Monday, December 31, 2007

86.நானமென்பது மணங்கமழ் பொருளது

விவேக சிந்தாமணி
*********************
86.நானமென்பது மணங்கமழ் பொருளது நாவிலுண்பது வோசொல்
ஊனுணங்குவோய் மடந்தைய ரணிவதே யுயர்முலைத் தலைக்கோட்டில்

ஆனதங்கது பூசினால் வீங்குவதமையுமோ வெனக்கேட்க

கானவேட்டுவச்சேரி விட்டகன்றனர் கடிகமழ் விலைவாணர்.


நானம் = மணம், வாசனை, கத்தூரி
உணங்குவோய் = உண்பவனே

வேடர் குடியிருப்புக்கு ஒரு வர்த்தகன், தான் விற்கும் வணிகப்பொருள்களாம் வாசனைப் பொருட்களுடன் சென்றான். வேடுவருக்கோ, வாசனைப் பொருட்களின் குணம், பண்பு தெரியாது. வர்த்தகன், வேடுவரையழைத்து, "நானம்" விற்க வந்துள்ளேன் என்றுகூறியதற்கு வேடுவர் விழிக்க, வர்த்தகர்,"நானம் என்பது வாசனைப்பொருள்; பூசிக்கொள்ள; உண்பதற்கு அல்ல" என்றார். பின்னர்,"மாமிசம் உண்பவர்களே! இப்பொருட்களை, மங்கையர் தங்களுடைய உயர்ந்த தனங்களிடையே பூசிக்கொள்ளும் பொருள்" என்றனர். அதற்கு வேடுவரோ,"அப்படிப் பூசிக்கொண்டால், வீக்கம் அமுங்கிவிடுமோ" என்றனர். இப்படி அருமை தெரியாத இடத்தில் வணிகம் செய்ய வந்தோமே என நொந்துகொண்டு, அவ்விடம் விட்டு அகன்றனர், வணிகர்.

அருமை, பெருமை தெரியாதோரிடம், அவைகளை எடுத்துச் சொல்லியும் ஒரு பயனும் விளயப்போவதில்லை. ஒதுங்கிவிடுதலே மேல்.

0 Comments: