தாகி பிரபம் - 6
***************
இறை கேட்டது: இப்பஞ்ச பூதங்களெல்லாம் எங்கிருந்து வந்தவை?
யான் விடுத்தது : இறைவா, இவையெல்லாம் வானின்றிழிந்தவைகளே.
இறை கேட்டது: அப்படியாயின் என்ன?
யான் விடுத்தது : இறைவா, பரந்து விரிந்து நிறைந்து தன்னை வெளிப்படுத்தும் நிலையிலிருந்த அதிலிருந்து வந்தவை. இஃதுமியற்கையே.
இறை கேட்டது: இதற்குமுன் இஃது எங்கிருந்தது?
யான் விடுத்தது : இறைவா, அகண்டகாரமாய்ப் பரிபூரணமாய் விரிந்து நிறைந்து தனக்குத் தானே காட்சியாய் மற்றவை யெனவில்லாததாய் மறைந்தும் மறையாததாய் அசையாததாய் துணையில்லாததாய் தனித்துவமாய் ஒன்றாய் இடைவெளியற்று யாங்குமாய்ப் பேதமின்றிப் பிரிவின்றிக் கலந்துறைந்த ஒன்றிலிருந்தே வெளியாயது.
இறை கேட்டது: இதற்குமுன் எது இருந்தது?
யான் விடுத்தது : இறைவா, இதற்கு முன்னும் இதுவேதான் இருந்தது. வேறொன்றுமிருக்கவில்லை. இல்லை, இல்லை, இல்லையே. இதுவே நித்தியம். இதுவே சத்தியம்.
இறை கேட்டது: நித்திய சத்தியமென்பதென்ன?
யான் விடுத்தது : இறைவா, அது என்றும் நிலைத்து நிற்பது. அதற்கு அன்றும், இன்றும், என்றுமே அழிவுமில்லை. மாற்றமுமில்லை, குறைவதுமில்லை, கூடுவதுமில்லை. எல்லாம் பரி பூரணம்.
இறை கேட்டது: அஃறிணைப் பொருளில் அது என்கிறீரே, அது என்ன?
யான் விடுத்தது : இறைவா, அது, இது, அவைகள், இவைகள், அவன், இவன், அவர், இவர், அவள், இவள், இவர்கள், அவர்கள், (இவர்கள்), நான், நாம், நீ, நாங்கள், நீங்கள், முதலான தன்மை, முன்னிலை, படர்க்கை, பன்மைகள் யாவுமற்ற மொழிதற்கியலாத ஒன்றே அந்த தனித்த வொன்று; அதனை அழைக்க எந்த வார்த்தையும் இல்லாத ஒன்றே அதுவான பரிபூரணம்.
இறை கேட்டது: ஒன்று என்பது எது?
யான் விடுத்தது : இறைவா, அதற்குப் பதிலாக அல்லது அதுபோன்ற அல்லது அதுபோன்ற எத்தனையோ இல்லாத, பிறக்காத, பிறப்பிக்காத, அனைத்துமே ஒன்றிலான, அனைத்துமே ஒன்றான அந்த ஒன்றே, அது.
இறை கேட்டது: மேலும் என்னை உம்மால் வருணிக்க முடியுமா?
யான் விடுத்தது : இறைவா, உன்னை வருணிக்க என் நா எழவில்லை. கடலுக்கும் எல்லையுண்டு. ஆயினும் உனக்கோ, உன் புகழுக்கோ எல்லையில்லை. உன் வருணிப்புக்கும் எல்லையில்லை. முடிவுமில்லை. எங்கும் நீ யாகிய பரிபூரணமே. எங்கு சென்றாலும், நீயாகிய
பரிபூரணமே. பிரபஞ்சம் கூடாது, குறையாது. அதற்கு எல்லையில்லை. அது நிறைகோற்போற் சமமானது. திணையோ, பாலோ, எண்ணோ அற்றவனீ. இடத்தினுக்கு இடனானாய், காலத்திற்குக் காலமானாய்.
இறை கேட்டது: என்னை நீர் புகழ்வதாலும், வருணிப்பதாலும், எனக்கு மதிப்புக் கொடுப்பதாலும், எனக்கு என்ன நன்மையுண்டு?
யான் விடுத்தது : இறைவா, நீ புகழுக்குப் புகழானவன். வருணிப்புக்கு வருணிப்பானவன். மதிப்புக்கு மதிப்பானவன். உன்னை எவன் புகழ்ந்தாலும், அப்புகழுக்கு எல்லையுண்டு. ஆனால், உன் புகழுக்கோ எல்லையில்லை. வருணிப்புக்கும் அவ்வாறே, மதிப்புக்கும் அவ்வாறே. நீ தேவையற்றவன். உனக்கு எதுவும் தேவையேயில்லை. அதனால் உனக்கு எந் நன்மையுமில்லை.
இறை கேட்டது: என்னை நீர் புகழ்வதாலும், எனக்கு மதிப்புக் கொடுப்பதாலும், வருணிப்பதாலும், உமக்கு என்ன நன்மையுண்டு?
யான் விடுத்தது : இறைவா, நான் உன்னைப் புகழும் புகழ்ச்சிகளும், மதிக்கும் மதிப்புகளும், வருணிக்கும் பண்புகளும், என்னையே வந்தடைகின்றன. அதுவே, யான் பெறும் நன்மைகள். உன்னை நான் இழிவு படுத்தினால் அதுவும் என்னையே வந்தடையும்.
இறை கேட்டது: என்னை ஒரு கூட்டம் மிகவும் மதித்து நடப்பதுபோலும், மரியாதை கொடுப்பதுபோலும் நடந்து கொள்கிறார்களே, இதன் உண்மையென்ன?
யான் விடுத்தது : இறைவா, உன்னையறிந்தவன் உன்னை மதித்தால் தானே அந்த மதிப்பு சிறப்புடைத்தாகும். அறியாதவன் உன்னை எப்படி மதிப்பான்? அதில் உண்மையில்லையே? உனக்குக் காலும் கையும் முகமும் வைத்து உன்னை இணைவைத்து வணங்குகிறவர்கள் உன்னை எப்படித்தான் அறியப் போகிறார்கள். அவர்கள் வணங்கும் வணக்கமும் வணக்கமல்ல. துதிக்கும் துதியும் துதியல்ல.
இறை கேட்டது: நீர் இப்படியே பரிபூரணமாய் இருக்க விரும்பினீரா?
யான் விடுத்தது : இறைவா, ஆம். இப்படியே இருப்பதோடு என்னை வெளிக்கொணரவும் விரும்பினேன்.
இறை கேட்டது: அப்போது பரிபூரணத்திற்கு என்னவாயது?
யான் விடுத்தது : இறைவா, அப்போது பரிபூரணம் சலனமடையத் தொடங்கிற்று.
இறை கேட்டது: சலனமென்பதென்ன?
யான் விடுத்தது : இறைவா, அது தோன்றவிருக்கும் நிலை.
இறை கேட்டது: அது எப்படி?
யான் விடுத்தது : இறைவா, அஃது யானென்னவிருந்தது, நாமாகத் தோன்ற இருந்த ஆரம்ப நிலை.
இறை கேட்டது: நான் வெளித்தோன்ற நினைத்தேன் என்கிறீரே அதன் தாற்பரியம் என்ன?
யான் விடுத்தது : இறைவா, நானெனக் கூறும் நீ வெளித்தோன்ற நினைத்ததாலேதான் நாம் வெளிவந்தோம். நாம் வராவிட்டால் உம்மை எப்படி அறிந்துகொள்ள முடியும்.
இறை கேட்டது: அப்போது என்ன நடந்தது?
யான் விடுத்தது : இறைவா, சிறிது சிறிதாய், முழுமை பிரியத் தொடங்கிற்று.
இறை கேட்டது: நானானது நாமானது எப்படி?
யான் விடுத்தது : இறைவா, நான் மிக நுணுக்கமாய்ப் பிரிந்தேன். நுண்ணணுக்களானேன். அப்படிப் பிரிந்த என்னிலிருந்தே, ஐம்பூதங்களும் பிரிந்தன. இதுவே, தான் நானாயிருந்த, நான் நாமானவாறு.
இறை கேட்டது: இஃதெல்லாம் என்ன?
யான் விடுத்தது : இறைவா, இவைகள்தாம் இயலாகத் தாமாயியன்ற இயற்கை.
இறை கேட்டது: இயற்கையென்பது என்ன?
யான் விடுத்தது : இறைவா, செயற்கையும் சேர்ந்த இயற்கையென்றேன்.
இறை கேட்டது: இதற்குமேல் வேறேதுமுண்டா?
யான் விடுத்தது : இறைவா, இல்லையென்றேன்.
Wednesday, December 26, 2007
தாகி பிரபம் - 6
Posted by ஞானவெட்டியான் at 11:38 AM
Labels: தாகி பிரபம்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment