Sunday, December 30, 2007

ஞானக் குறள் - 9. உள்ளுணர்வு (81- 90)

ஞானக் குறள்
***************
1. வீட்டுநெறிப்பால்
*********************
9. உள்ளுணர்வு (81- 90)
************************
[உள்ளுணர்வாவது அறிவாகிய ஓங்காரத்தின் சக்தியைக்கொண்டு யாவற்றையும் அறியும் தன்மை.]

81.எண்ணிலியூழி தவஞ் செய்திங் கீசனை
உண்ணிலைமை பெற்ற துணர்வு.

கணக்கற்ற முறை அசைவற்ற தன்மையை உண்டாக்கித் தவமியற்ற, அசைவற்ற நிலைமை ஏற்படுமிடமாகிய இருதயகமலத்தில், சிவத்தை நிலைபெற்ற தன்மையுடன் அடைந்ததே அறிவின் சக்தியாம்.
ஆக, தவத்தின் மூலமாய் அசைவையொழித்து, சிவத்தை இருதயகமலத்தில் நிறுத்த அறிவுக்கு அளவற்ற சக்தியுண்டாம்.

ஊழி என்பது ஐம்பூதங்கள் மறையுங்காலம். ஐம்பூதத்தின் சூக்குமமாகிய உடலுக்கு ஊழிக்காலம் மரணம். ஞான வினைக்கு ஊழிக்காலம் மனம் அழிதலாம். உணர்வென்பது அறிவின் சக்தியை அறிவின் வழியில் பயன்படுத்தலே யாம்.

வாசிட்டம்:

"தெரி பொருளுந் தரிசனமுஞ் சேரும் போதில் சேர்ந்த சுகமறிவு மிகச் சிறந்ததாகும்." எனவும்,

"உள்ளும் புறமும் அசைவின்றி உயிர்மன்னு மடங்குமெனிற், றள்ளுறாமலொருக் காலுந் தாதுவெல்லாஞ் சடத்துறையும்" என்றும்

வாசிட்டம் - புசுண்டர் கதையில்:

"இனையயாரு மிந்தவறிவு யிறவா திருக்க வீதறிய, வினயமின்றி மிகச்சேர்ந்தார் வீணர் செருக்குமிகுமுரப்பு, முனையில் வின்னா ணோசையைப் போன்மூடர் - கேட்பதிறப்பதற்கே, யனையர் வீணாட் கழிப்பதலா லறியா வறிவையறியாரே."
எனவும் கூறியிருத்தல் காண்க.

82.பல்லூழி காலம் பயின்றனை யர்ச்சித்து
நல்லுணர்வு பெற்ற நலம்.


நன்மையைய் கொடுக்கும் அறிவானது அடைந்த நன்மை, பல முறைகளாக அசைவற்ற மனத்துடன் சிவத்தை அருச்சித்து சிவவொளியை அடைவதே.

83. எண்ணற்கரிய வருந்தவத்தா லன்றே
நண்ணப் படுமுணர்வு தான்.

உணர்வாகிய அறிவானது அகத்தவத்தினாலல்லாது வேறு விதத்தால் முழுமையடையாது.

84.முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால்
பின்னைப் பெறுமுணர்வு தான்.

பிறப்பு - உடல்

முன்னர் முயன்று தவத்தால் ஏற்றிய அகத் தீயால்தான் உணர்வாகிய அறிவு பூரணம் பெறும். அதாவது, முதலில் தவத்தைச் செய்து அதனாலுண்டாகிய சக்தியை உணர்வாகிய அறிவு அடையும்.

'முன்னை', 'பின்னை' என்பதை முன்சென்மம், பின்சென்மம் என்று எடுத்துக் கொள்வதற்கில்லை. இத் தேகமெடுத்து என்ன பயன்? இதிலுள்ள அறிவின் கதியென்ன?

வாசிட்டம் சனகனின் கதையில்:

"சங்கற்ப நாசத்தா லெளிதாக மனநாசந்தானே யெய்து, மங்குற்ற மனமிறக்கிற் சனன மரணங்களெனுமரமுமாயு, மிங்கிப்பா லெனைத் திருடுங் கள்வனை கண்டேன் - கண்டேனிவன்பேர் நெஞ்சம், பொங்குற்ற நெஞ்சத்தா
னெடுநா ணொந்தே னின்று பொன்று விப்பேன்"

இதைப் புரிய மருமமுடிச்சவிழும்.

85. காயக்கிலேச முணர்ந்த பயனன்றே
ஓயா வுணர்வு பெறல்.

காயக்கிலேசம் - மரணபயம்

உடல் ஒரு நாள் அழிவுறும் என உணர்ந்ததன் பயன், இடைவிடாத அகத்தவத்தால் அறிவுக்குள் உணர்வை அடைவதே.

86.பண்டைப்பிறவிப் பயனாந் தவத்தினால்
கண்டங் குணர்வு பெறல்.

பிறவி - மூலவித்து

எழுபிறவியின் வித்தாலேயே தவம் முடியுமென்பது அறிவாகிய உணர்வு பெறுதலே.

எழுபிறவி:

1.ஐம்பூதங்கள்
2.அவைகளின் கூட்டுறவால் உண்டான சக்திகள்
3.அச்சத்திகளை பிரிதிவிசத்தி உள்வாங்கி பழம், மருந்துப் பொருள்கள் முதலியன காய்க்கும் மரங்களை(ஓஷதிகளை) வெளிப்படுத்தல்
4.ஓஷதிகளிலிருந்து வித்தாகிய சீவவுணவுகளை உண்டாக்கல்
5.உணவையுண்டு நாதபிந்துக்களை உண்டாக்கல்
6.நாதபிந்துக்களால் இனப்பெருக்கம் செய்தல்
7.மறுபடி மனித உருவாய் வெளிப்பட்டு நிற்றல்

87.பேராத் தவத்தின் பயனாம் பிறப்பின்மை
ஆராய்ந் துணர்வு பெறின்.

ஆராய்வின் மூலமாக உணர்வாகிய அறிவை பெற்றால், இடைவிடா ஞானசாதனைகளின் பயனாகிய பிறப்பின்மையை அடையலாம். (பிறப்பு என்பது எண்ணப் பிறப்பு)

88.ஞானத்தாலாய வுடம்பின் பயனன்றே
மோனத்தா லாய வுணர்வு.

ஞானசாதனைகளினால் உண்டாகும் ஞானவுடலின் பயன், மவுனத்தால் கிடைக்கும் உணர்வை அடைவதே.

"மோனமென்பது ஞான வரம்பு"

89.ஆதியோடொன்று மறிவைப் பெறுவதுதான்
நீதியாற் செய்த தவம்.

ஆதியோடு - சிவகலையோடு
அறிவாகிய ஓங்காரத்தில் சிவகலையைச் சேர்த்தலே அரிய தவமாம்.

90.காடு மலையுங் கருதித்தவஞ் செய்தால்
கூடு முணர்வின் பயன்.

காடு - உடலில் உள்ள அஞ்ஞான தத்துவங்கள்
மலை - பிரணவ மேரு
பிரணவத்தை அறியவும், அதை மறைக்கும் அஞ்ஞான தத்துவங்களைப் போக்கவும், ஞான வினையை எண்ணிச் செய்தாலே அறிவினால் உண்டாகும் பயன் வெளிப்படும்.

திருமந்திரம் :

"விளைவறி வார்பண்டை மெய்த்தவஞ் செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யறஞ் செய்வார்
விளைவறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே."

விளைவு = உடலெடுத்ததின் பயன்.

உடல் எடுத்ததின் பயன் உடலினுள்ளே உமையொருபாகனைக் கண்டு சிவப்பேறு அடைதல். இவ்வுண்மையை அறிந்தவர் நன்னெறியாம் சிவநெறி ஒழுகுபவர். அதுபோல் மெய்யுரையாம் குருமொழி கொள்வர், உடலின் பயன் உணர்ந்தவர். மெய்யறமாம் சிவபுண்ணியஞ் செய்வாரும் உண்மை உணர்ந்தோரே. இவர்கள் விண்ணிலும் மண்ணிலும் அனைவரினும் மிக்கோராய் வாழ்வர்.

"பிறப்பறியார் பலபிச்சை செய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வமும் பெறுவர்
மறுப்பில ராகிய மாதவஞ் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமை பெற்றோரே."

பிச்சை = தவ உணவு. பிச்சைசெய் மாந்தர் = தவசிகள்.
மறப்பிலராகி = இரவு பகலாகிய நினைப்பு மறப்பு இல்லாதவராகி.

உயிருக்குயிராகிய இறைவன் தந்த உடலினில் உள்ள உயிர் பிழைக்க உழைக்காது பிச்சை எடுத்து உண்ணும் பலர், பிறப்பு இறப்புக்களால் ஏற்படும் பெரும் துன்பத்தினை அறிய மாட்டார். சிவன் திருவடிகளை மறவாமையே பெருந்தவம். அப்பெரும் தவம் செய்தோர் சிறப்பாகிய வீடுபேறு பெறுவதுடன் வேண்டிய இம்மை மறுமைச் செல்வங்களையும் அடைவர். அவர்களே பிறப்பினை அறுக்கும் சிவபுண்ணியப் பெருமை பெற்றவர்களாம்.

"ஒடுங்கு நிலைபெற்ற உத்தமருள்ளம்
னடுங்குவ தில்லை நமனு மங்கில்லை
இடும்பையு மில்லை யிராப்பக லில்லை
படும்பய னில்லை பற்றுவிட் டோர்க்கே"

ஒடுங்குநிலை = புலன்வழிச் செல்லாமை.

புலன்களை நிலைபெறவேண்டிய சிவன் திருவடிகளில் ஒடுக்குவார் நன்மையே புரிவதால் தலை சிறந்தவராய் வாழ்வார். அவர்களின் உள்ளத்தில் எப்பொழுதும் நடுக்கம் வருவதில்லை. சிவ வாழ்க்கை வாழ்வதால் பிறப்பு இறப்புத் துன்பமில்லை; நமனுமில்லை. பல்வேறு உலகியல் துன்பங்களும் இல்லை. சிவனின் நினைப்பு மறப்பு ஆகிய இரவு பகலில்லை. அடைவதற்குரிய வழிப்பயன்களுமில்லை. இவர்கள்தான் பற்றுக்களை விட்டவர்கள்.

"சாத்திர மோதுஞ் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தவிப் பார்வை பசுமரத் தாணிபோ
லார்த்த பிறவி யகல விட்டோடுமே."

சதுர் = பெருமை. மாத்திரைப்போது = இமைகொட்டும் நேரம்.
மறித்து = வெளிமுகமாய் இருக்கும் அறிவைத் தடுத்து.
ஆர்த்த = கட்டப்பட்ட.

உள்மெய் நாட்டமின்றிப் பொருளீட்டவேண்டி நூல்களைப் படித்துப் பிதற்றித் திரியும் பொய்ப் பெருமைகளை விட்டுவிட்டு நீங்கள் ஒருமாத்திரை (நொடி)ப் பொழுதாகிலும் உயிர் உணர்வு வெளிப்படாது அகமுகப்பட்டுச் சிவனை நோக்குங்கள். அங்ஙனம் நோக்க, உணர்வு பசுமரத்தாணி போல உயிரில் ஒன்றும். அதனால் தொன்றுதொட்டுப் பிணித்துவரும் பிறவி அகன்றுவிடும்.

25 Comments:

Anonymous said...

அய்யா,

// உடலுக்கு ஊழிக்காலம் மரணம். //

அருமையான விளக்கம்..

நன்றி

Anonymous said...

அன்பு சிவபாலன்,
நன்றி

Anonymous said...

ஐயா!
உடல் மரணிக்கும் போது;மனம் மரணிப்பதில்லையா?
யோகன் -பாரிஸ்

Anonymous said...

அன்பு யோகன்,
//உடல் மரணிக்கும் போது;மனம் மரணிப்பதில்லையா?//

ஆமாம். சிறிது நேரம் கழித்து எப்பொழுது முகுளம் செயல் இழக்கிறதோ அப்பொழுதுதான் மனம் அழிகிறது.

Anonymous said...

அய்யா

இங்கே சிவம் என்பது ஞானத்தின் எல்லை என கொள்ளலாமா?

- சிவபாலன்

Anonymous said...

அன்பு சிவபாலன்,
சிவம் என்பது சிவனாகிய சீவன்.

Anonymous said...

//அகத்தவத்தினாலல்லாது//

எது தவம்?
யோகத்தில் இருப்பது தவமா?
அல்லது (தெய்வத்துடன்) ஒன்றாக கலப்பது தவமா?

Anonymous said...

"என்னுள் விளங்குந் தவமென்ன சொல்லடி சிங்கி? - அது
தன்னை மறந்து தவத்தி லிருப்பது சிங்கா!"

தவம் என்றால் என்னடி சிங்கி?

உணர்வை நினைவினில் நிறுத்தித் தன்னையும் மற்றவற்றையும் மறந்து இருப்பதுதான் தவம்.

Anonymous said...

ஐயா!! அகத் தவமென்பது; வள்ளுவர் சொன்ன "மனத்திற் கண் மாசிலனாதல் " எனக் கொள்ளலாமா?
யோகன் - பாரிஸ்

Anonymous said...

அன்பு யோகன்,
உணர்வை நினைவினில் நிறுத்தித் தன்னையும் மற்றவற்றையும் மறந்து இருப்பதுதான் தவம்.

Anonymous said...

ஐயா,

//உணர்வை நினைவினில் நிறுத்தித் தன்னையும் மற்றவற்றையும் மறந்து இருப்பதுதான் தவம். //

நல்ல கருத்து.

மனிதன் தன்னை மறந்து விட்டால், அது பைத்தியமன்றோ?

தன்னை மறந்தும் விழிப்பில் இருப்பது தானே தவம்.

ஒருவேளை தன்னை மறந்த நிலை அகத்தவமோ?

Anonymous said...

அன்பு சிவமுருகன்,
உணர்வை நினைவினில் நிறுத்தித் தன்னையும்( தான் எனும் அகங்காரத்தையும்) மற்றவற்றையும் (மற்ற உலகாயதங்களையும்)மறந்து இருப்பதுதான் தவம்.

Anonymous said...

அய்யா,

அருமையான விளக்கம்.


ஏன் அறிவை உணர்வு என்று கூறினார்கள்?

Anonymous said...

அன்பு சிவபாலன்,
அறிவும் உணர்வும் ஒன்றல்ல.
ஞானத்தின் 4 படிகள்:
அறிவு
உணர்வு
நினைவு
கருத்து

Anonymous said...

/உணர்வை நினைவினில் நிறுத்தித் தன்னையும் மற்றவற்றையும் மறந்து இருப்பதுதான் தவம். //

அருமையான சிந்தையினுள் நிற்க வைக்க வேண்டிய வரிகள்... நன்றி அய்யா...

Anonymous said...

அன்பு சிவபாலன்,
அறிவும் உணர்வும் ஒன்றல்ல.
ஞானத்தின் 4 படிகள்:
அறிவு
உணர்வு
நினைவு
கருத்து

Anonymous said...

ஐயா,
விளக்கத்திற்க்கு மிக்க நன்றி

Anonymous said...

அன்பு சிவமுருகன்,தெகா,
நன்றி

Anonymous said...

ஐயா,
இதற்கு இப்படி ஒரு பொருள் உண்டா.விளக்கத்திற்கு நன்றி.

நான் இது நாள்வரை முற்பிறவியில் இறைவனை குறித்து தவம் செய்திருந்தால், பூர்வ புண்ய வாசனையால்,இப்பிறவியில் இறை அனுபவ முயற்சி சுலபமாகும் என நினைத்திருந்தேன்.தங்களை தொடர்ந்து படிப்பேன்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Anonymous said...

அன்பின் முரளி,
அதுவேதான்.
வருகைக்கும் பின்னூட்டிற்கும் நன்றி.

Anonymous said...

wonderful explanation!

Anonymous said...

ரொம்ப அருமையாச் சொல்லி இருக்கீங்க ஐயா!

//இடும்பையு மில்லை யிராப்பக லில்லை
படும்பய னில்லை பற்றுவிட் டோர்க்கே//

இங்கே "படும் பயனில்லை" என்பதைக் கொஞ்சம் விளக்குங்கள் ஞானம் ஐயா!
அவனை அடையும் பயன் என்பது "இல்லை" என்று எடுத்துக் கொண்டால் சற்றுக் குழப்பமாக உள்ளது!

Anonymous said...

அன்பு கண்ணபிரான்,
//படும்பய னில்லை//

அடையவேண்டிய பலனை எல்லாம் பெற்றுவிட்ட காரணத்தால் இனி
அடைவதற்குரிய பயன் ஏதுமில்லை என்றாம். ஈண்டு "படும்" என்பதற்கு "அடைவதற்குரிய" என எடுத்துக்கொள்ளல் சாலச் சிறந்ததாம்.

Anonymous said...

"சாத்திர மோதுஞ் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின் "
ஐயா!
இதையா அருணகிரியார்!!"சரணகமலாலயத்தை அரைநிமிட நேரமட்டில் தவமுறை" என்கிறார்.
நன்று!
யோகன் பாரிஸ்

Anonymous said...

அன்பு யோகன்,
அருணகிரியார் உள்ளே நோக்குவதைத் தவம் என்கிறார். இதைவிடச் சரியான சொல் எங்குமேயில்லை.
அதற்காகத்தான், "உள்ளே நோக்குங்கள்"
"ஊசிப் பார்வையை நாசிநுனிமீது வையுங்கள்" எனக் கொரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன்.