Sunday, December 30, 2007

ஞானக் குறள் - 5. வாயுதாரணை (41-50)

ஞானக் குறள்
**************

1. வீட்டுனெறிப்பால்
**********************
5. வாயுதாரணை (41-50)
*************************
41. மூலத்திற்றோன்றி முடிவிலிரு நான்காகிக்
கால்வெளியிற் பன்னிரண்டாங் காண்.

காற்றானது குண்டலியின் மத்திய பாகத்திலுள்ள வாயு உதிக்குமிடத்தில் உதித்து, குண்டலியின் உச்சியில் இரண்டாகப் பிரிந்து, நான்கு திக்கிலும் பரவி, பேரண்ட வெளியாகிய துவாதசாந்த வெளியில் செல்லும்போது பன்னிரண்டு கலைகளாக வெளிப்பட்டு நிற்கும்.

“மூலம்” - என்பது மூலாதாரமல்ல. மூலாதாரம் என்னும் பழக்கச் சொல் ஒவ்வொரு பொருளும் உதிக்குமிடம். துவாத சாந்த வெளி யென்பது பிரணவ உச்சியைத் தாண்டிக் கலைகளோடு செல்லும்போது தலைக்கு மேல் பன்னிரு அங்குல அளவில் உள்ளது. இந்த இடமே இரவு பகலற்ற இடம்.


42. இடைபிங் கலைகளி ரேசக மாற்றி
லடையு மரனா ரருள்.

அரன் என்பதைப் பரமசிவனாகக் கொள்ளாமல் பரம+சீவனாகக் (பர+சீவனாக) கொள்ளல் வேண்டும். ஆகவே, ஆதியெனக் கொள்வோம்.
இவ்விடத்து, பீர் முகம்மது அவுலியாவின் ஆநந்தக் களிப்பின் ஒரு பாடலை நினைவு கூருதல் அவசியம்.

“இவ்வென் றெழுத்ததைப் பற்றி - இரு
வாசலைப் பூட்டி யடைத்துப் பிடித்துக்

கொல்லன் றுத்திகொண் டூதி - நல்ல

கோவலமாய் மூலக் குகையை யெழுப்பி

வில்லின்மேல் நாணம்பை யேற்றி - வெகு

வேகமா யொன்பது வாச லடைத்து

அல்ஹம்தி லொன்றாகி நின்ற - நந்தம்

ஆதியை நன்றாகக் கண்டுகொண்டேனே.”


வளிநிலையாம் மூச்சுப் பயிற்சி குறித்துத் திருமூலர் :

"ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்

ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்

மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே."


வாமம் = இடகலை.
ஈரெட்டு = பதினாறு மாத்திரை, அறுபத்தி நான்கு மாத்திரை.
மாறுதல் = மடை மாறுதல். சிவசிவ என்பது நான்கு மாத்திரை.

"சிவசிவ" எனும் மந்திரமே செந்தமிழ்த் திருமாமறை முடிபு.

ஏறுதல் - பூரகம்:
சிவசிவ என நான்குமுறை கணித்து(இடது நாசியை வலது கையின் மோதிர விரல், சுண்டு விரல்களால் அடைத்து) வலது நாசித்துவாரத்தினால் தூய மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல்.

ஆறுதல் - கும்பகம்:
சிவசிவ எனப் பதினாறுமுறை கணித்து உள்ளிழுத்த மூச்சை மூடி உள்ளே நிறுத்தல்.

ஊறுதல் - இரேசகம்:
உள் நிறுத்திய மூச்சை சிவசிவ என எட்டுமுறை கணித்து வல நாசித் துளை வழியே மெதுவாக வெளியில் விடுவது.

இவ்வாறே, மடைமாற்றி இடநாசி வழியாகவும் செய்தல் வேண்டும். இங்ஙனம் இயன்ற அளவு மாறிமாறிப் பயிலல் வேண்டும்.

இடகலை,பிங்கலை ஆகிய இரு கலைகளினாலும் பூரக, கும்ப, இரேசகத்தை மாற்றி மாற்றிச் செய்தால் மூலக் குகையைத் திறந்து உட்செல்லலாம்.
இட பிங்கலைகள் என்பது சூரியன், சந்திரன் என்னும் இரு திருவடிகளை அடக்கி வைத்திருக்கும் இட, வலக் கண்களே. இங்கு இரேசித்தல் என்பது ஒன்றுசேர்தலாம். சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்ந்தால் காருவா என்னும் அமாவாசையாகும். அச்சமயமே ஞான வினைகளைத் தொடங்கும் காலம்.

வாசிட்டம் - புசுண்டர் கதை :

“நீ யிங்கெதிர்காணும் பூதவுடலாம் மனைநடுவே பொருந்துமிதய புண்டரிகச் சீதமலரில் உள்ளிரண்டு செறியும்பிராண நபானனென்.”

திருமந்திரம் :
****************

“விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு

தண்ணென்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து

உண்ணின் றுறுக்கயொ ரொப்பிலா ஆனந்தக்

கண்ணின்று காட்டிக்களிம் பறுத்தானே.”

தலைக்காவல் = சிறந்தகாவல், தலைக்குக் காவல்.
களிம்பு = ஆணவமலம்.

ஆருயிர்களை ஆட்கொள்ள வேண்டிய அருள்வினைக்கு ஈடாக விண்ணாகிய சிவ உலகத்திலிருந்து நில உலகத்திற்கு இறங்கிச் சிவகுருவாக வந்தருளினான். மிகவும் குளிர்ச்சி பொருந்திய தாளை(திருவடி)த் தலையில் முன்புறம் அமைத்து அருளினான். அவனே உள்நின்று நெகிழச் செய்து ஒப்பிலாப் பேரின்பக் கண்ணாகிய அகக்கண் காட்டி, அன்பு முதிர்ச்சியால் அருளை வளரச் செய்து களிம்பாம் ஆணவமலத்தை அறுத்தான்.

அமாவாசை காலத்தில், நாம் வெளிப்படையாகச் செய்யும் வினைகள் எல்லாவற்றையும் உள்முகத்தில் அமைத்துப் பார்க்க மெய் விளங்கும்.

43. அங்குலியான் மூடிமுறையா லிரேசிக்கிற்

பொங்குமாம் பூரகத்தி னுள்.

விரல்களால் நாசித் துவாரங்களை மூடியும் திறந்தும் இரு கலைகளையும் கலக்கச் செய்தல் வேண்டுமெனக் கூறுவோர் பலர். ஆயினும், குருபிரான் காட்டிய வழியில் முறையாக அங்குலியெனும் புருவமத்தியில் பார்வை வைத்து இரு கலைகளையும் கலக்கச் செய்து பூரகம் செய்யும்போது கலைகள் பொங்கி வழியும்.

ஏறுதல் - பூரகம்:
சிவசிவ என நான்குமுறை கணித்து(இடது நாசியை வலது கையின் மோதிர விரல், சுண்டு விரல்களால் அடைத்து) வலது நாசித்துவாரத்தினால் தூய மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல்.

44. எண்ணிலியூழி யுடம்பா யிரேசிக்கி லுண்ணிலமை பெற்ற துணர்வு.


இங்கு “ஊழி” என்பதைக் காலத்திற்கு பயன்படுத்தாது, செயற்கை யொழிந்த காலத்திற்கு உபயோகித்தலே நன்று. கணக்கிலடங்கா(எண்ணிலடங்கா)த முறைகள் இரேசித்தால் உள்ளுடலுக்குள் அறிவு நிலைத்து, உணர்வு விளங்கும்.


45. மயிர்க்கால்வழி யெல்லா மாய்கின்றவாயு
வுயிர்ப்பின்றி யுள்ளே பதி.

மயிர்க்கால் = மயில் + கால்.

மயில் மாயயைக் குறிக்கும். மாயையின் வழியில் (கால்) உயிர்க் காற்றாகிய வாயு (உயிர்ப்பு) அழிந்து கொண்டு இருக்கின்றது. அதை முற்றிலும் முக்கலையும் ஒன்றுமிடத்தில் பதித்து நிலை நிறுத்திவிடு.


46. இரேசிப்பது போலப்பூரித்து நிற்கிற்
றராசுமுனை நாக்கதுவே யாம்.

கலைகளைப் பூரிக்கச் செய்யும் பூரகம் என்னும் தந்திரத்தில் (தன்+திறத்தில்) நின்றால், நுனி நாக்காகிய பிரணவ உச்சி நிறைகோலாயிருக்கும். பூரகம் பூரிப்புடையது. பூரிப்படைந்தால்தான் மேல்நோக்கும். மேல் நோக்கினால்தான், பிரணவத்தை உருவாக்க முடியும்.

திருமந்திரம்:

“நாவின் நுனியில் நடுவே சிவிறிடில்
சீவனு மங்கே சிவனு முறைவிடம்
மூவரு முப்பத்து மூவருந் தோன்றுவர்
சாவது மில்லை சதகோடி யூனே."

சிவிறிடல் = விசிறியின் அடிப்பகுதி போல விரிந்து குவிதல்.
மூவர் = அயன், அரி, அரன்.
முப்பத்து மூவர் = பகலவர் பன்னிருவர், உருத்திரராம் முனிவர் பதினொருவர், வசுக்கள் எண்மர், மருத்துவர் இருவர்.
சதம் = நூறு. ஊன் = உடல்.

நாக்கின் நுனியால் அண்ணமுகட்டில் உள்ள ஊசித்துளை வழியைத் துருத்தி போலக் குவித்து வைத்து அடைக்க உயிரும், உயிருக்குயிராம் சீவனாகிய சிவனும் ஒன்றுசேர்ந்து உறைவர். திருவடிகளால் காணுதலால் ஆவி மூன்று தெய்வங்களையும், முப்பத்து முக்கோடி தேவரையும் எளிதில் காணலாம். நூறுகோடி ஊழி வந்தாலும் உடலுக்கு அழிவில்லை.

"தீவினை யாடத் திகைத்தங் கிருந்தவர்
நாவினை நாடி நமனுக்கிட மில்லை
பாவினை நாடிப் பயனறக் கண்டவர்
தேவினை யாடிய தீங்கரும் பாமே.”

தீவினையாட = தீய கருமங்களால்.
நாவினை நாடில் = நாவின் நுனியை அண்ணாக்கில் சிவிறிடில்(கேசரியோகம்). பாவினை = திருமறைத் திருப்பாட்டை.
பயனற என்பதை அறபயனெனப் பொருள்கொள்ளல் வேண்டும்.
அ·தாவது, முழுப்பயனையும். தேவினை = நன்மை தரும் வினைகளால்.

பாவச் செயல்களைப் புரிந்தவர் பிறப்பு இறப்புக்கு உட்பட்டுத் திகைத்து இருப்பர். கேசரி யோகத்தை முறையாக ஞானாசிரியனிடம் கற்று, பயின்றுவர நீண்ட நாள் வாழ்வர். மறலியாம் எமனுக்கு அங்கே வேலையில்லை. செந்தமிழ் மறைப்பாட்டை ஆய்ந்து இடையறாது ஓதி அதன் முழுப் பயனையும் அடைந்தவர் சிவத்துடன் கூடிப் பேரின்பம் அடைவர்.

"ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்
வானூறல் பாயும் வகையறி வாரில்லை
வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்
தேனூறல் உண்டு தெளியலு மாமே."

ஊறல் = இடையறா ஊற்றுடைய புனல். இதுவே ஆகாய கங்கை என உருவகிக்கப் பட்டது.
ஊனூறல் = விந்து. வானூறல் = அமிழ்து. தேனூறல் = அமிழ்தின் சுவை.

உயர்விடமாகிய உச்சியில் இருந்து விந்து கீழ்நோக்கி இறங்கும். அங்ஙனம் செல்லவிடாது வளிப்பயிற்சியால் உச்சித்துளைக்கு ஏற்றிட அதுவே அமிழ்தாய் மாறும். திருவருள் துணையால் இந்நிலை எய்தியோர்க்குத் தேனூறலாகிய திருவடி உணர்வாம் தெளிவு உண்டாகி இன்பம் கிட்டும்.
இறைவனின் முடிமேல் உள்ளவை: கங்கை, மதி, அரவு, கடுக்கை(கொன்றை). ஆக, கங்கை வானூறலாகவும், மதி ஊனூறலாகவும், அரவு குண்டலியாகவும், கடுக்கை தேனூறலாகவும் உருவகிக்கப் பட்டதென்பர்.


47. கும்பகத்தினுள்ளே குறித்தரனைத் தானோக்கிற்

றும்பிபோ னிற்குந் தொடர்ந்து.

தும்பி = கரும்பு (கோல்). தும்பி என்பதை வண்டு, யானை ஆகியவற்றோடு ஒத்து நோக்கில், நிறம், குணம், உருவம் ஆகியவைகள் பொருந்தாது.
ஆகவே, தும்பி என்பதைக் கரும்பு என்றே எடுத்துக் கொள்ளல் வேண்டும்.

கரும்பு, வெள்ளை சிவப்பு கலந்திருப்பதால், வெள்ளையும் சிவப்பும் பிராணாபான வாயுவைக் காட்டுகிறது. வாயுவோ நாதபிந்து சாரமாயிருக்கிறது. குணமோ இனிப்பாகிய சுகத்தைத் தருகிறது. உருவமோ, நீண்டு உயர்ந்து இருக்கின்ற தன்மையும், அதன் இலைகள் இடை பிங்கலைக் கலைகளைக் குறிக்கும் தன்மையாலும் இங்கு, தும்பி என்பதற்குக் கரும்புகோல் என்றே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பர் மூத்தோர்.

கும்பகத்தில் நிலைத்தூன்றி நின்று சீவனை நோக்கில், ஆன்மாவானது கரும்புக்கோல் போல், நோக்கோடு மேல்நோக்கி நிற்கும்.

திருமந்திரம்:

"தீங்கரும் பாகவே செய்தொழி லுள்ளவர்
ஆங்கரும் பாக அடையநா வேறிட்டுக்
கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட
ஊன்கரும் பாகியே ஊனீர் வருமே."


கோங்கரும்பு = பாம்பின் தலை, குண்டலி. கோணை = வளைவை.
ஊனீர் = உடல் அமிழ்து.

கேசரி யோகப் பயிற்சியால் வெறுக்கத்தக்க உடலை விரும்பத் தகுந்த கரும்புபோல் ஆக்கிக் கொள்ள இயலும். பூவின் அரும்பு போன்ற நாவின் நுனியை மேல்நோக்கிக் குவித்துச் செலுத்திப் பாம்பின் தலைபோல உள்ள கோங்கரும்பை ஒத்த குண்டலியின் வளைவை நேராக்கினால் உடல் கரும்புபோல இனிமை உடையதாகும். ஊனீராம் மதிமண்டல அமிழ்தும் சுரக்கும்.


48. இரேச கபூரக கும்பக மாற்றிற்
றராசு போனிற்குந் தலை.

எண்சாண் உடலுக்கு தலையே பிரதானம். தலையில் முக்கியம் கண்களே. அவைகள் சூரிய, சந்திரனாகும்.
சூரியனுக்குப் பன்னிரண்டு கலைகள்.
சந்திரனுக்கு பதினாறு கலைகள்.
இவ் வேறுபாடுகளினாலேயே, மனம் தடுமாறுகிறது.
இதைத் திருத்தவே, இரேசக, பூரக, கும்ப வழிகளை வகுத்தனர்.
இவ்வழிகளில், மாறிமாறிப் பயிற்சி செய்தால், பார்வையானது கலைகளுடைய குறைகளை நிறைவு செய்யும். அப்போது, தலை துலாக்கோல் போல் நிற்கும்.


49. வாயு வழக்க மறிந்து செறிந் தடங்கி
லாயுட் பெருக்க முண்டாம்.


பிராணபான வாயுக்களின் அசைவுகளை (சலனத்தை, ஓடும் வழி வகைகளை) அறிந்து, உணர்ந்து, அவைகளை ஒன்றுசேர்த்து (செறிந்து), உந்திக் கமலத்தில் நிலை நிறுத்தி, அடங்கினால், ஆயுள் பெருகும்.


50. போகின்ற வாயு பொருந்திற் சிவமொக்குந்
தாழ்கின்ற வாயு வடக்கு.

மேல்நோக்கிச் செல்லும் பிராணவாயுவுடன், கீழ்நோக்கிச் செல்லும் அபானவாயுவைக் கட்டுப்படுத்தி, மேல் நோக்கிச் செலுத்தி, இரண்டையும் ஒன்றாக்கினால், சிவத்தொடு ஒன்றலாம்.

7 Comments:

Anonymous said...

பெரிய ஞானி ஐயா
இது எப்படி சாத்தியம்?எனக்கு புரியவில்லை

Anonymous said...

அன்பு செல்வன்,
//மேல்நோக்கிச் செல்லும் பிராணவாயுவுடன், கீழ்நோக்கிச் செல்லும் அபானவாயுவைக் கட்டுப்படுத்தி, மேல் நோக்கிச் செலுத்தி, இரண்டையும் ஒன்றாக்கினால், சிவத்தொடு ஒன்றலாம்.//

புறக் கண்களால் காண்பதை நிறுத்திவிடவும். அதாவது கண்களை மூடிக்கொண்டு விடவும். மனதால் மூச்சுக் காற்று செல்லும் வழியைக் கவனிக்கவும். பின்னர் மனதால் இந்த நாசித் துவாரத்தில்தான் மூச்சு உள்ளே நுழைகிறது; இந்த நாசித் துவாரத்தில்தான் மூச்சு வெளியே செல்கிறது என நினைத்துக்கொண்டு(மனதில் சொல்லிக்கொண்டு) உன்னிப்பாய் உணர ஆரம்பிக்கவும்.

சிறிது நாட்களுக்குப் பின் அதன் பலன் தெரியும். மூச்சுக்காற்று நம் வயப்படும். இந்நிலையில்தான் கீழ்முகமாகச் செல்லும் அபான வாயுவை மேலே கூறியபடி கட்டுக்குள் கொண்டு வந்து மேலேற்ற வேண்டும். பயிற்ச்சியினால்தான் சாதிக்க இயலும்.

Anonymous said...

பெரிய ஞானி ஐயா,

இது யோகிகள் மட்டுமே செய்யக் கூடிய முறை போல் தோன்றுகிறது.(என் போன்ற) சாதாரணர்களுக்கு பக்தி மார்க்கம் தான் உகந்தது போலும்.

Anonymous said...

அன்பு செல்வன்,
யோகிகளின் வழி என்று ஒதுங்கி இருத்தலாகாது.
முயற்சி திருவினையாக்கும்.
இத்திருவினையே மூன்று கலைகளையும் சேர்ப்பது ஆகும்.
முயன்று பாருங்களேன்.
இவ்விளவயதில் தொடங்கினால்தான் காலம் ஆக ஆகா விளைச்சல் காணும்.

Anonymous said...

அன்பு ஐயாவுக்கு!
இதற்கு, யோகாசனம் தெரியவேண்டும் போல் உள்ளதே!அதைப் பற்றி தெரியாதே!!
நன்றி
யோகன்

Anonymous said...

அன்பு யோகன்,
செல்வனுக்குச் சொல்லியபடி முயன்று பாருங்கள். முதலிலேயே தயங்கினால் ஒன்றும் முடியாது.
“ஒன்றை முடிக்க முதலில் தொடங்கு” என்பது மூதுரை.

வடுவூர் குமார் said...

ஐயா
கடந்த 15 ஆண்டுகளாக இந்த மூச்சுப்பயிற்சி செய்துவருகிறேன் ஆனால் இந்த 4,16 மற்றும் 8 முறை என்பது எனக்கு கடினமாக தெரிகிறது.முதலில் உள்ள அவசரகதி இப்போது இல்லை என்றாலும் கணக்கு வகையில் நான் கவனம் செலுத்துவதில்லை.
தெரிந்தவர்கள் பக்கத்தில் இருந்து முறைப்படுத்தினால் ஒரு வேளை சுகமாக கை கூடுமோ என்னவோ!!