ஞானக் குறள்
****************
1. வீட்டுனெறிப்பால்
**********************
6. அங்கிதாரணை (51-60)
**************************
51. அந்தத்தி லங்கி யழல்போலத் தானோக்கிற்
பந்தப் பிறப் பறுக்கலாம்.
சூரிய சந்திர கலைகளை அக்கினி கலையோடு கலந்து நோக்கில், அக்கினி(அங்கி)யான மூல அக்கினி சுவாலைபோல் கிளர்ந்து எழுந்து உச்சி நோக்கிப் பாயும்.
இப்பயிற்ச்சியைத் தொடர்ந்து செய்தால் (அந்தத்தில்) முடிவில் பிறப்பெடுக்கும் பந்தபாசங்களை அறுத்து விடலாம்.
“ஊதியறி வாய்கொண்டு ஊதிப்பாரு,
உள் பத்திக் கொண்டுதடா தானே தானாய்,
ஊதியறி வாயறிய மாட்டாயானால்
உன்னாணை ஊதிபங்க ளொன்றுமில்லை.”
“ஊதுகிற வூத்தறிந்தா லவனே சித்தன்” என்றும் சித்தர் நூல்கள் கூறுகின்றன.
52. உள்ளும் புறம்பு மொருங்கக் கொழுவூரிற்
கள்ள மல மறுக்கலாம்.
தன் தலைக்கு (பிரணவ எல்லைக்கு)ள்ளும், வெளியேயும் ஒரே காலத்தில் உயிர்க் காற்று (பிராணனு)க்குப் பலத்தைக் கொடுக்கும் மூலாக்கினியை எழுப்பிக் கொடுத்துக் கொண்டிருந்தால் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மலங்களை அறுக்கலாம்.
ஓங்காரத்துக்கு உள்ளும் புறமும் அக்கினியை எழுப்பி, அதன் கலைகளைப் பாய்ச்சினால் இறைத் தத்துவங்களை மறைத்துக் கொண்டிருக்கும் மாயையை ஒழிக்கலாம்.
53. எரியுங் கழல்போல வுள்ளுற நோக்கிற்
கரியுங்கன லுருவ மாம்.
முக்கலைகளையும் இணைத்து அக்கினியைக் கிளப்பி ஓங்காரத்துட் சென்று பார்த்தால் பிரம முடிச்சாகிய இருட்டுக்குள் ஒளி ஒளிரும்.
ஓங்காரம் = தலையினுள்ளே
பிரமமுடிச்சு = இருள், உண்ணாக்கின் மேல் உள்ள நரம்புக் கொத்தின் முடிச்சு
54. உள்ளங்கி தன்னை ஒருங்கக் கொழுவூறில்
வெள்ளங்கி தானாம் விரைந்து.
உள்ளங்கி = பிரணவத்திற்குள் பிரவேசித்த அக்கினியாக இருக்கும் நாதகலையை ; வெள்ளங்கி = பிந்து கலை.
பிரணவத்திற்குள் நுழைந்த அக்கினியாயிருக்கும் நாத கலையை பூரணமாக மூலாக்கினியை எழுப்பி அதன் சுவாலையை நாத கலைமேல் பாய்ச்சினால் பிந்துகலை தானாகவே மேலே எழுந்து நிற்கும்.
55. உந்தியி னுள்ளே யொருங்கச் சுடர்பாய்ச்சி
லந்தி யழலுருவ மாம்.
மணிபூரகமாகிய உந்தியில் அக்கினி கலையை உட்புகச் செய்தால், இரவு, அழலாம் நெருப்புபோல் பிரகாசிக்கும்.
திருமந்திரம்:
“உந்திக்கமலத் துதித்தெழுஞ் சோதியை
யந்திக்கு மந்திரமாரு மறிகிலர்
அந்திக்கு மந்திரமாரு மறிந்தபின்
தந்தைக்குமுன்னே மகன் பிறந்தானே.”
அந்திக்க = வந்திக்க, வணங்க.
படைப்புக் களமாம் கொப்பூழில் தோன்றிச் சுடர்விட்டுக் கிளம்பும் ஒளிப்பிழம்பை வணங்கி வழிபடும் முறையினை யாரும் அறிகிலர். அதை அறிந்தால், தந்தையாகிய சிவத்திற்கு முன் ஆவியாகிய மகன் தோன்றுவான். "சிவயசிவ" எனும் திருவைந்தெழுத்தில் சிகரத்துக்கு முன் யகரம் நிற்கும் நிலையினையே தந்தைக்குமுன் மகன் பிறந்தான் என்பதைக் குறிக்கும். கொப்பூழுக்கு முன்னிடமாகிய மூலத்தில் ஓம் மொழிப் பிள்ளையார் தோன்றியதைக் கூறுதலும் ஒன்று.
56. ஐயைந்து மாய வகத்துளெரி நோக்கிற்
பொய்யைந்தும் போகும் புறம்.
அரசனாகிய பிரணவமும், ஐம்புலச் சக்திகளும் சேரும்படி பிராண நடு வீட்டில் அக்கினியை எழுப்பி மேல்நோக்கின் பலனற்ற சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்தும் உடலை விட்டுப் புறத்தே சென்றுவிடும்.
57. ஐம்பது மொன்றுமழல் போலத்தா னோக்கி
லும்ப ரொளியாய் விடும்.
(ஐம்பது+ஒன்று) ஐம்பத்தியொரு பீசங்கள் இருக்கும் இடத்தை முக்கலையொன்றி அக்கினியால் பார்க்குங்கால் உடல் தேவர்களுடைய உடலைப் போல் ஒளி வீசும்.
திருமூலர்:
"ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைந்தும்
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தின் நிலையிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள்ளீரே."
சோதி எழுத்து, நாதவெழுத்து = சிகாரம்.
மந்திரங்களுக்கெல்லாம் முதலில் ஓதப்பெறும் ஓங்காரத்துடன் மற்ற பதினைந்து உயிர் எழுத்துக்களையும் கூட்ட மொத்த உயிரெழுத்து பதினாறு. மெய்யெழுத்து முப்பத்தி ஐந்து. ஆக மொத்தம் 16 = 35 = 51.(செந்தமிழ்க் காலத்துக்கு முந்திய நிலை இஃதாம்.)
சோதி எழுத்து சிகாரம்.
உடல் அகத்தே உள்ள ஆதார நிலைகள் ஆறு.
இந்நிலைக் களங்களில் பரவெளி எழுத்தாகிய ஓம் என ஒலித்து உணர்க.
58. தூண்டும் சுடரைத் துளங்காமற் றானோக்கில்
வேண்டுங் குறை முடிக்கலாம்.
முக்கலையொன்றி மூலாக்கினியை அசைவில்லாமல் (துளங்காமல்) பார்க்குங்கால் வேண்டிய குறைகளாகிய பிறப்பறுத்தல் முதலிய ஆன்ம இச்சைகளை சித்திக்க வைத்துக் கொள்ளலாம்.
59. உள்ளத்தாலங்கி யொருங்கக் கொழுவூறில்
மெள்ளத்தான் வீடாம் விரைந்து.
முக்கலையை ஒன்றுதலால் ஏற்படும் அக்கினியாலான கலைச்சுடரைப் பிரணவ வீட்டினுள்ளே பாய்ச்சினால் ஞான எண்ணங்கள் விரைவில் கைவரும் (சித்தி கிட்டும்).
60. ஒள்ளிதா யுள்ள சுடரை யுறநோக்கில்
வெள்ளியா மாலை விளக்கு.
மனமும், பார்வையும் ஒன்றுகூடி மூலாக்கினியைப் பார்ப்பதால், பிந்து கலை, இருளையற்றிப் பகலைப்போல் தோற்றுவிக்கும்.
இவ்வந்தரங்க இரகசியத்தைத் திருவாசகத்தில் :
"ஈண்டியமாயா விருள் கெடவப்பொருளும் விளங்கத் தூண்டிய சோதியை மீனவனுஞ் சொல்லவல்லனல்லன் வேண்டியபோதே விலக்கிலை வாய்தல் விரும்புமிறாள் பாண்டியனாரருள் செய்கின்ற முத்திப் பரிசிதுவே.”
இப்பாடலில், மீனவன், பாண்டியன், பரமசிவன், மன்மதன் ஆகியோருக்கென அமைப்பதைத் தவிர்த்து, வெள்ளியாகிய பிந்து கலைக்குப் பொருத்தினால் ஞானக் கருத்துகள் விளங்கும்.
(இப் பூட்டை உடைத்துத் திறப்பதற்கு குரு(ஞானாசிரியன்) உத்திரவு இல்லை. ஆதலால் இத்துடன் விட்டோம்.)
Sunday, December 30, 2007
ஞானக் குறள் - 6. அங்கிதாரணை (51-60)
Posted by ஞானவெட்டியான் at 9:32 AM
Labels: ஞானக் குறள்
Subscribe to:
Post Comments (Atom)
15 Comments:
தங்களுக்கு விளக்கம் அளிக்கும் அளவுக்கு எனக்கு அறிவு இல்லையெனினும், இந்தக் குறளைப் படித்ததும் தோன்றிய கருத்தினை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
எப்படி தீச்சுவாலை எப்போதும் மேல் நோக்கியே எழும்புகிறதோ, அது போல, மூலாதரத்தில் இருந்து எழும் தீயையும், மேல் நோக்கிச் செலுத்தினால், பந்தமறுத்து மெய் உணராலாம் என்ற பொருளும் தெரிகிறது.
இதைத்தான் அவ்வைக்கிழவியும்,
‘மூலாதாரத்து மூண்டெழும் கனலைக்
காலாலெழுப்பி கருத்தறிவித்தே’
என்று சொல்லியிருக்கிறார்.
தவறெனில் மன்னிக்கவும்.
அன்பு SK,
// தங்களுக்கு விளக்கம் அளிக்கும் அளவுக்கு எனக்கு அறிவு இல்லையெனினும், //
தன்னடக்கம் பாராட்டுக்குறியது.
கற்றது கைமண். கல்லாதது…..?
//எப்படி தீச்சுவாலை எப்போதும் மேல் நோக்கியே எழும்புகிறதோ, அது போல, மூலாதரத்தில் இருந்து எழும் தீயையும், மேல் நோக்கிச் செலுத்தினால்//
அதுதான் எப்படி? என்பது வினா.
//’மூலாதாரத்து மூண்டெழும் கனலைக்
காலாலெழுப்பி கருத்தறிவித்தே’//
மூலாதாரத்தில் கனல் கனன்றுகொண்டுளது. அதைக் கால் என்னும் உயிர்க்காற்றால் எழுப்பினால் அது அறிவு, நினைவு, ஆகிய நிலைகளைக் கடந்து கருத்து நிலை என்ன என அறிவிக்கும் என ஒளவை கூறினார்.
//தவறெனில் மன்னிக்கவும்.//
கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவே வலைப்பூ. பெரிய சொற்களைப் பாவிக்கவேண்டாம்.
superb definition
My dear Pasupathy,
Thanks.
இதுவும் சிறப்பாக உள்ளது
அதை அறிந்தால், தந்தையாகிய சிவத்திற்கு முன் ஆவியாகிய மகன் தோன்றுவான்/
பெரியஞானி ஐயா
இது சற்று புரியவில்லை.சிவனாருக்கு முன்பே கந்தவேள் தோன்றினாரா?அது எப்படி?சிவனுக்கு ஆதி அந்தம் இல்லை அல்லவா?
ஐயா,
திருக்குறளை எழுதிய திருவள்ளுவரும், ஞானவெட்டியான் என்ற நூலை எழுதிய திருவள்ளுவரும் ஒருவரா ? நான் சமீபத்தில் படித்த கீழ்கண்ட ஞானக்குறள் இஸ்லாம், கிறித்துவ மதங்களைப்பற்றி பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது, (திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பதால் இத்தகைய ஆச்சரியம்) தயவுசெய்து விளக்கவும்.
அல்லா குதாவென ஐந்து கரம் வைத்தும் பணிந்து,
இல்லல்லா வெனத்துத்து முடிசாய்ந்தே தொழுவார்;
சொல்லுவார் உபதேசி சூசர்களும் சூலைவைத்து
வெல்வார் ஞானப் பிரசங்கம் வெகு கிறித்துவர் மனமே.
-ஞானவெட்டியான் 613
அன்புடன் சம்மட்டி
//”சிவயசிவ” எனும் திருவைந்தெழுத்தில்//
‘நமசிவாய’ என்பது தானே திருவைந்தெழுத்து?
“சிவயசிவ” எனும் திருவைந்தெழுத்து என்று கூறுவது மாறுபடுகிறதே?
அன்பு சம்மட்டி,
“ஞானவெட்டியான்” என வழங்கப்பெறும் நூல் முன்னர் “ஞானம் எட்டி” எனத் திருவள்ளுவர் என்பவரால் எழுதப்பட்டதென்பர். ஆயினும் அதில் காணப்பெறும் கிரந்த எழுத்துக்களும், வடமொழிச் சொற்களும் திருக்குறள் எழுதிய திருவள்ளுவரால் எழுதப்பட்டருக்காது என ஆய்வு செய்தவர்களின் கருத்து. என் கருத்துமதே. இதன் நடையைக் கூர்ந்து நோக்கின், 16 அல்லது 17 நூற்றாண்டு எழுதப்பெற்றிருக்கலாம். ஔவையில் பலரிருந்ததைப்போல் திருவள்ளுவர் (2) எனும் புனைப் பெயரில் அடையாளம் காட்டவிரும்பா ஒருவரால் எழுதப்பட்டிருக்கலாம். இந்நூல் “ஞானம் வெற்றி” என வழங்கியதாகவும், இதுவே பின்னர் “ஞானம் வெட்டி”என்றாகி “ஞானவெட்டியான்” என்றாகியது எனவும் மெய்வழி குழந்தைசாமிக் கவுண்டர் கூறுவார்.
அன்பு செல்வன்,
உந்திச் சுழியி னுடனோர் பிராணனைச்
சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்
சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே.
முகடு = உச்சித்துளை
சிவமந்திரம் என்பதை முன்மொழி (ஓம்) அல்லது அம்சம் என்றும் கூறுவர். அம்சம் என்பது ஆவியின் மறை (மந்திரம்). இம்மறையுணர்வு காணும் வகையாவது: உயிர்ப்பு உள்ளிருந்து வெளிவரும்போது “அம்” எனும் ஓசையுண்டகும்; வெளியிலிருந்து உள்வரும்போது “சம்” எனும் ஒலியுண்டாகும்.
கொப்பூழின்கண் தோன்றும் உயிர்ப்பினைச் “சிவசிவ”(என்னும் பீச மந்திரத்தால்) என நினைந்து உச்சித் துளையில் நிறுத்தி கீழ்நோக்கிச் செல்லும் காற்றைச் செல்லமுடியாதபடி செய்து மேல்நோக்கிச் செலுத்த, சிவனுடைய தன்மை பெறுவான்.
மூலாதாரம் முதல் புருவநடு வரையுள்ள ஆறு ஆதரத்தானத்துக்கும் முறையே ஓம் யநமசிவ, நமசிவய, சிவயநம, வயநமசி, சிவய சிவ, சிவசிவ எனும் பீசங்கள் உரித்தாகும். மூலத்தில் ஓம் யநமசிவ முதலில் வருவதாலும், ஓம் சிவயநம பின் வருவதாலும் மூலத்திற்குறிய கணபதி(பிள்ளையார்) சிவமாகிய தந்தைக்கு முன் பிறந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.
கணபதிக்கும்(கந்தவேள் அல்ல), சிவத்திற்கும் ஆதியந்தமில்லை. முன்னே தோன்றுதல் என்பது இடம்பிடித்திருப்பதைச் சுட்டுகிறது.
அன்பு சிவமுருகன்,
//’நமசிவாய’ என்பது தானே திருவைந்தெழுத்து?
“சிவயசிவ” எனும் திருவைந்தெழுத்து என்று கூறுவது மாறுபடுகிறதே?//
மூலாதாரம் முதல் புருவநடு வரையுள்ள ஆறு ஆதரத்தானத்துக்கும் முறையே ஓம் யநமசிவ, நமசிவய, சிவயநம, வயநமசி, சிவய சிவ, சிவசிவ எனும் பீசங்கள் உரித்தாகும். மூலத்தில் ஓம் யநமசிவ முதலில் வருவதாலும், ஓம் சிவயநம பின் வருவதாலும் மூலத்திற்குறிய கணபதி(பிள்ளையார்) சிவமாகிய தந்தைக்கு முன் பிறந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.
“ஓம் நமசிவய”, “ஓம் சிவயசிவ” இரண்டுமே திருவைந்தெழுத்துதான்.
"56. ஐயைந்து மாய வகத்துளெரி நோக்கிற்
பொய்யைந்தும் போகும் புறம்."
இந்த குறள், குண்டலினி யோகம் பற்றியது போல் தெரிகிறதே?
குண்டலினி கிளம்பியவனுக்கு சப்த நாடிகள் ஒடுங்கி, ஐம்புலங்கள் தங்களுக்குறிய செயல்களை மறக்கும் என்றும், செயல்கள்யாவும் பிரபஞ்சத்திலோ, எல்லைஇல்லா பொருளின் மீதோ நிலைத்திருக்கும் என்று ‘குண்டலினி யோகம்’ புத்தகத்தில் படித்திருக்கிறேன். சரியா? தவறா? என்று தயவுசெய்து சொல்லவும்.
அன்பு சிவமுருகன்,
ஆமாம். ஞானக் குறள் 300 குறளுமே ஞானயோகமாம் குண்டலினி யோலம் குறித்தே எழுதப்பட்டுள்ளது.
படிப்பதுடன் நிறுவிடாது முயன்று பாருங்கள். பலன் தெரியும்.
ஒளவைக்கு இந்த ‘மூலாதாரத்தின்’ மேல் ஒரு தனி ஈர்ப்பு போலும்!
மருத்துவர்களில், ஸ்பெஷலிஸ்டுகள்’ ஒவ்வொரு துறையில் தனித் தேர்ச்சி பெறுவது போல,
ஞான சித்தி அடைவதிலும் ஒவ்வொரு சித்தர்களுக்கும் ஒவ்வொரு ‘சக்தி நிலை’யின் மேல் ஈடுபாடு இருந்திருக்கிறது!
அவ்வகையில், ஒளவை ஒரு ‘மூலாதார ஸ்பெஷலிஸ்ட்’ எனலாம்!
வினாயகர் அகவலிலும் இந்த மூலாதாரத்திற்குத்தான் அதிக மதிப்பு கொடுத்திருக்கிறார்.
‘மூலதாரத்தில் மூண்டெழு கனலை
காலாலெழுப்புங் கருத்தறிவித்தே’
அடுத்து வினாயகர் அகவலுக்கும் ஒரு உரை எழுத் வேண்டுகிறேன்.
நன்றி!
அன்பு SK,
//அடுத்து வினாயகர் அகவலுக்கும் ஒரு உரை எழுத் வேண்டுகிறேன்.//
முயலுகிறேன்.
Post a Comment