ அதிகமாகவோ நாள் எடுக்கின்றன. நமது கரும வினைகளை முன்னோர்கள் மூன்று வகையாகப் பிரித்தார்கள்: பிராரப்தம், ஆகாமியம், சஞ்சிதம் என்பவையே அவை.
பிராரப்தம் என்பது பலன் தரத்தொடங்கிவிட்ட வினைகள். விதைத்து, மரம் வளர்ந்து, கனி தரத் தொடங்கிவிட்டது. நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுகதுக்கங்கள் இந்த வினைப் பயன்கள்தாம்.
ஆகாம்யம் என்பது விதைத்து வளரத்தொடங்கிவிட்ட பயிர் போல. அது மரமா,செடியா, கொடியா என்பதைப் பொறுத்துத் தக்க சமயத்தில், இந்தப் பிறவியிலேயே
பலன் தரும்.
சஞ்சிதம் என்பது விதைக் கையிருப்பு. ஆனால் பயிராகவில்லை. இந்தப்
பிறவியிலோ இன்னும் வரும் பிறவிகளிலோ எப்போது வேண்டுமானாலும் பலன் தரும்.
'போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்'
என்று ஆண்டாள் திருப்பாவையில் இரண்டு வகை வினைகளைக் கூறுகிறாள். ஒன்று,
முன்பே செய்துவிட்ட பிழை, அடுத்தது, இன்னும் வரப்போகும் பிழை (அதாவது அந்தப் பாவங்களின் விளைவு).
ஆக, பாவம், புண்ணியம் இவை இரண்டின் மூட்டையைச் சுமந்து பிறப்பு வருகிறது. அந்தப் பிறப்பு மனிதப் பிறப்பாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை.
பாவ புண்ணிய மூட்டையின் பலனாக மீண்டும் மனிதனாகத்தான் பிறக்க வேண்டும் என்பதில்லை என்று சொல்லி நிறுத்தினேன்.
"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்."
என்று திருவாசகத்தில் (சிவபுராணம், 26-32) எப்படி மனிதன் கல் போன்ற ஜடப் பொருள் தொடங்கி புல் முதல் தேவர் வரையான (ஓரறிவிலிருந்து பல்லறிவுடைய பிறவிகள்) பலவகைப் பிறப்பும் எடுத்துத் துயரப்பட்டேன் என்று பட்டியலிடுகிறார்.
ஒருமுறை புத்தரின் முக்கியச் சீடரான மௌத்கல்யாயனர் மற்றும் லட்சணர்
கிருத்திரகூட மலையிலிருந்து இறங்கி வரும்போது பாம்புத் தோற்றம் கொண்ட பேயைப் பார்க்கின்றனர். இந்த அதிசயத்தைப் போய் அவர்கள் புத்தரிடம் கூறியதும் அவர் கூறினார்:
"புதிதாகக் கறந்த பால் உடனே தயிராகாது. அதுபோலத் தீய செயல்களின் விளைவுகள் உடனே தெரிவதில்லை. அத்தீய செயல்களின் பலன்கள் நீறுபூத்த நெருப்புப் போல
மறைந்திருந்து பாவம் செய்த அறிவிலிகளைச் சுடுகின்றன."
என்று கூறினார் (தம்மபதம்: மூடர் இயல்: 12). மேலும் அவர் அந்தப் பேயின் பின்புலத்தை இவ்வாறு விளக்கினார், "காஸ்யப புத்தர் என்று ஒருவர் இருந்தார். அவரது காலத்தில் துறவிகள் பலர் ஊருக்குள் சென்று பிச்சை எடுத்தனர். இவர்களை விரும்பாத ஒரு விவசாயி பிட்சுக்களின் குடில்களைத்
தீயிட்டுக் கொளுத்தினான். அதன் காரணமாகவே அவன் பாம்பு உருவம் கொண்ட பேயாகப் பிறப்பெடுத்திருக்கிறான்" என்று விளக்கினார்.
எதுவரை செயல்களைச் செய்கிறோமோ, அதுவரை பிறப்பும் இறப்பும் என்னும் சுழல் நம்மைத் தொடரும். இன்பம் துன்பம் என்னும் இருமைகள் இருக்கும்.
முற்பிறவியும் மறுபிறவியும் நிச்சயம் உண்டு. அப்படி செயலைத் தவிர்க்க
வேண்டுமா? அது தனிக் கேள்வி. அதற்கு விடை சொல்லப் போனால் இன்னும் பெரிதாக
விரியும்.
ஆனால், ஒருவன் துன்பப்படும் போது "இது உன் வினைப்பயன்" என்று கூறிப் பாராமுகமாக இருக்கும் உரிமை சக மனிதனுக்குக் கிடையாது.
கருணை உள்ளவனே
ஆன்மிகவாதியாக முடியும். அதனால்தான் வள்ளலார் பெருமான், 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று உருகினார். அன்பினால் பிறருக்குச் செய்யும் தன்னலம் கருதாத சேவை மனிதனின் ஆணவத்தை அழித்து, அவனை
உயர்நிலைக்குக் கொண்டு செல்கிறது.
அதனால்தான் தன்னலம் கருதாத பேரன்பே ஆன்மிகம். எல்லாவுயிரும்
தம்முயிர்போல் எண்ணுவதே ஆன்மிகம். ஆன்மிக வழி ஒன்றே பிறப்பு-இறப்புச் சுழலினின்று விடுபடுவதற்கான தந்திரத்தைச் சொல்லிக் கொடுக்கிறது.
முன்னர் பாவ-புண்ணியங்களை வெவ்வேறு காலங்களில் விளையும் விதைகளுக்கு ஒப்பிட்டோம். அந்த விதைகளை வறுத்துவிட்டால் விளையாதல்லவா? அதுதான்
சூட்சுமம்.
அன்பு நண்பர் திரு.மதுரபாரதி,
நான் ஞானவழிகளில் சொல்லியவற்றை மட்டும் தொட்டு விட்டுவிட்டேன். தாங்கள்,விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் இணைத்து எழுதியுள்ளது மிகவும் அருமை.
ஞான ஐயாவிற்கும் , மதுரபாரதி ஐயாவிற்கும் அடியேனின் நன்றிகள். இந்த மாதிரி அருமையான விளக்கங்களைக் கேட்டு வெகு வருடங்கள் ஆகி விட்டது.
>.சுழுத்தி
>.சாக்கிரத்தில் சொப்பனம்
ஐயா! மேற்சொன்னவை புரியவில்லை இன்னமும் விளக்கம் வேண்டும்.
அன்பு இராமா,
இனி வரும் இடுகையில் விளக்குகிறேன்
வானத்தை
நோக்கி எச்சில் துப்பினீர்கள், அது உங்கள் மேல் மீண்டு வந்து விழுந்தது.
நல்ல எடுத்துக்காட்டு அருமையான பதிப்பு
Post a Comment