Wednesday, December 26, 2007

தாகி பிரபம் - 9

தாகி பிரபம் - 9
***************
இறைவனை வருணித்தல்:

கடலுக்கும் எல்லையுண்டு. ஆயினும் உனக்கோ, உன் புகழுக்கோ எல்லையில்லை. உன் வருணிப்புக்கும் எல்லையில்லை. முடிவுமில்லை. எங்கும் நீ யாகிய பரிபூரணமே. எங்கு சென்றாலும், நீயாகிய பரிபூரணமே. பிரபஞ்சம் கூடாது, குறையாது. அதற்கு எல்லையில்லை. அது நிறைகோற்போல்(தராசு) சமமானது. திணையோ, பாலோ, எண்ணோ அற்றவன் நீ. இடத்தினுக்கு இடனானாய், காலத்திற்குக் காலமானாய். நீ
புகழுக்குப் புகழானவன். வருணிப்புக்கு வருணிப்பானவன். மதிப்புக்கு
மதிப்பானவன். உன்னை எவன் புகழ்ந்தாலும், அப்புகழுக்கு எல்லையுண்டு. ஆனால், உன் புகழுக்கோ எல்லையில்லை. வருணிப்புக்கும் அவ்வாறே, மதிப்புக்கும் அவ்வாறே. நீ தேவையற்றவன். உனக்கு எதுவும் தேவையே இல்லை. அதனால் உனக்கு எந்த நன்மையுமில்லை. நான் உன்னைப் புகழும் புகழ்ச்சிகளும், மதிக்கும் மதிப்புகளும், வருணிக்கும் பண்புகளும், என்னையே வந்தடைகின்றன. அதுவே, யான் பெறும் நன்மைகள். உன்னை நான் இழிவு படுத்தினால் அதுவும் என்னையே வந்தடையும். உன்னை அறிந்தவன் உன்னை மதித்தால் தானே அந்த மதிப்பு சிறப்புடையது ஆகும். அறியாதவன் உன்னை எப்படி மதிப்பான்? அதில் உண்மை இல்லையே? அவர்கள் வணங்கும் வணக்கமும் வணக்கமல்ல. துதிக்கும் துதியும் துதியல்ல.

நான் இப்படியே பரிபூரணமாய் இருப்பதோடு என்னை வெளிக் கொணரவும் விரும்பினேன். அப்போது பரிபூரணம் சலனமடையத் தொடங்கிற்று. சலனம் தோன்றவிருக்கும் நிலை. அஃது யானென்னும் நிலையிலிருந்து, நாமாகத் தோன்ற இருந்த ஆரம்ப நிலை. நானெனக் கூறும் இறை வெளித்தோன்ற நினைத்ததாலேதான் நாம் வெளிவந்தோம். நாம் வராவிட்டால் உம்மை எப்படி அறிந்துகொள்ள முடியும்.

அப்போது, சிறிது சிறிதாய், முழுமை பிரியத் தொடங்கிற்று. நான் மிக
நுணுக்கமாய்ப் பிரிந்தேன். நுண்ணணுக்கள் ஆனேன். அப்படிப் பிரிந்த
என்னிலிருந்தே, ஐம்பூதங்களும் பிரிந்தன. இதுவே, தான் நானாயிருந்த, நான் நாமானவாறு. இதுவே, ஆரம்பம் முடிவற்ற, எதற்குமிணையற்ற, முழு சத்தியமான, பரிபூரணமான, பிரபஞ்சம் எனவும் கூறலாம். அப்படியாயின் இறையிலிருந்து நாம் வெளியாகாமலிருந்தால் இந்தத் தோற்றமும் பார்வையும் இருந்திருக்கா என்பது உண்மைதானே. என்னில் உன்னை நான் பார்க்கிறேன். நீ உன்னில் என்னைப் பார்க்கிறாய். இதிற்றான் நான், நீ என்னும் பிரிந்த பார்வை வந்தது. அதில் நான், நீ எனப்பாராமலும் முழுமையாகக் காண்பதே முழுமையாகும். நான் நீயாகவும், நீ நானாகவும், பிரிவு இன்றி எப்போதும் என்னில் உன்னையும், உன்னில் என்னையும், பார்த்துக் கொண்டிருப்பதே உண்மையான முழுத் தோற்றமாகும். இப்போதும், எப்போதும், யான் உன்னிலிருந்து வெளியான போதும் எல்லாத் தோற்றமும் ஒன்றே எனக்கொண்டு பரிபூரணத்தில், கடலில் அலை கலப்பது போலக் கலந்து, இலயித்து, நிலைத்து, நிற்பதிலே இன்பம் கண்டிருப்பின்,
வெளியாகாதிருப்பினும், வெளித்தோன்றி இருப்பினும், இரண்டும் பிரம - இரண்டறக்கலந்த சூனிய அமாவான, அந்தகமான, தத்துவ மசி நிலையாகும்.

