Wednesday, December 26, 2007

தாகி பிரபம் - 10

தாகி பிரபம் - 10
****************
நாட்டுப் புறத்தில் ஒரு வாக்கியமுண்டு:

"என்னதான் தலைகீழாக நின்றாலும் இக்காரியத்தை முடிக்க முடியாது" என்று கூறுவர்.

இதன் பொருள் என்ன என சிந்தித்திருப்போமா? சிந்திக்காவிடில், இப்பொழுது சிந்திப்போம். இப்பொழுதுமில்லையெனில் நாம் மனுவே இல்லை. ஏனெனில், மனுவுக்குத்தான் சிந்திக்கும் ஆற்றலை இறைவன் தந்திருக்கிறான்.

தலைகீழாக நின்றால் மட்டும் காரியம் முடிந்துவிடுமா? முடியாது.
உட்பொருளைச் சிந்திப்போம். இயற்கையின் இன்னொரு பெயர் இறைவன்.

"என்னதான் இயற்கையொடு ஒன்றினாலும் முடிக்க முடியாது" என்பது பொருள்.

நாம், மேலிருக்கும் வாய்வழி உண்ணுகிறோம். ஆனால், இயற்கையாகிய மரம், செடி முதலியவை கீழிருக்கும் வேர்மூலம் உண்ணுகின்றன.

ஆக, நாம் இயற்கையொடு ஒன்ற, தலைகீழாக மாறவேண்டும். எப்படியெனில், எதை எல்லாம் புறத்தே செய்கிறோமோ அதையெல்லாம் அகத்தே செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, வெளிமூச்சுக்குப் பதில், உள்மூச்சு வாங்க வேண்டும்.

இதே பிரகாரம், நம் தாகி பிரபத்தையணுக:

பரிபூரணத்தில் இருந்தேன். சலனமடைந்து, பரிபூரணத்திலிருந்து, துகள் துகளாய்ப் பிரிந்து வந்தேன். தந்தையின் விந்தால் தாயின் கருப்பத்தில் உதித்துப் பத்து மாதம் கழித்துப் பிரபஞ்சத்தில் விழுந்தேன். அதுவரை, பரிபூரணத்தில் பூரணமாய்க் கலந்திருந்தேன். பின்னர், வளர வளர கதை தலைகீழாயிற்று. பரிபூரணனை மறந்தேன்; இல்லை மறக்கவில்லை; மற்ற இகபர இச்சைகள் முதலியவைக்கு முன்னிடம் கொடுத்தேன். ஆக இறைவனை மறந்தேன். மறு
சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. அப்பொழுதாவது திருந்தவேண்டுமே. அதற்கு வழி என்ன? சிந்தித்தேன். நாம் தலைகீழாக மாறவேண்டும். வழி என்ன? நாம் எந்த நிலையிலிருந்து இந்நிலைக்கு வந்தோமோ? அந்நிலைக்குத் திரும்பவேண்டும். அது என்ன நிலை? அதுதான் தாயின் கருப்பத்தில் வசித்தபோது இருந்த நிலை. அப்போது எப்படி இருந்தோம்?

பசியில்லை.
தூக்கமில்லாத் தூக்கம்.
வியர்வை இல்லை.
(அசைவ) உணவில்லை.
மலங்கள் கழிப்பதில்லை.
வெதுவெதுப்பான இளஞ்சூட்டு வெப்பநிலை.
மனத்தில் எண்ணமில்லை;
கருத்தில் சலனமில்லை;
நினைவிலும் சலனமில்லை;
சர்வமும் சூனியம்.
சூனியத்திலும் கன்சூல் மகபியாவெனும் இருள்.

அதற்குள்தானே இறையுள்ளது.
அங்கேயே நாட்டம்.
இதுபோல் இன்னும் பல.

ஆக, இந்நிலைக்கு வர நாம் என்ன செய்யவேண்டும்? என்று சிந்தித்தல் வேண்டும்.

இந்த எண்ண அலைகளைத் தூண்டவே இத் "தாகி பிரபம்"
இது நான் உணர்ந்தவரை.

ஞானம் வாழ்க! வளர்க! மிளிர்க!

2 Comments:

Anonymous said...

// எதை எல்லாம் புறத்தே செய்கிறோமோ அதையெல்லாம் அகத்தே செய்ய வேண்டும். //

அய்யா,

அருமையான விளக்கம்.

மிக்க நன்றி

Anonymous said...

அன்பு சிவபாலன்,
மிக்க நன்றி.