Wednesday, December 26, 2007

தாகி பிரபம் - 3

தாகி பிரபம் - 3
***************
விளக்கம்:

இங்கு கருத்தா என்பது சிருட்டி கருத்தா (கருத்தாகிய நினைவு). சிருட்டி என்பது சிருட்டிக்கப்பட்ட ஆன்மா தங்கியுள்ள உடல் (நினைவால் சிருட்டிக்கப்பட்ட எண்ணங்கள்).

இறை கேட்டது: முதன் முதலில் நீர் எங்கிருந்தீர்?

யான் விடுத்தது : இறைவா, நீ, சூக்குமமாய் மறைந்து, நான், நீ யென்றன்றி இல்லாதிருந்த நிலையிலிருந்தபோது, நான் உன்னுடன் கலந்திருந்தேன்.

இறை கேட்டது: அப்போது நீர் உம்மைக் கண்டீரா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். என்னை யான் கண்டேன்.

இறை கேட்டது: எப்படிக் கண்டீர்?

யான் விடுத்தது : இறைவா, உன்னில் என்னைக் கண்டேன். அப்போது என்னில் உன்னைக் கண்டேன்.

இறை கேட்டது: அப்போது நீர் எப்படியிருந்தீர்?

யான் விடுத்தது : இறைவா, உன்னில் யான் கலந்திருந்தேன்.

இறை கேட்டது: என்னில் நீர் எப்படிக் கலந்தீர்?

யான் விடுத்தது : இறைவா, இடைவெளியின்றிக் கலந்தேன்.

இறை கேட்டது: இடைவெளியற்றிருந்தது எப்படி?

யான் விடுத்தது : இறைவா, பனிக்கட்டி கரைந்து நீரில் கலப்பதுபோல்.

இறை கேட்டது: அப்போது உமது நிலை யெப்படியிருந்தது?

யான் விடுத்தது : இறைவா, அப்போது நானோ ஏகாந்த நிலையிலிருந்தேன்.

இறை கேட்டது: ஏகாந்த நிலையென்பது என்ன?

யான் விடுத்தது : இறைவா, நானேயல்லாது பிறிதொன்றையும் காணாது நானே என்னில் என்னைக் கண்ட நிலை. மற்றும் உன்னில் நான் அழிந்து உன்னில் நானாய்ப் பிறிதொன்றிலாதாகி உன்னிலே என்னை நீயாக இரண்டறக் கண்ட நிலை.

இறை கேட்டது: அப்போது நீர் எப்படியிருந்தீர்?

யான் விடுத்தது : இறைவா, யான் சலனமற்ற நிலையில் பரிபூரண ஆதி நிலையான சூனிய நிலையிலிருந்தேன்.

இறை கேட்டது: அப்போது உமக்குப் பார்வையிருந்ததா?

யான் விடுத்தது : இறைவா, ஆம் என்றேன்.

இறை கேட்டது: அது எப்படி?

யான் விடுத்தது : இறைவா, பரிபூரணத்தில் பரிபூரணமாய் நின்று பரிபூரணத்தைப் பரிபூரணத்தால் பரிபூரணமாய்ப் பார்த்தேன்.

இறை கேட்டது: எப்படிக் கேட்டீர்?

யான் விடுத்தது : இறைவா, மேற் சொன்னவாறே கேட்டேன்.

இறை கேட்டது: எவ்வாறு சுவாசித்தீர்?

யான் விடுத்தது : இறைவா, மேற்சொன்னவாறேதான்.

இறை கேட்டது: நீர், எவ்வாறு ருசித்தீர்?

யான் விடுத்தது : இறைவா, அவ்வாறேதான்.

இறை கேட்டது: எவ்வாறு உணர்ந்தீர்?

யான் விடுத்தது : இறைவா, அதுவும் அவ்வாறே.

இறை கேட்டது: உமக்குக் கண்ணிருந்ததா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் கண்ணாக விருந்தது.

இறை கேட்டது: உமக்குச் செவியிருந்ததா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் செவியாயிருந்தது.

0 Comments: