திருவாசகம்
**************
7.பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
பிஞ்ஞகன் = கொல்லுபவன், சிவன்
பெய்கழல் = வீரக் கழல்
பிறப்பு அறுவது எப்பொழுது?
இறவாதிருப்பின் பிறப்பு இல்லை. ஆக நாம் மரணத்தை வென்றாக வேண்டும். அது அவ்வளவு எளிதா?
"ம்ருத்யுஞ்சய மந்திரம்"தான் மரணத்தை வெல்லச் சரியான வழி என்று கூறுவோர் உண்டு. கிளியைப்போல் வெறுமனே மந்திரத்தைப் பலுக்கிக் கொண்டிருப்பதால் பயனேதுமில்லை. அந்நேரத்தே கிளியைப் பிடிக்க ஒரு பூனை முயலுமாயின், கிளி "கீச்,கீச்" எனக் கத்திக்கொண்டோடிவிடும். ஆபத்து வரும்போது அதன் இயல்பு வெளிப்படுவதுபோல், மரணம் வருங்காலை அம்மனிதனின் சீவ இயல்பு வெளிப்படும்.
அம்மந்திரத்தின் உட்கருத்தை அறிந்து, அதற்கேற்ப வாழ்பவரே மரணத்தை வெல்வர்.
சிவன், ஐம்பூதங்களில் மண். அதன் தன்மாத்திரை மணம். அதனால்தான் சிவன் நறுமணம் நிறைந்தவராய் உள்ளார். மண்ணில் உண்டாகும் உணவுப் பொருட்களால் உடலோடு சேர்ந்த உயிராம் ஆன்மாவும் வளர்கிறது. சிவானால் ஆன்மா வளர்க்கப்படுகிறது.
தோற்றமும் மறைவும் படைத்துள்ள மாயா உலகில் இருப்பவனுக்குப் பிறவிப் பிணி உண்டு.
வெள்ளரிக்கொடியானது எப்படி இலகுவாக வெள்ளரிப்பழத்தை விடுவிக்கிறதோ, அங்ஙனமே, பிரபஞ்சமாம் மாயையிலிருந்து வெளிவந்துவிட்டால் மரணத்தை வெல்லலாம்.
பிறப்பு இறப்பு ஆகிய சம்சார சாகரத்தை அழிக்கிறவனும், வீரக்கழல்களை அணிந்திருப்பவனும் ஆகிய சிவனின் திருவடிகள் வெற்றி பெறுக.
இங்கே, பிறப்பு என்பது எண்ணங்களின் பிறப்பு. இறப்பு என்பது எண்ணங்களின் மரணம். மரணத்தை வெல்வது என்பது எண்ணங்களை ஒழித்தலாம். இது மிகவும் கடினம். எண்ணங்கள் உதிக்கும் மனதைக் கட்டுக்குள் கொண்டு வர இயலுமே தவிர ஒழித்தல் மிக மிகக் கடினம்.
Sunday, December 30, 2007
திருவாசகம் - 7.பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன்
Posted by ஞானவெட்டியான் at 6:02 PM
Labels: திருவாசகம்
Subscribe to:
Post Comments (Atom)
12 Comments:
"ம்ருத்யுஞ்சய மந்திரம்"
என்றால் என்ன
முற்பிறப்பில் செய்து நண்மை தீமையை ஒட்டித்தானே இப்பிறப்பில் அனுபவிக்க முடியும்
//முற்பிறப்பில் செய்து நன்மை தீமையை ஒட்டித்தானே இப்பிறப்பில் அனுபவிக்க முடியும்//
ஆகமங்கள் அப்பிடித்தான் சொல்கின்றன. அதற்காக, "இப்பிறப்பில் நான் புதிதாக ஒன்றும் செய்யமாட்டேன்" எனச் சொல்வது எவ்விதத்து நியாயம். இதைத் தெரிந்துகொண்டு வழ்வதே போன பிறவியின் புண்னியத்தால் என்று கொள்ளலாமல்லவா?
