Wednesday, December 26, 2007

தாகி பிரபம் - 4

தாகி பிரபம் - 4
***************
இறை கேட்டது: உமக்கு நாசியிருந்ததா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் நாசியாயிருந்தது.

இறை கேட்டது: உமக்கு வாயிருந்ததா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் வாயாயிருந்தது.

இறை கேட்டது: உமக்கு ஆக்கையிருந்ததா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் எனதாக்கையாயிருந்தது.

இறை கேட்டது: இப்படியே பரிபூரணமாயிருந்தபோது, உமக்கு ஆரம்பமும் முடிவுமிருந்தனவா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். ஆரம்பமும் முடிவுமிருந்தன.

இறை கேட்டது: அது என்ன?

யான் விடுத்தது : இறைவா, நானே பரிபூரணமானபோது பரிபூரணமான எனக்கு நானே ஆரம்பமும் முடிவுமானேன்.

இறை கேட்டது: நான் எனும் பரிபூரணத்திற்கு உள்ளும் புறமுமிருந்தனவா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். இருந்தனவே.

இறை கேட்டது: அஃது எப்படி?

யான் விடுத்தது : இறைவா, அதுவே (பரிபூரணம்) தானே அதற்கு உள்ளூம் புறமும்.

இறை கேட்டது: அதற்குத் திக்குத் திசைகளிருந்தனவா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். இருந்தன. அதற்குத் திக்குத் திசைகளும் அதுவே தானே.

இறை கேட்டது: அதற்கு மேல், கீழ், உயரம், பள்ளம் எல்லாமிருந்தனவா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். மேல், கீழ், உயரம், பள்ளம் எல்லாம் அதற்கு அதுவே யாயிருந்தன.

இறை கேட்டது: பரிபூரணத்திற்கு இவ்வளவுதான் என்னும் மட்டும் அளவும் கனமுமுண்டா?

யான் விடுத்தது : இறைவா, பரிபூரணம்(நான்) அளவிட முடியாதது; நிறையிட முடியாதது. பூரணத்திற்குப் பூரணமே அளவு. அதற்கு அதே மட்டு. அதற்கு அதுவே நிறை.

இறை கேட்டது: அதற்கு(பரிபூரணத்திற்கு)க் கால எல்லையுண்டா? முடிவு உண்டா?

யான் விடுத்தது : இறைவா, இல்லையே.

இறை கேட்டது: அப்படியானால் அதன் நிலை என்ன?

யான் விடுத்தது : இறைவா, அது நான் நீயாகவே நிலை பெற்றிருக்கும்.

இறை கேட்டது: அவ்வாறு நிலைபெறும் எனக்கும் உமக்குமிடையே வித்தியாசங்களுண்டா? வேறுபாடுகளுண்டா?

யான் விடுத்தது : இறைவா, அது நான், நீ, அது, இது, அவள், அவன், அவர்கள், இவர்கள், நீங்கள், நாங்கள் எனும் வேறுபாடின்றி நிலை பெற்றிருக்கும்.

இறை கேட்டது: வானம், பூமி, சூரியன், சந்திரன் முதலியனவை எல்லாம் பூரணமாய் என்னிலிருந்துதானே வெளியாயின?

யான் விடுத்தது : இறைவா, ஆம். அது, நீ, நான், எனது, உனது, என், உன், என்றில்லாத உன்னிலிருந்துதான் வெளியாயின.

இறை கேட்டது: என்னிலிருந்து என்று யான் கூறியதன் தாற்பரியத்தைக் கூறுவீரா?

யான் விடுத்தது : ஆம், இறைவா. நீயாகவே வெளியானாய் என்பதை நீ மறைத்துக் கூறுகிறாய்.

இறை கேட்டது: சிருஷ்டிப் பொருட்கள் எனக் கூறப்படுவன எவை?

யான் விடுத்தது : இறைவா, யார் சிருஷ்டித்தார்? நீயிருந்து நீயல்லா வேறு பொருள்களச் சிருஷ்டிப்பின், உனக்கும் பொருள்களுக்கும் இடையே வேறுபாடுண்டல்லவா? அதுதானே இணையென்பது? ஆதலால் நீயாகவேயிருந்து உன்னிலிருந்து வெளியானவற்றைத்தான்
சிருஷ்டிகள் என்கிறோம்.

இறை கேட்டது: அப்படியாயின் எனக்கும், என்னிலிருந்து வெளியானவைகளுக்குமிடையே வேற்றுமையுண்டா?

யான் விடுத்தது : இறைவா, உனக்கும் உன்னிலிருந்து வெளியான சிருஷ்டிகளுக்குமிடையே எவ்வேறுபாடுமில்லை. நீ முன்னிருந்தது போன்றே இப்போதுமிருக்கிறாய்.

இறை கேட்டது: என்னிலிருந்தே வெளியான மனித இனம், என்னை மறந்து விட்டதே?

யான் விடுத்தது : இறைவா, உண்மைதான். வெளியாகும்வரை நானும் நீயும் வேறில்லை. ஒன்றேயென்று கூறிக்கொண்டிருந்த மனித இனமெல்லாம், இப்போது நீயார்? நான்யார்? நீயும் நானும் ஒன்றல்லவே எனக்கூறிக் கொண்டிருக்கின்றன. தாய் தந்தையரை அறியா, தாய் தந்தையர் இல்லா மக்களைப் போன்றுதான் இவர்கள் உள்ளனர்.

4 Comments:

Anonymous said...

ஐயா!

அருமையாக இருக்கிறது!

Anonymous said...

அன்பு சிபி,
மிக்க நன்றி.

Anonymous said...

இவற்றின் உட்பொருள்கள் என் சிற்றறிவுக்கு கொஞ்சம் எட்ட வில்லைதானெனினும் தொடர்ந்து முயற்சிக்கிறேன்.

நாளடைவில் விளங்கும் என எண்ணுகிறேன்.

Anonymous said...

திருப்பித் திருப்பிப் படித்து அசைபோடுங்கள். ஐயமிருப்பின் கேளுங்கள். விளக்கம் தருகிறேன்.