ஞானக் குறள்
**************
2. திருவருட்பால்
********************
12. நினைப்புறுதல் (111 - 120)
********************************
111.கருத்துறப் பார்த்துக் கலங்காம லுள்ளத்
திருத்திச் சிவனை நினை.
அசைவையொழித்துப் (கலங்காமல்) பார்வையால் உள்ளத்தில் எண்ணங்களை நிலைநிறுத்திக் கருத்தினில் சதா சதாசிவனை நினை.
112.குண்டலியி னுள்ளே குறித்தரனைச் சிந்தித்து
மண்டலங்கள் மேலாகப் பார்.
ஓங்காரமாம் பிரணவத்தின் நடுவில் முக்கலையொன்றி அதன் மேல் ஊன்றிப்பார்.
வாசிட்டம்:
“ஆந்திர வேட்டனிகை யென்றோர் தனிநாடி நாடி கணூரணுகி நிற்கும்
வாய்ந்தவிசை வீணையுடல் வட்டம்போனீர்ச் சுழிபோல வட்டமேயா
யேயந்துள தானங்களெலா மெய்தலுறு மயனிடத்து மெரும்பின்பாலும்
போந்துள பல்லுயிரிடத்து முடறோறுந் தோன்றியே பொருந்திநிற்கும்.”
113.ஓர்மின்கள் சிந்தையி லொன்றச் சிவன்றன்னைப்
பார்மின் பழம்பொரு ளேயாம்.
மூல வித்தாகிய விந்துகலையைக் கொண்டு நினைவில் முக்கலையொன்றித்தால் சிவத்தைக் காணலாம். இதுவே அகத்தவமாம்.
திருமந்திரம்:
“விந்துவு நாதமு மேவியுடன் கூறூச்
சந்திர னோடே தலைப்படு மாயிடி
லந்தர வானத் தமுதம் வந்தூறிடு
மங்குதி மந்திர மாகுதி யாகுமே.”
சந்திரன் = இடகலை.
அங்குதி மந்திரம் = அப்போது உண்டாகும் உறுதிப்பாடு.
விந்துவும் நாதமும் திருவருளால் பொருந்தி உடன் கூடித் திங்களுடன் வழிப்பட்டு முன்னேறுமாயின் ஆயிரவிதழ்த் தாமரையாம் பரவெளியிலிருந்து ஊற்றெடுத்து அமுதம் வெள்ளம்போல் இடைவிடாது பெருகும். திருவெழுத்து மந்திரமே அவ்விடத்து ஆகுதியாம்(யாகம் வளர்த்து முடியும் தருவாயில் இறைக்கு அளிக்கும் விருந்து).
"விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
வந்தைப் பல்லுயிர் மன்னுயி ருக்கெல்லாம்
அந்தமும் ஆதியு மாமந் திரங்களும்
விந்து அடங்க விளையுஞ் சிவோகமே."
விந்துவும் நாதமும் கட்டுப்பட்டு விளைய விளைந்தது உயர்திணை. திருவருளால் தோன்றிய பல உயிர்கட்குள்ளும் ஆறறிவு நிறைந்தது உயர்திணை. உயிர்கட்கு முதலும் முடிவுமாகிய அருந்தமிழ் மந்திரம் இரண்டு. அவை: "சிவசிவ"; "நமசிவய". இம் மந்திர வலிவால் விந்துவை கட்டியவர்களுக்கு சிவோகமே விளையும்.
"சாற்றிய விந்து சயமாகுஞ் சத்தியால்
ஏற்றிய மூலத் தழலை யெழமூட்டி
நாற்றிசை யோடா நடுநாடி நாதத்தோ
டாற்றி யமுதம் அருந்தவிந் தாமே."
விந்து சயம் = விந்துக் கட்டு.
விந்து = சுக்கிலம், வெண்ணீர்.
நாதம் = இந்திரியம்.
நடு நாடி=சுழுமுனை.
சயம் = சாரம்.
சத்தி = விந்து சத்தி.
விந்து சத்தியால் ஏற்றிய மூல அக்கினியை எப்புறமும் நழுவவிடாது நடுநாடியில் ஏற்ற முற்றிய அமுதம் கீழிறங்கும்.
"மேலா நிலத்தெழு விந்துவும் நாதமுங்
கோலால் நடத்திக் குறிவழி யேசென்று
பாலாம் அமிர்துண்டு பற்றப் பற்றினால்
மாலா னதுமாள மாளுமவ் விந்துவே."
மேலா நிலம் = தலை.
கோலால் = காலாம் காற்றால்.
குறி = ஞானாசிரியன் குறிப்பிட்டபடி.
மாலானது = இருளாம் மருளானது.
மாளும் = கட்டுப்படும்.
மேல் நிலமாம் தலையில் உதிக்கும் விந்துவையும் நாதத்தையும் காலால் நடத்திக் குறிக்குள்ளே சென்றால் ஊறும் அமுதத்தை உண்டு, பற்ற வேண்டியதைப் பற்றினால் இருளாகிய மருள் கட்டுக்குள் வரும்.
114.சிக்கெனத் தேர்ந்துகொள் சிந்தையி லீசனை
மிக்க மலத்தை விடு.
ஞானாசிரியனைக் கண்டுகொண்டு, தன் மலங்களை ஒழித்துப் பின் அவனிடமிருந்து அகத்தவம் செய்யும் முறையைக் கற்று அதன்படி செய்து தேர்ச்சியுற்றால் சிவத்தையடையலாம்.
திருமந்திரம்:
“சுழற்றிக் கொடுக்கவே சுத்தி கழியுங்
கழற்றி மலத்தை கமலத்தைப் பூரித்
துழற்றிக் கொடுக்கு முபாய மறிவார்க்கு
அழற்றித் தவிர்ந்துட லஞ்சன மாமே.”
சுழற்றிக் கொடுக்க = பூரகம், இரேசம் செய்ய.
சுத்தி = புடம்.
உழற்றி = சுழன்றுவரச் செய்து.
அஞ்சனம் = சிவத்தைக் காட்டும் மை.
வளிப்பயிற்சியால் சுடச்சுடரும் பொன்போல் அருள் ஒளிமிகும். அதனால் மலம் கழலும்; நெஞ்சத் தாமரை பொலிவுறும். எழுபத்தீராயிரம் நாடிகளிலும் வளி சுழன்றுவரும் வழியை அறிந்தவர்க்கு உடல் சிவத்தைக் காட்டும் அஞ்சனமாகும்.
"திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே."
திருவடி உணர்வு உயிர்களை மும்மலப் பிணிப்பினின்றும் முழுமையாய் விடுவிக்கும். அவ்வுணர்வே கிடைத்தற்கரிய திருவருட் சித்திகளை கிடைக்கச் செய்யும். அதுவே சிவலோகம் சேர்க்கும். அவ்வுணர்வே சிவம்.
"கழலார் கமலத் திருவடி என்னும்
நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா
அழல்சேரும் அங்கியுள் ஆதிப் பிரானுங்
குழல்சேரும் மின்னுயிர்க் கூடுங் குலைத்ததே."
கழலணிந்த செந்தாமரையைப் போன்ற திருவடி உடையவன். என்றும் பொன்றாப் பொருள் நிழல் சேரப்பெற்றோன். நெடிய திருமாலும் காணவியலா அழல் வண்ணணாய் எழுந்தருளியவன். அவனே அம்மையுடன் கூடி உயிருக்குயிராய், உயிரில் உணர்வாய் நிற்பவன். இந்நிலையில், என் உயிரைத் தாங்கிய உடலும் நீங்கிற்று.
115.அறமின்கள் சிந்தையி லாதாரத் தைச்சேர்ந்
துறுமின்க ளும்முளே யோர்ந்து.
நினைவினில் கலைகளையொன்றித்து உள்ளே எழும் ஒளிவெள்ளத்தில் உள்ளே நடப்பதை அறி.
116.நித்தம் நினைத்திரங்கி நின்மலனையொன்றுவிக்கில்
முற்றுமவ னொளியே யாம்.
இந்திரிய சத்திகளை பிரணவத்தில் ஒன்றுவிக்கில் சிவக்கலையாகிய சக்தி பலம்பெறும்.
117.ஓசை யுணர்ந்தங்கே யுணர்வைப் பெறும்பரிசால்
ஈசன் கருத்தா யிரு.
அறிவை அடையும் முயற்சியில், அநாகத சத்தத்தை யுணர்ந்து, சதா சிவசிந்தனையில் நில்.
118.இராப் பகலன்றி யிருசுடர்ச் சிந்திக்கில்
பராபரத்தோ டொன்றலு மாம்.
எல்லாக் காலத்தேயும் சூரிய சந்திர கலைகளைச் சந்தித்து சிந்திக்கில் சிவமாகிய பராபரத்தை அடையலாம்.
119.மிக்க மனத்தால் மிகநினந்து சிந்திக்கில்
ஒக்க சிவனுருவ மாம்.
ஒருமித்த மனத்தால் திருவைந்தெழுத்தையே நினைந்து நினைந்து சிவசிந்தனையொடு வாழ சிவனுரு வெளிப்படும்.
“சிந்தனை புரஞ்செலா சிவோகம் பாவனை
சந்தத முஞற்றிடில் சமாதி வந்துறும்.”
120.வேண்டுவோர் வேண்டும் வகைதான் விரிந்தெங்கும்
காண்டற் கரிதாஞ் சிவம்.
பார்ப்பதற்கு அரிதாகிய சிவம் ஞானசித்தியடைந்தவர்கள் நினைத்தபடி எத்திக்கும் பரவி நிற்கும்.
Sunday, December 30, 2007
ஞானக் குறள் - 12. நினைப்புறுதல் (111 - 120)
Posted by ஞானவெட்டியான் at 11:11 AM
Labels: ஞானக் குறள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment