தாகி பிரபம் - 8
***************
இந்நூல் கூறும் கருத்துக்கள்:
இந்நூலில் செயலற்ற சொல் எதுவும் இல்லை. ஒவ்வொரு சொல்லையும் விரிக்கின் ஒவ்வொரு பக்கம் எழுதலாம். இடம், காலம் கருதி முக்கியமான சூக்குமக் கருத்தை மட்டும் விளக்கியுள்ளோம்.
இறைவா, நீ, சூக்குமமாய் மறைந்து இருந்தபோது நான் உன்னுடன்
கலந்திருந்தேன். அப்போது, என்னை யான் கண்டேன். உன்னில் என்னைக் கண்டேன். என்னில் உன்னைக் கண்டேன். உன்னில் யான் பனிக்கட்டி கரைந்து நீரில் கலப்பதுபோல் இடைவெளி யின்றிக் கலந்திருந்தேன். அப்போது நானோ ஏகாந்த நிலையிலிருந்தேன்.
ஏகாந்தம்:
நானேயல்லாது பிறிதொன்றையும் காணாது நானே என்னில் என்னைக் கண்ட நிலை. மற்றும் உன்னில் நான் அழிந்து உன்னில் நானாய்ப் பிறிதொன்றிலாதாகி உன்னிலே என்னை நீயாக இரண்டறக் கண்ட நிலை.
யான் சலனமற்ற நிலையில் பரிபூரண ஆதி நிலையான சூனிய நிலையிலிருந்தேன். அப்போது பார்வையிருந்தது; கேட்கும் நிலையிருந்தது; சுவாசிக்க முடிந்தது; உருசிக்க முடிந்தது; உணர முடிந்தது; பரிபூரணமும் கண்ணாயும், செவியாகவும், நாசியாகவும், வாயாகவும், ஆக்கையாகவும் இருந்தது;
பரிபூரணத்தில் பரிபூரணமாய் நின்று பரிபூரணத்தைப் பரிபூரணத்தால்
பரிபூரணமாய்ப் பார்த்தேன்; கேட்டேன்; சுவாசித்தேன்; உருசித்தேன்;
உணர்ந்தேன்;
பூரணம் என்பது உட்பொருளுக்கு உட்பொருளாம்.
நானே பரிபூரணமானபோது பரிபூரணமான எனக்கு நானே ஆரம்பமும் முடிவுமானேன்.
நான் எனும் பரிபூரணத்திற்கு உள்ளும் புறமுமிருந்தன; திக்குத்
திசைகளிருந்தன; மேல், கீழ், உயரம், பள்ளம் எல்லாமிருந்தன; பரிபூரணம் தானே பரிபூரணத்திற்கு உள்ளூம் புறமும், திக்கு திசைகளும், மேல், கீழ், உயரம், பள்ளம் எல்லாம்;
நானாகிய பரிபூரணம் அளவிட முடியாதது; நிறையிட முடியாதது. பூரணத்திற்குப் பூரணமே அளவு. அதற்கு அதே மட்டு. அதற்கு அதுவே நிறை. கால எல்லை இல்லாதது. முடிவில்லாதது;
பரிபூரண நிலை, நான் இறைவனாகவே நிலை பெற்றிருக்கும் நிலை. அந்த நிலையில், எனக்கும் இறைவனுக்கும் இடையே வித்தியாசங்களும் வேறுபாடுகளுமில்லை.
வானம், பூமி, சூரியன், சந்திரன் முதலியனவையெல்லாம் பூரணமாய்
இறைவனிடமிருந்துதான் வெளியாயின.
இறைவனாகவேயிருந்து, இறைவனிலிருந்து வெளியானவை சிருட்டிகள். சிருட்டிக்குப்பின்னும், இறை முன்னிருந்தது போன்றே இப்போதுமிருக்கும். இறைவனிருந்து, இறையம்சமில்லாத வேறு பொருட்களைச் சிருட்டிக்கின், இறைக்கும் அப்பொருளுக்கு வேறுபாடு உண்டு. அதுதான் இணையென்பது.
இறையிலிருந்தே வெளியான மனித இனம், இறையை மறந்து விட்டது உண்மைதான். வெளியாகும்வரை நானும், இறையும் வேறில்லை. ஒன்றேயென்று கூறிக்கொண்டிருந்த மனித இனமெல்லாம், இப்போது இறையார்? நான்யார்? இறையும் நானும் ஒன்றல்லவே எனக்கூறிக் கொண்டிருக்கின்றன. தாய் தந்தையரை அறியா, தாய் தந்தையர் இல்லா மக்களைப் போன்றுதான் இவர்கள் உள்ளனர்.
மனித இனமல்லாத மற்ற இனங்கள் இறையிடத்தே இறையாகி, இறைக்குள் இருந்து, வணக்கம் செலுத்திக் கொண்டு இருக்கின்றன.
அவை சிருட்டி என அறியாமல் முன்னிருந்த நிலையிலேயே உள்ளன. இறையிலிருந்து இறையாகவே அவை வெளியாகியும், அவை வெளியாகிய தன்மையை அறியவில்லை. அவற்றிற்கு புத்தியில்லையே! (மனிதனைப் போன்று) சிந்தனையுமில்லையே! அதற்கு நல்லது, கெட்டதும் தெரியவில்லையே! இது கூடும், இது கூடாது என்பனவும்
தெரியவில்லையே. அவற்றிற்கு விதிவிலக்குகளும் இல்லையே. கையால் அவைகளின் வணக்கம் தாமே தம்மையறியாத அவையே இறையான நிலையில் வணக்கம் செலுத்துகின்றன.
மனித இனத்தைப் பற்றி :
குழந்தை பிறந்தபோது அது பூரணத்திலிருந்து (இறையிலிருந்து)
பிரிவுபட்டிருந்த போதும் அது தன் தாற்பரியத்தில் இறையாகவே யிருந்தது. அதற்குச் சிந்தனையிருக்கவில்லை. எந்தப் பொறுப்புமிருக்கவில்லை. தெய்வீகக் கடாட்சம் அதற்கு இருந்தது. அது இறையிலிருந்து வெளியான போதும் அது வெளியான சம்பவம் அதற்குத் தெரியவில்லை. அதற்கு எந்தவகையான விதிவிலக்குகளும் இருக்கவில்லை. இறையில் இறையாகவே இருந்த குழந்தை சிறிது சிறிதாய் வளர்ந்து ஐம்புலன்களும் வினைபுரியத் தொடங்கியபோது பிள்ளை அன்றாட அநுபவங்களைப் பெறவும், நான் நீ எனும் வேற்றுமையை அறியவும் தொடங்கிற்று. தான் வந்த வழியை முற்றும் மறந்திடவாயிற்று. விதிவிலக்குகளும் உண்டாயின. அது மனிதனாயது. தன் முன்னைய நிலையை மறந்து நான் வேறு, இறை வேறு எனும்
பிரிவாகிய இணைவைப்பை அவன் உண்டாக்கிக் கொண்டான். தான் மனம் போன போக்கில் போகவும், அழிவு வேலைகள் செய்யவும், உண்மைக்கு மாறாக நடக்கவும், மானிட நேயம், ஐக்கியம், இரக்கம் முதலானவைகளை உதறித் தள்ளிவிடவும் முற்பட்டு மறமாந்தனாய் மாறிவிட்டான். இறையிலிருந்து வேறுபட்டுவிட்டான். இதனால், தன்னை மறந்த குற்றவாளியாக மாறினான். தன்னை மறந்துவிடாது, தன்னையறிந்து வாழப்படைக்கப்பட்ட மனிதன், இந்நிலை அடைந்தமையால், தான் வந்த பாதையை மறுபடியும் நினைவுகூற ஏவப்பட்டான். தான் வந்த பாதையை நினைவு கூர்ந்தவன், பூரண மனிதனானான். இதை மறுத்தவன் மறுப்பாளனானான்.(காபிரானான்)
இறைவனிடமிருந்து எவ்வாறு மாற்றமடைந்து வந்தானோ அந்தப் பாதைதான் வந்த பாதை.
மனிதன், தன்னை யெப்படி அறிதல் வேண்டும்?
மனிதன் தன்னைப்பற்றிச் சிறிதேனும் சிந்திக்கவேண்டும். தான் வயோதிகன் ஆனமையும் அதற்கு முன்னிருந்த குழந்தைப் பருவம் பற்றியும் சிந்தித்தல் வேண்டும். மனிதனின் முன் நிலை, சிசுவாகத் தன் தாயின் கருவறையிலிருந்தது. அதற்கு முன் தாயின் கற்பவறையில் சிறு கருவாய்த் தங்கிற்று. இஃது தாயினதும், தந்தையினதும் சத்துப் பொருளில் இருந்து உண்டாயது. இவைகளை இவர்களைச் சூழ்ந்துள்ள பொருள்களிலிருந்து பெற்றுக் கொண்டனர். பஞ்ச பூதங்களிலிருந்து வெளியான அவை தாவரப் பொருள்களும், மிருக இனங்களும், மீன் வகைகளும், பட்சி இனங்களும், தட்ப வெப்பங்களும், காற்று முதலான மற்றுமுள்ளவைகளும். தாயினதும் தந்தையினதும் முதுகந்தண்டிலிருந்தது. தாயும் தந்தையும் கூடினமையால் இவ்வாறு உண்டாயது.
வானின்றிழிந்த பஞ்ச பூதங்களெல்லாம் இயற்கை. இயற்கைப் பொருள்களை ஒன்று கூட்டி இயற்றியவைகளே செயற்கை. செயற்கையும் இயற்கைதான். பஞ்ச பூதங்களெல்லாம், பரந்து விரிந்து நிறைந்து தன்னை வெளிப்படுத்தும் நிலையிலிருந்து வந்தவை. இதற்குமுன் இஃது, அகண்டகாரமாய்ப் பரிபூரணமாய் விரிந்து நிறைந்து தனக்குத் தானே காட்சியாய் மற்றவை என இல்லாததாய் மறைந்தும் மறையாததாய் அசையாததாய் துணை இல்லாததாய் தனித்துவமாய் ஒன்றாய் இடைவெளி இல்லாமல் எங்குமாய்ப் பேதமின்றிப் பிரிவின்றிக் கலந்து உறைந்த ஒன்றிலிருந்தே வெளியானது. இதற்கு முன்னும் இதுவேதான் இருந்தது. வேறொன்றும் இருக்கவில்லை. இல்லை, இல்லை, இல்லையே. இதுவே நித்தியம். இதுவே சத்தியம்.
நித்திய சத்தியமென்பது, என்றும் நிலைத்து நிற்பது. அதற்கு அன்றும்,
இன்றும், என்றுமே அழிவும் இல்லை. மாற்றமும் இல்லை, குறைவதும் இல்லை, கூடுவதும் இல்லை. எல்லாம் பரி பூரணம்.
ஒன்று என்பது, அதற்குப் பதிலாக அல்லது அதுபோன்ற அல்லது அதுபோன்ற எத்தனையோ இல்லாத, பிறக்காத, பிறப்பிக்காத, அனைத்துமே ஒன்றிலான, அனைத்துமே ஒன்றான அந்த ஒன்றே.
Wednesday, December 26, 2007
தாகி பிரபம் - 8
Posted by ஞானவெட்டியான் at 11:39 AM
Labels: தாகி பிரபம்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment