Wednesday, December 26, 2007

ஆஞ்சநேயன் துதி

ஆஞ்சநேயன் துதி
********************
மிகச் சிவந்த முகமுடைய வானரன்
.....மேரு போன்ற எழிலுரு வாய்ந்தவன்
பகை யழித்திடும் வாயுவின் புத்திரன்
.....பாரிசாத மர நிழல் வாழ்பவன்
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்கிறேன்
.....ஆஞ்சநேயனை அஞ்சலி செய்கிறேன்.

அரக்கர் கூட்டம் அழித்து மகிழ்பவன்
......ஆளும் இராமனின் நாமம் கேட்டிடில்
சிரத்தின் மீதிவன் கூப்பிய கையுடன்
......திரண்ட கண்ணில் நீர்சோரத் துதிப்பவன்
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்யுமின்
......ஆஞ்சநேயனை அஞ்சலி செய்யுமின்

சித்த வேகமும் வாயுவின் வேகமும்
......சேர்ந்தவன் தன் புலன்களை வென்றவன்
புத்தி மிக்கவர் தம்முட் சிறந்தவன்
......புகழி ராமனின் தூதுவன் வாயுவின்
சேயன் வானர சேனையின் முக்கியன்
......சென்னி தாழ்த்தியச் செம்மலைப் போற்றுவேன்.

யாரும் செய்வதற் கேயரி தானதை
.....ஐயநீ செய்குவை ஏதுனக் கரியது?
பாரில் என்செயல் நீநிறை வேற்றிவை.
.....பரிவின் ஆழிநீ இராம தூதனே!
ஆஞ்சநேயனே! அஞ்சலி செய்கிறேன்!
.....ஆஞ்சநேயனே! அஞ்சலி செய்கிறேன்!

அறிவு மற்றும் உடல் வலி நற்புகழ்
.....ஆளும் சொற்றிறம், அச்சமிலா மனம்
வறிய புன்பிணி நீங்கிய மேநிலை
.....வளரும் தைரியம் மேவிடும் நிச்சயம்
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்திடின்
......அனுபவத் தினில் இவைபெற லாகுமே!

(ஆஞ்சநேயன் கோயிலில் கொடுத்த ஒரு அறிவிப்புத் தாளிலிருந்து எடுக்கப்பட்டது.)

7 Comments:

Anonymous said...

வானரன் > வால் + நரன் அதாவது வாலுடைய மனிதன் போன்ற விலங்கு என்பது தமிழ் பகுதி மற்றும் விகுதி, இதையே
வானர > வனம் + நர அதாவது வனத்தில் உள்ள மனிதன் என்பது வடமொழி பகுதி விகுதிகள். இதில் மிகச் சரியாக பொருந்தி போவது வால் எனும் பதமே, 'வா'- வை வனம் என்று கொண்டால் அது வனவாசி அல்லது காட்டுவாசி என்று மனிதனை மட்டுமே குறிக்குமே யன்றி குரங்கை குறிக்கும் சொல்லாகாது, ஆனால் வானரம் என்ற சொல்லில் குரங்கை காட்டுகிறார்கள் வடவர்.

வடவர் திரிப்பதில் வல்லவர் என்பதை இச்சொல் காட்டுகிறது.

Anonymous said...

ஐயா அனுமனை பற்றிய தமிழ் பாட்டு அளித்ததன் மூலம் நான் அனுமனை தமிழில் பாடி துதிக்க ஒரு வழி ஏற்படுத்தி குடுத்துள்ளீர்கள். நன்றி

வைணவ பெரியோர் யாராவது அனுமனை பற்றி தமிழில் எழுதியுள்ளார்களா?

Anonymous said...

கம்பன் பாடிய அனுமன் பாடல்கள்:

'அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத்தாவி,
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக, ஆர் உயிர் காக்க ஏகி,
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான், அவன் எம்மை அளித்துக் காப்பான்.'

'எவ் இடத்தும் இராமன் சரிதை ஆம்
அவ் இடத்திலும், அஞ்சலி அத்தனாய்,
பவ்வ மிக்க புகழ்த் திரு பாற்கடல்
தெய்வ தாசனைச் சிந்தை செய்வாம் அரோ.'

Anonymous said...

பெரிய ஞானி ஐயா,

ஆஞ்சநேயனை துதிக்ககூடாது என்றும் அதற்கு பதில் ராமநாமமே சொல்ல வேண்டும் அப்போதுதான் அவன் சந்தோஷப்படுவான் என்றும் பெரியவர்கள் சொல்ல கேள்விபட்டுள்ளேன்.ஆக நாம் ஆஞ்சநேயர் ஸ்துதி சொல்லுவது சரியா?

Anonymous said...

அன்பு செல்வன்,
அப்படித்தான் கூறுகிறார்கள்.
ஆயினும் இராமநாமம் கூறிவிட்டு ஆஞ்சநேய துதி செய்வதில் தவறேதும் இல்லை என்பது எம் கருத்து.
இராமனும் ஆஞ்சநேயனும் இறைதானே!

Anonymous said...

நன்றி S.K
இப்படி சொல்லி கேட்டிருக்கிறேன் / படித்திருக்கிறேன்.
இராமனின் உடனடி அருளை பெறவேண்டுமானல் இராமனிடம் வேண்டுவதை விட இராம பக்தனிடம் வேண்ட வேண்டுமாம், தன் பக்தனுக்கு இழி சொல் / பழி வர கூடாது என்பதற்காக தன் அடியார்களை விட தன் அடியாரின் அடியாரின் தேவைகளை இறைவன் நிறைவேற்றுவான், அனுமனை விட சிறந்த இராம பக்தன் யார்?

Anonymous said...

அன்பு கண்ணன், செல்வன், குறும்பன், sk,

மிக்க நன்றி