எனக்கு செங்கிருதம்(சமஸ்கிருதம்) தெரியாது. ஆயினும் தெரிந்தவர்கள் சொன்னதை அப்படியே தங்களுக்கும் கூறுகிறேன்.
"த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம்|
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர்முக்ஷீ ய மாம்ருதாத் ||
(மஹா நாராயண உபநிஷதம் 56-1)
இதற்குப் பொருள் சமக்கிருதம் தெரிந்தவர்கள் விளக்கட்டும்.
இது (எண்ணப்)பிறவிகளை அழிக்கும், மரணத்தை வெல்லும் மந்திரம்.
சரி டோண்டு சாரைக்கேட்டுடுவோம்
குமரனும் வடமொழியில் பழக்கமுள்ளவரே. அவரும் வந்து சொன்னால் தெரிந்து விடும். குமரா வருக! விளக்கம் தருக!
அன்பு இராகவன்,
நன்றி.
வாரும் குமரரே!
இயன்றால் மதுமிதா கூட விளக்கலாம்.
மந்திரங்கள் எல்லாமே வேண்டுதல்கள் தான். மந்திரச் சொற்களுக்கு (ஒலிகளுக்கு) ஒரு தனிப்பட்ட சக்தி இருப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு. நல்லவர்களால் திரும்பத் திரும்ப உருவேற்றப்படும் சொல் ஒரு தனி சக்தி பெறுகிறது என்பது நம்பிக்கை. அந்த மந்திரம் எந்த மொழியில் இருந்தாலும் சரியே.
ம்ருத்யுஞ்ஜய மந்திரம் என்னும் இந்த மந்திரம் 'மரணத்தை வெல்லும் மந்திரம்' என்று பொருள் தரும். இது சிவபெருமானை நோக்கி வைக்கப்படும் ஒரு வேண்டுதல்.
மந்திரத்தின் பொருள்:
முக்கண்ணனை நான் வணங்குகிறேன். நறுமணம் மிக்கவன் அவன். நம் ஆரோக்கியத்தை (புஷ்டியை) வளர்ப்பவன் அவன். மரணத்தின் பிடியிலிருந்து என்னை விடுவித்து மரணமிலா பெருவாழ்வை தர அவனை வேண்டுகிறேன்.
அன்பு குமரா!,
விளக்கத்துக்கு நன்றி.
மந்திரம் = மனத்தின் திறம்
மந்திரங்களைப் பலுக்கும்பொழுது(உச்சரிக்கும்பொழுது) மனதில் எந்த ஒர் எண்ணமுமின்றி ஒருநிலைப்பட்டு இருத்தல்வேண்டும்.
இங்கே, பிறப்பு என்பது எண்ணங்களின் பிறப்பு. இறப்பு என்பது எண்ணங்களின் மரணம். மரணத்தை வெல்வது என்பது எண்ணங்களை ஒழித்தலாம். இது மிகவும் கடினம். எண்ணங்கள் உதிக்கும் மனதைக் கட்டுக்குள் கொண்டு வர இயலுமே தவிர ஒழித்தல் மிக மிகக் கடினம்.
மந்திரமும், மூச்சுபயிற்ச்சியும் ஒருவகையில் மனதின், உடலின் அதிர்வை உருவாக்குபவை. அவ்வதிர்வை மேலும் மேலும் அதிகரிக்கும் பொழுது நமது சக்தி, வீரியம் எல்லாம் அதிகரிக்கிறது. அப்படிதான் முதல் சித்தரான ‘சுந்தரானந்த சித்தர்’ மூச்சை கட்டுப்படுத்தினால் எல்லாம் கட்டுப்படும் என்கிறார் (குமுதம் பக்தியில் படித்த ஞாபகம்).
அதேபோல் தான் இந்த ம்ருத்யுஞ்சய மந்திரமும் இதை உச்சரிக்கும் பொழுதே மூச்சானது ஒரு கட்டுக்குள்ளிருப்பதை உணர முடியும். பதஞ்சலி முனிவர் சொன்ன யோகாப்பியாசத்திலிம் இம்மந்திரம் வருவதை காணமுடியும்.
அன்பு சிவமுருகன்,
//மூச்சை கட்டுப்படுத்தினால் எல்லாம் கட்டுப்படும்//
நாமாக மூச்சைக் கட்டுப்படுத்தினால் அது ஆபத்தில்தான் முடியும். முனுத்தம் என்னும் மந்திரங்களில் மாத்திரை அளவுகள் உள்ளன. அதைக் குருமூலம் உணர்ந்து, அதன்படி அவைகளை ஏற்றி இறக்கிப் பலுக்க(உச்சரிக்க)ப் பலன் கிட்டும்.
இம்முனுத்தங்களை உதடசையாமல் மனதில் பலுக்கல் வேண்டும்.
நிலைகள் 4.
அறிவு - அறிவது
உணர்வு - மூச்சுக்காற்று எங்கு சென்றுகொண்டிருக்கிறது என உணர்வது.
நினைவு - அதையே மனதில் நிறுத்தி மூச்சுக்காற்றைத் தன்வயமாக்கல்
கருத்து - மாலவனாம் கண்ணன் பள்ளிகொண்டுள்ள திருப்பாற்கடலாம் முகுளத்தில் உயிரை இணைப்பது.
இன்னும் தெளிவாக விளக்கத் தெரியவில்லை.
அன்பு சம்மட்டி,
என் இடுகையின் இறுதிப் பத்தியில் தெளிவாகச் சொல்லியுள்ளேனே?
//இங்கே, பிறப்பு என்பது எண்ணங்களின் பிறப்பு. இறப்பு என்பது எண்ணங்களின் மரணம். மரணத்தை வெல்வது என்பது எண்ணங்களை ஒழித்தலாம். இது மிகவும் கடினம். எண்ணங்கள் உதிக்கும் மனதைக் கட்டுக்குள் கொண்டு வர இயலுமே தவிர ஒழித்தல் மிக மிகக் கடினம்.//
//பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன்//
என்றுதான் சொல்லப்பட்டுள்ளதே தவிற "பிறப்பொழிக்கும்" என்று சொல்லப்படவில்லையே!
//பல பிறவிகளில் செய்த பாவ புண்ணியம் பிறவிச் சுழலை ஏற்படுத்துகிறது என்றால், முதல் பிறவியில் எந்த பாவமும் செய்யாமல் தானே பிறந்திருப்போம் ?
ஆக முதல் பிறவி என்பது பாவ புண்ணியம் சார்ந்து இல்லை என்பது சரியா ?//
பல எண்ணப் பிறவிகளில் செய்த பாவ புண்ணியம் எண்ணப் பிறவிச் சுழலை ஏற்படுத்துகிறது என்றால், முதல் பிறவியியாம் குழந்தைப் பருவத்தே எந்த நினைவுமின்றி இருப்பதால் பாவமும் புண்ணியமும் இல்லையே!
//இது சரியானால், பிரம்மத்தை அடைந்தவர் ஏன் மீண்டும் பிறக்கமாட்டார் என்று நினைக்க வேண்டும் ?//
பிரமம் என்பது மனமடங்கிய மவுன நிலை. அதை அடைந்தவனின் மனம் சலனமற்று இருப்பதால் எண்ணங்களின் பிறப்பு இல்லை. அதனால் உண்டாகும் நன்மை தீமையும் இல்லை.
அன்பு சம்மட்டி,
//எண்ணமற்று இருத்தல் சாத்தியமா ? //
சாத்தியக்கூறுகள் மிகவும் அரிது.
