ஞானம் எட்டி
***************
8.ஐந்துருவா யுடலெடுத்த வாறின் கூறு
............மசடில்லாத் தேகமெண்சா ணாத்துமக் கூறும்
விந்துதித்துச் சடமெடுத்த நாதக் கூறும்
...........விற்பனமாய்க் கடமுதித்த காயக் கூறும்
தந்திரமாய் நீர்க்குமிழி யான கூறுந்
...........தத்துவந்தொண் ணூற்றாறு சைலக் கூறும்
இந்திரியசுக் கிலசுரோணி தத்தின் கூறு
..........மியம்புதற்குத் தசநாடி யியல்பு காப்பாம்.
பஞ்ச பூதங்களால் இவ்வுடல் எடுத்த விதத்தையும், இவ்வுடலில் வந்திருக்கும் ஆன்மாவின் கூறும், விந்துநாதங்களால் எவ்வாறு தேகம் வந்தது என்பதையும், அப்படி வந்த உடற்கட்டுகளின் விதத்தையும், அது நீர்க்குமிழிபோல் அழிந்துபோகும் வகையையும், தொண்ணூற்றாறு தத்துவத்தோடு கூடியிருக்கும் விதத்தையும், சுக்கிலம் இப்படிப்பட்டது, சுரோணிதம் இப்படிப்பட்டது என்பதையும் நன்றாய் இயம்புதற்கு தசநாடிகள் காப்பாம்.
தொண்ணூற்றாறு ததுவங்கள்:
திருமந்திரம்:
“ஆகின்ற தொண்ணூறோ டாறும் பொதுவென்பர்
ஆகின்ற வாறா றருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ்வே தாந்தி வயிணவர்க்கு
ஆகின்ற நாலாறை யைந்துமாயா வாதிக்கே.”
சுருங்கச் சொல்லின் சைவர்களுக்கு 36 தத்துவங்களும், வேதாந்திக்கு 28 தத்துவங்களும், வைணவர்களுக்கு 24 தத்துவங்களும், மாயாவாதிகளுக்கு 25 தத்துவங்களுமாம்.
சிவனின் திருவுளக் குறிப்பினால் முதற்காரணமாகிய மாயையினின்று காரியமாகத் தோன்றும் மெய்கள் 96 ஆகின்றன. இவைகளே 96 தத்துவங்கள்.
மேற்கூறிய சைவதத்துவங்கள் 36ல் ஆன்ம தத்துவம் 24, வித்தியா தத்துவம் 7, சிவதத்துவம் 5.
தத்துவங்கள் 96ன் விவரம்:
பூதங்கள் - 5
கர்மேந்திரியங்கள் - 5
கர்மேந்திரிய விடயங்கள் - 5
ஞானேந்திரியங்கள் - 5
தன் மாத்திரைகள் - 5
அந்தக்கரணம் - 5
நாடிகள் - -- 10
வாயுக்கள் - 5
உபவாயுக்கள் - 5
ஆச்ரயங்கள் - 5
கோசங்கள் - 5
ஆதாரங்கள் - 6
தோட(ஷ)ங்கள் - 3
ஈட(ஷ)ணாத்திரங்கள் - 3
குணங்கள் - 3
துர்குணங்கள் - 14
வினைகள் - 2
அவத்தைகள் - 5
-----------
ஆக மொத்தம் 96
-------------
தசநாடிகள்:
திருமந்திரம்:.
“நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்
ஓடிய காலில் ஒடுங்கி யிருந்திடுங்
கூடிய காமங் குளிக்கும் இரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே.”
நாடிகள் பத்து: விவரம்:
இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடு நரம்பு, உள்நாக்கு நரம்பு, வலக்கண் நரம்பு, இடக்கண் நரம்பு, வலச்செவி நரம்பு, இடச்செவி நரம்பு, கருவாய் நரம்பு, எருவாய் நரம்பு ஆகியவை.
இவைகளை முறையே:
இடைகலை, பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குகு என்பர்.
அதேபோல் வளி பத்து:
உயிர்வளி, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுகற்று, தும்மற்காற்று, விழிக்காற்று, கொட்டாவிக்காற்று, இமைக்காற்று, வீங்கற்காற்று என்பன.
இவற்றை முறையே, பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என்பர்.
இவ்விவரங்கள் அறிந்தவர்கள் சினந்தவிற்க. தெரியாதோர் குறித்துக் கொள்க. இவ்வெண்கள் எங்கெல்லாம் வருகின்றனவோ, அங்கெல்லாம் ஒப்பிட்டு நோக்க மெய்ப்பொருள் துலங்கும்.
Friday, December 28, 2007
8.ஐந்துருவா யுடலெடுத்த
Posted by ஞானவெட்டியான் at 12:51 PM
Labels: ஞானம் எட்டி
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
மிக்க நன்றி ஐயா. அருமையான விளக்கம்.
அன்பு இராகவன்,
மிக்க நன்றி
அன்புடையீர்
ஞானமெட்டி நலமே வளர என் வாழ்த்துக்கள். நிற்க நெடுங்காலமாக என்னுள்ளத்தில்
அரித்துக்கொண்டிருந்த ஓர் கேள்வியை கேட்டுவைக்கலாம் என்று நினைக்கின்றேன்.
பலசித்தர் நூற்களில் தசநாடிகள் தசவாயுக்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன.
மேற்போக்காக இவற்றைக் கொண்டால், மலைப்பு ஏற்படுகின்றது.
எனது கேள்விகள்:
1. இந்த வாயுக்களும் நாடிகளும் ஒன்றா அல்லது வெவ்வேறா?
2. இப்பொழுதுள்ள உடற்கூறு நுட்பத்தின் படி இவற்றை எப்படிக் கொள்ளமுடியும்?
எடுத்துக் காட்டாக தசவாயுக்கள்:
உயிர்வளி, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுகற்று, தும்மற்காற்று,
விழிக்காற்று, கொட்டாவிக்காற்று, இமைக்காற்று, வீங்கற்காற்று என்பன.
இவற்றை முறையே, பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்,
நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என்பர்.
இங்கு ஒரே வாயு தான் வெளிப்படும் இடங்களுக்குத் தக்க வேறுபடுகின்றது. அதே போலத்தான் நாடிகளும். இமைக்காற்று என்றோர் காற்று இருக்கின்றதா?
இல்லை மிக நுட்பமான சிந்தனையாளர்களாகிய சித்தர்கள் வாயு நாடி என்ற பெயரில்
ஆழமான வேறொன்றை சுட்டி உள்ளார்களா?
உலகன்
அன்பு நண்பர் திரு.உலகன் அவர்கட்கு,
வணக்கம்.
மிகவும் சிக்கலான வினா. இயன்றவரை விளக்கமுடியுமாவெனப் பார்க்கிறேன்.
வாயு எனபது நம்முடலில் ஓடும் சீவக்காற்று. இதுவே, வாசி, காலெனப் பல மருமப் பெயர்களில் கூறப்பட்டுள்ளன.
தாங்கள் கூறியபடி, இதே காற்றுதான் பல்வேறு பெயரெடுக்கின்றன. அருவிநீர் ஓடிவருமிடங்களிலுள்ள நிலத்தின் வண்ணம் பெருமாப்போல்.
வாயு இல்லையேல் சலனமில்லை (அகச் சலனம் & புறச்சலனம்). புறத்தே சில உடலுறுப்புக்கள் வலுவிழப்பதற்குமதுவே காரணம்.
// உயிர்வளி, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுக்காற்று. இவை 5ம் பிரதான வாயுக்கள். மற்றவை உபவாயுக்கள்.//
1.பிராணவாயு: இது இரு உதய தானத்திலிருந்து நாசிவழி மேலெழுந்து செல்லுவது. பசி, தாகங்களையுண்டுபண்ணி, உணவைச் சீரணிக்கும் சக்தியுடையது. இதை இரேசகமென்பர்.
2.மலக்காற்று:இது இன்பச் சுரப்பிகளையும், குத, குய்யம் ஆகியவைகளிலும் பூரக சஞ்சாரம் செய்து, அவ்வுறுப்புக்கள் தத்தம் வேலைகளைச் செய்ய உதவுவது.
3.தொழில்காற்று: இது உடலின் எல்லா பாகங்களிலும் விரவிநின்று உணர்வுகளை உட்கிரகிக்கும். உண்ட உணவைச் சக்கை, சாறாய்ப் பிரித்துத்தரும்.
4.ஒலிக்காற்று: இது உதராக்கினியை எழுப்பிக் கண்டமாகிய கழுத்துள்ளிருந்து, உணவை உண்ணவும், அதன் சாரங்களை நாடிகளுக்கு அனுப்பவும் செய்கிறது.
5.நிரவுக்காற்று: இது நாபியிலிருந்து கொண்டு உண்ட உணவின் சாரத்தை பங்கிட்டு எல்லா உறுப்புகளுக்கு அளித்து உடலை வளர்க்கும்.
இவ்வாறே மற்றவையும்.
ஆயினும், இவ் வாயு எங்கிருந்து மனுவுக்கு வந்தது? எங்குள்ளது? என்னும் வினாக்களுக்கு விஞ்ஞான ரீதியிலான விளக்கங்கள் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை.
கருப்பத்தில் குழந்தை உருவாகும் பொழுது, வளரும்பொழுதும் குழந்தைக்கு உயிர் இல்லை. அது மாமிச பிண்டம். ஆனால், கருப்பப் பையினுள்ளேதான் அவ்வாயு உள்ளது. ஆனால் தனியாக உள்ளது. மற்ற நீர்வாழ் செந்துக்களுக்கு வைக்கப்பட்டதுபோல் வைக்கப்பட்டுள்ளது. தாயின் கருவரையைவிட்டு வெளியே வந்தவுடனே, சடாரென ஒரு எல்லையிலிருந்து(மருமம்) பிச்சு அடிக்கும் ஆவி தான் சுவாசம். இதுவே மூல வாயு.
//இமைக்காற்று என்றோர் காற்று இருக்கின்றதா?//
ஆம். கூர்மன்தான் இமைக்காற்று. இது கண்களிலிருந்து திறக்கவும் மூடவும் செய்யும். மயிர்க்கூச்சல், சிரிப்பு, புளகம், முக சேட்டைகள் ஆகியவைகளைச் செய்யும். இதை அடக்க இமையா நாட்டம் கிடைக்கும்.
இச் சலனத்தைதை இயக்குவது நாடி. நாடி நரம்பென வைத்தியர்கள் கூறுவது. உடலினுள்ளே உள்ள நரம்புகளின் பரிமாணத்திற்கேற்ப இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. அப்பொழுது ஏற்படும் அசைவே துடிப்பு.
நாடிகளில் இடகலை, பிங்கலை, சுழுமுனை தெரியும்.
சிகுவை - உள்நாக்கு நரம்பு.
புருடன் - வலக்கண் நரம்பு.
காந்தாரி - இடக்கண் நரம்பு (இதில் ஹஸ்தி, ஜிஹ்வா என்னும் இருநரம்புகள் கூடுகின்றன என்பர்)
அத்தி - வலது காது நரம்பு
அலம்புடை - இடது காது நாடி (அலம்புஷா, பூஷா என்னும் நாடிகளின் சேர்க்கையென்பர்)
சங்கினி - மருமத்தான நாடி
குகு - மலவாய் நாடி (குகு நாடியும் சிநீவாலி நாடியும் இரக்தவியானன் நாடியும் சேர்ந்திருக்கும் என்பர்)
எனக்குத் தெரிந்தவரை விளக்கியுள்ளேன். இதற்கு மேலும் இன்னும் விளக்கங்கள் கிடைத்தால் மகிழ்வேன்.
நன்றி.
Post a Comment