ஞானக்குறள்
**************
முன்னுரை
************
பார்த்திப வருடப் பொங்கல் நன்னாளில் இதை வலையேற்றத் தூண்டிய எம்பெருமான் திருநீலகண்டம் துணை.
46 ஆண்டுகள் செய்த தவப் பயனாலும், என் ஞானாசிரியன் திரு.த.பொன்ராமன் அவர்கள் தந்த ஊக்கத்தாலும் உரையெழுதத் துணிந்தேன்.
இந்திய நாட்டில் வாழும் மக்கள் இறைவனை அடைய, நூல்கள் பேரறிவாளர்களின் பட்டறிவினால்(experience) எழுதப்பட்டன. நூல்கள் எழுதுவதற்கு முன்பே, ஞான மார்க்கத்தின் இரகசியங்களை வாயினால் ஒருவருக்கு ஒருவர் சொல்லி வந்தார்கள். பின்பு பீசங்களை ஏற்படுத்திய பிறகு, ஓலையில் அந்த எழுத்துக்களைக் கொண்டு தாங்கள் அனுபவித்த மகத்தான இரகசியப் பொருளைப் போதிக்க வேண்டியவர்களைத் தேர்ந்தெடுத்து, சீவர்களிடத்தில் வைத்திருந்த கருணையினாலேயே உபதேசித்து வந்தார்கள். அவ்விதமாக வெளிப்பட்ட நூலே வேதமாகும்.
இதுவே முதல் நூலாக விளங்குகிறது. இவ்வேதத்தை அறிந்து அநுபவித்த ஞானிகளும் பெரியோர்களும் இதன் மூலமாகக் கிடைத்த அனுபவத்தினால் சார்பு நூல்களை இயற்றினார்கள். வேதசாரம் ஞானிகளால் ஆறு உப அங்கங்களாகப் பிரிக்கப்பட்டன. அவைகளில், முதலாவதாகிய சிட்சை என்னும் அங்கத்தைத் தழுவியே வேதங்கள் அனுசரிக்கப்பட்டு வந்தன. கடவுளைக் காண வழி இரண்டு என வகுத்தனர். அவை சுரம், சரமென உணர்த்தினார்கள். அவைகளை நாதத்தின் மூலமாகவும், பிராண அபான வாயுக்களின் மூலமாகவுமே அடைய முடியுமென்று உணர்த்திப் பாக்களைப் பாடி வைத்தார்கள்.
அது போலவே, ஓங்கார சொரூபமாகிய நம் நாட்டின் (இந்தியாவின் மேல் ஓம்மைப் பொருத்திப் பார்க்கவும்) வடபுலத்தில் வசித்துவந்த ஞானிகளால் சத்தி அம்சமாகிய செங்கிருதமென்னும் மொழியானது ஆலய வழிபாடு, வேள்வி செய்தல், முன்னோருக்கு ஆண்டுக்கு ஆண்டு செய்யவேண்டிய சடங்குகள், திருமணம் ஆகியவைகளுக்கு (பரவித்தைக்கு) மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அந்த மொழி பேசுவதற்குப் பயன்படவில்லை என்பதால், அம்மொழியினின்றும் இந்தி, மராட்டி, குசராத்தி முதலிய வடபுலத்து மொழிகளை உண்டாக்கிக் கொண்டனர். ஞான வினையாகிய ஆத்ம வித்தைக்குச் செங்கிருதத்தையே தாய்மொழியாக்கிக் கொண்டார்கள். இப்படியிருக்க, தென்புலத்தில், சிவமொழியான தமிழ் ஓங்கார பீசமாகத் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அதில் அனேக பேரறிவாளர்கள் தோன்றி உலகுக்குத் தாங்கள் அநுபவித்த ஆநந்தமாகிய இரகசியத்தை வழிநூலாக்கி வழங்கினார்கள்.
தமிழை ஆதாரமாகக் கொண்டு பீசத்தைத் தமிழிலிருந்தும் ஒலியை செங்கிருதத்திலிருந்தும் எடுத்துக்கொண்டு ஒன்றாய்க் கூட்டிக் கிரந்தம் என்னும் மொழியை உண்டாக்கினார்கள். தமிழையே ஆதாரமாகக் கொண்டு தங்கள் அநுபவங்களை வெளிப்படுத்தி இருக்கும் ஞானிகளின் போக்குகளை, நாம் அநுபவித்துத்தான் உணரமுடியும். அது தவிற, அநுபவமில்லாமல் சாத்திரங்களைப் படித்து மட்டுமே முடிவுக்கு வருவது நன்றன்று. அதனால், ஞானிகளின் போக்குகளைச் சிதைத்து விடுவதினால் ஏற்பட்ட குற்றத்தையும், கற்றவர்கள் வார்த்தையே எதிர்பார்க்கும் மற்றவர்கள் கதியினாலேற்படும் (மூச்சோட்டம்) குற்றத்தையும் அடைவர்.
வேதாந்த ஆய்வு என்பதைச் சாற்றிறற(சாத்திர) ஆய்வோடு நிறுத்திக் கொள்ளுகிறார்களே தவிர தம் பிறப்பைப் பற்றியும், ஐம்பூதங்களை மானுட உடலில் இணைத்திருக்கும் மருமங்களையும், நாதபிந்து கலைகளின் இரகசியங்களையும், இன்னும் மற்றவைகளையும் ஆராயாமல் விட்டுவிடுகின்றனர். சாற்றிறங்களைப் படித்து அறிவதை விட தன்னை அறியவேண்டி ஆராய்ச்சியின் வழியிலே சென்றால்தான் சூக்கும தத்துவங்களை அறியமுடியும். கண்ணலே பார்த்து, அதன்பின் அநுபவத்திற்குக் கொண்டு வந்து உணர்வது முடியாத ஒன்று.
"சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ?
மாத்திரைப்போ தும்முளே மறித்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது? சத்தி முத்தி சித்தியே!"
மரண சமயத்தில் சாற்றிறங்கள் உதவாது. வாய் குழறும். நாவு இழுக்கும்.
கல்வி என்னென்ன? எதற்காக? என்ன செய்தல் வேண்டும்? என்னும் அறிவிற்காகவே.
சாற்றிறங்கள் குப்பை. ஞானச்செயலுக்கு ஆகாது.
செயல் இல்லையேல் ஒன்றுமில்லை.
விந்து நாறிச் சாக வேண்டியதுதான்.
ஞானச் செயல் என்பது சூரியகலை( வலக்கண்), சந்திர கலை (இடக் கண்), அக்கினி கலை (புருவ மத்தி) ஆகியனவற்றை ஒரே நேர்கோட்டில் நிறுத்துதல். அப்பொழுது 3 கலைகளும் ஒன்றாக இணைந்து மேலேறும். அதை சூட்சமமாகக் காட்டவே முப்புரி நூல் அணிவித்தனர். பெண்கள் முச்சடையிட்டுக் கொண்டனர்.
இதற்கு இன்னும் பல நூல் ஆதாரங்கள் இதோ:
ஞானக் குறள்:
நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே
எல்லையில் லாத சிவம்.
நல்லவற்றைக் கூறும் பல ஞான நூல்களைப் படிப்பதால் மட்டும் எல்லையில்லா சிவத்தையுணர்தல் அரிது.
சச்சிதானந்த சுவாமிகள்:
"ஏட்டைப் படித்திங் கிறுமாப்பா லென்னபயன்
நாட்டம் படித்தன்றோ நாமறுப்பம் - வாட்டமெலாம்
எச்சனனத் தேனு மிரும்பொருளை நாடாத
எச்சத்தா லன்றோ இவை."
அருணகிரியந்தாதி:
"கற்றதனாற் றொல்லைவினைக் கட்டறுமோ நல்லகுலம்
பெற்றதினாற் போமோ பிறவிநோய் - உற்றகடல்
நஞ்சுகந்து கொண்டருணை நாதரடி தாமரையை
நெஞ்சுகந்து கொள்ளா நெறி."
சிற்றம்பல நாடிகள்:
"தற்கம் படித்துத் தலைவெடித்துக் கொள்ளுமதைக்
கற்கநினையா தருளைக் காட்டுங் கருணையனோ."
சச்சிதானந்த விளக்கம்:
"கோடிபல நூலறிவு வேதமுறை பேசினுங்
குருபாதம் வெளியாகுமோ."
திருவருட்பிரகாச வள்ளலார்:
"சதுமறையாகம சாத்திரமெல்லாஞ் சந்தைப்படிப்பு நஞ் சொந்தப்படிப்போ
விதுநெறி சுத்தசன் மார்க்கத்தின் சாகாவித்தையை கற்றனனுத் தரமெனுமோர்
பொதுவளர் திசைநோக்கி வந்தனனென்றும் பொன்றாமை வேண்டிடிலென் றோழி நீதான் அதுவிது வென்னாம லாடோடிபந்து வருட்பெருஞ்சோதி கண்டாடோடி பந்து."
சிவபோதசாரம்:
"கற்குமடப் பட்டுமிகக் கற்றவெலாங் கற்றவர்பாற்
றற்கமிட்டு நாய்போலச் சள்ளிடவோ - நற்கருணை
வெள்ள மொடுங்கும் விரிசடையார்க் காளாகி
யுள்ள மொடுங்க வல்லவோ."
சசிவன்ன போதம்:
"ஆகம விதங்க ளறிவார்கள் பரமறியார்
யோகமொ டுறங்கு மவரேபர முணர்ந்தோர்
புராண மிதிகாச மெவையும்பொருளனைத்தின்
பிராண நறியா துளவிடத்திவை பிதற்றே."
ஆக சாத்திரங்களைப் படிப்பதால் மட்டும் பலனில்லை. செயல் தேவை.
கல்வி ஆதாரம்.
செயலே முக்கியம்.
"தன்னை யறிந்தால் தலைவனைக் காணமுடியும்"
என்பதை அலசி ஆராயாமல் விட்டதே உண்மை ஞானம் மறைபட்டதிற்குக் காரணம்.
அதற்கு எடுத்துக்காட்டாக, வீடுகளிலும் ஆலயங்களிலும் (ஆன்மா இலயிக்கும் இடங்களிலும்) இறைவனை வணங்கும் போதும், கற்பூரம், சாம்பிராணிப்புகை, தேங்காய் இம் மூன்றையும் பயன்படுத்துவது எதற்கு? இறைவனை மகிழ்விப்பதற்காக என்று கூறி வாழ்நாளை வீணாக்கி வருகிறோம். இவைகளுடைய தத்துவங்கள் (உண்மைகள்) இரகசியமாக மறைக்கப்பட்டு இருக்கின்றன. மறைக்கப்பட்டிருப்பதால்தான் வேதங்கள் மறைகள் எனப்பட்டன.
இறைவன் தூபதீபங்களுக்கும் தேங்காய்க்கும் ஆசைப்படுபவரா? எங்கும் எதிலும் நிறைந்துள்ள இறைவனுக்கு இச்சையுண்டா? இந்த அற்பப் பொருள்களைக் காட்டி அவருடைய அருளைப் பெறமுடியுமா? தேங்காய், மாயையாகிய மட்டையினால் மறைபட்டும், பற்றாகிய நாரினால் கட்டப்பட்டும், ஆசையாகிய சிரட்டையினால் மூடப்பட்டும் இருக்கின்ற உண்மையாகியது (உள்+மெய் = சிவம்). அதனுள் இருக்கும் நீராகிய சத்தியும், இரண்டும் இணைந்தபின் உண்டாகிய உடலில் ஓடும் சீவன் சாம்பிராணிப் புகை. பிராணண் ஒளியைப் பிரகாசிப்பதையும், மன அசைவை நிறுத்துவதற்கும் கற்பூர ஒளியைக் காட்டினார்கள். இவைகளை அறிந்து உணர்வதே கல்வியின் பயன்.
இதைப்போலவே மறைக்(கப்பட்டுள்ள)கருத்துக்களை, நம் நாட்டின் உருவமைப்பிலும், நம் உடல் அமைப்பிலும், தெய்வமைப்பிலும், விழா வினைகளின் அமைப்பிலும், தெய்வ ஆலயங்களுள்ள ஊர்ப்பெயரின் அமைப்பிலும், மனிதர்களின் பெயரமைப்பிலும், வீட்டுச்சுத்தம், தேகசுத்தம், ஆகாரசுத்தம் முதலிய அமைப்பிலும் ஞானிகள் நூல்களின் சாரங்களாகத் தந்திருக்கின்றனர். இவைகளைப் புரிந்துகொண்டால் நூல்களின் கருத்துக்கள் எளிதில் விளங்கும்.
ஞானவினையானது உலகத்தில் சஞ்சரிக்கவும், யோகம் என்னும் தந்திரத்தை (தன்+திறத்தை) அறியாமல் மனம் கலங்கும் சீவப் பிறவியற்க்குப் பேருதவியாக இருக்கும் என்னும் எண்ணத்துடன் எமக்குப் புரிந்தவரை விளக்கப்பட்டுள்ளது.
இதைத் தேடுதல் வேட்டையிலுள்ளவர்கள் கண்டால் ஆநந்தப்படுவர். மற்றவர்கள் படித்தவுடன் தீர்மானிக்காமல், பூரணமாகப் படித்துத் தீர்மானிக்கவேண்டுகிறேன்.
நிறையிருப்பின் அடைவீர் ஆநந்தம், குறையிருப்பின் கூறுவீர் என்னிடம் (திருத்திக்கொள்ள).
மனு வாழ, மானுடம் பயன் பெறட்டும்.
14 Comments:
அய்யா மிகவும் அருமையான முயற்ச்சி. நானும் படிப்பறிவினாலும் பார்த்து தெரிந்தறிவினாலும் நாம் உண்மையை உணர முடியுமா என்று எனது அன்மை பூவென்றில் வினாவியிருந்த்தேன். விடைகள் உங்களிடத்தே இருப்பதை இப்பொழுது தெளிவாக உணர்கிறேன்.
//செங்கிருதத்தையே//-சமஸ்கிருதமா
//பீசத்தைத// - என்றால் என்ன
//கிரம்தம்// மொழி இப்படித்தான் உண்டானதா(கிரந்தம் தானே)
//நாதபிந்து //- என்றால் என்ன?
//ஞானச் செயல் என்பது சூரியகலை( வலக்கண்), சந்திர கலை (இடக் கண்), அக்கினி கலை (புருவ மத்தி) ஆகியனவற்றை ஒரே நேர்கோட்டில் நிறுத்துதல். அப்பொழுது 3 கலைகளும் ஒன்றாக இணைந்து மேலேறும். அதை சூட்சமமாகக் காட்டவே//
இதைப் பத்தி ஏற்கணவே கேள்விப்பட்டேன் இப்பொழுது முழுமையாக தெரிந்து கொண்டேன்
ஐயங்கள் நிரம்ப உண்டு தெளிவு பெறும் வரை விடப்போவதில்லை நல்ல என்னிடம் ஞானம் மாட்டிக்
கொண்டார் இல்லை நான் விழுந்து விட்டேன் அவரிடம்
அந்த word veryfication ஐ எடுத்து விட்டால் என்ன?
//ஞான மார்க்கத்தின் இரகசியங்களை வாயினால் ஒருவருக்கு ஒருவர் சொல்லி வந்தார்கள்.//
ஞான மார்க்கத்தின் இரகசியங்கள் என்றால் என்ன?
உதாரணம் சொல்லுங்கள்.
இந்த இரகசியங்கள்தான் சூக்குமங்களா(சூட்சமங்களா)?
Experience - பட்டறிவு
பட்டறிவு என்றால் என்ன அறிவு?
//46 ஆண்டுகள் செய்த தவப் பயனாலும், என் ஞானாசிரியன் திரு.த.பொன்ராமன் அவர்கள் தந்த ஊக்கத்தாலும் உரையெழுதத் துணிந்தேன்.//
இப்போ உங்கள் வயசு என்ன 75 இருக்குமா? தவம் செய்ய எப்போ ஆரம்பிச்சீங்க? தவம் என்றால் என்ன?
//தமிழையே ஆதாரமாகக் கொண்டு தங்கள் அநுபவங்களை வெளிப்படுத்தி இருக்கும் ஞானிகளின் போக்குகளை, நாம் அநுபவித்துத்தான் உணரமுடியும். அது தவிற, அநுபவமில்லாமல் சாத்திரங்களைப் படித்து மட்டுமே முடிவுக்கு வருவது நன்றன்று. அதனால், ஞானிகளின் போக்குகளைச் சிதைத்து விடுவதினால் ஏற்பட்ட குற்றத்தையும், கற்றவர்கள் வார்த்தையே எதிர்பார்க்கும் மற்றவர்கள் கதியினாலேற்படும் (மூச்சோட்டம்) குற்றத்தையும் அடைவர்.//
நெத்தி அடியான கருத்துக்களை முன்வைத்திருக்கும் ஞானவெட்டியான் அவர்களை வாழ்த்தி வணங்கிப்பணிகிறேன். ஐயா, எம்போன்ற குறைகுடங்களுக்கு ஆசி நல்கவும்.
தங்களைப் போன்ற மெய்ஞானியர் எழுதுவது எங்கள் கொடுப்பினை.
ஐயா! நான் உங்களுடைய பதிவுகளைப் படிக்கின்றவன். அதிகமாக பின்னூட்டங்கள் இடுவதில்லை. ஆனாலும் படிப்பவன். ஏனென்றால் பின்னூட்டம் இடுமளவுக்கு விவரம் அறியாதவன். நன்றாயிருந்தது என்று மட்டும் சொல்லத்தக்க பதிவுகள் அல்ல நீங்கள் இடுவது. அறிவு வழிப்படுத்தும் ஆற்றுப் படுத்தும் நல்ல தமிழ் மறை வழிகள். இவைகளைப் படிப்பதும் உணர்வதுமே எங்களுக்குப் பெரிய விஷயம். அதைச் செய்யத்தான் முயல்கிறோம்.
இந்தப் பதிவைப் படித்ததும் எனக்கு ஒரு அநுபூதிச் செய்யுள் நினைவுக்கு வருகிறது.
குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்....
ஆகா! என்ற அற்புதமான வரிகள். விரைவில் கந்தரநுபூதிக்கு உரையிட (உறையிட அல்ல) முயல்கிறேன். அப்பொழுது இந்த விஷயங்கள் தொடர்பாகவும் என்னறிவுக்கு எட்டியவரை சொல்கிறேன். நீங்கள் தவறாது வந்திருந்து (ஒவ்வொரு செவ்வாயும் இடத் திட்டம்) உங்கள் செழுமையாக கருத்துகளை இட வேண்டும் என்று விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
கோ.இராகவன்
அன்பு என்னார்,
//இதைப் பத்தி ஏற்கணவே கேள்விப்பட்டேன் இப்பொழுது முழுமையாக தெரிந்து கொண்டேன்
ஐயங்கள் நிரம்ப உண்டு தெளிவு பெறும் வரை விடப்போவதில்லை நல்ல என்னிடம் ஞானம் மாட்டிக்
கொண்டார்.//
முழுமையாகத் தெரிந்துகொண்டுவிட்டால் ஐயமெழ வாய்ப்பேது?
இருப்பினும் ஐயங்களை என்னால் இயன்ற அளவுக்குத் தீர்க்க முயலுகிறேன்.
ஆமாம். உங்களிடம் ஞானம் மாட்டிக்கொண்டார். என்ன கேட்கப் போகிறீர்களோ? என்று எதிர்பார்த்துக் கொண்டு காத்துள்ளேன்.
//அந்த word veryfication ஐ எடுத்து விட்டால் என்ன?//
அது இருந்துவிட்டுப் போகட்டும். ஒரு முன்னெச்சரிக்கைக்காக.
அன்பு நாகன்,
//ஞான மார்க்கத்தின் இரகசியங்கள் என்றால் என்ன?
உதாரணம் சொல்லுங்கள்.//
பாம்பு என்று எழுதியிருப்பார்கள். அதன் பொருள் குண்டலினி சக்தியேயாம்.
இந்த இரகசியங்கள்தான் சூக்குமங்களா(சூட்சமங்களா)?
ஆமாம்.
அன்பு வலியன்,
//Experience - பட்டறிவு
பட்டறிவு என்றால் என்ன அறிவு?//
பட்டபின் கிட்டும் அறிவு பட்டறிவு. ஆங்கிலத்திலேயே கொடுத்துள்ளேனே.
கொஞ்சம் பயனுள்ள வினாக்களாய் இருப்பின் மகிழ்வேன்.
////46 ஆண்டுகள் செய்த தவப் பயனாலும், என் ஞானாசிரியன் திரு.த.பொன்ராமன் அவர்கள் தந்த ஊக்கத்தாலும் உரையெழுதத் துணிந்தேன்.//
இப்போ உங்கள் வயசு என்ன 75 இருக்குமா? தவம் செய்ய எப்போ ஆரம்பிச்சீங்க? தவம் என்றால் என்ன?//
என் அகவை தெரிந்து ஆவதென்ன? 19ம் அகவையில் தொடங்கினேன். தவம் என்பது ஞான வினை. ஞானவினைக்குப் பொருள் முகவுரையில் உள்ளது.
அன்பு நாவாய்,
//நெத்தி அடியான கருத்துக்களை முன்வைத்திருக்கும் ஞானவெட்டியான் அவர்களை வாழ்த்தி வணங்கிப்பணிகிறேன்.//
நன்றி. அவ்வளவு பெரிய ஆளில்லை நான்.
//ஐயா, எம்போன்ற குறைகுடங்களுக்கு ஆசி நல்கவும்.தங்களைப் போன்ற மெய்ஞானியர் எழுதுவது எங்கள் கொடுப்பினை.//
எப்பொழுது குறைகுடமென உணர்ந்தோமோ அப்பொழுதே இறைவனின் பூரண ஆசி நமக்குக் கிட்டிவிடும். ஏனெனில், குறை நிறையாக நிறைய வாய்ப்புள்ளது. ஆனால், நாம் நிறையென்று உணர்ந்துவிட்டால் கொள்ள இடமில்லையே! என் செய்வது?
நானோர் பரதேசி (பரம்+தேசி).
என் சக்தி (energy,wife)வரையில் சம்சாரி.
இல்லாருக்கு உபதேசி.
இருப்போரைக் கண்டால் சுகவாசி.
ம்!..ம்!. சிறப்பு கூட வராதே!
செயலின் விளைவல்லவோ கூட வரப்போவது? இப்போது மனுவுக்குத் தேவை செயல்! செயல்!
அன்பு இராகவன்,
//அதிகமாக பின்னூட்டங்கள் இடுவதில்லை. ஆனாலும் படிப்பவன். ஏனென்றால் பின்னூட்டம் இடுமளவுக்கு விவரம் அறியாதவன்.//
பின்னூட்டங்களுக்காக இவைகளை எழுதவில்லை. இதைப் படித்து நான்கு பேராகிலும் "ஞானவழியின்பால்" திரும்பினால் என் பிறவிப் பயன் கிட்டும்.
//நன்றாயிருந்தது என்று மட்டும் சொல்லத்தக்க பதிவுகள் அல்ல நீங்கள் இடுவது. அறிவு வழிப்படுத்தும் ஆற்றுப் படுத்தும் நல்ல தமிழ் மறை வழிகள்.//
நன்றி.
// விரைவில் கந்தரநுபூதிக்கு உரையிட முயல்கிறேன். அப்பொழுது இந்த விஷயங்கள் தொடர்பாகவும் என்னறிவுக்கு எட்டியவரை சொல்கிறேன். நீங்கள் தவறாது வந்திருந்து உங்கள் செழுமையாக கருத்துகளை இட வேண்டும் என்று விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.//
என்னால் இயன்றவரை, முடிந்தவரை கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
ஐயா. இந்தக் கட்டுரையைப் (முன்னுரையைப்) படித்து பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி. பட்டறிவு பெற இறையருளை வேண்டி நிற்கிறேன். அவன் அருளாலே அவன் தாள் வணங்குகின்றேன்.
வணக்கம் பல .தங்களது இப்புதிய முற்சிக்கு அரவிந்த அன்னையின் அருள் உதவட்டும்.இப்போதுதான் இதைப் புரிந்துக் கொள்ள ஆரம்பித்துள்ளேன்.வாய்ப்புத் தரும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
அன்பு நடேசன்,
மிக்க நன்றி
Post a Comment