//நீங்கள் சொல்வது போல சலனமற்ற நிலையென்றால், அது மீள முடியாத்தாகத்தான் இருக்க முடியும். (இறப்பைப் போல)//
மனச் சலனமற்ற நிலையென்பது, இறையைப் பற்றிய எண்ணமல்லாது மற்று ஒன்று இல்லாதிருத்தல். இது சாத்தியமே. முயற்சி தேவை.
//சலனமற்ற நிலையில் இருந்து சலன நிலைக்கு திரும்ப ஒரு சலனம் தேவைப்படுகிறது,சலன மற்ற நிலையில் ஒரு சலனம் அறியப்பட்டு மீண்டும் சலன நிலைக்கு வருதல் என்பது ... எனக்கு புரியவில்லை.//
ஆம். இறைச் சிந்தனையற்ற மற்ற இகவாழ்வுக்கான சிந்தனை. காட்டாக, வாழ்க்கையை நடத்தப் பொருள் தேவை. அதை ஈட்ட உழைக்கவேண்டும். அது பற்றிய சிந்தனை. இதுவும் ஓர் வகையில் சலனமே!
உழைக்கச் சென்ற இடத்தில் உழைக்கும் பொழுதும் இறைச் சிந்தனையோடு பணியாற்றவேண்டும். அதற்க்காகப் பணியில் மெத்தனம் கூடாது. இறுதி நிலையாகிய கருத்தில் இறையிருக்கச் சலனம் ஒன்றும் செய்யாது. அது வரும்; போகும்; அதை நாம் பிடித்துத் தொங்காமலிருந்தால் சரி.
//நான் தெளிவு படுத்திக்கொள்ள விரும்பியது உடல் சார்ந்த பிறப்பு இறப்புகளை பற்றியது. மனதைப்பற்றியது அல்ல.//
ஒருமுறை இறந்த உடல் மற்றுமொரு முறை பிறப்பதில்லை. ஆன்மா அழிவற்றது. அது மற்றொரு உடலெடுக்கிறதோ, அல்லது இல்லையோ அது யாருக்கும் தெரியாது. ஆனால் பிரபஞ்சத்தில் தோன்றிய எல்லாமே வெவ்வேறு உருமாற்றத்துடன் வாழ்ந்துகொண்டுதான் உள்ளது. ஒன்றும் அழிவதில்லை.
இந்தப் பரு உடல்தாம் நாம் எனில், இந்த சென்ம பாவ புண்ணியங்களை நாமாகிய இந்த உடல் அவ்வப்பொழுதே அனுபவித்து விடுகிறது. உடலுக்கு முன்சென்ம பாவ புண்ணியங்கள் கிடையாது.
இறையோடு ஒன்றியவருக்குப் பிறவி உண்டாவெனும் வினாவுக்கு, நான் உணர்ந்து பார்த்தபின்தான் விடையிருக்க இயலும்.
நண்பர் பரஞ்சோதி ஒரு கட்டுரை அன்ப்பியிருந்தார். அதை ஞானமுத்துக்களில் இடுகிறேன். படித்துப் பாருங்கள்.
அன்பு சம்மட்டி,
தங்களின் மின்னஞ்சலில் ஏதோ ஒரு சங்கடம் தெரிகின்றதே! நான் ஏதாகிலும் இசகுபிசகாக விடையிறுத்துவிட்டேனா?
தங்களின் வினாவில் 2 பகுதிகள்:
1. முன்சென்ம பாவ புண்ணியங்கள்.
இதற்கு நண்பர் மதுரபாரதி முன்னம் இட்ட ஒரு இடுகையை "ஞானமுத்துக்கள் - 56"ல் இடுகிறேன்.
2.இறைவனிடமிருந்து வந்த நாம் இறையுடன் சேர்ந்தபிறகு, பின்னரும் அதிலிருந்து பிரிந்து பிறப்பெடுப்போமா?
Post a Comment