Sunday, December 30, 2007

ஞானக் குறள் - வாழ்த்துரை

ஞானக் குறள்
***************
வாழ்த்துரை
****************
திரு. குமார்,
யாவகம்

அன்பு அண்ணன் அருளாளர் ஞானவெட்டியான் அவர்களின் இந்த ஞானக்குறள் தொகுப்பிற்கு அடியேன் தனிப்பட்ட முறையில் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பண்டை மந்திரவாக்கினை மெய்ப்பிக்கும் வகையில் பல இன்னல்களுக்கிடையில் தமக்கு வந்த பிணிகளுக்கு அஞ்சிடாமல் விடாப்பிடியாய் விவரமாய் இத்தொகுப்பினைத் தமிழ் கூறும் நல்லுலகிற்காக வலையேற்றிய அண்ணனை வணங்குகிறேன்.

மணிபூரகச் சக்கரமே விஷ்ணுபுரமென்றும், இன்னும் பல மூர்த்தி பேதங்களையும் குறிப்பாலுணர்த்திச் சைவ நெறியின் உன்னதம் விளக்கியுள்ளார்.

இவ்வளவு பெரிய உடலை வைத்துக் கொண்டு எலி மேல் ஏறி உட்கார்ந்திருக்கும் யானைத்தலைப் பிள்ளையார் சாமி யாரென்றும், குன்றுதோறாடும் குமரன்யாரென்றும், ஆதிதம்பதியரான அம்மையப்பர் யாரென்றும் இன்னும் பல இறைத்தோற்றங்களின் வினோதத்தையும் விளங்காமல் வினாக்கள் தொடுக்கும் வரும் தலைமுறைக்கு அண்ணன் ஞானவெட்டியான் அவர்கள் இந்த ஞானப்புதையலைத் தோண்டியெடுத்து வழங்கியுள்ளார்.

அருவமாய் அருவுருவாய் அது பிரிந்த உருவங்களாய் எங்கும் நிறையிறையினை, அதனியல்பினை, தேடித் தேடொணா தேவனை நம்முள் தேடிக் கண்டுகொள்ளும்விதமாய் இந்தக் குறட்பாக்களைச் சுட்டியும் தேவைக்கேற்ப விரித்துரைத்தும் பல சூக்குமங்களை அவிழ்த்துள்ளார் அண்ணன் ஞானவெட்டியான்.

கண்பெற்றோர் கண்டுணர்வர்.

அவரை வலையுலகம் கண்டுகொண்டது தமிழர்தம் நல்லூழ்!

வாழ்த்தி வணங்கி நிற்கும்,

குமார்,
யாவகம்.

***************************************************************
முனைவர். கி. உலகநாதன்,
பினாங்கு, மலேசியா

அன்பர்களே.

அன்பிற்கும் பெரும் மதிப்பிற்குமுரிய திரு.ஞானவெட்டியான் அவர்கள் எழுதியிருக்கும் ‘ஞானக்குறள்’ என்னும் அழகிய நூலிற்கு வாழ்த்துரை வழங்குவதில் மிகவும் பெருமை அடைகின்றேன்.

ஞானவெட்டியான் அவர்கள் என்மேல் வைத்துள்ள அன்பினது மதிப்பினது வெளிப்பாடாக இதனை கருதுகின்றேன். கற்றாரைக் கற்றாரே காமுறுவர் அல்லவா?

அன்னாரை நான் நேரில் சந்தித்தது கிடையாது, சமீப காலத்தில்தான் அவரது புகைப்படம் ஒன்றைக் காண நேரிட்டது. ஒரே வியப்பு! நான் கற்பனை செய்து வைத்திருந்த வடிவிற்கும் உண்மையான வடிவிற்கும் எத்தனையோ வேறுபாடுகள்! உண்மையில் இவர் அரிவாள் மீசையோடு ஓர் மறவரைப் போன்று தோன்றுமளிக்க அன்று முதல் இவரை நான் ஒர் ஞானமறவர் என்றே நினைத்து வருகின்றேன்.

தமிழின் மறுமலர்ச்சிக்கு இப்படிப்பட்ட ஞானமறவர்களின் அயராத பணிகளே வேண்டப்படுவதாக இருக்கின்றது. தமிழ் நாகரீகம் என்பது உலக நாகரீகத்திற்கு அடிப்படையானது, அதற்கு உண்மையில் வித்திட்டது. ஞானம் வளர்த்து வளர்த்து உயர்ந்த பண்பாடு அது. ஆனால் இதையெல்லாம் நலமே உணர்ந்த நற்குடிகளாக இன்றைய தமிழர்கள் இல்லையே என்பது பெரிதும் வருந்தக் கூடிய ஒன்றே. இதற்கு எதிராகக் கிளம்பிய திராவிட இயக்கமும் திசை மாறிப்போய் நாத்திகம் வாதம் பேசத் தொடங்கி வீழ்ந்துகிடந்தோரை இன்னும் அதிகம் வீழச் செய்து விட்டது.

இறையருள் இல்லையெனில் யாரும் பண்பாட்டிலும் பக்குவத்திலும் உயரமுடியாது. அந்த இறையருளை நலமே பெறுவதற்கு ஞானச் சிந்தனை, ஆழமான தத்துவச் சிந்தனை போன்றவை தேவையாகின்றன. இதற்கு தத்துவ நூற்களை ஞான இலக்கியங்களை நலமே போற்றவேண்டும், தக்காரைக் கொண்டு பாடங் கேட்டு மகிழ வேண்டும்.

இதுவும் இறைவனது திருவிளையாடல்களில் ஒன்றாக அறிந்து அந்த நடராசப் பெருமானின் கருணையை நினைத்து நினைத்து பரவசப் படுகின்றேன். இறையருள் துணை நிற்க இந்நூல் பலரால் படிக்கப்படும் பெருமையை அடையுமென்று உறுதியாகவும் நம்புகின்றேன்.

இந்த அழகிய ஞானக் கருவூலத்தை பல சிரமங்களுக்கு இடையே நல்ல உரையோடு வெளியிடும் ஞானவெட்டியான் அவர்களுக்கு எம்பெருமான் யாண்டு துணை நிற்பான்.

அதில் எந்தவொரு ஐயமும் இல்லை.

முனைவர் கி.லோகநாதன்
பினாங்கு, மலேசியா

10 Comments:

Anonymous said...

வாழ்த்துரை வழங்கியவர் எனது நண்பரின் நண்பர் திரு. குமார் யாவகம் ( அது என்ன யாவகம்) அழகாக அருமையான நடையில் கொடுத்துள்ளார். வாழ்த்துரை முகவுரையிலே முழுக்கதையும் தெரிந்து வடும் என்பர்.
//தமக்கு வந்த பிணிகளுக்கு//
என்ன பிணி எனக்குத்தெரியவில்லையே
இறைவன் அவரை ஆசீர்வதிப்பார்
தொடரட்டும் அவரது பணி
நனறி

Anonymous said...

யா மரங்கள் நிறைந்த தீவு யாவகத்தீவு என்னும் சாவகத்தீவு ஆகும்.

அதுதான் ஜாவா தீவு.

பிணிகள் அவருக்கல்ல. எனக்கு.

Anonymous said...

நன்றி சார் இதய தாகம் என்ன?

Anonymous said...

அன்பு என்னார்,

மன்னிக்கவும்.

//ஒரு சிறு இதயத் தாகம், சின்ன சாலை விபத்து, வலதுகை நரம்புத் தளர்ச்சி.
அவ்வளவுதான்.//

சிறிய கொத்துப்பிழை. அது இதயத் தாக்கம்(Heart Attack).

Anonymous said...

இறைவனை வணங்குகிறேன். எதற்கு என்று சொல்லவும் வேண்டுமா?

Anonymous said...

அன்பு குமரன்,

இறைவனை வணங்கக் காரணம் தேவையில்லை. எதையும் எதிர்பார்த்தும் வணங்குதல் கூடாது.

Anonymous said...

நன்றி பினாங்கு கி. உலகநாதன் அவர்களே
நண்பரின் பதிவுக்கு வாழ்துரை வழங்கியதற்கு.
ஞானம் அவர்களே எங்கே காப்பு செய்யுள்

Anonymous said...

நான் அக்காலத்தே ஓலைச்சுவடியிலிருந்து படியெடுத்து வைத்திருந்தேன். அதில் காப்புச் செய்யுள் இல்லை. தங்களிடமிருப்பின் அனுப்பித் தரவும்.

Anonymous said...

காப்பு செய்யுள் என்றால் ஒரு தொகுப்பு பதிவு தெடற் எழுதும் போது இறைவனை வணங்கி எழுத வேண்டியது தான்

Anonymous said...

காப்புச் செய்யுள் நான் எழுதவா?
எனக்கு பாட்டெழுதத் தெரியாது! தெரியாது!
மண்டபத்தில் யாரையாகிலும் பிடிக்கவேண்டியதுதான்.