ஒன்று மற்றொன்றுடன் சேருவது சங்கற்பம். சேராதது விகற்பம். இப்படி,
இரண்டும் அற்ற, 96 தத்துவங்களையும் கடந்த தயாபரனின் கடலாகியதும், நித்திலம் எனும் முத்து (புத்தியில் தெளிவு பெறும் சிறந்த கருத்தான முத்துக்கள்) விளையும் கடலாகவும், நீ வேறு - நான் வேறு என்ற வேற்றுமை நீங்கிய, அழியாத கடலாகவும் உள்ளது நித்தியம். ஆத்துமக் கடல் என்பது எத்து எனும் உபாயங்களின் அறிவால் எட்டப்படுகின்ற அறிவாகும். இது இரண்டற்றது - ஒன்றேயானது - இதை வேதங்கள் அத்துவிதம் என மொழிகின்றன. இந்த இரண்டற்றதுதான் துணையாக நிற்கின்றது.

சூனியமாய் எப்படியிருந்தோமோ, அப்படியே இப்போதுமிருக்கிறோம் எனும் நிலை கொள்ளல் வேண்டும். அதுவே சாலச் சிறந்தது.

பற்றிக்கொள்ளும் பற்றில் உலகு எங்கும் பரந்து, விரிந்து, பற்றிக்
கொள்ளாத் தத்துவத்தில் பற்றாது இருந்து ஓங்கி, இப்படிப் பற்றியும்,
பற்றாமலும் இருக்கும் பற்றற்ற இடத்தில் திடமாக இருத்தல் நன்று என்பாம்.

இறைவா, நீ வெளியானமையால் நாம் அளவுகடந்த நன்மை பெற்றோம். ஊமை போலிருந்த நாம், வெளிப்படையாகப் பேசத் தொடுத்தோம். பார்வையற்றவர்கள் போலிருந்த நாம் வெளிப்படையாய்ப் பார்க்கத் தொடுத்தோம். மறைந்திருந்த செயல்களெல்லாம் வெளிப்படத் தொடங்கின. பொது வாகவிருந்த நாம் தனித்துச் செயற் படத்தலைப்பட்டோம். கடல் நீர்போன்றிருந்த நாம் உப்பாகி உபயோகமானோம். வித்தாகியிருந்த நாம் ஆல் போல் விரிந்து உபயோகமானோம். மொட்டா யிருந்த நாம், பூவாகி எழில் தோற்றம் கொண்டோம். வெற்று நிலமாகவிருந்த நாம், பூங்காவானோம். வண்ணத்தோற்றம் கண்டோம். இன்புற்றோம். தங்கத் தகடன்ன
விண்தோன்றும் கதிரவனைக் கண்டோம். வெள்ளித் தட்டென விண் மிதக்கும் வண்ணத் தகடான வெண்மதியைக் கண்டோம். விண்ணில் விரித்த நீல நிறப் பந்தலெனத்திகழும் நீல வானில் முத்தங்கள் பதிக்கப்பட்டு மின்னிலங்கும் விண்மீன்களில் வண்ண அழகினைக் கண்டோம். பல நிறங்கள் தோன்றிச் செக்கர் வானின் இயற்கையென்னும் கைவண்ணம் விளையாடும் திருவிளையாடலைக் கண்டோம். கடலைக் கண்டோம். மலையைக் கண்டோம். விளையக் கண்டோம். பச்சைப் பரமதாணி விரிக்கப்பட்டதென்னத் தோன்றும் பசும் புற்றரையின் எழிலையும், வயல் நிலங்களின் வண்ண வடிவங்களையும் கண்ணுற்றோம். கண் குளிர்ந்தோம். பயனடைந்தோம். நாமும் நம்மை அறிந்தோம். இவ்வள(வு) மகா சக்தி நம்மில் மறைந்திருந்ததை உணர்ந்தோம். நீயும் நானும் ஒன்றேயெனும் நித்திய நிலை எய்தினோம். பெறும் பேறு பெற்றோம். இதுவே வெளியானதன் நன்மை எனக்கண்டு உனக்கு சாட்டாங்கம் செய்தோம். நிலை மாறாத இதே நிலையை எமக்கு என்றென்றும் தந்தருள் பாலிப்பாயாக எனப்பிரார்த்தித்தோம். யாதும் ஊரே யாவருங்கேளிர் எனும்
ஒற்றுமையும், எல்லாம் ஒன்றே எனும் ஒருமைத்துவமும், வேற்றுமையற்ற
மனிதநேயமும், என்றென்றும் எங்கணும் மிளிர்க. ஞான மார்க்கம் எங்கணும் பரவ, மானிடவினம் ஒன்றேயென ஞாலமெல்லாம் பறைசாற்றி சங்கநாதம் பரப்புவோம். ஞாலமெல்லாம், ஞான ஒளி பரவி, இன வேற்றுமைகளும் பகையும் பொறாமையும், பொய்யும் வேரறுந்து போகத் துணை புரிவோம்.

0 Comments: