ஞானக் குறள்
***************
1. வீட்டுநெறிப்பால்
*********************
7. அமுததாரணை (61-70)
*************************
61. அண்ணாக்குத் தன்னையடைத் தங்கமிர் துண்ணில்
விண்ணோர்க்கு வேந்தனு மாம்.
இப்பத்துக் குறளிலும் நம் உடலில் அமுதம் சுரக்கும் இடத்தைக் குறித்தே எழுதி வைத்துள்ளார்கள்.
ஐந்து இடங்களில் அமுதம் சுரக்கும் :
அமுதம் - நாவின் நுனி:- பக்குவ ஞானத்தால், சிருட்டி வல்லப நினைவால் - இனிப்புள்ள ஊற்று நீர்
புவனாமுதம் - நாவின் நடுவில்:பக்குவ கிரியையாலும் ஞானநிலை நினைவின் உணர்வாலும் - இளகின இனிப்பான சக்கரைப் பாகு.
மண்டலாமுதம் - நாவின் அடியில் :பக்குவ இச்சை, சம்மர உணர்வின் தன்மையாலும் - குழம்பிய சக்கரைப் பாகு.
ரகசியாமுதம் - உள்நாவினடியில் : முதிர்ந்த சக்கரைப் பாகு.
மவு(மெள)னாமுதம் - உண்ணாக்குக்கு மேல் : பக்குவ அருள்(அனுக்கிரகம்). சுபாவத்தின் அனுபவம் - துரியநிலை - வெகு இனிப்புள்ள குளிர்ந்த மணிக்கட்டி.
அண்ட அமுதம் : அக அமுதம்,அகப்புற அமுதம்,புற அமுதம், புறப்புற அமுதம் (மழை)
பிண்டஅமுதம்: அக அமுதம்,அகப்புற அமுதம், புற அமுதம், புறப்புற அமுதம் (வியர்வை).
மனத்தையும், நோக்கையும் (பார்வை) ஒருமுகப்படுத்தி ஓங்காரத்தினுச்சியில் உள்ள நாக்கின் மத்தியிலே நிலைத்து நிற்க அமுதம் சுரக்கும். அதை உண்டு விட்டால் விண்ணோர்களுக்கு வேந்தனாகலாம்.
மணிவாசகப்பெருமான்:
"மாயவாழ்க்கையைமெய்யென்றெண்ணி மதித்திடாவகை நல்கின் வேயதோளுமை பங்கனெங்கடிருப்பெருந் துறை மேவினான் காயத்துள்ள முதூறவூரநீ கண்டுகொள் ளென்று காட்டிய சேயமாமலர் சேவடிக் கணஞ் சென்னி மன்னித் திகழுமே.”
தாயுமானவர் :
“மர்மர்ச் சோலைநெறி நன்னீழன் மலையாதி
.........மன்னுமுனிவர்க் கேவலாய்
மந்திரமாலிகை சொல்லுமியம நியமாதியா
.........மார்க்கத்தி நின்றுகொண்டு
கருவுருகாயத்தை நிர்மலமதாகவே
.........கமலாச னாதி சேர்த்துக்
காலைப்பிடித்தனலை யும்மைகுண்டலியடிக்
.........கலைமதி னூடுதாக்கி
உருகிவருமமுர் தத்தை யுண்டுறங்காமல்
........உணர்வான விழியைநாடி
ஒன்றோடி ரண்டெனாச் சமரசசொரூபசுக
........முற்றிடவென் மனதின் வண்ணம்
திருவருள்முடிகவித் தேகமொடு காண்பனோ
.........தேடரிய சத்தாகியென்
சித்தமிசைக் குடிகொண்ட வறிவான தெய்வமே
.........தேசோ மயாநந்தமே.”
62. ஈரெண் கலையி னிறைந்தவமிர் துண்ணில்
பூரண மாகும் பொலிந்து.
பதினாறு கலைகளுடைய (தூலத்தில் திருமால்) சந்திரனிடம் நிறைந்துள்ள அமிர்தத்தை உண்டதேகம் பொலிந்து ஒளி வீசும்.
63. ஓங்காரமான கலசத்தமிர் துண்ணில்
போங்காலமில்லை புரிந்து.
ஞானவினையினால் (முக்கலையொன்றித்தல்) பிரணவ உருவாகிய கபாலக் குகையில் உள்ள கலசத்திலிருந்து அமிர்தமுண்ணில் மரணமில்லை. இதைச் சாகாக் கலையென்பர்.
64. ஆனகலசத் தமிர்தை யறிந்துண்ணில்
போனகம் வேண்டாமற் போம்.
போனகம் =உணவு =போசனம் =ஆகாரம்
எட்டடுக்குக் கமலத்தினடுவில் உள்ள அமுதத்தைக் கண்டு உண்டால் உணவின் தேட்டை இல்லை.
திருமூலர் :
“ஆறேயருவி யகங்குள மொன்றுண்டு
நூறேசிவகதி னுண்ணிது வண்ணமுங்
கூறேகுவிமுலைக் கொம்பனை யாளொடும்
வேறேயிருக்கும் விழுப்பொருள் தா(னன்றே)னே.”
ஆறேஅருவி = சிவநெறியே அமுதப் பெருக்கு. அகம் = உள்ளம்.
நூறே சிவகதி = அளவிலா ஆனந்தம்.
கூறே = பாகத்தில் உள்ள.
உடலில் அமுதப் பெருக்காகிய அருவி ஒன்றுண்டு. அது சேருமிடம் நெஞ்சக்குளமாம். அங்கு திகழ்வது அளவிலாச் சிவநிலையாம். ஆங்கே குவிந்தமுலையுடைய அம்மையை கூறாகக் கொண்டு அப்பன் வீற்றுள்ளான். அவனே விழுப்பொருள்.
“ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல்
ஆறின்றிப் பாயும் அருங்குள மொன்றுண்டு
சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்
பூவின்றிச் சூடான் புரிசடை யோனன்றே.”
உயர்வரை உச்சி = உச்சியில் உள்ள ஆஞ்ஞை.
பாயும் = நீர் நிரம்பும்.
தாமரை = சகசிர அறையெனப்படும் ஆணையிடம் என்பர்.
உடலின் உச்சியிடமாம் தலைக்குள் ஆற்றுநீர் ஓடி நிரம்பாத அருட்குளம் ஒன்று உண்டு. அதுவும் சேறில்லாத குளம். அதிலே பூத்த செழுங்கொடித் தாமரையை மட்டுமே புரிசடையோன் சூடிக் கொள்வான். தலையில் நீர் நிரம்பிய சேறற்ற குளம் கண்ணாகிய திருவடியே. அதன் வழியாகப் பூக்கும் அருள் தாமரையை மட்டும்தான் சிவன் சூடிக் கொள்வான்.
“ஒருங்கிய பூவுமோ ரெட்டித ழாகும்
மருங்கிய மயாபுரிய தனுள்ளே
சுருங்கிய தண்டின் சுழினையினூடே
யொருங்கிய சோதியையோர்ந் தெழுமுய்ந்தே.”
ஒருங்கிய = சேர்ந்துள்ள.
மருங்கிய = பெருமையுடைய.
மாயாபுரி = உடல்.
தண்டு = முதுகுத் தண்டு எலும்பு, வீணாத்தண்டு.
எட்டிதழ்த் தாமரை = நெஞ்சத் தாமரை.
பெருமைமிக்க மாயாபுரி என்னும் இவ்வுடலில் உள்ள முதுகு எலும்புக்குள் ஓடும் நுண்ணிய சுழுமுனை நாடியை அகத்தவத்தால் எழுப்புங்கள். அதுவே உயிர் உய்ய வழியாம்.
65. ஊறுமமிர்தத்தை யுண்டியுறப் பார்க்கில்
கூறும் பிறப்பறுக்க லாம்.
சிவக் கருவூலமாகிய பிரணவவுச்சியை அகத்தவத்தில் கண்டபடி பார்க்க ஊறிவரும் அமுதத்தை உண்ண நூல்களில் கூறப்பட்டுள்ள (எண்ணப்)பிறப்பைத் தவிர்க்கலாம் (அறுக்கலாம், முக்தியடைந்தால்)
66. ஞான வொளிவிளக்கா னல்லவமிர் துண்ணில்
ஆன சிவ யோகி யாம்.
ஈங்கு, சிவராசயோகி யார்? என்பதிற்கு இலக்கணங் கூறப்பட்டு உள்ளது. ஆன்ம ஒளியினாலுண்டாகும் அமுதம் உண்ணில் அங்ஙனமுண்டவனே சிவராச யோகியாவான்.
67. மேலையமிர்தை விளங்காமற்றா னுண்ணில்
காலனை வஞ்சிக்க லாம்.
பேரண்டப் பெருவெளியிலிருந்து சூரியகலையிலிருந்து கீழே இறங்கும் அமுதத்தை ஐம்பூதங்களின் பரிசத்திற்கு இடம் கொடாமல் (விளங்காமல்) உண்டால் எமனை ஏமாற்றலாம், மரணத்தைத் தள்ளிப்போடலாம்.
“பிராம்மண கர்மாவில் வேதசம்பந்தமானது, சூரியனிடத்தே இருந்து மூன்று உளுந்து அளவு நீரை வரவழைத்து, சுவீகரிக்க வேண்டும்” என வேதாந்தம் கூறுகிறது.
இங்கு விளங்காமல் என்பதற்கு இன்னுமொரு விளக்கம்:
சூரியகலையிலிருந்து வருவதால் வந்தவுடன் ஆவியாகி விடும் என்றும் அதை உடனே காலதாமதம் செய்யாமல் உண்ண வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
68. காலன லூக்கங் கலந்த வமிர்துண்ணில்
ஞான மதுவா நயந்து.
ஊக்கம் = பிரணவ உச்சி.
பிரணவ உச்சியில் பிராணபான வாயுக்களோடு ஆன்ம அக்கினியும் கலந்ததாலுண்டாகும் அமுதத்தை உண்டால் அதன் வலிமையால் ஞானமுண்டாகும்.
69. எல்லையி லின்னமிர்த முண்டாங் கினிதிருக்கில்
தொல்லை முதலொளியே யாம்.
பிரணவ உச்சியில் அமுதத்தையுண்டு இனிதாக இருந்தக்கால் பழமையாகிய (தொல்லை) ஆதி வொளியாம்; ஆன்ம ஒளியே ஆகும்.
70. நிலாமண்டபத்தி னிறைந்த வமிர்துண்ணில்
உலாவலா மந்தரத்தின் மேல்.
சந்திர மண்டபத்திலிருக்கும் அமுதுண்டால் அறிவு உடலில் (சிதாகாயத்தில் = சிதா+காயம் = பரவெளி) உலாவரலாம் (ஆகாயசஞ்சாரம் என்பது வேறு)
Sunday, December 30, 2007
ஞானக் குறள் - 7. அமுததாரணை (61-70)
Posted by ஞானவெட்டியான் at 9:45 AM
Labels: ஞானக் குறள்
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
பிறப்பறுக்கும் வழிதான் தேடுகிறோம்
அன்பு என்னார்,
தேடுங்கள்; கிட்டும்.
ஆன்ம ஒளியினாலுண்டாகும் அமுதத்தை உண்டவர் சிவராச யோகியா?
அன்பு என்னார்,
ஆமாம்.
ஹூகும்! இது மிகவும் மேலே இருக்கிறது.
எப்போதாவது உதவலாம்,அதற்கு இப்போதே என் நன்றிகள்.
Post a Comment