ஞானக் குறள்
**************
2. திருவருட்பால் *******************
11. அருள் பெறுதல் (101-110)
*******************************
101.அருளினா லன்றி யகத்தறி வில்லை
அருளின் மலமறுக்க லாம்.
அருளினால் மும்மலங்களாகிய மூன்று முடிச்சுகளை (கிரந்தித்திரயங்களை) ஒழித்து அறிவாகிய பிரணவத்தையும் நிலைப்படுத்திக் கொள்ளலாம். “அருள்’ என்பது சிவம் வெளிப்பட்டு நிற்கையில் அதனிடத்தில் இருந்து வெளிப்படும் கலைகளே.
ஞானிகளின் நிலையடயாதோர் மும்மலங்களுடைய குணங்களையே வெளிப்படுத்துகிறார்கள். அவை ஆணவம், கன்மம், மாயை ஆம். இம்மூன்றுக்கும் மூலப்பொருள் முறையே உருத்திர முடிச்சு (கிரந்தி), விட்டுணு முடிச்சு (கிரந்தி), பிரம முடிச்சு (கிரந்தி) ஆகும். மூலப்பொருள்களை விட்டு, குணங்களை ஒழிக்க முயலுவோர் ஆகாயத்தை வெட்டப் பார்க்கிறவர்களே. ஆகையால் மும்முடிச்சுகளை அடையாளம் கண்டு ஒழித்தல் வேண்டும்.
திருமந்திரம்:
"ஆணவ மாயையுங் கன்மமு மாமலங்
காணும் முளைக்குத் தவிடுமி யான்மாவுந்
தாணுவை யொவ்வாமற் றண்டுல மாய்நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்துமே."
காணும் = முளைக்கின்ற. தாணு = சிவம்.
தண்டுலம் = அரிசி.
ஆணவம் உமியை ஒத்தது. மாயை தவிட்டை ஒத்தது. கன்மம் முளையை ஒக்கும். ஆருயிர் அரிசியை ஒக்கும். ஆவி கலப்புத் தன்மையால் சிவனுடன் பிரிவின்றி நின்றாலும் அரிசியை ஒக்குமேயன்றி சிவனை ஒவ்வாது. திருவருளால் உன்னுடைய பாசங்களை விலக்கிச் சிவபெருமானின் திருவடியை ஒன்றியிரு.
சிவஞான சித்தியார் :
"மும்மல நெல்லி னுக்கு முளையொடு தவிடுமிப்போல்
மம்மர்செய் தணுவி நுண்மை வடிவினை மறைத்து நின்று
பொய்ம்மைசெய் போகபந்த போத்திருத் துவங்கபண்ணும்
இம்மல மூன்றி னோடு மிருமல மிசைப்ப னின்னும்!"
102.இருளைக் கடிந்தின் றிறைவ னருளால்
தெருளும் சிவசிந்தை யால்.
மாயையாகிய பிரமமுடிச்சை நிலைப்பட்ட மனத்தாலும், சிந்தனையாலும் நீக்கிவிட்டால் சிவகலை சேர்ந்து வெளிப்பட்டு நிற்கும்.
பிரம முடிச்சு :
அஞ்ஞானம், இருள், அறிவின்மை, இச்சை (காமியம்)
விட்டுணு முடிச்சு :
உலக ஆசைகளாம் தீனி, யோனி, பொருள் ஆசை, ஆணவம்.
உருத்திர முடிச்சு :
உலகப் ஒளி, ஞான ஒளி, உலகாங்காரம், ஞானாங்காரம் (இம்மைக்கும் மறுமைக்கும் சேர்த்து)
103.வாய்மையாற் பொய்யா மனத்தினால் மாசற்ற
தூய்மையா மீச னருள்.
வாய்மையாம் உண்மை, அசைவற்ற(சலனமற்ற) மனம், மாசற்ற புனிதம், ஆகியவைகளினாலேயே சிவ அருளானது கலைவீச ஆரம்பிக்கும்.
104.ஒவ்வகத்து ணின்ற சிவனருள் பெற்றக்கால்
அவ்வகத்து ளானந்த மாம்.
ஓங்காரமாகிய பிரணவத்திற்குள் நிற்கின்ற சிவகலையை பெற்று அடைந்தால், அச்சிவ கலையினுள் பேரானந்தமாகிய இறைவன் இருக்கிறான்.
105.உன்னுங் கரும முடிக்கலா மொள்ளிதாய்
மன்னுமருள் பெற்றக் கால்.
நிலைபெற்ற, ஒளியுடைய சிவகலையை அடைந்தால் நாம் நினைக்கும் (வீடுபேறுக்குடைய) காரியங்களை முடித்துக் கொள்ளலாம்.
106.எல்லாப் பொருளு முடிக்கலா மீசன்றன்
தொல்லையருள் பெற்றக் கால்.
சிவனுடைய பழமையான மூலவித்தின் கலையை அறிந்தடைந்தால் எப்பொருளையுமடையலாம்.
"எல்லாப் பொருளும்” என்றதால் வீடுபேறுக்குடைய பொருளன்றி உலக வாழ்க்கைக்கு உரியபொருளையும் அடையலாம் என்பது ஒரு சிலரின் கருத்து.
107.சிந்தையு ணின்ற சிவனருள் பெற்றக்கால்
பந்தமாம் பாச மறும்.
சிவ உருவத்திலிருந்து வெளிக்கிளம்பும் அருட்கலையைப் பெற்றக்கால் சிந்தையாகிய மனத்தில் இருக்கும் பற்றுகள் நீங்கிவிடும்.
பற்றைத் தற்கால வேதாந்திகள் ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தையே மேற்கொண்டு மற்றவர்களையும் நம்ப வைக்கிறார்கள். அப்படிப் பேசுவோர் அதை ஒழித்துவிட்டதை வெளித் தோற்றத்தில் காட்டவில்லை. ஒரு வேட்டியைக் குளிருக்குப் போர்வையாகப் பாவித்தால்கூட, அதைப் பாதுகாக்க எண்ணம் உண்டாகும். ஆகையால் அது அவர்களால் முடியாதென்பது திண்ணம்.
பட்டினத்தார்:
"ஆற்றொடு தும்பை அணிந்தாடும் அம்பலவாணர் தம்மைப் போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில்
சோற்றாவி அற்றுச்சுகமற்றுச் சுற்றத் துணியும் அற்றே
ஏற்றாலும் பிச்சை கிடையாமல் ஏக்கற் றிருப்பர்களே.”
இந்நிலையடைந்தோரே பற்றை நீக்கியவராம். ஒழிக்கவியலாது.
108.மாசற்ற கொள்கை மதிபோலத்தான் றோன்றும்
ஈசனருள் பெற்றக் கால்.
சிவ அருளை ஒருவன் அடைந்தால் குற்றமற்ற அறிவானது சந்திர கலையின் நிறமதாகவே தோன்றும். சிவகலையை அறியாவிடின் அறிவாகிய பிரணவம் தோன்றாது. அறிவு தோன்றாவிடில் சிவகலையை அறியமுடியாது. சிந்திக்கை (மனனம்) ஒழியாவிட்டால் இரண்டையும் அறிய முடியாது. இவ்விரண்டையும் அறியாவிடில் மனதையடக்க இயலாது.
இதையே வாசிட்டம் :
“இனைய மூன்றுஞ் சமமாக வியற்றா ரெம்மட்டம் மட்டு
மனைய பதமெய்தா வருடமாயிரங்கள் சென்றாலும்
வினையில் காலஞ் சமமாக மிகுநாளியற்றின் மிகப்பலிக்கு
நினைவி லொன்றொன்றா வியற்றில் நிலை கூடா நிட்பலமாகும்.”
109.ஆவாவென் றோதியருள் பெற்றார்க் கல்லாது
தாவாதோ ஞான ஒளி.
அகார ஒலியினாலே கூறப்படும் சிவகலையை அடையச் செய்யவேண்டிய அகத்தவத்தைச் செய்து வாவெனக் கூறி, அருட்கலையாம் சிவகலையை அடைந்தவர்களுக்கு அறிவின் ஒளி தாவியெழுந்து வரும்.
செயல் இல்லையெனில் அருள் இல்லை என்பது முடிபு.
110.ஓவாச் சிவனருள் பெற்றா லுரையின்றித்
தாவாத வின்பந் தரும்.
மறைதலற்ற சிவ அருளையடைந்தால், குறைவில்லாக் குளிர்ந்த இன்பமடையலாம்.
திருமூலர்:
"ஒளியும் இருளும் ஒருகாலுந் தீரா
ஒளியுளோர்க் கன்றோ ஒழியா தொளியும்
ஒளியிருள் கண்டகண் போலவே றாயுள்
ஒளியிருள் நீங்க வுயிர்சிவ மாமே."
திருவருள் கிட்டாதோருக்கு ஒளியாகிய நினைப்பும் இருளாகிய மறைப்பும் ஒருகாலும் நீங்காது. திருவடி உணர்வு கைவரப்பெற்றவர்கட்கு சிவனை மறவா நினைவோடு இருப்பதால் மற்ற பொருட்களின் மீதுள்ள நினைப்பும் மறப்பும் அறிவுக்குத் தெரியாமல் நழுவிப் போகும். ஒளியோடு கூடிக் கண் ஒளியாகியும், இருளோடு கூடி இருளாயும் இருப்பதுபோல உயிர் சிவத்தின் முற்றுணர்வு எய்திச் சிவமாகவே நிற்கும்.
"அருளது வென்ற அகலிடம் ஒன்றும்
பொருளது வென்ற புகலிடம் ஒன்றும்
மருளது நீங்க மனம்புகுந் தானைத்
தெருளுறும் பின்னைச் சிவகதி யாமே."
மருள் = மயக்கம். அகலிடம் = பரவெளி.
உயிருடையவை, உயிரற்றவை அனைத்துக்கும் நிலைக் களமாக நின்றியக்குவது திருவருளே. ஆகவே அது அகலிடம் எனப்பட்டது. அத்திருவருளைத் திருமேனியாகக் கொண்டுள்ள மெய்ப்பொருளாகிய சிவம் ஒன்றே. அதுவே ஆருயிர் அனைத்துக்கும் புகலிடம். அச்சிவனால் உயிர்கட்கு மலத்தால் இருளும், மாயையால் மருளும், வினையால் இன்பதுன்பங்களும், இவற்றால் பிறப்பு இறப்பும் நேர்கிறது. இம்மலங்கள் நீங்கச் சிவன் மறவா நினைவை அருளித் தெருளாகிய உண்மைத் தெளிவை ஏற்படுத்தினான். இத்தெளிவுள்ள உயிர் சிவநிலையை எய்தும்.
"உண்டில்லை யென்னும் உலகத் தியல்வது
பண்டில்லை யென்னும் பரங்கதி யுண்டுகொல்
கண்டில்லை மானிடர் கண்ட கருத்துறில்
விண்டில்லை யுள்ளே விளக்கொளி யாகுமே."
உண்டில்லை = உலகம் உண்டு, இல்லை என வாதாடும் உலகில்.
பண்டு = கேவல நிலை. பரங்கதி = முத்திநிலை. கண்டில்லை மானிடர் = இதுவரை காணாத மானிடர்.
கண்ட கருத்து = அறிந்த அறிவு. விண்டு = உரைக்க.
சுட்டியுணரப்படும் உலகம் உண்டு எனவும், இல்லை; இது கானல் நீர் எனவும் வாதாடிக் கொண்டிருக்கும் இவ்வுலகில், இருள் மலத்துடன் கூடிய புலம்பு நிலையில் உயிர்கள் உள்ளன. புலம்பு நிலையும், புணர்வு நிலையுங் கடந்த புரிவு நிலையாம் திருவடிப் பேறு இல்லையோவென ஐயுற்று நின்றன. ஏனைப் பொருள்களைப்போல் சுட்டுணர்வு சிற்றுயிர்களுக்கு எட்டாது. அத்திருவடிப் பேறு மானிடர்களுக்கும் மற்ற ஒரு சில உயிர்கட்கு மட்டுமே கிட்டும். சிவத்தைக் கண்டேன் என்றால் அது உண்மையாக இருக்க ஒண்ணாது. அத் திருவடிப் பேறு சொல்லவியலா அறிவுப் பேரொளியாம்; அது உயிர்களின் அகத்தே அமர்ந்துள்ளது.
4 Comments:
நன்றிகள். உங்கள் பணிக்கு இறையருள்
கூடட்டும்.
என்றென்றும் அன்புடன்,
பா.ராமச்சந்திரன்.
அன்பு பா.இரமசந்திரன்,
வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி
எளிமையும் ஆழமும் அழகும் நிறைந்த உரைகள் ஐயா.
தங்கள் அரும் பணி சிறக்கட்டும் அகிலம் பயனுறட்டும் என வணங்கி நிற்கிறேன். வாழ்க நீங்களும் உங்கள் குலமும் சுற்றமும் பல்லாண்டு பல்லாண்டு. எத்தனை தொடர்ந்து எழுதுகிறீர்கள். எவ்வளவு நினைந்து நினைந்து அதில் தோய்ந்து உருகியுள்ளீர்கள் என்பதனை பார்க்கும் போது சிலிர்க்கிறது.
வணக்கங்களுடன்
அரவிந்தன் நீலகண்டன்
அன்பு நீலகண்டன்,
தங்களின் உள்ளன்புக்கு நன்றி.
Post a Comment