Wednesday, December 26, 2007

தாகி பிரபம் - 1


தாகி பிரபம்
*************

ஆக்கியோர்:

பெருமதிப்பிற்குரிய அஷ்ஷைகு ஜமாலிய்யா சையிது கலீல் அவ்ன் மெளலானா அல்
ஹசனிய்யுல் ஹாஷிமிய் - இலங்கை

இவ்வறிய கருவூலத்தைப் பற்றி அளிமிகு தம்பி. திரு.இம்தியாஸ் எனக்குத் தனி
மின்னஞ்சலில் முன்னர் எழுதியுள்ளார். அவர் எனக்கு அனுப்பியிருப்பதாகச்
சொல்லப்படும் நூல் என் கைக்குக் கிடைப்பதற்கு முன்னரே அந்நூல், எனக்கு
அறிவூட்ட, என்னைத் தேடி வந்தது இறையாணையோ? என் கொடுப்பினையோ? அறியேன்.
இவ்வரிய நூலைப்பற்றித் தம்பி. இம்தியாஸ், என் கருத்துக்களையும்
கேட்டிருந்தார். ஆனால், படிக்கும்பொழுது, ஒவ்வொரு சொல்லும் சொல்லும்
கருத்துக்களும், மனுவுக்கும் ஆண்டவனுக்கும் உள்ள உறவைப் பற்றியும்,
எப்படி இருந்தோம்? எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கப் போகிறோம்?
என்னும் வினாக்களுக்கு விடைகளும் பொதிந்து கிடக்கும் இந்நூலுக்குக்
கருத்துக் கூற எனக்கு அருகதையுள்ளதா? என எண்ணிப் பார்த்தேன்.

அப்படியே கூறினும் அது: "பாம்பைப் பார்த்து மண்புழுதானும் ஆடமுயன்றது"
போல்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

இருப்பினும்:

"கல்லாத மூடன் கவிதை மொழியறியேன்
சொல்லால் தொடங்குகிறேன்....."(தொழுகைநாமா)

"சிற்றடியானும் சொற்ற கவிகளின்
முற்றும் பிழை களிருந் திடினும்
கற்றவர்க ளிதை குற்ற மகற்றியே
பற்றுதலாகப் படிப்பீரே"(சுகிர்த மெய்ஞான சங்கீர்த்தனம்)

இக்கருவூலத்தை நான் மட்டிலும் அநுபவிக்க மனமில்லாமையாலும், பிரபம்
என்னும் ஞானத் தண்ணீர் வாய்க்கால் வழியோடி ஆங்கிருக்கும் புல்லுக்கும்
பொசிய வேண்டும் என்னும் தாளாத ஆசையாலும், பெரியவர்(இந்நூலாசிரியர்)
அவர்களிடமிருந்தும், தம்பி.இம்தியாஸிடமிருந்தும் முன் அநுமதி பெறாமல்
இதைத் இணைய தளத்தின் குழுக்களிலுள்ள நண்பர்களுடன் பங்கிட்டுக்
கொண்டமைக்கு அவர்கள் இருவரும் மன்னிப்பார்களாக.

"நம்மை மதிப்பதற்காக நாம் ஞானத்தை மக்களுக்கு கூறவில்லை" என்று
அடக்கத்தோடு ஆரம்பமாகும் இந்நூல் பல அரிய கருத்துக்களக் கூறுகிறது.

மார்க்கங்கள்(வழிகள்) நான்கு:

ஷரீஅத் - சரியை - தோல் - வித்து
தறீக்கத் - கிரியை - தசை - மரம்
ஹக்கீகத் - யோகம் - எலும்பு - பூ
ம்·றிபா - ஞானம் - மூளை - கனி
(முரீதுப் படலம் - 854)

ஞானம் என்றால் என்னவென அறிந்துகொள்ளத் துடிப்பவர்களுக்கும், சூபித்துவம்
என்றால் என்ன என்றறியத் துடிப்போர்க்கும் இந்நூலில் (ற)சூல்
விடையிறுக்கும்.

சூபித்துவம்:

"லா இன்ன வலா அன்த"

"நானுமில்லை;நீயுமில்லை;இருப்பது இறைவன் ஒருவனே."

இக்கருத்தை வலியுறுத்துகிறது இந்நூல்.

"தம்மைத் தாமே அறிவது பூரணத்துவம்."

அதற்கு வழி:

'மனதையொரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி
நினைவையொரு அம்பாக்கி நினைவேவ லெந்நாளோ"
(ஈரடி கொச்சகப் படலம் 451)

முகக்கண் மூடி அகக்கண் திறக்கக் குரு அவசியம்:

குருவின் முக்கியத்துவம்: பிசுமில் குறம்(பீர்முகமது அப்பா)

"வழியான குருவில்லாத வணக்கம் முழுதெல்லாம்
வையகத்தில் புருடனில்லாள் வாழ்ந்த சுகமொக்கும்
தெரியாத குருமாரின் திருமொழி கேட்பதுதான்
தெரிவையர்கள் குசறாவைச் சேர்ந்திருந்த துவமை
சரியான குருவில்லா வணக்கமுள தெல்லாம்
சாவலில்லாக் கோழி முட்டையிட்டது போலுவமை"

ஆகவே பெருமதிப்பிற்குரிய அஷ்ஷைகு ஜமாலிய்யா சையிது கலீல் அவ்ன் மெளலானா
அல் ஹசனிய்யுல் ஹாஷிமிய் அவர்களை (காணாதிருந்தும்) மானசீகக் குருவாக
ஏற்றுக்கொண்டு, அவர்களின் புனிதத் தாள் பணிந்து, இக்கருவூலத்தை
இணையத்தில் ஏற்றுகிறேன்.

"ஆரு மடிக்க வந்தால் அன்னைமுந்தி மீதில் மக்கள்
சேரு மதுபோற் புகுந்தேன் செய்யிதத்தே பாத்திமத்தே"

என்னும் ஞானத் தாலாட்டின் படி குருபிரான் அவர்கள் தாள் தஞ்சம் புகுந்தேன்.

குற்றங்குறை இருப்பின், எல்லோரும் என்னை சிறுபயலென நினந்து மன்னிக்க.

எல்லாம் படைத்தாளும் ஏகபெரியவனை எண்ணி மனதில் தொழுதுகொள்ளும்,

அன்புடன்,
ஞானவெட்டியான்
திண்டுக்கல்(தமிழகம்)
*********************

"மானுட உண்மையை அறிவதே ஞானத்தின் நோக்கம். மனிதனை மனிதனாக வாழவைப்பதே
ஷரியத். சாந்தியும் சமாதானமும் எங்கும் நிலவ, மனிதன் மனிதனாக, மனித நேயம்
பேணி வாழ்ந்து, மானுட உண்மையை அறியவேண்டும்" என்று கூறி அவைகளையே
தமது குறிக்கோளாக வைத்துள்ளார் ஞானாசிரியர்.

0 Comments: