Saturday, December 29, 2007

79.ஓங்கார சத்தமுதித் துணர்ந்து

ஞானம் எட்டி
***************
79.ஓங்கார சத்தமுதித் துணர்ந்து நிற்கு

முன்னியதோர் நகாரமதும் வளர்ந்து நிற்கும்

நீங்காத வகாரமது முயர்ந்து நிற்கு

நிலையான சிகாரமது மேலே நிற்கும்

பாங்கான அகாரமதைக் காத்து நிற்கும்

பதிவான வுகாரமது மேலே நிற்கும்

ஆங்கார மானவஞ்சு பஞ்ச பூத
மப்படியே யஞ்சுருவா யாச்சு தாண்டே.

நிலைக்கின்ற நகாரமானது வளர்ந்திருக்கும்;
வகாரமானது, நகாரத்துடன் கூடி நீங்காமல் உயர்ந்திருக்கும்;
நிலையாக நிற்கும் சிகாரமானது அதன்மேல் நிற்கும்;
அகாரமானது மேற்சொன்னவைகளையெல்லாம் காத்து நிற்கும்;
அந்த அகாரத்தோடு பதிந்துள்ள உகாரமானது அதன் மேல் நிற்கும்; இப்படியெல்லாம் இருக்கும் பஞ்சபூதங்களும் ஓங்கார ஒலியுடன் ஒன்றுசேர்ந்து நம் உடலாய் உருவாச்சுது; என் ஆண்டே!

இங்கு நகார, சிகார, வகாரத்தை உடலின், கால், தோள், குழல் ஆகியவற்றுடன் ஒப்புநோக்கல் வேண்டும்.

ஞானக் குறள்
*************
6.மாயன் பிரமனு ருத்திரன் மகேசனோ
டாயுஞ்சிவ மூர்த்தி யைந்து.

சிவமூர்த்திகள் 5 பேர்கள் :

பிரமன், விட்டுணு, உருத்திரன், மகேசன், சதாசிவன்.

பிரமன்..........நிலம்(பிருதிவி)
விட்டுணு.........நீர்
உருத்திரன்.......நெருப்பு
மகேசன்.........வாயு
சிவன்(சீவன்)....ஆகாயம்

திருமந்திரம்
************
"அகார வுகார சிகார நடுவாய்
வகார மோடாறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவன் சிந்தை செய்ய
ஒகார முதல்வ னுவந்து நின்றானே."

அகரமோடாறும் = பிரணவத்தோடு கூடிய சிவமந்திரமாம் "சிவயநம" (ஓம்நமசிவய = சடாக்கரம்).

அகர உகரம் ஓங்காரத்தைக் குறிக்கிறது. சிகர வகரம் திருவைந்தெழுத்தாம் "நமசிவய"வைக் குறிக்கிறது. இவையிரண்டுமே ஆறெழுத்து மந்திரம். "சிவ சிவ" என இடைவிடாது உயிர்ப்புடன் எண்ணிக் காலை(காற்றை)ப் பிடிக்கும் கணக்கை அறிந்து வளிப்பயிற்சி செய்தால் ஓங்கார முதலாம் சிவன் தோன்றுவான்.

"அவ்வென்ற போதினி லுவ்வெழுத் தாலித்தா
லுவ்வென்ற முத்தி யுருகிக் கலந்திடு
மவ்வென்ற னுள்ளே வழிபட்ட நந்தியை
யெவ்வணஞ் சொல்லுகே னெந்தை யியற்கையே."

உவ் = நடு இடம்.

அகரத்துடன் உகரத்தையும் சேர்த்து உடலினுள்ளே ஒலித்து (நடுக்குறிப்பாம் "உவ்") அக்கினி கலையை மற்ற கலைகளுடன் கலந்தால் வீடு பேறு அடையலாம். "மவ்" எனும் மனத்தினிலே விளங்கும் நந்தியாகிய சிவம் முன்னின்று வழிப்படுத்தும். எந்தை சிவபெருமான் அருளுவதை எங்ஙனம் இயம்புவேன்.

"ஆறந்த முங்கூடி யாகு முடம்பினிற்
கூறிய வாதார மற்றுங் குறிகொண்மி
னாறிய வக்கரம் ஐம்பதின் மேலே
யூறிய வாதாரத் தோரெழுத் தாமே"

ஆறந்தம் = கதி அடைவிக்கும் வழி = அத்துவாக்கள் ஆறு.
ஆறிய = அமைந்துள்ள. ஊறிய = அமுதம் ஊறுதற்குரிய.
ஓர் எழுத்து = பிரணவமாம் ஓங்காரம்.

சொல்லும் பொருளுமாகிய வழிகள் ஆறு. அவை முறையே எழுத்து மொழி மறை எனவும், உலகு கலன் (தத்துவம்) கலை எனவும் கூறப்படும். இவற்றால்தான் உடல் இயங்குகிறது. இதில் அமைந்துள்ள ஆறு நிலைக் களன்களிலும் வழிபடும் முறையறிந்து குறிகொண்டு(அசைவின்றி) வழிபடுங்கள். ஆங்கே அமைந்துள்ள அக்கரங்கள் ஐம்பதின்மேலும், அதன் மேல் அமைந்துள்ள மூலாதாரத்து எழுத்தாம் ஓமொழி (பிரணவம்) மிதிருந்தும் அமுது ஊறும்.

0 Comments: