தாகி பிரபம் - 7
***************
இறை கேட்டது: இதனை வேறு என்னவெனக் கூறலாம்?
யான் விடுத்தது : இறைவா, இதனை, ஆரம்பம் முடிவற்ற, எதற்குமிணையற்ற, முழுச்சத்தியமான, பரிபூரணமான, பிரபஞ்சம் எனவும் கூறலாம்.
இறை கேட்டது: அப்படியாயின் என்னிலிருந்து நீர் வெளியாகாமல் இருந்தால் இந்தத் தோற்றமும் பார்வையும் இருந்திருக்கா என்பது உண்மையென்கிறீரா?
யான் விடுத்தது : இறைவா, ஆம். உண்மைதானே. என்னில் உன்னை நான் பார்க்கிறேன். நீ உன்னில் என்னைப் பார்க்கிறாய். இதிற்றான் நான், நீ என்னும் பிரிந்த பார்வை வந்தது. அதில் நான், நீ எனப்பாராமலும் முழுமையாகக் காண்பதே முழுமையாகும். நான் நீயாகவும், நீ நானாகவும், பிரிவின்றி எப்போதும் என்னில் உன்னையும், உன்னில் என்னையும், பார்த்துக் கொண்டிருப்பதே உண்மையான முழுத் தோற்றமாகும். இப்போதும், எப்போதும், யான் உன்னிலிருந்து வெளியான போதும் எல்லாத் தோற்றமும் ஒன்றேயெனக்கொண்டு பரிபூரணத்தில், கடலில் அலை கலப்பது போலக் கலந்து, இலயித்து, நிலைத்து, நிற்பதிலே இன்பம் கண்டிருப்பின், வெளியாகாதிருப்பினும், வெளித்தோன்றியிருப்பினும், இரண்டும் பிரம - இரண்டறக்கலந்த சூனிய அமாவான, அந்தகமான, தத்துவ மசி நிலையாகும். சூனியமாய் எப்படியிருந்தோமோ, அப்படியே இப்போதுமிருக்கிறோம் எனும் நிலை கொள்ளல் வேண்டும். அதுவே சாலச் சிறந்தது.
இறை கேட்டது: நான் ஏன் வெளிப்பட விருபினேன்?
யான் விடுத்தது : இறைவா, நீ வெளியானமையால் நாம் அளவுகடந்த நன்மை பெற்றோம். ஊமை போலிருந்த நாம், வெளிப்படையாகப் பேசத் தொடுத்தோம். பார்வையற்றவர்கள் போலிருந்த நாம் வெளிப்படையாய்ப் பார்க்கத் தொடுத்தோம். மறைந்திருந்த செயல்களெல்லாம் வெளிப்படத் தொடங்கின. பொது வாகவிருந்த நாம் தனித்துச் செயற் படத் தலைப்பட்டோம். கடல் நீர்போன்றிருந்த நாம் உப்பாகி உபயோகமானோம். வித்தாகியிருந்த நாம் ஆல் போல் விரிந்து உபயோகமானோம். மொட்டா யிருந்த நாம், பூவாகி எழிற்றோற்றங் கொண்டோம். வெற்று நிலமாகவிருந்த நாம், பூங்காவானோம். வண்ணத்தோற்றங் கண்டோம். இன்புற்றோம். தங்கத் தகடன்ன
விண்தோன்றும் கதிரவனைக் கண்டோம். வெள்ளித்தட்டென விண் மிதக்கும் வண்ணத்தகடான வெண்மதியைக் கண்டோம். விண்ணில் விரித்த நீல நிறப்பந்தரெனத்திகழும் நீல வானில் முத்தங்கள் பதிக்கப்பட்டு மின்னிலங்கும் விண்மீன்களில் வண்ணவழகினைக் கண்டோம். பன்னிறங்கள் தோன்றிச் செக்கர் வானின் இயற்கை என்னும் கைவண்ணம் விளையாடும் திருவிளையாடலைக் கண்டோம். கடலைக் கண்டோம். மலையைக் கண்டோம். விளையக் கண்டோம். பச்சைப் பரமதாணி விரிக்கப்பட்ட தென்னத் தோன்றும் பசும் புற்றரையின் எழிலையும், வயனிலங்களின் வண்ண வடிவங்களையும் கண்ணுற்றோம். கண் குளிர்ந்தோம். பயனடைந்தோம். நாமும் நம்மையறிந்தோம். இவ்வள(வு) மகா சக்தி நம்மில் மறைந்திருந்ததை உணர்ந்தோம். நீயும் நானும் ஒன்றேயெனும் நித்திய நிலை யெய்தினோம். பெறும் பேறு பெற்றோம். இதுவே வெளியானதன் நன்மையெனக்கண்டு உனக்கு சாட்டாங்கம் செய்தோம். நிலை மாறாத இதே நிலையை எமக்கென்றென்றும் தந்தருள் பாலிப்பாயாக எனப்பிரார்த்தித்தோம். யாவும் ஊரே யாவருங்கேளிர் எனும் ஒற்றுமையும், எல்லாம் ஒன்றே எனும் ஒருமைத்துவமும், வேற்றுமையற்ற மனிதநேயமும், என்றென்றும் எங்கணும் மிளிர்க. ஞான மார்க்கம் எங்கணும் பரவ, மானிடவினம் ஒன்றேன ஞாலமெல்லாம் பறைசாற்றி சங்கநாதம் பரப்புவோம். ஞாலமெல்லாம், ஞான ஒளி பரவி , இன வேற்றுமைகளும் பகையும் பொறாமையும், பொய்யும் வேரறுந்து போகத் துணை புரிவோம்.
ஞானம் வாழ்க! வளர்க! மிளிர்க!
(முற்றும்)
Wednesday, December 26, 2007
தாகி பிரபம் - 7
Posted by ஞானவெட்டியான் at 11:39 AM
Labels: தாகி பிரபம்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment