பிரபுலிங்க லீலை
********************
நூலாசிரியரின் வரலாறு
**************************
தொண்டை நாட்டின் காஞ்சிபுரத்தில் வேளாளர்களின் ஞானகுருவாக விளங்கியவர் குமாரசாமி தேசிகர். இவர் ஆண்டுதோறும் தவறாது திருவண்ணாமலைக் கார்த்திகை தீபம் கண்டு தொழுதுவரும் தகையாளர். திருவண்ணாமலையார் திருவருளால், சிவப்பிரகாசர், வேலையர், கருணைப்பிரகாசர், ஞானாம்பிகை எனும் மக்கட்செல்வத்தைப் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்து வந்தார். மக்களின் கல்விப்பருவத்திலேயே, குமாரசாமி தேசிகர் இறையடி சேர்ந்தார்.
பின்னர், மூத்தவர் சிவப்பிரகாசர் தம் தம்பியரொடு திருவண்ணாமலையெய்தி, ஆங்கு தெற்கு வீதியிலுள்ள திருமடத்தில் எழுந்தருளியிருந்த குருதேவரைக் கண்டு வணங்கி அங்கேயே இருந்துகொண்டு தாம் கற்கவேண்டிய நூல்களைக்கற்று வந்தார். ஆங்கோர்நாள், திருவண்ணாமலையை வலம்வரும்பொழுது, இறையருளால் "சோணாசலமாலை" என்னும் நூலை நூறுபாக்களாக இயற்றிப்பாடி இறைவனை வணங்கினார்.
பின்னர், சிவப்பிரகாச அடிகளார் தமிழ்மொழியிலுள்ள இலக்கண இலக்கியங்கள் கற்பான்வேண்டி, தணியா வேட்கையுடன் வடநாட்டுக்குத் தன் தம்பியருடன் சென்று வாலிகண்டபுரத்துக்குத் தென்பாலுள்ள துறைமங்கலம் அடைந்து ஆங்கோர் நந்தவனத்தில் சிவவழிபாடு செய்யுங்காலை அவ்வூரினதிபதியும் கல்வி கேள்விகளில் சிறந்தவருமான அண்ணாமலை ரெட்டியார் அங்கு வந்து வணங்கி நின்றார்; அடிகளின் நல்லருள் பெற விழைந்தார். அடிகளை அங்கேயே தங்கியிருந்து அருட்பணிபுரிதல் வேண்டுமென இறைஞ்சியதால், அடிகளாரும் ஒப்பினார். அதன்பின், அண்ணாமலை ரெட்டியார், தம் குருவாகிய சென்னவசவையர் திருமடத்திற்கு மேற்றிசையில் ஒரு திருமடங்கட்டுவித்து, அதில் அடிகளை இருக்கச் செய்து தானும் அணுக்கத் தொண்டனாக அருகிருந்து அறிவுரைகள் பெற்று இரண்டரையாண்டு ஆநந்தித்திருந்தார். அதன்பின் அடிகளார் தென்னாடு செல்ல விழைந்து தம் கருத்தை அண்ணாமலை ரெட்டியாரிடம் அறிவித்துப் புறப்பட்டுத் த்¢ருநெல்வேலியை அடைந்தார்.
திருநெல்வேலியை அடைந்த அடிகளார், ஆங்கிருந்த சிந்துபூந்துறையில் தருமபுர ஆதீன வெள்ளியம்பலவாண சாமிகள் இலக்கண இலக்கிய நூற்புலமையில் வல்லுனரெனக் கேள்வியுற்று, அவரிடம் சென்று வணங்கி நின்று தாம், "இலக்கணங் கற்கவேண்டி வந்தோமென்றார்." அதற்கியைந்த குரு, சிவப்பிரகச அடிகளாரின் இலக்கியப் பயிற்ச்சியைச் சோதிக்க எண்ணி, "ஐயா! 'கு'விலாரம்பித்து, 'ஊருடையான்' என்பதை இடையிலமைத்து, 'கு'என்னும் எழுத்தில் முடியுமாறு இறைவனைப் புகழ்ந்து பாடுக" என்றார்.
