ஞானக் குறள்
***************
1. வீட்டுநெறிப்பால்
*********************
8. அர்ச்சனை (71-80)
********************
(அருச்சனை = பூசிக்கும் முறை. = கலைகளைப் பிரகாசம் பெற வைப்பதே. இதை அருட்சுனை என்றும் ஞானியர் கூறுவர்.)
71. மண்டலங்கள் மூன்று மருவவுட நிறுத்தி
அண்டரனை யர்ச்சிக்கு மாறு.
அண்டரனை = கண்ணுக்குள் இருக்கும் சிவனாகிய சீவனை.
சூரிய, சந்திர, தீ மண்டலங்களை ஒருங்கிணைத்துத் (முக்கலையையும் ஒன்று சேர்த்து) தான் கண்ணுக்குள் இருக்கும் சிவனாகிய சீவனை அருச்சிக்கமுடியும்.
72. ஆசனத்தைக் கட்டியரன் றன்னை யர்ச்சித்து
பூசனைசெய் துள்ளே புணர்.
ஆன்மா இருக்குமிடத்தை கட்டி உடலுக்குள்ளே முக்கலையையும் ஒன்று சேர்க்கும் (புணரும்) அகத்தவத்தைச் செய்து அரனையருச்சித்து பூசை செய்.
73. உள்ளமே பீடமுணர்வே சிவலிங்கத்
தெள்ளிய ரர்ச்சிக்கு மாறு.
மனத்தையே பீடமாகவும், அறிவின் தெளிவாகிய உணர்வையே சிவலிங்கமாகவும் உணர்ந்து, தெள்ளிய அறிவையுடைய ஞானியர் பூசை செய்யும் முறையாகும்.
74. ஆதாரத்துள்ளே யறிந்து சிவனுருவைப்
பேதமற வர்ச்சிக்கு மாறு.
மூலாதாரத்துள்ளே சீவனிருக்குமிடம் அறிந்து, ஐம்பூதங்களின் வினைகளால் பேதமேதும் வராது அருச்சிக்கவேண்டும்.
75. பூரித்திருந்து புணர்ந்து சிவனுருவைப்
பாரித்தங் கர்ச்சிக்கு மாறு.
ரேசக, கும்ப, பூரக வினைகளினால் ஓங்கார உச்சியாம் கருத்தினில் வெளிப்பட்ட சீவனின் உருவை, கருத்திலேயே அசையாது வைத்து நிறுத்தி் அருச்சனை செய்.
இங்கு சீவனின் உருவைக் காண இயலாது. உயிர்க்காற்றின் ஓட்டத்தைமட்டுமே உணர இயலும். அதுவே சீவனின் உரு.
76.விளக்குறு சிந்தையான் மெய்ப்பொருளைக் கண்டு
துளக்கற வர்ச்சிக்கு மாறு.
யோகப் பயிற்சியால் தெளிவுற்று அசைவற்ற களங்கமற்ற மனத்துடன் அசைவற்ற கண்களால் உடலிலுள்ள (இரு+உதய) இருதய குகையிலுள்ள சீவனைக் கண்டு அருச்சனை செய்வதே சாலச் சிறந்த வழி.
77. பிண்டதினுள்ளே பேரா திறைவனைக்
கண்டுதா னர்ச்சிக்கு மாறு.
கபாலக்குகையில் உள்ள கண்களுக்குள்ளே (பிண்டதினுள்ளே) உள்ள சீவனைக் கண்டு அசையவிடாது கட்டி அதனுள் நிலைத்துப் பூசிப்பதே சிறந்த வழி. சிவமாகிய சீவன் தோன்றி மறையும் குணமுள்ளவன் என்பதால், அசையவிடாது கட்ட வேண்டுமென்பதை “பேராதிறைவனை” என்றார்.
திருமூலர் :
“ஒண்ணா நயனத்திலுற்ற வொளி தன்னை
கண்ணாரப் பார்த்து கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண்டிட வோடிப்
பண்ணாம நின்றது பார்க்கலுமாமே.”
ஒண்ணா நயனம் = ஞானக் கண். விண்ணாறு = ஆநந்தக் கண்ணீர்.
பண்ணாமல் நின்றது = தானாகிய தூய சிவம்.
பார்க்கலும் = உணர்த்த உணர்ந்து வழிபடுதல்.
புருவ நடுவினை ஊசிப்பார்வையால் உற்று நோக்கி, முக்கலைகளையும் கலந்து நினைவினில் நிற்க, யோக ஊற்று திறந்து யோகக் கண்ணீராம் ஆநந்தக் கண்ணீர் வெளி வந்து ஓடும். மெய்யுணர்வு வெளிப்படும். தூய சிவமாகிய சீவனைக் கண்டு வழிபட இயலும்.
“புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின் மலமாக்கி(நிர்மலமாக்கி)
லுறுப்புச் சிவக்கும் ரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே.”
நெறிப்பட = முறைப்படி.
உள்ளிருந்து வெளிவந்து மீண்டும் உள்ளே சென்று ஊடாடித் திரியும் உயிர்ப்பை மூச்சுப் பயிற்சியால் தடுத்து உள்நிறுத்தி, அருளால் தூய்மையாக்கி வாழவல்லார்க்கு உடல் பொன்மேனியாகும். உயிருக்கு உயிராய் உடலில் நின்றாடும். பின்னல் சடைப் பெம்மானும் நிலைபெற்று நிற்பன். நிலைபெற்று நிற்பதால் உயிர் அழியாது; உடலும் அழியாது.
ஓளவை கூறிய பிண்டமும், நெறிப்பட வுள்ளே எனத் திருமூலர் கூறியதும் பிரிவைக் காட்டும் இரு கண்களே. இதைவிடத் தெளிவாகப் பிரும்ம இரகசியத்தை வெளிப்படுத்த இயலாது.
இன்னும், மாணிக்கவாசகப் பெம்மான் :
“சிந்தனை நின்றனக்காக்கி நாயினேன்றன் கண்ணினைநின் ...........றிருப்பாதப் போதுக்காக்கி
வந்தனையு மமலர்க்கே யாக்கிவாக்குள்(ஆதத்துடைய - சூரத்துள்) ..........மணி வார்த்தைக் காக்கியும் புலன்களார
வந்தனை யாடகொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் ..........பெருங்கடலே மலையேயுன்னைத்
தந்தனை செந்தாமரைக் காடனையமேனித் தனிச் சுடரே
................யிரண்டுமிலிதனிய னேற்க்கே.”
ஈண்டு, இரண்டுமிலை யென்பதை இம்மெய், மறுமெய் எனவும், தூல சூக்குமமெனவும் கொள்ளலாமென்பர் ஆன்றோர்.
78. மந்திரங்களெல்லா மயங்காம லுண்ணினைந்து
முந்தரனை யர்ச்சிக்கு மாறு.
“எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்” என்பதற்கிணங்க, எழுத்தாகிய மன்+திறங்களையும், எண்ணாகிய எண்ணிக்கையையும் ஓதி உணர்ந்து, அண்டத்தில் உள்ளவற்றில் கருத்தை செலுத்தாது, பிண்டத்தில் அந்த மந்திரங்களின் பொருளுணர்ந்து அகத்தவத்தால் அருச்சிக்க சிவமாகிய சீவன் வெளிப்படும்.
79. பேராக்கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந்
தாராதனை செய்யு மாறு.
வெட்டாத சக்கரமாம் பிரிவுபட்ட கண்களினால் கபாலக் குகையினுள்ளே அசைவற்ற மனத்தையும், நினைவையும் ஒன்றாகக் கருத்தில் கலந்து அகத்தவம் செய்தலே பிறப்பறுக்கும் வழி.
80. உள்ளத்தினுள்ளே யுறப்பார்த்தங் கொண் சுடரை
மெள்ளத்தா னர்ச்சிக்கு மாறு.
அசைவற்ற நினைவினால், கருத்தையொருமித்து (கண்பொருந்தி) பிண்டத்தில் உள்ளே நினைவைச் செலுத்தி அகத்தவம் செய்ய சீவமாகிய ஒளிச்சுடர் ஒளிவீசிக் கிளர்த்தெழும். அவ்விடத்தே ஞானவினையால் அருச்சனை செய்தலே ஆன்மவழியாம்.
கீழ்க்கண்ட பாடல்களையும் கருத்தில் கொண்டால் இரகசிய இடமும், தன்+திறமும் தெரியவரும் :
திருமூலர் :
"நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று
பாவிக ளகத்தின் பயனறி வாரில்லை
ஓவிய ராலும் அறியவொண் ணாதது
தேவியுந் தானுந் திகழ்ந்திருந் தானே."
நாவி = நாபி; கொப்பூழ். பாவிகள் = தீவினையாளர்.
ஓவியர் = படைப்போன் முதலிய தேவர்.
கொப்பூழின்கீழ் முலத்தே திகழும் ஒரு நல்ல எழுத்து ஓங்காரம். சிவசிவ எனச் சொல்லாத தீவினையாளர் இதன் பயனை அறியார். படைப்போன் முதலிய தேவர்களாலும் அறிதல் அரிது. அம்மையொடு அப்பனும் ஆங்கே திகழ்கிறான்.
"நீரில் எழுத்திவ் வுலக ரறிவது
வானில் எழுத்தொன்று கண்டறி வாரில்லை
யாரிவ் வெழுத்தை அறிவா ரவர்கள்
ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே."
நீரில் எழுத்து = நிலையற்றது. அறிவது = பலுக்குவது.
வானில் எழுத்து = பிரணவம்.
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கும் உலக உயிர்கள் நீர்மேல் எழுத்துப்போல் நிலையற்ற பொருள்களையே உணர்வர். திருச்சிற்றம்பலமாகிய பரவெளியில் ஒலிக்கும் ஓங்கார நிலை எழுத்தை உள்ளபடி பலுக்கி உணர்வாரில்லை. இவ்வோங்காரத்தை உணரவல்ல அடியார்கள் தலையெழுத்தாம் ஊழை உள்ளத்தில் உணரார்.
"அகார வுகார சிகார நடுவாய்
வகார மோடாறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவன் சிந்தை செய்ய
ஒகார முதல்வ னுவந்து நின்றானே."
அகரமோடாறும் = பிரணவத்தோடு கூடிய சிவமந்திரமாம் "சிவயநம" (ஓம்நமசிவய = சடாக்கரம்).
அகர உகரம் ஓங்காரத்தைக் குறிக்கிறது. சிகர வகரம் திருவைந்தெழுத்தாம் "நமசிவய"வைக் குறிக்கிறது. இவையிரண்டுமே ஆறெழுத்து மந்திரம். "சிவ சிவ" என இடைவிடாது உயிர்ப்புடன் எண்ணிக் காலை(காற்றை)ப் பிடிக்கும் கணக்கை அறிந்து வளிப்பயிற்சி செய்தால் ஓங்கார முதலாம் சிவன் தோன்றுவான்.
"அவ்வென்ற போதினி லுவ்வெழுத் தாலித்தா
லுவ்வென்ற முத்தி யுருகிக் கலந்திடு
மவ்வென்ற னுள்ளே வழிபட்ட நந்தியை
யெவ்வணஞ் சொல்லுகே னெந்தை யியற்கையே."
உவ் = நடு இடம்.
அகரத்துடன் உகரத்தையும் சேர்த்து உடலினுள்ளே ஒலித்து (நடுக்குறிப்பாம் "உவ்") அக்கினி கலையை மற்ற கலைகளுடன் கலந்தால் வீடு பேறு அடையலாம். "மவ்" எனும் மனத்தினிலே விளங்கும் நந்தியாகிய சிவம் முன்னின்று வழிப்படுத்தும். எந்தை சிவபெருமான் அருளுவதை எங்ஙனம் இயம்புவேன்.
"அவ்வொடு சவ்வென் றரனுற்ற மந்திரம்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிகிலர்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிந்தபின்
அவ்வொடு சவ்வும் அனாதியு மாமே."
அகரமும் சகரமும் அரனுக்குறிய மந்திரமாம். அகரத்துடன் கூடிய சகரமாகிய "ச" என்னும் மறையினை எல்லோரும் அறிந்தபின், அகர சகரங்கள் அநாதியாகிய தொன்மை உடையதாம். மகரத்துடன் கூடிய சகரம் = சம். அதாவது "அசம்". இதுவே அசபை ஆயிற்று. அசபை எனில் தவத்தில் ஒலிக்கப்படாதது.
Sunday, December 30, 2007
ஞானக் குறள் - 8. அர்ச்சனை (71-80)
Posted by ஞானவெட்டியான் at 9:51 AM
Labels: ஞானக் குறள்
Subscribe to:
Post Comments (Atom)







0 Comments:
Post a Comment