Wednesday, December 26, 2007

தாகி பிரபம் - 5

தாகி பிரபம் - 5
****************
இறை கேட்டது: மனித இனமல்லாத மற்ற இனங்களின் நிலையென்ன?

யான் விடுத்தது : இறைவா, அவையெல்லாம் உன்னில்தானே உள்ளன. அவை உன்னிடத்தே நீயாகி வணக்கம்செலுத்திக் கொண்டிருக்கின்றன.

இறை கேட்டது: என்னில்தான் அவையிருக்கின்றன என்பதற்கும் அவை என்னில் நானாய் வணக்கம் செலுத்துகின்றன என்பதற்கும் நீர் கண்ட முக்கியத் தத்துவம் யாது?

யான் விடுத்தது : இறைவா, அவை சிருஷ்டி என அறியாமல் முன்னிருந்த நிலையிலேயே உள்ளன. உன்னிலிருந்து நீயாகவே அவை வெளியாகியும், அவை வெளியாகிய தன்மையைஅறியவில்லை. அவற்றிற்கு புத்தியில்லையே! (மனிதனைப் போன்று) சிந்தனையுமில்லையே! அதற்கு நல்லது, கெட்டதும் தெரியவில்லையே! இது கூடும், இது கூடாது என்பனவும் தெரியவில்லையே. அவற்றிற்கு விதிவிலக்கள்களும் (விதிவிலக்கல்களும்) இல்லையே. கையால் அவைகளின் வணக்கம் தாமே தம்மையறியாத அவையே நீயான நிலையில் வணக்கம் செலுத்துகின்றன.

இறை கேட்டது: மனித இனத்தைப் பற்றி என்ன நினைக்கின்றீர்?

யான் விடுத்தது : இறைவா, குழந்தை பிறந்தபோது அது பூரணத்திலிருந்து (உன்னிலிருந்து) பிரிவுபட்டிருந்த போதும் அது தன் தாற்பரியத்தில் நீயாகவே யிருந்தது. அதற்குச் சிந்தனை இருக்கவில்லை. எந்தப் பொறுப்பும் இருக்கவில்லை. தெய்வீகக் கடாட்சம் அதற்கு இருந்தது. அது உன்னிலிருந்து வெளியான போதும் அது வெளியான சம்பவம் அதற்குத் தெரியவில்லை. அதற்கு எந்தவகையான விதிவிலக்குகளும் இருக்கவில்லை. உன்னில் நீயாகவே இருந்த குழந்தை சிறிது சிறிதாய் வளர்ந்து ஐம்புலன்களும் வினைபுரியத் தொடங்கியபோது பிள்ளை அன்றாட அநுபவங்களைப்
பெறவும், நான் நீ எனும் வேற்றுமையை அறியவும் தொடங்கிற்று. தான் வந்த வழியை முற்றும் மறந்திடவாயிற்று. விதிவிலக்குகளும் உண்டாயின. அது மனிதனாயது. தன் முன்னைய நிலையை மறந்து நான் வேறு, நீ வேறு எனும் பிரிவாகிய இணைவைப்பை அவன் உண்டாக்கிக் கொண்டான். தான் மனம் போன போக்கில் போகவும், அழிவு வேலைகள் செய்யவும், உண்மைக்கு மாறாக நடக்கவும், மானிட நேயம், ஐக்கியம், இரக்கம் முதலானவைகளை உதறித் தள்ளிவிடவும் முற்பட்டு மறமாந்தனாய் மாறிவிட்டான். உன்னிலிருந்து வேறுபட்டு விட்டான். இதனால், தன்னை மறந்த குற்றவாளியாக மாறினான். தன்னை மறந்துவிடாது, தன்னையறிந்து வாழப்படைக்கப்பட்ட மனிதன், இந்நிலையடைந்தமையால், தான் வந்த பாதையை மறுபடியும் நினைவுகூற ஏவப்பட்டான். தான் வந்த பாதையை நினைவு கூர்ந்தவன், பூரண மனிதனானான்.

இதை மறுத்தவன் மறுப்பாளனானான்.(காபிரானான்)

இறை கேட்டது: வந்த பாதை எது?

யான் விடுத்தது : இறைவா, உன்னிலிருந்து எவ்வாறு மாற்றமடைந்து வந்தானோ அதுதான் அந்தப் பாதை.

இறை கேட்டது: அவன் தன்னை யெப்படி அறிதல் வேண்டும்?

யான் விடுத்தது : இறைவா, அவன் தன்னைப்பற்றிச் சிறிதேனும் சிந்திக்கவேண்டும். தான் வயோதிபனானமையும் அதற்கு முன்னிருந்த குழந்தைப் பருவம் பற்றியும் சிந்தித்தல் வேண்டும்.

இறை கேட்டது: அதன் முன் அவனது நிலையென்ன?

யான் விடுத்தது : இறைவா, அது சிசுவாகத் தன் தாயின் கற்பவறையிலிருந்தது. அதற்கு முன் தாயின் கற்பவறையில் சிறு கருவாய்த் தங்கிற்று.

இறை கேட்டது: இஃது எவ்வாறு உண்டாயது?

யான் விடுத்தது : இறைவா, இஃது தாயினதும், தந்தையினதும் சத்துப் பொருளில் இருந்து உண்டாயது.

இறை கேட்டது: இதற்கு முன் அது எங்கிருந்தது?

யான் விடுத்தது : இறைவா, தாயினதும் தந்தையினதும் முதுகந்தண்டிலிருந்தது.

இறை கேட்டது: அது எப்படி இவ்வாறாயது?

யான் விடுத்தது : இறைவா, தாயும் தந்தையும் கூடினமையால் இவ்வாறுண்டாயது.

இறை கேட்டது: அது அங்கே எப்படியிருந்தது?

யான் விடுத்தது : இறைவா, அது சத்துப்பொருளாயிருந்தது.

இறை கேட்டது: இச்சத்துப் பொருட்களை இவர்கள் எங்கிருந்து பெற்றனர்?

யான் விடுத்தது : இறைவா, இவர்களைச் சூழ்ந்துள்ள பொருள்களிலிருந்து பெற்றுக் கொண்டனர்.

இறை கேட்டது: அப்பொருள்கள் யாவை?

யான் விடுத்தது : இறைவா, அவை தாவரப் பொருள்களும், மிருக இனங்களும், மீன் வகைகளும், பட்சி இனங்களும், தட்ப வெப்பங்களும், காற்று முதலான மற்றுமுள்ளவைகளும்.

இறை கேட்டது: இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?

யான் விடுத்தது : இறைவா, இவையெல்லாம் பஞ்ச பூதங்களிலிருந்து வெளியாயின.

இறை கேட்டது: பஞ்ச பூதங்களெல்லாம் எவை?

யான் விடுத்தது : இறைவா, அவையெல்லாம் இயற்கை.

இறை கேட்டது: அப்படியானால் செயற்கை யென்பது என்ன?

யான் விடுத்தது : இறைவா, இயற்கைப் பொருள்களை ஒன்று கூட்டி இயற்றியவைகளே செயற்கை.

இறை கேட்டது: அப்படியாயின் செயற்கையும் இயற்கைதானே?

யான் விடுத்தது : இறைவா, ஆம். செயற்கையும் இயற்கைதான்.

இறை கேட்டது: அவ்வாறாயின் இயற்கை எங்கிருந்து வந்தது?

யான் விடுத்தது : இறைவா, பஞ்ச பூதங்களிலிருந்து இயற்கை வெளியாயிற்று. பஞ்ச பூதங்களும் இயற்கையே.

0 Comments: