ஞானக் குறள்
**************
1. வீட்டுநெறிப்பால்
10. பத்தியுடைமை (91-100)
91.பத்தியா லுள்ளே பரிந்தரனைத் தானோக்கில்
முத்திக்கு மூலமது.
(பத்தி - ஒன்றிலே ஊன்றிய மனம்; முத்தி - மவுன வித்தை) யோக வழி நிற்போன் நிலையான மனத்தொடு அசைவற்ற நிலையில் தன்னுள்ளே விரும்பி இறைஞ்சி சிவத்தைக் கூர்ந்து நோக்க மவுன வித்தை கைவரப் பெறும்.
92.பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத்
தேடுஞ் சிவ சிந்தையால்.
(பாடியும் - பத்துவித நாதங்களை எழுப்பிச் சுரங்களோடு மனதை இலயிக்கச் செய்தல் ;
ஆடியும் - அஞ்சலி எனும் சாலன தந்திரத்தைச் செய்தும்; பல்காலும் - எப்பொழுதும்;)
நாதத்தின் மூலமாகவும் சாலன தந்திரத்தாலும் மனதைச் சிவத்தொடு ஒன்றித்தால் சிவம் வெளிப்படும்.
மனம் ஒன்றும் பயிற்சிகள் பலவாம். அதில் தலையாயது, இசையால் இறையைக் கட்டுவது. பதுமாசனத்திலிருந்துகொண்டு, சாம்பவி முத்திரையால் அசைவற்ற சித்தத்தோடு வலது காதில், சுழுமுனை நாடியிலுள்ள நாதத்தைக் கேட்கவேண்டும். நாதமானது சிவத்திடம் கொண்டு சேர்க்கும். "வேழமுகத்து" என்னும் சிறுநூலில் "சத்தத்தினுள்ளே சதாசிவங் காட்டி" என்று கூறியதை நோக்க விளங்கும்.
மேற்கூறிய "சாம்பவி முத்திரையை" ஒரு குரு அருளவேண்டும். அவரின் மேற்பார்வையிலேயே இச்சாதனையைச் செய்ய வேண்டும். தானே செய்ய அதனால் வரும் மோசமான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்.
திரிபுராசார சமுச்சியம்:
நாதம் முதலில் மதுவுண்ட வண்டுக் கூட்டங்களால் உண்டாகுஞ் சத்தத்திற்குச் சமமான ஒலியை உண்டாக்குவதாயும், அதன்பின் மூங்கில்கள் ஒன்றோடொன்று இழையும்போது உண்டாகும் சத்தத்தைப் போலவும், கண்டா நாதத்தின் எதிரொலியாயும், கடல் அலைகளின் பேறிரைச்சலைப் போலவும், இடியின் சத்தத்தைப் போலவும், பிரம நாடியில் உள்ள மேல் துளையில் இருக்கின்றது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த மறைபொருளை அறியாதவர்கள், சங்கில் வாயினால் ஊதி, அதில் உண்டாகும் ஒலியில் மனதை ஒன்றச் செய்வர். இதையே "பாடியும்" என்றார். "ஆடியும்" என்பதை குரு முகாந்திரமே தெரிந்துகொள்ளல் வேண்டும்.
ஆடியும் என்பது அஞ்சலி (அம்+சலி = அழகிய அசைவு)
93.அன்பா லழுது மலறியு மாள்வானை
யென்புருகி யுள்ளே நினை.
(ஆள்வானை - ஆட்கொள்ளுஞ் சிவத்தை; நினை - சிந்தனை செய்) அன்பினாலழுதும், பதைபதைத்து அலறியும், எலும்புருக உடலுக்குள்ளே சிந்தனை செய்ய ஆள்வானை அடையலாம்.
அழுவது இரு வகை. உலக ஆசையைக்கொண்டு அழுவதொன்று. ஆன்மவினைக்கு அன்பினால் அழுவது மற்றொன்று.
அன்பினால் அழுவதை :
தாயுமானவர்:
"அன்பினாலுருகி விழிநீர் ஆறாகவாராத ஆவேச ஆசைக் கடற்குண் மூழ்கி" என்றும்,
மாணிக்கவாசகப் பெருமான்:
"அழலது கண்ட மெழுகதுபோலவும் தொழுதுள்ளமுருகி யழுதுடல்கம்பித் தாடியுமலறியும் பாடியும்பரவியும்" என்றும்,
"மெய்தானரும்பி விதிவிதிர்த்துன் விரையார்கழற்கென்
கைதன்றலைவைத்துக் கண்ணீர்ததும்பியுள்ளம்" என்றும், கூறினர்.
திருமூலர்:
"மலமென் றுடம்பை மதியாத வூமர்
தலமென்று வேறு தரித்தமை கண்டீர்
நலமென் றிதனையே நாடி யிருக்கிற்
பலமுள்ள காயத்திற் பற்றுமிவ் வண்டத்தே."
வேறு = சிறப்பு.
தலம் ஒன்று வேறு = வெவ்வேறு அண்டங்களில் பல்வகைப்பட்ட உடல்களை.
மானுட உடல் பிணிப்புறுத்து மலமாகும். இதை மதிப்பிற்குரிய பொருளென பலர் மதிப்பர். மலம் அருவருத்து ஒதுக்கவேண்டிய ஒன்று. ஆக, உடலையும் மலமென மதியாதோர் ஊமராவர். ஊமர், வாய்பேசும் வாய்ப்பு இல்லாதோராகையால், மக்களாய்ப் பிறந்தும் மாக்களெனத் திரிகின்றனர். உடலை இறை தங்கும் சிறப்புமிக்க தலமென நினைந்து நலமென நாடி இருப்போருக்கு, பல்வேறு அண்டங்களில் அவரவர் வினைக்கீடாகிய பயனை நுகர்வதற்குத் தக்க உடலைப் பெறுவர்.
94.பூசனை செய்து புகழ்ந்து மனங்கூர்ந்து
நேசத்தா லீசனைத் தேடு.
முக்கலையொன்றித்தலாம் பூசையை செய்து, ஆண்டவனின் அளவற்ற கருணையைப் புகழ்ந்து கூர்மையான பார்வையை மனத்துடன் பொருத்திச் சிவத்தைத் தேடு.
95.கண்ணா லுறப்பார்த்துக் காதலாற் றானோக்கில்
உண்ணுமே யீச னொளி.
ஈசனின் ஒளியை, யோகப் பயிற்ச்சியாளன் (சாதகன்) தன் கண்களால் அன்புற நோக்கில் சிவத்தை மறைக்கும் சைவ சமய மும்முடிச்சுக்களாம் முப்பொருள்களை (கிரந்தித்திரயங்களை) உண்டுவிடும்.
96.நல்லானப் பூசித்து நாதனென வுருகில்
நில்லதோ வீச னிலை.
சிவகலை நாதகலையோடு சேர்ந்து, ஒளியையும் கலையையும் வெளிப்படுத்தி நின்றால் ஈசனிருக்குமிடம் நிலைத்துப் புலப்படும்.
97.அடியார்க் கடியராயன் புருகித் தம்முள்
படியொன்றிப் பார்த்துக் கொளல்.
திருவடிகளைக்கொண்டு, அகத்தவம் செய்பவன், முக்கலையொன்றித்துப் பின் ஆதாரப்படிகளின் மீதேறியே உடலினுள் இருக்கும் சிவத்தைக் காணல் வேண்டும்.
திருமந்திரம்:
"ஆறந்த முங்கூடி யாகு முடம்பினிற்
கூறிய வாதார மற்றுங் குறிகொண்மி
னாறிய வக்கரம் ஐம்பதின் மேலே
யூறிய வாதாரத் தோரெழுத் தாமே"
ஆறந்தம் = கதி அடைவிக்கும் வழி = அத்துவாக்கள் ஆறு.
ஆறிய = அமைந்துள்ள. ஊறிய = அமுதம் ஊறுதற்குரிய.
ஓர் எழுத்து = பிரணவமாம் ஓங்காரம்.
சொல்லும் பொருளுமாகிய வழிகள் ஆறு. அவை முறையே எழுத்து மொழி மறை எனவும், உலகு கலன் (தத்துவம்) கலை எனவும் கூறப்படும். இவற்றால்தான் உடல் இயங்குகிறது. இதில் அமைந்துள்ள ஆறு நிலைக் களன்களிலும் வழிபடும் முறையறிந்து குறிகொண்டு(அசைவின்றி) வழிபடுங்கள். ஆங்கே அமைந்துள்ள அக்கரங்கள் ஐம்பதின்மேலும், அதன் மேல் அமைந்துள்ள மூலாதாரத்து எழுத்தாம் ஓமொழி (பிரணவம்) மிதிருந்தும் அமுது ஊறும்.
"நாலுமிரு மூன்று மீரைந்து மீராறுங்
கோலிமே நின்ற குறிகள் பதினாறு
மூலங்கண் டாங்கே முடிந்த விரண்டுங்
காலங்கண் டானடி காணலு மாமே."
நாலும் = நான்கு இதழ்கள் உள்ள மூலாதாரம்.
இருமூன்றும் = ஆறு இதழ்கள் உள்ள சுவாதிட்டானம்.
ஈரைந்தும் = பத்து இதழ்கள் உள்ள மணிபூரகம்.
ஈராறும் = பன்னிரண்டு இதழ்கள் உள்ள அனாகதம்.
பதினாறும் = பதினாறு இதழ்கள் உள்ள விசுத்தி.
இரண்டும் = இரு இதழ்கள் உள்ள ஆஞ்ஞை.
குறிகள் = அக்கரங்கள்.
காலங் கண்டான் = கால தத்துவத்தையே உண்டாக்கியவன்.
அகநிலைகளாம் ஆறாதாரங்கள்:
மூலம் = நான்கு இதழ்கள் = மூலாதாரம்
கொப்பூழ் = ஆறு இதழ்கள் = சுவாதிட்டானம்
மேல்வயிறு = பத்து இதழ்கள் = மணிபூரகம்
நெஞ்சம் = பன்னிரண்டு இதழ்கள் = அனாகதம்
மிடறு = பதினாறு இதழ்கள் = விசுத்தி
புருவநடு = இரு இதழ்கள் = ஆஞ்ஞை.
ஆறாதாரங்களுக்குரிய அக்கரங்கள் ஆராய்ந்து அமைக்கப்படும். இந்நிலைக் களங்களில் காலத்தைத் தோற்றுவித்துத் தொழில்படுத்தும் சிவனை நினைந்து வழிபட சிவத்திருவடி காணலாம்.
ஞானம் எட்டி: திருவள்ளுவர்:
காலைவட்ட மாலைவட்டமாகி நின்ற கதிர்மனையிற் கருதி முனையாடுஞ்சோதி நீலவட்டங்கொண்டெழுந்து கலையெண்ணான்கும் நின்றிலங்குமாக்கினையிலிதழிரண்டு ஞாலமதிலாதியந்தரூபமான நற்கமலமாயிரத்தெட்டிதழின் மேலும் ஆலவிடமுண்டசதாசிவனைப் போற்றி யம்பிகையின் கமலபாதமர்ச்சித்தேனே.
வட்டமாய் ஒளிவீசும் கதிரவனின் இருப்பிடத்திலே மந்திர(சுருதி)த்தின் முனையில் நீலவட்டமாய் நின்றாடுஞ் சோதி, 64கலைகளும் நிலைபெற்று விளங்கும் ஆக்கினையாம் இரண்டிதழிலும், உலகில் முதலும் முடிவுமான ஆயிரத்தெட்டிதழின் மீதும் வீற்றிருக்கும் ஆலகால விடமருந்திய சதாசிவனைப் போற்றி வணங்கி அம்பிகையின் தாமரையொத்த திருவடிகளை அருச்சித்தேனே.
98.ஈச னெனக்கருதி யெல்லா வுயிர்களையும்
நேசத்தால் நீ நினைந்துகொள்.
எல்லா உயிரினங்களையும் சிவகலை நிரம்பிய சீவர்கள் என்று அன்போடு நினைத்துக் கருணை புரியவேண்டும்.
99.மெய்ம்மயிர் கூரவிருப்புற்று வேர்த்தெழுந்து
பொய்ம்மையி லீசனைப் போற்று.
அகத்தவத்தால் மயிர்க்கூச்செறிய, வியர்த்து, அழுந்தி உணர்ந்தறிந்து பொய்மையிலாத ஈசனை வணங்கு.
100.செறிந்தறிந்து நாடிச் செவ்விதா யுள்ளே
அறிந்தரனை யாய்ந்து கொளல்.
திருவடிகளை (மனக் குகையின் கண்களை) ஒன்றோடு ஒன்று சேர்த்து, அதனால் செம்பொருளையறிந்து, அதையே இலக்காக வைத்துக்கொண்டு, உடலுக்குள்ளே உறைந்திருக்கும் அரனை மறைத்திருக்கும் மலங்களை நீக்கி உணர்ந்தறிவாய்.
எல்லாம் வல்ல இறையருளால், எனக்குத் தெரிந்தவரை, முடிந்தவரை எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் மூலத்தையும், பொருளையும் தந்திருக்கிறேன். தயவுசெய்து, குருமுகாந்திரமில்லாது நண்பர்கள் யாரும் முயற்ச்சிக்க வேண்டாம். இந்த ஒரு காரணத்திற்காகவே, முன்னோர்கள், இதை பிரும்ம இரகசியம் என்று கூறிவந்தனர்.
**********************************************************
முதலாம் அதிகாரம் "வீட்டுநெறிப் பால்" முற்றும்.
இரண்டாம் அதிகாரம் "திருவருட்பால்" தொடரும்.
**********************************************************
Sunday, December 30, 2007
ஞானக் குறள் - 10. பத்தியுடைமை (91-100)
Posted by ஞானவெட்டியான் at 10:50 AM
Labels: ஞானக் குறள்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
ஈசனை ஈரடியால் பூஜை புரிவீர்
வாசிக்க யாண்டுமே நன்று
அன்பு சாத்வீகன்,
நன்று! நன்று!!
எளிதில் புரியும் குறள்கள் ஐயா. எளிதில் உணர முடியுமா என்பது இறையருளைப் பொறுத்தது. நன்றிகள் ஐயா.
அன்பு குமரன்,
புரிந்தபின் முயலவேண்டியதுதான் நம் பணி.
முயற்சி "திருவினை"யாக்கும்.
திருவினை என்பதே முக்கலையை ஒன்றித் தவமிருத்தலாம்.
Post a Comment