உடனே அடிகளார்:
"குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்
முடக்கோடு முன்னமணி வாற்கு - வடக்கோடு
தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல்
ஊருடையான் என்னும் உலகு."
என்னும் வெண்பாவை இயற்றிப் பாடினார்.
பாநயமறிந்த குருபிரானும், அடிகளாரையும் அவர்தம் தம்பி வேலைய சாமிகளையும் அருகிருத்தி, இருவருக்கும் பதினைந்து தினங்களில் ஐந்து இலக்கணங்களையும் பாடம்சொல்லி அவர்களின் இலக்கணப் புலமையினை நிறைவுபெறச் செய்தார். அடிகளார் தனக்கு அண்ணாமலை ரெட்டியார் வழிச்செலவுக்காகத் தந்தனுப்பிய பொன்னில் 300 பொன்னைக் குரு காணிக்கையாகத் தர அதை மறுத்த குரு, "திருச்செந்தூரிலிருக்கும் ஒரு தமிழ்ப் புலவரை வென்று செருக்கழைத்து வாரும்; அதுவே குரு காணிக்கை" என்றார்.
கருத்தறிந்த சிவப்பிரகாச அடிகளார் திருச்செந்தூர் சென்று திருக்கோவில் வலம்வருங்கால், செருக்குற்ற புலவரைச் சந்த்தித்தார். சொற்போர் ஆரம்பித்தது. போட்டி என்ன? என்றதற்குத் திருச்செந்தூரார், "நாம் இருவரும் நிரோட்டக யகமம் (வாயிதழ் குவியா அடிமுதல் மடக்கு) பாட்டு முருகப் பெம்மானைப் போற்றிப் பாடவேண்டும்; முன்னர் பாடி முடித்தவற்கு, அ·தியலாதார் அடிமையாக வேண்டும்" என்றார். அடிகள் நிரோட்டக யமகவந்தாதியின் "கொற்ற வருணை" எனத் தொடங்கும் காப்புச் செய்யுளை முதற்கொண்டு "காயங்கலையநலி" என முற்றுப்பெறும் செய்யுளோடு, முப்பத்தியொரு கட்டளைக் கலித்துறைப் பாக்களை முதலில்பாடி முடித்தார். திருச்செந்தூராரோ, ஒரு பாடலைக்கூட முடிக்க இயலவில்லை. திருச்செந்தூராரை அடிமையாக்கித் தம் குரு, வெள்ளியம்பலத் தம்பிரானிடம் அவரை ஒப்புவித்தார். பின்னர் தம்பிரான், "தாங்கள் பாடிய செய்யுளில் சிவனுக்குகந்தது சிதம்பரமே எனக் குறிப்பாலுணர்த்தியதால், அத்தில்லையில் சில காலம் இருக்க" எனப் பணித்து விடை கொடுத்தார்.
அடிகளார் அவ்வாறே சிதம்பரத்தில் சிலகாலமிருந்து பின்னர் சிவதலங்களுக்குச் சென்று வணங்கிப் பின்னர் துறைமங்கலத்திற்குப் போய் அண்ணாமலை ரெட்டியாரின் அன்பு வேண்டுகோளுக்கிணங்கித் திருவெங்கைமாநகரில் தம்பொருட்டு அவரால் காட்டப்பட்ட திருமடத்தில் வாழ்ந்து, அந்நகரிலுள்ள பழமலைநாதரைப் போற்றி "திருவெங்கைக்கோவை" முதலிய நான்கு நூல்களை இயற்றித் தந்தார்.
பின்னர், அண்ணாமலை ரெட்டியார் "அடிகள் இல்லறம் மேற்கொள்ளவேண்டும்" என்று தம் உள்ளக் கிடக்கையைத் தெரிவிக்க அடிகள் உடனே,
"சேய்கொண்டா ருங்கமலச் செம்மலுட னேயரவப்
பாய்கொண்டா னும்பணியும் பட்டீச் சுரத்தானே
நோய்கொண்டா லுங்கொளலாம் நூறுவய தளவிருந்து
பேய்கொண்டா லுங்கொளலாம் பெண்கொள்ளல் ஆகாதே."
என்னும் பாவால் தம் இசைவின்மையை உணர்த்தினர். இதேபோல, அடிகளின் தம்பிகள் இருவரிடமும் ரெட்டியார் வினவ, அவர்கள் திருமணம் செய்துகொள்ள இயைந்தனர். இளவளிருவரின் இச்சையைப் புரிந்துகொண்ட அடிகள் இருவருக்கும் தக்கபடி திருமணம் செய்து வைத்தார்.
அதன்பின்னம், ரெட்டியாரோடு சிதம்பரம் சென்று, ஆங்கொரு திருமடம் கட்டுவித்து இறைவழிபாடு செய்துவந்தனர். அப்பொழுது, "தருக்க பரிபாஷை, சிவப்பிரகாச விலாசம், நால்வர் நான்மணிமாலை, சதமணிமாலை" ஆகிய நூல்களை இயற்றினார். பின் அங்கிருந்து கிளம்பி பல சிவத்தலங்களுக்கும் சென்று பின்னர் திருக்காட்டுப்பள்ளியை அடைந்தார். ஓர்நாள், தெருவில் ஒரு பெண் உப்பு விற்றதைக் கண்டார். தம் நுண்ணறிவால் அப்பெண் கல்வியறிவில் சிறந்தவளெனக்கண்டு அவளிடம்,
"நிறைய உளதோ வெளிதோ கொளுவோம்
பிறையை முடிக்கணிந்த பெம்மான் - உறையும்
திருக்காட்டுப் பள்ளி திரிபாவாய் நீயிங்
கிருக்காட்டுப் பள்ளி எமக்கு."
என வினவ அப்பெண்,
"தென்னோங்கு தில்லைச் சிவப்பிரகா சப்பெருமான்
பொன்னோங்கு சேவடியைப் போற்றினோம் - அன்னோன்
திருக்கூட்டம் அத்தனைக்கும் தெண்டனிட்டோம் தீராக்
கருக்கூட்டம் போக்கினோம் காண்."
என விடையிறுத்தாள்.
தெண்டனிட்ட பெண்ணுக்கு மெய்யுணர்வுண்டாக அருட் தீக்கை யளித்தார் அடிகளார்.
ரெட்டியாரொடு காஞ்சி செல்லும் வழியில் சாந்தலிங்க சுவாமிகளச் சந்தித்தார். சாந்தலிங்க சுவாமிகள் போரூர் செல்லும் காரணத்தை வினவ, அதற்கு அவர் சிவஞான பாலைய தேசிகரைத் தெரிசிக்கச் செல்வதாகக் கூறினார். பின்னர் இருவரும் போரூர் செல்லும் வழியில் புத்துப்பட்டு கிராமத்தில் தங்கி இருக்கும்போது, அடிகளாரை நோக்கி சாந்தலிங்க சுவாமிகள், சிவஞான பாலைய தேசிகரைப் புகழ்ந்து சில பாக்களை இயற்றவேண்டினார். அதற்கு அடிகளார், "யாம் மக்களைப் பாடுவதில்லை" என மறுத்தார். இரவு உறங்குங்பொழுது, முருகன் கனவில் தோன்றி ஒரு பாத்திரத்தில் விடுபூக்களை இட்டு, "இவற்றைத் தொடுத்து மாலையாக்கி எமக்கிடுவாயாக" எனக் கூறி மறைந்தார்.
உதயத்தில், சாந்தலிங சுவாமிகளிடம் கனவைக் கூறுகையில், "முருகன் உத்திரவு வந்துவிட்டது; பாடுங்கள்" என்றார். மறுக்கவியலாது, சிவஞான பாலைய தேசிகரின் பெருமையை, "நெஞ்சுவிடு தூது, தாலாட்டு" என்னும் நூல்களாக இயற்றிச் சிவஞான பாலைய தேசிகரின் முன் அரங்கேற்றினார். தேசிகரும் அடிகளாருக்கு உண்மையறிவைப் புகட்டினார். தேசிகனாரின் கட்டளைக்கிணங்கி சாந்தலிங சுவாமிகளுக்குத் தன் தங்கை ஞானாம்பிகையாரைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு, ரெட்டியாரைத் துறைமங்கலத்துக்குச் செல்லுமாறு பணித்துவிட்டுத் தான் சிவஞான பாலைய தேசிகருடன் தங்கிவிட்டார்.
சிலகாலம் கழித்து, சிவஞான பாலைய தேசிகரிடம் விடைபெற்று காஞ்சி சென்று இறைத்தொண்டு புரிந்திருந்தபோது, நிசகுணயோகி என்பவரால் கன்னட மொழியில் இயற்றப்பட்ட விவேக சிந்தாமணியின் ஒரு பாகமாகிய வேதாந்த பரிச்சேதத்திற்கு வேதாந்த சூடாமணி என்னும் பெயரிட்டுத் தனி நூலாகப் பாடினார். இரேணுகர் என்னும் கணத்தலைவரால் அகத்தியருக்கு அருளப்பட்ட சித்தாந்த சிகாமணியையும் பாடினார். அத்தருணத்தேதான் அல்லமதேவராகிய பிரபுதேவர் வரலாறான இப் பிரபுலிங்க லீலையும் இயற்றி அருளினார்.
சிவப்பிரகாச அடிகளார் இன்னும், திருப்பளியெழுச்சி, பிள்ளைத்தமிழ், திருக்கூவப் புராணம், பழமலையந்தாதி, பிட்சாடன நவமணிமாலை, கொச்சகக் கலிப்பா, பெரியநாயகியம்மை ஆசிரிய விருத்தம், பெரியநாயாகியம்மை கட்டளைக் கலித்துறை, நன்னெறி ஆகிய நூல்களை இயற்றினார். அப்பொழுது, சதுரகராதி தொகுத்த வீரமாமுனிவர் வாதுசெய்ய அடிகளை அழைத்தார். அவர்தம் கொள்கையை மறுத்து, ஏசுமத நிராகரணம் என்னும் நூலை இயற்றினார்.
இறுதியாக, நல்லாற்றூரையடைந்து, சிவநாம மகிமை, அபிசேகமாலை, நெடுங்கழிநெடில், குறுங்கழிநெடில், நிரஞ்சனமாலை, கைத்தலமாலை முதலிய நூல்களையும், சீகாளத்திப் புராணத்தில் கண்ணப்ப சருக்கம், நக்கீரர் சருக்கம் ஆகியவற்றையும் பாடி முடித்துத் தன் முப்பத்திரண்டாம் அகவையில் புரட்டாசிப் பவுர்ணமியில் இட்டலிங்கப் பரசிவத்தில் இரண்டறக் கலந்தருளினார். அவர் இயற்றியவற்றில் என்னிடமிருப்பது பிரபுலிங்க லீலையின் கைப்படி மட்டுமே. மற்ற நூல்கள் யாரிடமிருப்பினும் கொள்ள ஆவல்மிக.
"புனை யெழில் வடிவி நாளோர்
பொற்கொடி கண்ட மைந்தர்
மனமெனப் புலவர் நெஞ்சம்
மருளும்இன் தமிழ்ப்பா மாலை
சினவிடை யவர்க்கே சாத்தும்
சிவப்பிர காசன் என்னும்
முனைவன் எம்அடிகள் பாத
முளரிகள் சென்னி சேர்ப்பாம்."
குரு வாழ்க! குருவே துணை!!
Monday, December 31, 2007
பிரபுலிங்க லீலை - நூலாசிரியரின் வரலாறு
Posted by ஞானவெட்டியான் at 5:24 AM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment